பஞ்சாங்கங்களில் விவாகப் பொருத்தங்கள் என்று அட்டவணைப் படுத்தப்பட்டவைகளைப் பார்த்தும், படித்தும் தெரிந்துகொண்டவர்களும் பத்திரிக்கைகளில், தொலைக்காட்சிகளில் சோதிடர்கள் எழுதுவதையும், பேசுவதையும் கவனித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களும் தங்கள் பெண்களுக்கு வரன் தேடும்பொழுது இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வேண்டாம் என்று முதலிலேயே நிறைய ஜாதங்களைக் கழித்து விடுகிறார்கள். அப்படிக் கழிக்கப்படும் ஜாதகங்களில் நல்ல ஜாதகங்களும் இருக்கக் கூடும். வெறுமனே நட்சத்திரப் பொருத்தங்கள் பார்த்தால் மட்டும் போதாது; பாவ, பாவாதிபதிகளையும் கவனிக்க வேண்டும் என்று பெரும்பான்மைச் சோதிடர்கள் தற்போது கூறுவது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. ஆனால் பாவ, பாவாதிபதிகளின் பலத்தையும், பலவீனத்தையும் அவர்கள் எப்படிக் கணிக்கின்றார்கள் என்ற இரகசியம் அவர்களுக்கு மட்டுமே தெரியும். பொதுவாக எப்படியெல்லாம் ஜாதகத்தை அலசுகின்றார்கள் என்பதையும் இந்தப் பொதுக் கருத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதையும் விவரித்துச் சொல்லவே இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது.

சுக்கிரன் நீசவீடான கன்னியில் இருந்தால் சுகமான இல்லற வாழ்க்கை இருக்காது, எனவே சுக்கிரன் நீசமான ஜாதகம் வேண்டாம் என்பது ஒரு பொதுக்கருத்து, இதில் எள்ளளவும் உண்மை இல்லை. உதாரணத்திற்கு 1975ம் ஆண்டை எடுத்துக்கொள்வோம் 1975ம் ஆண்டு நவம்பர் 3ம் நாள் காலை மணி 7.33க்குக் கன்னிராசியில் சென்ற சுக்கிரன் டிசம்பர் 1ம் நாள் மதியம் 1.30 மணி வரை அந்த ராசியில் இருந்துள்ளது. 3.11.75 முதல் 30.11.75 முடிய உள்ள 28 நாட்களில் உலகில் பிறந்த எல்லா ஆண்களுக்கும் சுக்கிரன் நீசமாகத்தான் இருக்கிறது. தற்போது 40 வயதை எட்டியிருக்கும் அவர்கள் அனைவரும் இல்வாழ்க்கையில் சுகமின்றி இருப்பார்கள் என்றோ, விவாகரத்து, ஆரோக்கியம் குறைந்த மனைவி போன்ற பிரச்னைகளில் சிக்கித் தவித்துக்கொண்டிருப்பார்கள் என்றோ கூறமுடியாது.

 

sample horoscope

 

இந்த ஜாதகத்தில் சுக்ரன் நீசமாக இருக்கின்றது. சுகாதிபதி புதன் சனியுடனும் கேதுவுடனும் சேர்க்கை. ஆனாலும் செப்டம்பர் 1971ல் திருமணம். இந்த நாள் வரை எவ்விதக் குறைவுமின்றி இல்லற வாழ்க்கை இனிதே போய்க் கொண்டிருக்கிறது. சுக்கிரனுக்கு நீச பங்கம் கிடைத்திருக்கின்றதே என யாரும் எண்ண வேண்டாம். இந்த நீச பங்கம் என்ற சொல்லே வராஹ ஹோரையில் இல்லை. நீசமாயிருந்தும் ஒரு கிரகம் நற்பலன்களைத் தருகின்றதே அது ஏன் என ஆராய்ச்சி செய்யாமல் நீசத்துக்குப் பங்கம் கிடைத்திருக்கின்றது என்று சொல்லித் தப்பித்துக் கொண்டவர்கள் கண்டுபிடித்ததுதான் இந்தச் சொல். நீசத்துக்குப் பங்கம் வருமானால் உச்சத்துக்கும் பங்கம் வரவேண்டுமே? இரண்டு கிரகங்கள் உச்சமாயிருந்தும் நற்பலன்களைச் செய்யவில்லை எனத் தெரிந்ததும் “உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுத்து உண்பான்” என்ற பழமொழியைக் கண்டுபிடித்ததும் இவர்களே.

