சூர்யனும், செவ்வாயும் லக்னம் முதல் பன்னிரண்டு முடிய உள்ள பாவங்களில் நின்றால் என்ன பலன்களைத் தருகின்றார்கள் என்பதைச் சென்ற கட்டுரையில் பார்த்தோம். சந்திரன் முதல் சனி வரையுள்ள மீதமுள்ள ஐந்து கிரகங்களும் என்ன பலன்களைத் தருகின்றார்கள் என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.

சந்திரன்:

லக்னத்தில் சந்திரனிருக்கப் பிறந்தவன் ஊமையாகவும், பைத்தியம் பிடித்தவனாகவும், மூடனாகவும், பார்வையிழந்தவனாகவும், செய்யத்தகாத காரியங்களைச் செய்பவனாகவும், காது கேளாத செவிடனாகவும், பிறர்க்கு அடிமைத் தொழில் செய்கின்றவனாகவும் இருப்பான்.

கடகராசி ஜன்மலக்னமாக வந்து அதில் சந்திரனிருந்தால் செல்வந்தனாகவும், மேஷம் ஜன்மலக்னமாக வந்து அதில் சந்திரனிருந்தால் அதிகமான குழந்தைகளைப் பெறுபவனாகவும், ரிசபம் ஜன்மலக்னமாக வந்து அதில் சந்திரனிருந்தால் பெருஞ் செல்வந்தனாகவும் இருப்பான்.

இரண்டாமிடத்தில் சந்திரனிருந்தால் நல்ல குடும்பம் உள்ளவனாக இருப்பான். (இந்த ஜாதகன் மூலமேற்படும் குடும்பமோ இவன் பிறந்த குடும்பமோ நல்லதாக இருக்கும் என்பது கருத்து என்று கடலங்குடி திரு.நடேச சாஸ்திரிகள் உரை எழுதுகின்றார்.)

மூன்றாமிடத்தில் சந்திரனிருக்கப் பிறந்தவன் பிறரைத் துன்புறுத்துபவனாக இருப்பான். (In the third moon makes a man cruel or an executioner என்று திரு. B. சூர்யநாராயணராவ் மொழி பெயர்க்கின்றார்) மூன்று ஏழுக்குத் திரிகோணமாக இருப்பதால் மனைவியைத் துன்புறுத்தும் கணவராக இருக்கவும் வாய்ப்பு உண்டு.

நான்காமிடத்தில் சந்திரனிருந்தால் சுகத்தையும், ஐந்தாமிடத்தில் சந்திரனிருந்தால் அதிகமான குழந்தைகளையும் கொடுக்கின்றான்.
ஆறாமிடத்தில் சந்திரனிருந்தால் அந்த ஜாதகன் அநேக எதிரிகளை உடையவனாகவும், பலமற்ற உடல்கொண்டவனாகவும், செரிமான சக்தி குறைந்தவனாகவும், குறைவான தாம்பத்ய சுகம் உள்ளவனாகவும், கொடூரமானவனாகவும், சோம்பேறியாகவும் இருப்பான்.

ஏழாமிடத்தில் சந்திரனிருக்கப் பிறந்தவன் பொறாமைக் குணம் கொண்டவனாகவும், புலனடக்கம் இல்லாதவனாகவும் இருப்பான்.

எட்டாமிடத்தில் சந்திரனிருக்கப் பிறந்தவன் மிகுந்த புத்திசாலியாகவும் ஆனால் வியாதியால் பீடிக்கப்பட்டவனாகவும் இருப்பான்.

ஒன்பதாமிடத்துச் சந்திரன் அந்த ஜாதகனைச் சகல ஜனங்களுக்கும் பிரியமானவனாகவும், புத்திரன், சினேகிதர்கள், சுற்றத்தார், பெருஞ்செல்வம் இவற்றுடன் கூடி வாழ்பவனாகவும் ஆக்குகின்றான்.

பத்தாமிடத்துச் சந்திரன் தனம், புத்தி, சுகவாழ்க்கை, எக்காரியத்தையும் செய்து முடிக்கும் வல்லமை இவற்றைக் கொடுக்கின்றான்.

பதினொன்றாமிடத்தில் சந்திரனிருக்கப் பிறந்தவன் பெரும் புகழுடன் வாழுகின்ற பெருமையைப் பெறுகின்றான்.
பன்னிரண்டாமிடத்தில் சந்திரனிருக்கப் பிறந்தவன் அங்கங்களில் ஏதாவது குறைவுள்ளவனாக இருப்பான்.


புதன்:

புதன் ஜன்மலக்னத்தில் இருந்தால் நல்ல கல்வியைக் கொடுக்கின்றான்.

