சந்திரன் மேஷம் முதலான பன்னிரண்டு ராசிகளில் நிற்கும் போது எந்த மாதிரியான மனிதர்களை உருவாக்குகின்றான் என்பதையும் அவ்வாறு சந்திரன் பன்னிரண்டு ராசிகளில் நிற்கும் போது வேறு கிரகங்களால் பார்க்கப்பட்டால் என்ன மாதிரியான பலன்களைக் கொடுக்கின்றான் என்பதையும் முன்னர் பார்த்தோம். இப்போது நவாம்ச சக்கரத்தில் சந்திரன் மேஷம் முதலான பன்னிரண்டு ராசிகளில் இருக்கும் போது வேறு கிரகங்களால் பார்க்கப்பட்டால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்.
இங்கே பார்வை என்பது ராசிச் சக்கரத்தில் சந்திரன் மற்ற கிரகங்களால் பார்க்கப்படுதலைக் குறிக்கும். உதாரணமாகச் சந்திரன், குரு, சனி இவை முறையே மேஷம், சிம்மம், விருச்சிக ராசியில் 17 பாகையில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
சந்திரன் நவாம்சத்தில் கன்னிராசியில் இருக்கும். மேஷத்தில் உள்ள சந்திரனைச் சிம்மராசியில் 17 பாகையில் இருக்கும் வியாழன் ஒன்பதாம் பார்வையால் பார்க்கும். இதைக் கன்னி நவாம்சத்தில் உள்ள சந்திரனை வியாழன் பார்ப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதே சந்திரனை விருச்சிகத்தில் 17 பாகையில் உள்ள சனி பார்க்காது. ஆனால் நவாம்ச சக்கரத்தில் சனி தனுஸ் அம்சத்தில் இருக்கும். அது கன்னியில் உள்ள சந்திரனைப் பத்தாம் பார்வையாகப் பார்ப்பதாக நினைத்து விடக் கூடாது. பார்வை ராசிச் சக்கரத்தில் மட்டுமே. நவாம்ச சக்கரத்தில் கிடையாது. இனி பலன்களைப் பார்ப்போம்.
மேஷம் அல்லது விருச்சிக அம்சத்தில் சந்திரனிருந்து
- சூரியனால் பார்க்கப்பட்டால் ஒரு நகரத்தின் அதிகாரியாக இருக்கும் மனிதனை உருவாக்குகின்றான்.
- செவ்வாயால் பார்க்கப்பட்டால் பிற உயிர்களைக் கொலை செய்கின்ற மனிதனை உருவாக்குகின்றான்.
- புதனால் பார்க்கப்பட்டால் குத்துச் சண்டை வீரன் உருவாகின்றான்.
- குருவால் பார்க்கப்பட்டால் ராஜாவுக்குச் சமமான மனிதன் பிறக்கின்றான்.
- சுக்கிரனால் பார்க்கப்பட்டால் பெரும்பணக்காரனாக வாழ்கின்றவன் பிறக்கின்றான்.
- சனியால் பார்க்கப்பட்டால் கோள் சொல்லிக் கலகமுண்டாக்கும் மனிதன் பிறக்கின்றான்.
ரிஷபம் அல்லது துலாம் அம்சத்தில் சந்திரன் இருந்து
- சூரியனால் பார்க்கப்படும் போது பிறந்தவன் சொந்த புத்தி இல்லாதவனாக இருப்பான்.
- செவ்வாயால் பார்க்கப்படும் போது பிறந்தவன் பிற பெண்டிர் மீது பேராசை கொள்பவனாக இருப்பான்.
- புதனால் பார்க்கப்படும் போது பிறந்தவன் சிறந்த கவிஞனாக இருப்பான்.
- குருவால் பார்க்கப்பட்டால் சிறந்த காவியங்களைப் படைப்பவனாக இருப்பான்.
- சுக்கிரனால் பார்க்கப்பட்டால் போகி.
- சனியால் பார்க்கப்பட்டால் பிற பெண்டிர் மீது இச்சை கொள்பவன்.
மிதுனம் அல்லது கன்னி அம்சத்தில் சந்திரன் இருந்து
- சூர்யனால் பார்க்கப்பட்டால் மல்யுத்தம், நாடகம் முதலியவற்றில் ஈடுபாடு உள்ள மனிதன் பிறக்கின்றான்.
- செவ்வாயால் பார்க்கப்பட்டால் அந்த மனிதன் திருட்டுத் தொழில் செய்பவனாகின்றான்.
- புதனால் பார்க்கப்பட்டால் கவிதைகள் எழுதுபவன்.
- குருவால் பார்க்கப்பட்டால் அமைச்சர் அல்லது பெரிய பதவிகளைப் பெறுபவனாக இருக்கின்றான்.