தசாந்தர்த்தசா அத்தியாயத்தில் வராஹமிகிரர் 23 சுலோகங்கள் எழுதியுள்ளார். இதில் 5, 6, 7வது சுலோகங்களில் கிரகம் நீச்சாம்சத்தில் இருப்பது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறதேயொழிய ராசியில் நீசத்தில் இருப்பது பற்றிப் பேசவில்லை. அம்ச சக்கரத்தில் நீசத்தில் இருப்பதுதான் கிரகத்தின் பலத்தை வெகுவாகக் குறைக்கின்றது. ராசிச்சக்கரத்தில் உச்சத்தில் இருக்கும் சுக்கிரன் ஒரு மனிதனுக்கு 21 ஆண்டுகள் ஆயுள் கொடுக்கின்றது. நீசத்தில் இருக்கும் சுக்கிரன் அதில் பாதியான 10½ ஆண்டுகள் கொடுக்கின்றது. இந்தக் கணக்குக்கு மட்டுமே ராசிச்சக்கரத்தில் உச்ச நீச நிலைகளைக் கவனிக்க வேண்டுமே தவிர எல்லாப் பலன்களுக்கும் அவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்வது தவறாகவே முடியும். எனவே சுக்கிரன் நீசமாக இருந்தால் திருமண வாழ்க்கை நன்றாக இராது என்ற அவசரமான முடிவுக்கு யாரும் வரவேண்டாம்.

இன்னும் இரண்டு உதாரண ஜாதகங்கள் தரப்படுகின்றன.

 

sample horoscope

sample horosope

 

இந்த ஜாதகருக்கு 84 வயது முடிந்துவிட்டது. 1957ல் திருமணம் என்று நினைக்கின்றேன். 58 வருடங்கள் இல்லற வாழ்க்கை சுகமாகக் கழிந்துவிட்டது. இப்போதும் நலமாக இருக்கிறார்கள். இராசியில் சுக்கிரன் நீசமாக இருந்தாலும் நவாம்சத்தில் உச்சமாக இருப்பதைக் கவனியுங்கள். ஒன்பதுக்குடைய வியாழன் உச்சமாக இருந்தும் பூர்வீகச் சொத்துக்கள் என்று ஏதும் கிடையாது. சராசரி நிலையில் உள்ள குடும்பம்தான். குரு நவாம்சத்தில் நீச்சம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

sample horoscope

sample horosope

 

இவர் 70 வயதுக்கு மேல் வாழ்ந்தார். ஆனாலும் தாரதோஷம் நேரவில்லை. சுக்கிரன் ஐந்துக்குடையவனாக இருந்து நீச்சம் பெற்றாலும் ஒன்பதாமிடத்திலிருந்ததால் மூன்று மக்கள். எல்லோருமே நல்ல நிலையில் உள்ளனர். பொதுவாகச் சுக்கிரன் உச்சமாயிருந்தால் வாகன யோகம், அழகான ஆடை, ஆபரணங்கள் எல்லாம் உண்டு என்பது சோதிடர்கள் பொதுவாகப் பாடும் பாட்டு. ஆனால் எனக்குத் தெரிந்தவரை இவரைப் போல நேர்த்தியாக நளினமாக உடை உடுத்தியவரோ, வாழ்க்கையை ரசித்து வாழ்ந்தவரோ இல்லை என்றுதான் சொல்வேன்.

