நமக்கு வரும் மின்னஞ்சல்கள் யாவுமே திருமணத்தைப் பற்றியதுதான். ஆனால் அதிலும் முக்கியத்துவம் பெறுபவை காதல் மணம் பற்றிய கேள்விகளே. தங்களது ஜாதகத்தை அனுப்பி எனது திருமணம் காதல் திருமணமா அல்லது குடும்பத்தாரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என்று கேட்பவர்களே அதிகம். இதற்கு எப்படிப் பதில் சொல்வது என்று நமக்குத் தெரியவில்லை. ஏழுக்குடையவன் 6, 8, 12ல் இருந்தாலோ அல்லது ஏழுக்குடையவன் ராகு, கேது சம்பந்தம் பெற்றிருந்தாலோ காதல் திருமணம்தான் என்று அடித்துக் கூறும் வழக்கம் நம்மிடம் இல்லை. வியாழனின் பார்வை ஏழாமிடத்துக்கோ அல்லது ஏழாம் பாவாதிபதிக்கோ கிடைத்தால் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் என்று சாதிக்கும் மனமும் நம்மிடம் கிடையாது. ஏனெனில் ஏழாம்பாவத்துக்கு ராகு, கேது சம்பந்தம் இருந்தும் மரபுத் திருமணம் செய்து கொண்டவர்களும் நமக்கு அறிமுகம். வியாழனின் பார்வையிருந்தும் மரபை மீறித் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளும் நமக்கு அறிமுகம். எனவே நாம் நூறு சதவீதம் சரியாக இருக்கும் குறிப்புக்களைத் தேடிக் கொண்டிருக்கின்றோம். தேடல் இன்னும் முடியவில்லை.

எந்தத் திருமணமானால் என்ன மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் காதலிலும் அர்த்தமில்லை, கல்யாணத்திலும் அர்த்தமில்லை. யாருடைய மணவாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று தெரிந்து கொண்டால் திருமணம் அல்லது காதல் பற்றிய கேள்விகளுக்கு இடமில்லை. எனவே இங்கே சில அனுபவக் குறிப்புக்களைத் தருகின்றோம். ஒன்பதுக்குடையவன் இரண்டாமிடத்தில் இருந்து, இரண்டுக்குடையவனின் பார்வையைப் பெற்றவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள். அதேபோல் இரண்டுக்குடையவன் ஒன்பதாமிடத்தில் இருந்து, ஒன்பதாம் பாவாதிபதியின் பார்வையைப் பெற்றாலும் இதே பலன்தான். 

பதினொன்றாம் வீட்டுக்குடையவன் ஏழுக்குக் கேந்திரமான 10, 1, 4ல் இருப்பவர்களும் சந்தோசமாக வாழ்கின்றார்கள். நாம் சொல்லும் குறிப்புக்கள் கணவன் மனைவி இருவரது ஜாதகத்திலும் இருந்தால் இருமடங்கு சந்தோசமான வாழ்க்கை என்று எடுத்துக்கொள்ளலாம்.

இப்போது யார் காதல் திருமணம் செய்கின்றார்கள் என்று பார்க்கலாம். ஏழுக்குடையவன் பன்னிரண்டில் இருப்பவர்கள், பன்னிரண்டுக்குடையவன் ஏழில் இருப்பவர்கள், ஆறுக்குடையவன் ஏழில் இருப்பவர்கள், ஏழுக்குடையவன் ஆறில் இருப்பவர்கள் - இவர்கள் காதல் மணம் செய்கின்றார்கள். சுக்கிரனுக்கு 1, 4, 7, 10ல் செவ்வாய் இருந்து, செவ்வாய் ஏழுக்குடையவனாகவும் இருந்தால் காதல் வசப்படுகின்றார்கள். ஆனால் இவர்கள் அனைவருமே காதல் மணம் புரிகின்றார்களா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த அமைப்பு உள்ளவர்கள் மணவாழ்க்கையில் சந்தோசமாக இருக்கின்றார்கள். 

