சென்ற இரண்டு கட்டுரைகளில் நடிகர் திலகத்தின் கலைத்துறைச் சாதனைகளுக்குக் காரணமாக இருந்த கிரக நிலைகள் பற்றிப் பார்த்தோம்.இந்தக் கட்டுரையில் தனிக்கட்சி ஒன்றை ஆரம்பித்துப் பெருந்தோல்வியைச் சந்தித்த அவரது அரசியலுக்குக் கிரகங்கள் எவ்வாறு தடைக்கற்களாக இருந்தன என்பதைப் பார்ப்போம்.
ஒரு அரசியல் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று அக்கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதற்கும் வெற்றியை நீண்ட காலம் தக்க வைப்பதற்கும் ஒருவரது ஜாதகத்தில் சூர்யன் அதிக வலிமையுடன் இருக்க வேண்டும். சூர்யன் 1, 4, 7, 10 ஆகிய கேந்திரங்களில் ஏதாவது ஒன்றில் பாவத்துக்கு மிகச் சமீபத்தில் இருக்க வேண்டும். சூர்ய நவாம்சம் சந்திரன் சனி அல்லது வியாழனின் வீடுகளான கடகம் மகரம் கும்பம் தனுசு மீனம் இவைகளில் இருக்க வேண்டும். சூர்யனின் த்வாதசாம்ச ராசியின் அதிபதி மேஷம் சிம்மம் தனுசு என்ற திரிகோண ராசிகளில் இருந்தாலும் சூர்யன் 9 அல்லது 11ம் பாவத்துக்கு வெகு சமீபத்தில் இருந்தாலும் அரசியல் தலைவராக வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. சூர்யன் சனி வியாழன் ஆகிய மூன்று கிரகங்களுக்கும் 2, 9, 6, 10 ஆகிய பாவங்களுக்கும் சம்பந்தம் இருந்தாலும் அரசியலில் பிரகாசிக்க வாய்ப்பு உண்டு. இதற்கான வாய்ப்புக்கள் நடிகர் திலகத்தின் ஜாதகத்தில் உள்ளதா எனப் பார்ப்போம்.


சூர்யன் 1, 4, 7, 10 ஆகிய பாவங்களுக்குச் சமீபத்தில் இல்லை. சூரியனின் நவாம்ச ராசி விருஷபமாக வந்து சுக்கிரன் அதற்கு எட்டாமிடத்தில் உள்ளது. சனி பத்தாமிடத்தில் இருந்து நவாம்சத்தில் சொந்த வீடான மகரத்தில் இருக்கிறது. இது அரசியல் பிரவேசத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் வெற்றிக்கு வியாழன் சூர்யனின் கேந்திரங்களிலாவது இரண்டு ஆறு பத்து பதினென்றிலாவது இருக்க வேண்டும். இவரது ஜாதகத்தில் சூர்யனுக்கு எட்டில் வியாழன் இருக்கிறது. சூர்யனின் த்வாதசாம்ச ராசி மீனமாக வருகிறது. வியாழன் த்வாதசாம்ச சக்கரத்தில் மீனத்துக்கு எட்டாமிடமான துலாத்தில் இருக்கிறது. மேலும் மேலைநாட்டுப் பெரும்பான்மை சோதிட வல்லுனர்களின் கருத்துப்படி சனி பத்தில் இருப்பது அந்திம காலத்தில் பெருஞ் சரிவைத் தரும். எனவே ஜாதகத்தில் சூர்யன் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு அடித்தளம் தராதபோது ஐம்பத்தொன்றாம் வயதில் தொடங்கும் சூரிய தசை நடிகர் திலகத்துக்கு என்னவெல்லாம் தரப் போகின்றது என்பதைப் பார்ப்போம்.
சூர்யதசாப்ரவேச நாள் 2-10-1978 திங்கள் கிழமை
தசாப்ரவேச நேரம் நண்பகல் 12.01
இதற்கான ஜாதகம் கீழ்க்கண்டவாறு அமைகிறது.