சுக்கிரனின் இராசி நிலையைப் பற்றித் தெரிந்து கொள்ள மட்டுமே இந்த உதாரண ஜாதகங்கள் தரப்படவில்லை. நன்கு கவனித்தால் இன்னும் நிறையச் சிக்கலான விஷயங்கள் இருப்பது தெரிய வரும். 21.09.1931 தேதிய கடக லக்ன ஜாதகத்தில் ஏழுக்குடையவன் ஆறில் மறைவு. 20.11.1935 தேதிய மகர லக்னத்தில் ஏழுக்குடையவன் எட்டில் மறைவு. இருந்தாலும் இல்லற வாழ்க்கையில் சிக்கல்கள் பிரச்னைகள் ஏதுமின்றிச் சுகமான வாழ்க்கையே கிடைத்திருக்கிறது. எனவே வெளிப்பார்வைக்கு மோசமான ஜாதகமாகத் தோன்றும் ஜாதகம் உண்மையிலேயே நல்ல ஜாதகமாக இருக்கக் கூடும். எல்லாக் கிரகங்களும் நல்ல இடத்தில் இருப்பதாகத் தோன்றும் ஜாதகங்களின் பலன்கள் மோசமாகவும் இருக்கக் கூடும். கடக லக்ன ஜாதகத்தில் ஏழுக்குடையவன் தனுசில் நிற்க அந்த ராசிநாதன் குரு லக்னகேந்திரத்தில் உச்சமாக இருக்கிறது. மகர லக்ன ஜாதகத்தில் ஏழுக்குடையவன் சிம்மத்தில் நிற்க அந்த ராசிநாதன் சூர்யன் பத்தாமிடத்தில் பத்தாம் பாவத்துக்கு மிகமிகச் சமீபத்தில் இருக்கிறது. எனவே ஒரு ஆழமான பார்வையோடு ஜாதகங்களை ஆராய்ச்சி செய்யக் கிரகஸ்புடங்கள் எவ்வளவு அவசியமென வாசகர்கள் இதன் மூலம் அறிந்துகொள்ளலாம். ஒரு மேலோட்டமான அலசல் செய்து ஜாதகங்களைக் கழிப்பதை விட்டுவிட்டு நுண்ணிய பார்வையில் நுட்பமான விஷயங்களைக் கண்டுபிடித்து அதன் பிறகே ஒரு ஜாதகத்தைத் தள்ளவோ அல்லது எடுக்கவோ துணிய வேண்டும்.

 அடுத்து ஏழாமிடத்ததிபன் நீசமாக இருக்கின்றான் என்று ஒரு ஜாதகத்தை வேண்டாம் என்று சொல்லக் கூடியவர்களும் இருக்கின்றார்கள். ஒரு பாவாதிபதி நீசமாக இருந்தால் அந்தப் பாவம் முழுக்க முழுக்க நாசமாகிவிடும் என்ற கருத்து எப்படியோ பரவிக் கிடக்கின்றது. இது முற்றிலும் தவறு.என் தந்தையாரின் ஜாதகத்தில் புதன் மீனத்தில் 15 பாகையில் பரமநீசத்தில் இருக்கின்றான். கணிதத்துக்கும் சோதிட அறிவுக்கும் காரணமாக உள்ள புதன் நீசமாகிவிட்டதால் அவருக்குக் கணிதமும், சோதிட அறிவும் கிட்டாமல் போய்விட்டதா என்ன? கணித சூத்திரங்களை ஞாபகம் வைத்துக்கொள்வதிலும், சோதிடத்தை மிகநுட்பமாகக் கற்று முடிவுகள் எடுப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. எனவே ஏழாமிடத்ததிபதி நீசமாகிவிட்டான் என்று எந்த ஜாதகத்தையும் ஒதுக்க வேண்டாம். உதாரணத்துக்கு ஒரு ஜாதகம் தரப்படுகிறது.