நம்மைப் பொறுத்தவரை காதல் வசப்பட்ட இருவரது ஜாதகமும் கிடைத்தாலன்றி, நாம் சொல்லும் விடை நூறு சதவீதம் சரியாக இருக்காது. இருவரது ஜாதகத்திலும் காதலைக் குறிக்கும் கிரக அமைப்புக்கள் இருந்தால்தான், காதல் மணம் நடக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம். சிம்மலக்னத்தில் பிறந்த ஒருவரும் (இவருக்குப் பன்னிரண்டுக்குடைய சந்திரன் ஏழில் கும்பராசியில்) மகர லக்னத்தில் பிறந்த பெண்ணும் (இவருக்கு ஏழுக்குடைய சந்திரன் பன்னிரண்டாம் இடமான தனுசில்) எதிர்ப்பை மீறி மணம் புரிந்து கொண்டார்கள். ஒருவரது லக்னம் இன்னொருவரின் லக்னத்துக்கு ஆறு எட்டாமிடமாக வந்தாலும், இரண்டு பன்னிரண்டாமிடமாக வந்தாலும் அவர்கள் இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கின்றார்கள். 

காதல் உன்னதமானதுதான். ஆனால் வாழ்க்கை அதைவிட உன்னதமானது. சுற்றியிருப்பவர்களின் மகிழ்ச்சியும், சொந்தங்களுடனான பந்தமும் காதலைவிட மதிப்பு மிக்கவை. எனவே அதிக விலை கொடுத்துச் சம்பாதிக்கும் காதல் வாழ்க்கை போகப் போகக் கசக்கும் என்பதே யதார்த்தம்.

இனிப்பையும், இம்மாதிரிக் கசப்பையும் ருசித்துக் கொண்டிருக்கும் காதல் மணம் புரிந்தவர்களின் ஜாதகங்கள் (இருவருடைய ஜாதகங்களும்) எமக்குக் கிடைக்குமானால் நாம் அவற்றை ஆராய்ந்து புதிய விதிகளை உருவாக்கித் தருவோம்.

பெண்களுக்கு ஒரு குறிப்பு:

உங்களை நேசிப்பவரின் ஜாதகத்தில் சுக்கிரன் எந்த ராசியில், எத்தனையாவது பாகையில் இருக்கின்றது என்பதைக் கவனியுங்கள். அந்த பாகையிலிருந்து, சுக்கிரனின் பரமோச்ச பாகையான மீனத்தின் 27வது பாகை எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது என்பதைக் குறித்துக் கொண்டு அவ்வளவு தூரத்தை லக்னஸ்புடத்துடன் கூட்டக் கிடைக்கும் ராசி பாகை கலைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த ராசிக்கு அதிபதி லக்னத்துக்கு 6, 8, 12ல் இருந்தால் அவரைத் தவிர்த்து விடுங்கள்.

sample horoscope

இந்த ஜாதகத்தில் சுக்கிரஸ்புடம் 0 ராசி 3 பாகை 0 கலை. இதிலிருந்து சுக்கிரனின் பரம உச்ச பாகையான 11 ராசி 27 பாகை 0 கலை (இது உலகுக்கே பொதுவான constant. மாறிலி) எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது என்பதைப் பார்க்க 11 27 00 – 0 03 00 = 11 24 00 கிடைக்கும். இந்த ராசி பாகை கலைகளுடன் லக்ன ஸ்புடமான 3 ராசி 13 பாகை 00 கலைகளைக் கூட்ட 11 24 00 + 3 13 00 = 15 07 00 = 3 07 00 கிடைக்கும். இந்த ராசிக்கு அதிபதி சந்திரன் ஜாதகரின் லக்னத்துக்கு ஆறாமிடமான தனுசில் உள்ளது. இவருக்கு 3 மனைவியர். சிலருக்கு மனைவியின் மரணம் சம்பவிக்கின்றது. சிலருக்குப் பிரிவு நேர்கின்றது. எனவே இந்தக் குறிப்பைக் கவனத்தில் கொள்ளவும்.

 

This Week’s Quote:

People don't notice whether it's winter or summer when they're happy.

-  Anton Chekhov

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 58 guests and no members online