புதன் இரண்டாமிடத்தில் இருக்கப் பிறந்தவன் செல்வந்தனாக இருப்பான்.

புதன் மூன்றாமிடத்தில் கெட்ட குணங்களையுடைய மனிதனை உருவாக்குகின்றான்.

புதன் நான்காமிடத்தில் இருக்கப் பிறந்தவன் கல்வி கேள்விகளில் சிறந்தவனாக ஆகின்றான்.

புதன் ஐந்தாமிடத்தில் இருக்கப் பிறந்தவன் நல்ல ஆலோசகனாகவும், சிக்கலான சமயங்களில் நல்ல தீர்வைக் கண்டு சொல்லும் மதியூகியாகவும் இருப்பான்.

ஆறாமிடத்தில் புதனிருக்கப் பிறந்தவன் எதிரிகள் அற்றவனாக இருப்பான்.

ஏழாமிடத்தில் புதன் இருந்தால் தர்மம் நியாயம் தெரிந்த மனிதனை உருவாக்குகின்றான். 

எட்டாமிடத்தில்; புதனிருக்கப் பிறந்தவன் தான் தேர்ந்தெடுத்த துறையில் மிகப் பிரபலமான ஆளுமையாக வருவான்.

மீதமுள்ள ஒன்பது, பத்து, பதினொன்று, பன்னிரண்டாம் இடங்களில் புதன் சூர்யனைப் போலப் பலன் கொடுக்கின்றான். அதாவது ஒன்பதில் இருந்தால் புத்திரன், செல்வம், சுகம் இவற்றைக் கொடுப்பவனாகவும், பத்தாமிடத்தில் இருந்தால் புகழ், சௌபாக்கியம் இவற்றைக் கொடுப்பவனாகவும், பதினோராமிடத்தில் இருந்தால் அதிக செல்வத்தைக் கொடுப்பவனாகவும், பன்னிரண்டாமிடத்தில் இருந்தால் அந்த ஜாதகனைப் பிறரால் வெறுக்கப்படும் காரியங்களைச் செய்பவனாகவும் ஆக்குகின்றான்.


வியாழன் அல்லது குரு:

வியாழன் லக்கினத்தில் இருக்கப் பிறந்தவன் பண்டிதனாக ஆகின்றான்.

இரண்டில் குரு இருந்தால் நன்றாகப் பேசுகின்ற மனிதனை உருவாக்குகின்றான்.

மூன்றில் குரு இருக்கப் பிறந்தவன் ஈகைக் குணமற்ற கஞ்சனாக இருப்பான்.

நான்கில் குரு இருக்கப் பிறந்தவன் சுகமான வாழ்க்கை வாழ்கின்றான்.

ஐந்தில் குரு இருந்தால் நல்லபுத்திசாலியாகவும்,

ஆறாமிடத்தில் குரு இருந்தால் சத்துருக்களற்றவனாகவும்,

ஏழாமிடத்தில் குரு இருந்தால் தனது தந்தையைவிட எல்லா வகையிலும் மேம்பட்டவனாகவும்

எட்டாமிடத்தில் குரு இருந்தால் நற்குணங்கள் இல்லாதவனாகவும் இருப்பான்.

ஒன்பதாமிடத்துக் குரு ஆன்மீக நாட்டத்தையும்,

பத்தாமிடத்துக் குரு பெருஞ்செல்வத்தையும்,

பதினோராமிடத்துக் குரு எந்தத் தொழிலிலும் லாபத்தையும் கொடுக்கின்றான்.

பன்னிரண்டாமிடத்துக் குரு ஒரு மனிதனைத் துஷ்டனாக ஆக்குகின்றான்.
பன்னிரண்டாமிடத்தில் குரு இருந்தால் செலவு அதிகம் செய்பவன், தான தருமங்களில் ஈடுபாடு உள்ளவன், நுண்கலைகளுக்கு (Fine Arts) அதிகம் பொருள் செலவிடுபவன் என்று பல்வேறு கருத்துக்கள் உள்ளன. தூக்கத்தில் இறந்து போகும் வாய்ப்பு உள்ளவன் என்றும் சில நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் பன்னிரண்டாமிடத்தில் குரு இருக்கப் பிறந்தவர்கள் வித்தியாசமான சிந்தனையாளர்களாக இருக்கின்றார்கள் என்பது எனது அனுபவத்தில் நான் கண்ட உண்மை.  பன்னிரண்டாம் இடம் தீவிரமான ஆராய்ச்சிக்குரிய ஒன்று. B.V. ராமன் பன்னிரண்டாம் இடத்துக் குருவுக்கு நல்ல பலன்களையே சொல்கின்றார்.