 

sample horoscope

இந்த ஜாதகத்தில் ஏழுக்குடையவன் புதன் நீசமாக இருக்கின்றான். புதனை செவ்வாய் எட்டாம்பார்வையாகவும், சனி மூன்றாம் பார்வையாகவும் பார்க்கின்றார்கள். சுபர் பார்வையில்லை. அட்டமாதிபதியான சந்திரன் புதனுடன் சேர்க்கை. சந்திரனும் தேய்பிறைச் சந்திரன். ஆதலால் பாபி. ஆக ஏழுக்குடையவன் நீசமாகி பாபர் சம்பந்தம் பார்வை பெற்று சுபர் பார்வை சம்பந்தமின்றி இருக்கின்றான். ஆரம்பத்தில் 18 வருஷம் 10 மாதம் 26 நாள் சனி தசை. பிறகு புததசை 17 வருடம். சுமாராகப் 19 வயது முதல் 36 வரை புததசையே நடந்திருக்கின்றது. ஒரு கேடும் வரவில்லை. 1962 ஜனவரியில் திருமணம் முடிந்த இவரது மனைவி 2013 ஜனவரியில் காலமானார். 51 வருட இல்வாழ்க்கை சுகமாகக் கழிந்திருக்கின்றது. எனவே ஏழுக்குடையவன் நீசமாக இருக்கின்றான் என்ற காரணத்தால் மட்டுமே ஒரு ஜாதகத்தைக் கழிக்க வேண்டாம்.

இதைப்போலவே சனி தசை நான்காம் தசையாக நடக்க இருக்கிறது, செவ்வாய் தசை ஐந்தாம் தசையாக நடக்க இருக்கிறது என்றெல்லாம் காரணம் சொல்லி சில ஜாதகங்களைச் சோதிடர்கள் தள்ளுவது உண்டு. இதற்கெல்லாம் சாஸ்திர சம்மதம் இல்லை. 40க்கும் மேற்பட்ட தசா முறைகள் உள்ளன. அதில் ஒன்றை மட்டுமே பிடித்துத் தொங்கிக் கொண்டு முடிவு எடுப்பதில் நியாயம் இல்லை.

எனவே நட்சத்திரங்களைக் காரணம் காட்டியோ அல்லது சுக்கிரன், ஏழாம்பாவாதிபதி நீசமாக இருக்கின்றான் என்ற காரணத்தைச் சொல்லியோ ஜாதகங்களைப் புறக்கணிப்பது கூடாது. அதுபோலவே சந்திரன் ஏழில் இருக்கின்றான், சுக்கிரனும் செவ்வாயும் சேர்ந்து இருக்கின்றார்கள், எனவே அந்த ஆண் ஒழுக்கக் குறைவு உள்ளவனாக இருப்பான் என்ற முடிவுக்கும் சிலர் வருவதுண்டு. எனக்குத் தெரிந்தவரை புலனடக்கம் மிகுந்தவர்களின் ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை மிகஅதிகமாக இருக்கின்றது. எல்லாக்கிரகங்களும் இரண்டுவகையான பலன்களையும் செய்யக்கூடியவைதான். செவ்வாய் மிக சுபமான பலனைத் தருவதாகவும், குரு மிக மோசமான பலனைத் தருவதாகவும் மாறிவிடவும் வாய்ப்புக்கள் உள்ளன. எனவே கேள்விப்பட்ட அல்லது பத்திரிக்கைகளில் படித்துத் தெரிந்து கொண்ட அறைகுறையான விஷயங்களை வைத்து நீங்களாகச் சிலமுடிவுகள் எடுக்க வேண்டாம்.

 

இந்தக் கட்டுரையில் என்னென்ன செய்யக் கூடாது என்ற விவரங்கள் எழுதப்பட்டன. இதன் தொடர்ச்சியாக வரும் அடுத்த கட்டுரையில் என்னென்ன விஷயங்களைச் செய்ய வேண்டும் என்ற விவரங்கள் சொல்லப்படும்.

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 248 guests and no members online