நாம் எழுதியிருந்த ‘எட்டில் சனி ஒன்பதில் குரு’ என்ற கட்டுரையைப் படித்த திரு.அருள்முருகன் என்ற வாசகர் 27.09.18ல் அக்கட்டுரைக்குக் கீழே சில கேள்விகளை எழுதியுள்ளார். அவற்றில் முதலாவது கேள்வி எல்லாம் விதிப்படி நடக்குமானால் ஏன் ஜாதகம் பார்க்க வேண்டும் என்பது. எமது கருத்தும் அதுவேதான். நாம் ஜாதகம் பார்ப்பதில்லை என்ற உண்மையை அவர் நமக்கு நேரில் அறிமுகமானால் அவர் அறியக்கூடும். ஆனால் இந்தக் கேள்விக்கு நாம் பதில் சொல்ல முடியாது. எல்லாம் விதிப்படியே நடக்கும், நமது கர்ம பலன்களை நாமேதான் சுமக்க வேண்டும் என்ற இந்த இந்தியத் தத்துவச் சிந்தனை வேதகாலந் தொட்டு, இன்றைய கார்ப்பரேட் சன்னியாசிகள் வரை வளர்த்தெடுத்த ஒன்று. ஆனால் கூடவே கோயில்களுக்கும், நதிகளுக்கும் அபிசேகங்களையும், ஆராதனைகளையும் செய்பவர்களும் அவர்கள்தான். நாம் எப்போதும் இதிலிருந்து விலகியே இருக்கின்றோம். எனவே இந்தக் கேள்விக்கு நாம் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.
இரண்டாவது அவர் வைக்கும் கேள்வி போஸ்ட்மார்ட்டம் செய்வதனால் என்ன பயன் என்பது. போஸ்ட்மார்ட்டம் செய்தால் மட்டுமே, உண்மைகளைக் கண்டறிய முடியும் என்பதால்தான் போஸ்ட்மார்ட்டம் அவசியமாகின்றது. நூறு ஜாதகங்களில் சில ஒற்றுமையைக் காண முடிந்தால்தான், நூற்றி ஒன்றாவது ஜாதகத்துக்கு முன்கூட்டியே பலன் உரைக்க முடியும் என்று நாம் நம்புவதால்தான் நாம் போஸ்ட்மார்ட்டம் செய்கின்றோம். ஒரு கட்டம் வரை மட்டுமே போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும் என்பதும், அதன் பிறகு எதிர்காலப் பலன்தான் சொல்ல வேண்டும் என்பதே நாம் சோதிட ஆர்வலர்களிடம் எதிர்பார்க்கும் விசயம்.
மூன்றாவது கேள்வி இரண்டாவதைச் சேர்ந்த ஒன்றுதான். எந்தச் சோதிடருமே எதிர்காலப் பலன் உரைப்பதில்லை என்று அவர் குறிப்பிடுகின்றார். இதற்கான பதிலும் மேலேயுள்ள பாராவில் அடக்கம். ஆனால் போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கும் முன்கூட்டியே சில விச யங்களைச் சொல்வதற்கும் திரு.அருள்முருகனுக்கு எல்லாவிதச் சுதந்திரமும் உண்டு. அவரது சிந்தனைகளுக்கும், செயல்களுக்கும் யாரும் கட்டுப்பாடு வைத்திருக்கவில்லை. எனவே இந்த வாரம் நாம் மூன்று ஜாதகங்களைத் தருகின்றோம். அவர்களுக்கு நடந்த சம்பவம் பற்றியும் குறிப்பு தருகின்றோம். ஏன் அவை நடந்தன என்று அந்த ஜாகங்களைப் போஸ்ட்மார்ட்டம் செய்து சில முடிவுகளை திரு. அருள்முருகன் தருவாரானால், நாம் அவருக்கு மிகவும் கடமைப்பட்டவராவோம். அவர் சோதிடத்தில் பரிச்சயமானவர் என்பது நமக்குத் தெரிந்ததால்தான் நாம் அவரைப் போஸ்ட்மார்ட்டத்துக்கு அழைக்கின்றோம்.






முதலாவது ஜாதகர் 08.09.58ல் பிறந்து 27.07.2002 இரவு 9.45-க்குமேல் 10.30-க்குள் மாரடைப்பால் மரணமடைந்தார். அது முதலாவது அட்டாக்தான். ஆனால் சிகிச்சை தொடங்குவதற்கு முன்னமேயே அவர் மரணமடைந்துவிட்டார். இரண்டாவது ஜாதகர் 2001 ஜீலை மாதம் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுத் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் நியூயார்க் கோபுரங்கள் தாக்கப்பட்ட நாளான 11.09.2001ல் நடந்த ஆன்ஜியோவுக்குப் பின்னர் உடல் நலமுற்று இப்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின்றார். மூன்றாவது ஜாதகர் அவரது 24-வது வயதில் அட்டாக் வந்து, 2014 டிசம்பர் 25-ல் ஆன்ஜியோ சிகிச்சை எடுத்துக்கொண்டார். மிகச் சமீபத்தில் 18.09.2018ல் மீண்டும் ஏற்பட்ட தொந்தரவுகளால் ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்துள்ளார். முதலாவது ஜாதகர் 44-வது வயதில் அட்டாக் வந்து முதல் அட்டாக்கிலேயே மரணமடைந்ததற்கும, இரண்டாவது ஜாதகருக்கு 38 வயதில் இருதயம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் உடல்நலமுற்றதற்கும், மூன்றாவது ஜாதகர் 24 வயதிலிருந்தே இதய வியாதியால் பாதிக்கப்பட்டு இரண்டு முறை தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டதற்குமான காரணங்களை திரு.அருள்முருகன் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்கு அழைக்கின்றோம். மூவருக்குமே ரிசப லக்னம் என்ற ஒன்றைத்தவிர வேறு பத்து ஒற்றுமைகளைக் கண்டுபிடிக்குமாறும் அவைகளை இதய நோயோடு தொடர்புபடுத்தித்தரவும் திரு.அருள்முருகன் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்.
ஒரு தேர்தலில் முதன்மை வேட்பாளரைத் தவிரச் சுயேச்சைகளும் நிற்பதுண்டு. சில நேரங்களில் சுயேச்சை வேட்பாளர் ஜெயிக்கும் அற்புதமும் நடப்பதுண்டு. இன்றைய போஸ்ட் மார்ட்டத்தின் பிரதம வேட்பாளர் திரு.அருள்முருகன்தான். ஆனால் அவருடன் சேர்ந்து போட்டியில் கலந்து கொள்ளவும், போஸ்ட்மார்ட்டம செய்து ஜெயிக்கவும் எல்லா வாசகர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. நாம் விம்சோத்தரி தசா முறைகளைப் பின்பற்றுவதில்லை என்பதாலும், ராகு, கேதுவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதாலும், முதலிரண்டு ஜாதகங்களில் ராகு, கேது குறிக்கப்படவில்லை. ஆனால் வாசகர்களுக்காகக் கீழ்க்கண்ட விவரங்களைத் தருகின்றோம். முதல் ஜாதகர் மாரடைப்பால் மரணமடைந்த போது அவருக்குச் சனி தசையில் சூர்ய புக்தி. இரண்டாவது ஜாதகர் மாரடைப்பால் தாக்கப்பட்ட போது வியாழதசையில் சனி புக்தி. மூன்றாவது ஜாதகர் மாரடைப்பால் தாக்கப்பட்ட போது சூரிய தசையில் ராகு புக்தி.
This Week’s Quote:
There are no facts, only interpretations.
- Friedrich Nietzsche
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