சுக்கிரன்:
   
சுக்கிரன் லக்னத்தில் இருக்கப் பிறந்தவன் போகி.

சுக்கிரன் ஐந்தில் இருக்கும் போது சுகமான வாழ்க்கையைக் கொடுக்கின்றான்.

சுக்கிரன் ஏழில் இருக்கும் போது பிறந்தவன் போகி.

பன்னிரண்டாம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் பெருஞ் செல்வத்தைக் கொடுக்கின்றான்.

மீதமுள்ள 2, 3, 4, 6, 8, 9, 10, 11-வது இடங்களில் சுக்கிரன் குருவைப் போலப் பலன்கள் கொடுக்கின்றான்.

சனி:

தனது சொந்த வீடுகளான மகரம், கும்பம், உச்ச வீடான துலாம், குருவின் வீடுகளான தனுசு, மீனம் இவை லக்னமாக இருந்து சனி லக்னத்திலேயே இருந்தால் அப்போது பிறந்தவன் அரசர்களுக்கு ஒப்பானவனாகவும், கிராமம், நகரம் இவைகளை நிர்வாகம் செய்யும் அதிகாரமுள்ளவனாகவும், நல்ல ஆரோக்யமான உடல் உள்ளவனாகவும் இருப்பான். இந்த ஐந்து ராசிகளைத் தவிர்த்து வேறு ராசிகள் லக்னமாக வந்து அதில் சனி இருந்தால் நித்திய தரித்திரனாகவும், நோயுள்ளவனாகவும், காம இச்சை அதிகம் கொண்டவனாகவும், சுறுசுறுப்பற்ற சோம்பேறியாகவும், சிறுவயதிலேயே நோய்களால் பீடிக்கப்பட்டவனாகவும், அதிகம் பேசாதவனாகவும் இருப்பான்.

2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12-ம் பாவங்களில் சனியிருந்தால் சூர்யனுக்கு அந்தந்த பாவங்களில் என்னென்ன பலன்கள் சொல்லப்பட்டனவோ அவைகளையே சனிக்கும் சொல்ல வேண்டும்.

லக்னம் முதற்கொண்டே பன்னிரண்டு பாவங்களையும் சொல்ல வேண்டுமென்பது வராகமிகிரரின் மதம். தற்காலம் சோதிடர்கள் சந்திர லக்னத்தையும் வைத்துப் பாவ பலன்கள் சொல்வது வராகமிகிரருக்கு ஏற்புடையதல்ல.

மேலைநாட்டு முறையைப் பின்பற்றினாலும் சரி, ஸ்ரீபதி பத்ததியில் சொல்லப்பட்ட முறையைப் பின்பற்றினாலும் சரி பாவமத்யத்துக்கு அல்லது cusp-க்குச் சமீபத்தில் இருக்கின்ற கிரகங்கள் மட்டுமே பாவ பலன்களைச் செய்யும். பாவமத்யத்தை விட்டு வெகுதூரம் தள்ளியிருக்கும் கிரகம் பலன் செய்யாது.

ஐந்தாம் பாவத்துக்கு வெகு சமீபத்தில் இருக்கின்ற சனி அல்லது செவ்வாய் தான் ஐந்தாம் பாவத்துக்குக் கெடுதல் செய்யுமே தவிர, ஐந்தாம் பாவத்தைவிட்டு விலகியிருக்கும் அக்கிரகங்கள் கெடுதலைக் கொண்டு வராது.

மேலும் சொந்த மூலத்ரிகோண உச்ச வீடுகளில் கிரகங்கள் இருக்குமாயின் அக்கிரகங்கள் அந்தந்தப் பாவங்களுக்கு நன்மையைச் செய்யுமே தவிர கெடுதலைச் செய்யாது. நீச சத்ரு வீடுகளில் இருக்கும் கிரகங்கள் பாவத்துக்குக் கெடுதலைச் செய்யும். நல்ல பலன்களைக் குறைக்கும்.

கிரகஸ்புடங்கள், பாவஸ்புடங்கள் பாவாதிபதிக்கு மற்ற கிரகங்களால் நேரும் திருஷ்டி இவைகளையெல்லாம் அறிந்து கிரகங்களின் ஷட்பலத்தையும் கணித்து பாவ பலன்களைச் சொல்லும் சோதிடர்களின் வாக்கு பொய்யாவதில்லை. 

 

  
அடுத்த கட்டுரை ‘சில கேள்விகளும் பதில்களும்' 01.05.2016ல் வெளியாகும்.

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 192 guests and no members online