ராமானுஜன் ஜாதகம் - ஆயுர்த்தாயம் என்ற கட்டுரையைப் படித்த ஒரு வாசகர் சூரியன், சந்திரன், செவ்வாய் தவிர ஏனைய கிரகங்களின் ஆயுஷ்கலைகளை ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை எனக் கேட்டிருந்தார். அவரது கேள்விக்கு விரிவான விடையாக இந்தக்கட்டுரை எழுதப்படுகின்றது. 

நாம் நமது இணையதளத்தில் நிஜமான சோதிட சாத்திரத்தை அறிமுகப்படுத்துவதாகவே குறிப்பிட்டு வந்திருக்கின்றோம். பரிகாரக் கோயில்களையும், பூர்வபுண்ணியத்தையும் மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் சோதிடர்களை விட்டு விலகி, சோதிட சாத்திரத்தின் பல்வேறு கணக்குகளோடு வாசகர்கள் அறிமுகமாக வேண்டும் என்பதே எமது அவா. எனவேதான் ஆயுர்த்தாயம் பற்றி விளக்க முயற்சி செய்து, தேசத் தந்தை காந்தியடிகளின் ஜாதகத்துக்கு ஆயுர்த்தாய கணிதம் செய்து அக்கட்டுரையை வெளியிட்டோம். கணிதமேதை ராமானுஜன் ஜாதகம் என்ற கட்டுரையைப் படித்த வாசகர் ஒருவர், ராமானுஜன் ஜாதகத்துக்குக் கணித முறையில் ஆயுர்த்தாயம் செய்யலாமே என்று கேட்டதால் அதையும் செய்து வெளியிட்டோம். 

ஆயுர்த்தாய கணக்குப்படியே ஒருவரின் ஆயுள் அமையவேண்டுமென்ற கட்டாயமில்லை. இதை நாம் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கின்றோம். பல ஜாதகங்களில் இது சரியாக வரவில்லையென்பதால்தான் பிண்டாயுர்த்தாயம், நைசர்க்கிக ஆயுர்த்தாயம், அம்சக ஆயுர்த்தாயம், ஜீவசர்மா ஆயுர்த்தாயம் என்று பல்வேறு கணக்கு முறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. சூர்யன் பலத்திருந்தால் பிண்டதசை முறை, சந்திரன் பலத்திருந்தால் நைசர்க்கிக தசை முறை, லக்னம் பலத்திருந்தால் அம்சகதசை முறை என்றெல்லாம் முந்தைய சோதிடாச்சாரியர்கள் சொன்னதற்குக் காரணமே ஒரு கணக்குமுறையால் மட்டுமே ஆயுளை நிச்சயம் செய்ய இயலாது என்பதை அவர்கள் அறிந்திருந்ததால்தான்.

வராகமிகிரர் தனது நூலின் 7வது அத்தியாயத்தின் கடைசி சுலோகத்தில் ஆயுர்த்தாய கணக்குகளையும் மிஞ்சி அதிக ஆயுளோடு ஒருவன் வாழ்வதற்கான யோகத்தைப் பற்றிச் சொல்லுகின்றார். எனவே பூர்வாசாரியார்கள் அனைவருமே ஆயுர்த்தாய கணிதத்தை விடக் குறைந்த ஆயுளோடு வாழ்ந்தவர்களையும், கணக்கையும் மிஞ்சிய ஆயுளோடு வாழ்ந்தவர்களையும் கண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை. 

கடலங்குடி திரு.நடேச சாஸ்திரிகள் அவரது பிருஹஜ் ஜாதக மொழி பெயர்ப்பில், ஆயுர்த்தாயாத்தியாயத்தின் கடைசியில் பின்வருமாறு கூறுகின்றார். 

“ஆனால் இவ்விதம் செய்யப்பட்ட ஆயுள் நிர்ணயத்திற்குக் கீழுள்ள காலத்தில் மரணம் வராது என்பதுவுமில்லை. இங்கு சொல்லிய ஆயுள் நிர்ணயத்திற்கு மேல் ஜீவிக்க மாட்டான் என்றும் சொல்வதற்கில்லை. ஏனெனில் மேற்கூறிய கணித முறைப்படி ஆயுள்நிர்ணயம் செய்யப்பட்டவன் அனாசாரமுள்ளவனாயிருப்பானாயின் அவனுக்குக் கணித சாஸ்திரப்படி செய்த ஆயுள் கட்டாயம் குறைந்தே விடும். இவ்விதம் நிர்ணயித்த காலத்திற்குள் ஒருவன் மரித்தால் அதுவே அகால மிருத்யு எனப்படும். இவ்விதம் வரும் ஆயுள் நிர்ணயத்தை அறிந்து கொண்டு, ஆயுள் விருத்தியைத் தருகின்ற சாந்தி பரிகாரங்களைச் செய்தலாலும், ரசாயனாதி சேவையாலும், பகவத் பக்தியினாலும், சதா ஆசாரத்தைக் கைப்பற்றி நடத்தலாலும் கணித முறைப்படி கிடைத்த ஆயுளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.”

