தமிழ்ச் சினிமா உலகில், இரட்டையர்களைப் பற்றிய திரைப்படத்துக்கு அபூர்வ சகோதரர்கள் என்று பெயர் சூட்டுவது வழக்கம். இந்த வாரம் இரட்டையர்களாகப் பிறந்த இருவரின் ஜாதகங்களைப் பற்றி எழுதப் போவதால் நாமும் அபூர்வ சகோதரர்கள் என்றே இக்கட்டுரைக்குப் பெயர் கொடுத்துள்ளோம்

வாசகர் ஒருவர் தான் இரட்டையர்களாகப் பிறந்த இருவரில் மூத்தவர் என்றும், இவரது தம்பி 8 நிமிடங்களுக்குப் பின்னர் பிறந்தவர் என்றும் குறிப்பிட்டு, ஜாதகங்களை அனுப்பியுள்ளார். கிரக நிலைகளில் எந்த மாறுதலும் இல்லை. ஆனால் மூத்தவர் சொந்தத் தொழில் செய்கின்றார். இளையவர் அரசுப் பணியில் உள்ளார். இருவருக்குமே பெண் குழந்தைகள்தான் பிறந்துள்ளனர். ஆனால் மூத்தவருக்குத் திருமணம் ஆன ஒரு வருடத்திலும் இளையவருக்குத் திருமணம் முடிந்து எட்டு வருடங்கள் கழித்தும் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. 

இந்த வாசகர் அறிந்து கொள்ள ஆசைப்படும் விசயங்கள் இரண்டு 

  1. ஒருவர் சொந்தத் தொழில் செய்யவும் இன்னொருவர் அரசுப் பணியில் அமரவும் என்ன காரணம்?
  2. குழந்தைப் பேறுக்கு இளையவர் எட்டு ஆண்டுகள் காத்திருக்க என்ன காரணம்?

இப்போது ஜாதகங்களைப் பார்ப்போம்.

sample horoscope

sample horosope

sample horoscope

sample horosope

அம்சச் சக்கரத்தில் மூத்தவர் சிம்ம லக்னத்திலும், இளையவர் கன்யா லக்னத்திலும் பிறந்துள்ளனர். மூத்தவருக்கு அம்ச லக்னத்துக்குப் பத்துக்குடையவன் சுக்கிரன். இரண்டாவது பிறந்தவருக்கு அம்ச லக்னத்துக்குப் பத்துக்குடையவன் புதன். சுக்கிரன் மகர ராசியிலும், புதன் தனுசு ராசியிலும் இருக்கின்றன. மேசம், சிம்மம், தனுசு ராசியில் உள்ள கிரகங்கள் அரசையும், ரிசபம், கன்னி, மகரம் ஆகிய ராசிகளில் உள்ள கிரகங்கள், சொந்த முயற்சியையும் குறிப்பதாக நாம் எமது பழைய கட்டுரைகளில் எழுதியுள்ளோம். இங்கே மகர ராசியில் உள்ள சுக்கிரன் சொந்தத் தொழிலையும், தனுசில் உள்ள புதன் அரசுப் பணியையும் கொடுத்துள்ளன.

அடுத்துக் குழந்தைகளைப் பற்றிப் பார்ப்போம். மூத்தவருக்கு அம்சச் சக்கரத்தில் பதினோராமிடத்து அதிபதி புதன். இளையவருக்குப் பதினோராமிடத்து அதிபதி சந்திரன். (மேலைநாட்டுச் சித்தாந்தப்படி ஐந்தாமிடம் ஆண் குழந்தைகளையும், பதினோராமிடம் பெண் குழந்தைகளையும் குறிக்கும். நாமும் அதையே பின்பற்றுகின்றோம்). புதனின் நவாம்சபதி சுக்கிரன். சந்திரனின் நவாம்சபதி சனி. சனி வக்கிரமாக இருப்பதால் சந்திரன் கொடுக்க வேண்டிய பலன்களும், கொஞ்சம் தாமதமாகவே கிடைக்கும். பெண் குழந்தையைக் குறிக்கும் கன்யா சஹம் (சுக்கிரன் – சந்திரன் + லக்னம்) முன்னவருக்கு மேசத்திலும், 0 29 25 பின்னவருக்கு ரிசபத்திலும், 1 01 32 அமைகின்றன. 0 29 25ன் துவாதசாம்சம் மீனத்திலும், 1 01 32ன் துவாதசாம்சம் ரிசபத்திலும் அமைகின்றன. முன்னவரின் துவாதசாம்ச லக்னம் விருச்சிகம். பின்னவரின் துவாதசாம்ச லக்னம் தனுசு. மீனம் விருச்சிகத்தின் ஐந்தாமிடத்தையும், ரிசபம் தனுசுக்கு ஆறாமிடமாகவும், வருவதால் பின்னவரின் குழந்தைப் பேறு தாமதமாகவே கிட்டும். 

இங்கே நாம் அம்சச் சக்கரத்தை மட்டும் எடுத்துக்கொண்டுள்ளோம். பத்தாம் பாவம் முதலில் பிறந்தவருக்கு 7 03 46 ஆகவும், பின்னவருக்கு 7 05 42 ஆகவும் உள்ளன. இந்தப் பாவ ஸ்புடத்தையும், பாவத்வாதசாம்ச நிலையையும் எடுத்துக்கொண்டு ஆராய்ந்து பார்த்தால், தொழிலில் ஏற்பட்டுள்ள வித்தியாசங்களுக்கான காரணங்கள் நிறையக் கிடைக்கலாம். ஒவ்வொரு பாவத்துக்கும், பாவாதிபதிக்கும் இடைப்பட்ட தூரங்கள், லக்னாதிபதிக்கும் பாவத்துக்கும் இடைப்பட்ட தூரங்கள் இவையும் பலன்களை மாற்றுவதில் பெரும்பங்காற்றுகின்றன.

தனது ஜாதகத்தைத் தந்து இக்கட்டுரையை எழுத உதவிய அந்த வாசகருக்கு நன்றி சொல்லிக் கொள்கின்றோம்.

 

This Week’s Quote:

The principle mark of genius is not perfection but originality, the opening of new frontiers.

-  Arthur Koestler

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 86 guests and no members online