தசாப்ரவேச காலத்தில் தசாநாதன் சூர்யன் தசம பாவத்தில் தசம பாவத்துக்கு வெகு சமீபத்தில் இருக்கிறது. இது மிகவும் நற்பலனைத் தரக் கூடியது. லக்னத்துக்குப் பத்துக்குடைய புதனும் சூர்யனுடன் சேர்ந்து பரமோச்ச பாகையான 15க்கு வெகு அருகில் உள்ளது. இந்தக் காரணங்களினால்தான் ஒரு வருடத்துக்குள் திரிசூலம் என்ற சூப்பர்ஹிட் படத்தைக் கொடுத்த அவர் ராஜ்யசபா நியமன உறுப்பினராகவும் பதவியேற்றார். ஆனால் தசாப்ரவேச லக்னாதிபதி குரு எட்டாமிடத்தில் நிற்கும் போது அந்த வீட்டுக்குடைய சந்திரன் சூர்யனோடு பாகை ரீதியாகவும் ஒன்று சேர்ந்து மஹாஅஸ்தமனம் ஆகிவிட்டபடியால் ராஜயோக பங்கமும் ஏற்படுகிறது. சந்திரன் பூர்ண கலைகளோடு இருக்கும் போது மட்டுமே ராஜயோகம் சித்திக்கின்றது. மேலும் ஜன்ம லக்னாதிபதியான சனி பத்தாம் பாவத்துக்கு விரய ஸ்தானமாகிய ஒன்பதாமிடத்தில் சத்ரு வீட்டில் வர்க்கோத்தமமாக இருப்பதும் ராஜயோகத்துக்குப் பங்கம் தரக் கூடியதுதான். மேலும் ஐந்து கிரகங்கள் சுக்ர நவாம்சத்தில் இருப்பது கலைத்துறைக்குச் சாதகமாக அமையுமே தவிர அரசியல் வாழ்க்கைக்குச் சாதகமாக அமையாது. சூர்யதசையின் மொத்த ஆண்டுகள் 20 ஆகும். 2.10.78 தொடங்கி 2.10.98 முடிய உள்ள இந்த இருபதாண்டுகளில் அவர் செவாலியே விருது, கௌரவ டாக்டர் விருது, பத்ம பூஷண் விருது, தாதாசாகிப் பால்கே விருது போன்ற விருதுகளைப் பெற்றதற்குச் சூரியன் பத்தாமிடத்தில் இருப்பதுதான் காரணம்.
ஆனால் தனிக்கட்சி தொடங்கித் தேர்தலைச் சந்தித்த அவர் பெருந்தோல்வியைச் சந்தித்ததற்கு என்ன காரணம் என்பதை தனிக்கட்சி தொடங்கிய ஆண்டின் வருஷ பலனை வைத்துத் தெரிந்து கொள்ள முயல்வோம். அவர் 10.02.1988ல் தனிக்கட்சி தொடங்கினார். அதாவது அவரது 60வது வயதில் தொடங்கப்பட்டது தமிழக முன்னேற்ற முன்னணி. நடிகர் திலகத்தின் அறுபதாவது வயது பிறக்கும் போது அவரது வர்ஷ ஜாதகம் கீழ்க்கண்டவாறு அமைகிறது.
அறுபது வயது தொடங்கும் நாள் 2.10.1987 வெள்ளிக்கிழமை
தொடங்கும் நேரம் இரவு மணி 7.31



மேஷ லக்னம் உதயமாகிறது. லக்னாதிபதி செவ்வாய் அஸ்தமனமாகி ஜன்மலக்னமான கும்பத்துக்கு எட்டாமிடத்தில் இருக்கிறது. ஜன்ம லக்னாதிபதி வர்ஷ லக்னத்துக்கு எட்டாமிடத்திலும் ஜன்ம லக்னத்துக்குப் பத்தாமிடத்திலும் உள்ளது. சூர்ய நவாம்சபதி சுக்கிரன் சூரியனின் வீட்டிலும் ஜன்மலக்னத்துக்குப் பத்துக்குடைய செவ்வாய் மகர ராசியின் அம்சத்திலும் இருந்து அரசியல் ஆசையைத் தூண்டுகின்றன. ஆனால் FORTUNE