சாராவளி என்ற நூலின் முப்பத்தொன்பதாவது அத்தியாயம் ஆயுள் கணிதம் பற்றிப் பேசுகின்றது. அந்த அத்தியாயத்தின் கடைசி சுலோகத்தில் இதமாகவும், மிதமாகவும் ஆகாராதிகளை உட்கொள்ளுகின்றவர்களுக்கும், சத்சுபாவமுள்ளவர்களுக்கும், நல்லொழுக்கமுள்ளவர்களுக்கும், இந்திரியாதிகளை ஜெயித்தவர்களுக்கும் இங்கு சொன்ன பிரகாரம் பரமாயுள் நிச்சயம் ஏற்படுமென முனிசிரேஷ்டர்கள் நிச்சயம் செய்திருக்கின்றனர். மேற்சொன்னவைகளுக்கு விபரீதமாக நடப்பவர்களுக்கு இவை பலிக்காமல் அகாலமரணம் உண்டாகும் என்பர் என்று கூறப்பட்டுள்ளது.

நாம் ஏற்கனவே எழுதியிருப்பது போல நமக்கு இக்கருத்துக்களில் உடன்பாடு இல்லை. ஆனாலும் கணித முறைப்படியான ஆயுளை நம்புவதற்கு இல்லை என்பது மட்டும் மேற்கண்ட விளக்கங்கள் மூலம் தெரியவருகிறது. எனவே தான் நாம் ஸ்ரீபதி பத்ததி நூலில் குறிப்பிட்டுள்ளபடி ஒரு கிரகத்தின் தசாபலம், அக்கிரகம் ஜன்மகாலத்தில் உள்ள நிலையைப் பொறுத்து மட்டுமல்ல தசாப்ரவேச காலத்தில் அக்கிரகத்தின் பலத்தையும், பலமற்றதன்மையையும் பொறுத்தே அமைகின்றது என்ற முடிவுக்கு வந்திருக்கின்றோம். வராகஹோரையில் வராகமிகிரர் இதுபற்றி ஏதும் குறிப்பிடவில்லையென்றாலும் ஒரு கிரகத்தின் தசா ஆரம்பிக்கும் நேரத்தில் சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் இருப்பதற்கு ஏற்பப் பலன்களை மாற்றிச் சொல்லியிருக்கின்றார். இதன் அடிப்படையிலேயே தசாப்ரவேச கால லக்னஸ்புடம், பாவஸ்புடங்கள், கிரக ஸ்புடங்கள் இவற்றைக் கணித்துப் பலன் சொல்ல வேண்டுமென்று பிற்காலச் சோதிடாச்சாரியார்கள் முடிவுக்கு வந்திருக்கலாம். 

ராமானுஜன் ஜாதகம் ஆயுர்த்தாயம் என்ற கட்டுரையில் செவ்வாய் தசை அவருக்கு மாரகம் செய்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பதை நாம் குறிப்பிட்டுள்ளோம். எனவே மரணத்தைக் கொண்டு வரப்போகும் செவ்வாய் தசைக்குப் பிந்திய மற்ற கிரகங்களின் தசை ஏற்று நடக்காது என்பதால் அத்தசைகளுக்கான ஆயுஷ்கலைகளைக் கணக்கிட்டுக் காட்டவில்லை. மேலும் அம்சக ஆயுர்த்தாய முறைப்படியும் அவருக்கு ஆயுள் கணக்கு அதிகம் வரவில்லை. 36 வயதே வருகிறது. 

கணக்கு, இயற்பியல், வேதியியல் போன்றவைகளில் ஒரு மேதை விட்ட இடத்திலிருந்து இன்னொருவர் ஆரம்பித்துச் சில முடிவுகளைக் கண்டு, பின் அவர் விட்ட இடத்திலிருந்து இன்னொருவர் தொடர்ந்து……. இந்தத் தொடர்ச்சியான தேடல்கள் மூலம், அவரவர் பங்களிப்பைச் சேர்த்து அறிவியலை மேன்மைப்படுத்தியிருக்கின்றார்கள். ஆனால் இங்கே இந்தச் சோதிட சாத்திரத்தைப் பொறுத்தவரை பராசரர், வராகமிகிரர், மந்த்ரேஸ்வரர் என்று பழைய ஆசாரியர்களின் பெயரைச் சொல்லிக்கொண்டே ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இந்த உணர்வை ஒவ்வொரு சோதிட ஆர்வலருக்கும் ஊட்ட வேண்டுமென்பதே எமது எழுத்துக்களின் நோக்கம்.