- சுக்கிரனால் பார்க்கப்பட்டால் பாடகனாக அல்லது இசையமைப்பாளராக ஆகின்றான்.
- சனியால் பார்க்கப்பட்டால் சிற்பத் தொழில் அறிந்தவன்.
சந்திரன் கடக அம்சத்தில் இருந்து
- சூர்யனால் பார்க்கப்பட்டால் ஒல்லியான சரிரமுள்ளவன்.
- செவ்வாயால் பார்க்கப்பட்டால் பிறர்க்கு உபகாரம் செய்யாதவன்.
- புதனால் பார்க்கப்பட்டால் ஆன்மீக நாட்டமுடையவன்.
- குருவால் பார்க்கப்பட்டால் எங்கும், எதிலும் முதன்மையான ஆளுமையாக இருப்பவன்.
- சுக்கிரனால் பார்க்கப்பட்டால் பெண்களைச் சார்ந்து வாழ்பவன்.
- சனியால் பார்க்கப்பட்டால் எந்தக் காரியத்தையும் உற்சாகத்தோடு செய்பவன்.
சந்திரன் சிம்ம அம்சத்தில் இருந்து
- சூர்யனால் பார்க்கப்பட்டால் முன் கோபி.
- செவ்வாயால் பார்க்கப்பட்டால் பெரிய மனிதர்களின் சகவாசத்தில் இருப்பவன்.
- புதனால் பார்க்கப்பட்டால் புதையல் கிடைத்து அதன் மூலம் பெரும் பணக்காரனாக ஆனவன். (புதையலை லாட்டரிச்சீட்டு, குதிரைப் பந்தயம், பங்குச்சந்தை முதலீடு என்று எடுத்துக்கொள்ளலாம்)
- குருவால் பார்க்கப்பட்டால் பெருந்தன்மை மிக்க செல்வந்தன்.
- சுக்கிரனால் பார்க்கப்பட்டால் குழந்தைகள் இல்லாதவன்.
- சனியால் பார்க்கப்பட்டால் மிகக் கொடூரமான காரியங்களைச் செய்பவன்.
தனுசு அல்லது மீனம் அம்சத்தில் சந்திரன் இருந்து
- சூர்யனால் பார்க்கப்பட்டால் உலகப் பிரசித்தன்.
- செவ்வாயால் பார்க்கப்பட்டால் ராணுவம் அல்லது காவல்துறைப் பணியில் மிக உயர்ந்த பதவியில் இருப்பவன்.
- புதனால் பார்க்கப்பட்டால் நகைச்சுவை நடிகன்.
- குருவால் பார்க்கப்பட்டால் உயர்ந்த பதவியில் உள்ளவன்.
- சுக்கிரனால் பார்க்கப்பட்டால் பெண் ஆசையற்றவன் அல்லது திருநங்கை.
- சனியால் பார்க்கப்பட்டால் நல்லொழுக்கம் நிறைந்தவன்.
மகரம் அல்லது கும்ப அம்சத்தில் சந்திரனிருந்து
- சூர்யனால் பார்க்கப்பட்டால் குறைந்த குழந்தைகளை உடையவன்.
- செவ்வாயால் பார்க்கப்பட்டால் பணமிருந்தும் மகிழ்ச்சியாக வாழாதவன்.
- புதனால் பார்க்கப்பட்டால் தன்னைப் பிறர் புகழ்வதை விரும்புபவன்.
- குருவால் பார்க்கப்பட்டால் குலமரபுகளை மீறாதவன்.
- சுக்கிரனால் பார்க்கப்பட்டால் கெட்ட நடத்தையுள்ள பெண்களுக்கு வேண்டியவன்.
- சனியால் பார்க்கப்பட்டால் யாருக்கும் உதவாத கஞ்சன்.
நவாம்ச சக்கரத்தில் எந்த ராசியிலேனும் சந்திரன் இருக்கும் போது மற்ற கிரகங்களால் பார்க்கப்பட்டால் கிடைக்கும் பலன்களைப் போலவே, நவாம்ச லக்னத்தையும் சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் பார்க்கும் போது கிடைக்கும் பலன்கள் அமையும்.
இந்தப் பலன்களை ஜென்ம காலத்தைப் போலவே பிரஸ்ன காலத்திலும் பரிசீலித்துப் பலன்களைச் சொன்னால் அவை சரியாகவே அமையும். சந்திரனின் பட்ச பலம், சந்திரனிருக்கும் ராசிபதிபனின் பலம், ஆகியவற்றைப் பொறுத்து இந்தப் பலன்களில் கூடுதல், குறைவு ஏற்படும்.
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