POINT என்றழைக்கப்படும் புண்யஸஹம் தனுசில் 14 பாகை 46 கலையில் இருக்கிறது. புண்யஸஹத்தின் அதிபதியான வியாழன் சூர்யனுக்கு எட்டாமிடத்தில் வக்ரமாக இருக்கிறது. ஜன்ம லக்னாதிபதி சனியும் வர்ஷ லக்னாதிபதி செவ்வாயும் நல்ல இடங்களில் அமையப் பெறாமல் சூர்ய நவாம்சாதிபதி சுக்கிரன் பரமநீச பாகையான 27க்கு வெகு சமீபத்தில் இருந்து சூர்யனின் த்வாதசாம்சபதி வியாழன் வக்கிரமாகவும் இருப்பது அரசியல் வாழ்க்கையை அமைத்துக் கொடுக்காது. பதவியைக் கொடுக்கும் ராஜ்யஸஹம் என்பது நடிகர் திலகத்தின் ஜன்ம ஜாதகத்தில் விருஷப ராசியில் 22 பாகை 39 கலையில் இருக்கிறது. இந்த வர்ஷ ஜாதகத்தில் அது வர்ஷ லக்னத்துக்குஇரண்டாமிடமாக அமைவதும் ராஜ்யஸஹத்தின் அதிபதியான சுக்கிரன் லக்னத்துக்கு ஆறாமிடத்தில் பரமநீசமாக இருப்பதும் ஒரு உயர்வான அரசியல் வாழ்க்கைக்குப் பாதகமான அம்சங்களாக ஆகி கெடுதலைச் செய்கின்றன.மேலும் அறுபதாவது வயதில் நடிகர் திலகத்தின் ஓராண்டுக்கான தசைகள் கீழ்க்கண்டவாறு அமைகின்றன.

நடிகர் திலகம் 10.2.1988ல் தனிக்கட்சி தொடங்கியதாகத் தெரிகிறது. அன்று புதன்கிழமை. சப்தமி திதி. ஸ்வாதி நட்சத்திரம். திதி, நட்சத்திரம் இரண்டும் சுபகாரியங்களுக்கு உகந்தவைதான். மீனம் அல்லது மேஷ லக்னத்தை ஜோதிடர் நிச்சயித்திருக்கக் கூடும். சந்திரன் எட்டில் இருப்பதால் மீனத்தைத் தவிர்த்து மேஷ லக்னத்தை எடுத்திருக்கலாம். அன்றைய கிரக நிலை இப்படி அமைகிறது.

மேஷ லக்னத்தில் தனிக் கட்சி தொடங்கியிருந்தால் லக்னாதிபதி செவ்வாய் எட்டில் இருப்பது நல்லதல்ல. பொதுவாக ராசியின் கடைசி அம்சத்தில் கிரகங்கள் இருப்பது அவற்றின் வலிமையைப் பெரும்பாலும் கெடுத்துவிடும். இங்கே சூர்யன் செவ்வாய் புதன் ஆகிய மூன்று கிரகங்களும் கடைசி அம்சத்தில் இருக்கின்றன. மேலும் வர்ஷ ஜாதகத்தின்படி 10.2.1988ல் புதனது தசை நடக்கின்றது. புதன் வர்ஷ லக்னத்துக்குப் 10ல் பலவீனமாக வக்ரமாக இருப்பதால் இந்த முயற்சி வெற்றியாக மாறாமல் வீணாகிப் போனது. 3.05.1988 முதல் 13.08.1988 முடிய நடந்த சனி தசையும் அதன்பின் 3.10.1988 முடிய நடந்த சுக்ரதசையும் நற்பலன்களைக் கொடுப்பனவாக அமையவில்லை. சுக்கிரன் இரண்டுக்குடையவனாக ஆகி ஆறில் நீசமாகித் தசை நடத்தியதும் சனி பத்து பதினோராம் இடத்து அதிபதியாக வந்து எட்டில் இருந்து தசை நடத்தியதும் அவரது அரசியல் பயணத்துக்குப் பெரும் தடையாக இருந்தன என்பது சோதிடமறிந்தவர்க்கு நன்கு புலப்படுகின்றது.