S.ரகுராஜ் என்ற வாசகர் தனது உறவினர்கள், நண்பர்கள், இருப்பவர்கள், இறந்தவர்களின் ஜாதகங்களை இம்மாதிரி ஆயுர்த்தாய கணிதம் செய்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தால்  அதுவே நமது எழுத்துக்குக் கிடைத்த  வெற்றியாகும். எமது அனுபவத்தில் கணக்குப்படி கிடைத்த வயதைவிடக் குறைந்த ஆண்டுகளே வாழ்ந்து மடிந்தவர்கள்தாம் அதிகம். கீழ்க்கண்ட ஜாதகி கணிதப்படியான ஆயுளைவிட அதிகமாக வாழ்ந்து மறைந்தார். வாசகர்களின் பார்வைக்காக அந்தப் பெண்மணியின் ஜாதகம் தரப்படுகின்றது.

sample horoscope

இப்பெண்மணி பெருஞ்செல்வந்தராக வாழ்ந்து மறைந்தவர். இவருக்குக் கணிதமுறைப்படி 

சூர்யன்  16-00-19
 சந்திரன்  16-08-13
 செவ்வாய்  08-08-09
 புதன்  09-02-02
 குரு  14-05-28
 சுக்கிரன்  15-08-00
 சனி  11-11-26
 மொத்தம்  92-09-07 
வருஷம் ஆயுள் கிடைக்கின்றது.  

வியாழன் 12லும் சூரியன், புதன் சுக்கிரன் இவர்கள் 11லும் சனி 10லும் இருப்பதால் முறையே வியாழனுக்குப் பாதி, சூரியன், புதன் சுக்கிரன் இவர்களில் பலமான சுபருக்கு ¼ பங்கு, (சூரியன் பலத்திருந்தால் ½ பங்கு) சனிக்கு 1/3 பங்கு குறைக்க வேண்டும்.

எனவே

வியாழனுக்கு 7 02 29

சுக்கிரனுக்கு   3 11 00

சனிக்கு           3 11 29

-------------------------------------

ஆக மொத்தம் 15 01 28 கழிக்க வேண்டும். 92 வருஷம் 9 மாதம், 7 நாட்களில் 15 வருஷம் 1 மாதம், 28 நாட்களைக் கழிப்பதால் கிடைக்கும் வருஷங்கள் 77 மாதம், 7 நாட்கள் 9. லக்கினாயுர்த்தாயமான 4 வருஷங்களை உடன் சேர்த்தால் 81 வருஷம், 7 மாதம், 9 நாட்கள் கிடைக்கின்றன. ஆனால் அவர் 89 வருஷம், 6 மாதம், 9 நாட்கள் வாழ்ந்தார். சுக்கிரன் வக்கிரமாகவும், வர்க்கோத்தமமாகவும் இருப்பதால் சுக்கிரனுக்குஹரணம் செய்யப்பட்டுள்ளது. மேலும் லக்னத்தில் செவ்வாய் இருந்து சுபக்கிரகங்களான புதன், குரு, சுக்கிரனால் பார்க்கப்படாமல் இருப்பதால் பாபர்கள் லக்னத்தில் இருப்பதற்குச் செய்ய வேண்டிய குருரோதய ஹரணம் இங்கே செய்யப்படவில்லை. அதையும் செய்தால் இன்னும் ஆயுள்குறையும்.

எனவே ஆயுர்த்தாய கணித முறைப்படி கிடைக்கும் ஆயுள்தான் நிச்சயமான ஆயுள் என்ற முடிவுக்கு வரவேண்டியதில்லை. அதைவிடக் கூடுதலாகவும் வரும், குறைவாகவும் வரும் என்பதை முந்தைய காலத்தில் சோதிட வல்லுனர்கள் அறிந்தே இருக்கின்றார்கள். ஆனால் அதற்கான காரணங்களைக் கணக்குகள் மூலம் தேடாமல் பக்தியோடும், போகங்களற்ற வாழ்க்கையோடும் சம்பந்தப்படுத்தியதுதான் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

சரியான காரணம் ஏதாவது இருக்கும். அதைக்கண்டு பிடிக்க வேண்டிய ஆர்வம் சோதிடத்தில் நாட்டமுற்றவருக்கு வரவேண்டும். S.ரகுராஜ் போன்ற வாசகர்கள் முயற்சிக்க வேண்டும் என்பதே எமது அவா.

இந்த விளக்கங்களை நான் எழுத நேரிட்டது S.ரகுராஜ் என்ற வாசகரின் கேள்வியால்தான். அவருக்கு நன்றி. சென்ற வாரம் தமிழ்ப்புத்தாண்டின் சில முக்கியமான நாட்கள் என்ற பட்டியல் இந்த வாரம் கொடுக்கப்படும் என்று எழுதியிருந்தோம். அது அடுத்த வாரம் வெளிவரும்.

 

This Week’s Quote:

More laws, less justice.

Cicero.

 

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 231 guests and no members online