ஜாதகரின் ஒரு குறிப்பிட்ட வயதுக்கான பலன்களை அறிவதற்குக் கீழ்க்கண்ட புள்ளிகள் மிகவும் உதவுகின்றன. 

  1. புண்ய ஸஹம்
  2. மிருத்யு ஸஹம்
  3. விவாஹ ஸஹம்
  4. ராஜ்ய ஸஹம்
  5. புத்ர ஸஹம்

ஸஹம் என்ற சொல்லுக்குப் பதிலாகப் புள்ளி என்ற சொல்லை நாம் உபயோகிக்கலாம். இந்தப் புள்ளிகளை எப்படிக் கண்டறிவது?

புண்ய ஸஹம் - அதிர்ஷ்டப் புள்ளி:

சந்திரஸ்புடத்தில் சூர்யஸ்புடத்தைக் கழித்துக் கிடைக்கும் ராசி பாகை கலைகளோடு லக்ன ஸ்புடத்தைக் கூட்டக் கிடைப்பது அதிர்ஷ்டப்புள்ளி.

மிருத்யு ஸஹம் - மரணப்புள்ளி:

எட்டாம் பாவஸ்புடத்தில் சந்திரஸ்புடத்தைக் கழித்துக் கிடைக்கும் ராசி பாகை கலைகளோடு லக்னஸ்புடத்தைக் கூட்டக் கிடைப்பது மரணப்புள்ளி.

விவாஹ ஸஹம் - திருமணப் புள்ளி:

சுக்கிரஸ்புடத்தில் சனிஸ்புடத்தைக் கழித்துக் கிடைக்கும் ராசி பாகை கலைகளோடு லக்னஸ்புடத்தைக் கூட்டக் கிடைப்பது திருமணப்புள்ளி.

ராஜ்ய ஸஹம் - உத்தியோகப் புள்ளி:

இது ராஜ்யப்ராப்தியைச் சொல்வதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய புள்ளி. தற்காலத்தில் இது உத்தியோகம், பதவி இவற்றைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். சனி ஸ்புடத்தில் சூரிய ஸ்புடத்தைக் கழித்துக் கிடைக்கும் ராசி பாகை கலைகளோடு லக்னஸ்புடத்தைக் கூட்டக் கிடைப்பது ராஜ்ய ஸஹம் அல்லது உத்தியோகப் புள்ளி. 

புத்ர ஸஹம் - ஆண் குழந்தையைக் குறிக்கும் புள்ளி:

வியாழஸ்புடத்தில் சந்திரஸ்புடத்தைக் கழித்துக் கிடைக்கும் ராசி பாகை கலைகளோடு லக்ன ஸ்புடத்தைக் கூட்டக் கிடைப்பது புத்ர ஸஹம் என்னும் ஆண் மகனுக்கான புள்ளி.

மேற்கண்ட ஐந்து புள்ளிகளில் மரணத்தைக் குறிக்கும் புள்ளியைத் தவிர மற்ற நான்கும் பகலில் பிறந்தவர்க்கு மட்டுமே. இரவில் பிறந்தவர்களுக்குக் கழிக்கும் கிரகத்தையும், கழிபடும் கிரகத்தையும் மாற்ற வேண்டும்.

அதாவது புண்யஸஹத்துக்குச் சூரியனில் சந்திரனையும், விவாஹ ஸஹத்துக்குச் சனியில் சுக்கிரனையும், ராஜ்ய ஸஹத்துக்குச் சூரியனில் சனியையும், புத்ர ஸஹத்துக்குச் சந்திரனில் வியாழனையும் கழித்து லக்ன ஸ்புடத்தைக் கூட்ட வேண்டும். மிருத்யு ஸஹத்துக்கு எப்போதுமே எட்டாம் பாவத்தில் சந்திரஸ்புடத்தைக் கழித்து லக்ன ஸ்புடத்தைக் கூட்ட வேண்டும்.

இன்னும் ஒரு முக்கியமான விசயம் உள்ளது. அதாவது கழிபடும் கிரகத்துக்கும் கழிக்கும் கிரகத்துக்கும் இடையே லக்னம் இருந்தால் கிடைக்கும் ராசி பாகை கலைகளை அப்படியே எடுத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் இன்னும் ஒரு ராசி கூட்ட வேண்டும். இப்போது ஒரு உதாரண ஜாதகம் மூலம் இவற்றைக் கண்டு பிடிப்போம்.

sample horoscope

இந்த ஜாதகர் பகலில் பிறந்திருப்பதால், சந்திரனில் சூரியனைக் கழித்துக் கிடைக்கும் ராசியோடு லக்னத்தைக் கூட்டினால் கிடைப்பது புண்ய ஸஹம்.

10 16 43 – 0 5 45 = 10 10 58 + 3 06 26 =1 17 24

கழிபடும் கிரகம் சந்திரன். கழிக்கும் கிரகம் சூரியன். இவற்றுக்கிடையே லக்னம் இருப்பதால் இந்த 1 ராசி 17 பாகை 24 கலை தான் புண்ய ஸஹம்.

எட்டாம் பாவ ஸ்புடம் 10 4 26. இதில் சந்திரனைக் கழிக்க 10 4 26 – 10 16 43 =11 17 43. இத்துடன் லக்னஸ்புடமான 3 06 26-ஐக் கூட்ட 2 24 19. எட்டாம் பாவத்துக்கும் சந்திரனுக்கும் இடையே லக்னம் இருப்பதால் இதை அப்படியே வைத்துக் கொள்ளலாம். இதுவே மரணப்புள்ளி.

சுக்கிரஸ்புடமான 0 21 40ல் சனி ஸ்புடமான 10 18 55-ஐக் கழித்தால் 2 2 45 கிடைக்கிறது. இத்துடன் லக்னஸ்புடமான 3 6 26- ஐக் கூட்டினால் 5 9 11 கிடைக்கிறது. சுக்கிரனுக்கும் சனிக்கும் இடையே லக்னம் இல்லாததால் இன்னும் ஒரு ராசி கூட்ட 6 9 11 கிடைக்கும். இதுவே விவாஹ ஸஹம்.

சனி ஸ்புடமான 10 18 55ல் சூரியஸ்புடமான 0 5 45-ஐக் கழித்தால் 10 13 10 கிடைக்கும். இத்தோடு 3 6 26-ஐக் கூட்ட 1 19 36 கிடைக்கும். சனிக்கும் சூரியனுக்கும் மத்தியில் லக்னம் இருப்பதால் இதுவே ராஜ்யஸஹம்.

குருஸ்புடமான 1 14 34ல் சந்திரஸ்புடமான 10 16 43-ஐக் கழித்தால் 2 27 51 கிடைக்கும். இத்துடன் 3 6 26-ஐக் கூட்டினால் 6 04 17 கிடைக்கும். குருவுக்கும் சந்திரனுக்கும் இடையே லக்னம் இல்லாததால் இன்னும் ஒரு ராசி கூட்ட 7 04 17 கிடைக்கும். இதுவே புத்ரஸஹம்.

இவ்வாறு கிடைக்கப்பெறும் இந்தப் புள்ளிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் பலன் சொல்ல வேண்டும். புள்ளிகள் இடம் பெறும் ராசி, பாவம், புள்ளிக்கு அதிபதியின் பலம் இவற்றைக் கொண்டு விரிவான ஆராய்ச்சி செய்தால் இன்னும் நிறைய விசயங்கள் கிடைக்கும்.

 

This Week’s Quote:

I am a slow walker, but I never walk back.

-  Abraham Lincoln

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 213 guests and no members online