இந்த நீண்ட கட்டுரை எழுதியதன் நோக்கம் சோதிடத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இம்மாதிரியான ஆய்வும் செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்தத்தான். பொதுவாகவே கீழ்த்திசை நாடுகள் முதியோர்களின் நாடுகள். இங்கே இளைஞர்கள் எதையும் புதிதாகக் கற்கவோ புதிய முயற்சிகளில் ஈடுபடவோ வாய்ப்புக்கள் கிடையாது. அதுவும் இந்தச் சோதிட சாஸ்திரத்தில் பழமையான கருத்துக்களுக்கே முதலிடம் கிடைக்கும். முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள் எனவே இதுதான் முடிவு என்று பழமைக்குக் கொடிபிடிப்பவர்களே இங்கு அதிகம். வாக்கியப் பஞ்சாங்கம் பிழைகள் நிறைந்தது. ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் செய்ய வேண்டிய CORRECTIONS செய்யாத கணக்கை அடிப்படையாகக் கொண்டது என்று தெரிந்தும் அதைத் தூர எறியாதவர்களே இங்கு அதிகம். எனது தந்தையார் அவரது 65வது வயதில் திருக்கணிதம் கற்கச் சென்றவர். இதுதான் சரி எனத் தெரிந்ததும் பழைய கணித முறைகளைத் தூர எறிந்து புதியதைக் கற்றவர். நட்சத்திரத் தசைமுறைப்படி ஒன்றையும் சொல்ல முடியாது, அதைக் கைவிட்டு வராகமிகிரரின் தசாமுறைகளைக் கற்றுக்கொள் என்று எனக்குச் சொன்னவர். அவரிடம் சோதிடம் பயின்ற பின்னர் அவரது கருத்துக்களுக்கு எதிராக நான் கருத்துக்கள் சொன்னபோது அதை ஏற்றுக்கொண்டவர். இந்த அதிசயம் எங்காவது எப்போதாவதுதான் நடக்கும். பொதுவாக இங்குப் புதுமையான முயற்சிகளுக்கும் கருத்துக்களுக்கும் இடம் கிடையாது. சோதிடக் கணித சூத்திரங்களைக் கற்பதை விட்டுவிட்டுக் கோயில்களின் பெயர்ப்பட்டியலை மனனம் செய்யும் சோதிடர்களே இங்கு அதிகம். நம்மிடம்தான் எல்லாமும் இருக்கின்றன, வேறு நாடுகளில் இவையெல்லாம் கிடையாது என்ற மனப்பாங்கும் இங்கு கோலோச்சுகின்றது.
சோதிடத்தைக் கற்க விரும்புபவர்கள் நிறையப் படிக்க வேண்டும். வடமொழியில் உள்ள மூலநூல்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்து அவைகளில் உள்ள கருத்துக்கள் அனுபவத்துக்குச் சரியாக வந்தால் அதை எடுத்துக்கொள்ளவும் சரியாக இல்லாதபட்சத்தில் அவற்றைத் தள்ளவும் பழக வேண்டும். நான் ஏற்கனவே எழுதியுள்ளபடி நிறைய ஜாதகங்களைச் சேர்க்க வேண்டும். தெரிந்தவர்களின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளைத் தேதியுடன் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். மேனாட்டுக் கணிதமுறைகளையும் கற்க வேண்டும்.
இந்தக் கட்டுரையில் உள்ள கணக்குகள் மட்டுமே சோதிட சாஸ்திரத்துக்குச் சொந்தமானவை. மற்றபடி இதில் உள்ள அபிப்ராயங்கள் எல்லாம் எனது அனுபவங்களின் மூலம் நான் சேகரித்தவை. ஆனால் அந்த அனுபவங்களுக்கு அடிப்படையாக இருப்பது வராகமிகிரரின் பிருஹஜ் ஜாதகம் என்ற நூல் மட்டுமே. அவர் மட்டுமே சொல்ல வந்ததைத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் சுருக்கமாகவும் சொல்லியிருக்கிறார் என்று நான் திடமாக நம்புகின்றேன். அவரும் கூட “முன்னோர்கள் சொல்லியிருப்பதால் மட்டுமே நான் இதைச் சொல்கின்றேன். மற்றபடி இதில் எனக்கு உடன்பாடு இல்லை.” என்ற அர்த்தம் வரும்படியாக சில சுலோகங்களைச் சொல்லியுள்ளார். ஜெயகாந்தன் சொன்னது போல இலக்கணம் தெரிந்து கொண்ட பிறகே அதை மீற வேண்டும். ஆழ்ந்து படித்த பின்னரே ஒரு கருத்தை மறுக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ நமக்கு உரிமை வருகிறது. பழமை என்ற ஒன்றிற்காக அன்றி உண்மை என்பதற்காக மட்டுமே ஒரு சாஸ்திரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இன்னும் பேசுவோம்.
அடுத்த கட்டுரை: சிசேரியன் அறுவைச் சிகிச்சை எப்போது செய்ய வேண்டும்?
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
