பகீரதப் பிரயத்தனம் என்றொரு சொல் உண்டு. கங்கையைப் பூமிக்குக் கொண்டுவரப் பகீரதன் என்ற அரசன் எத்தனை முறை முயன்றான், எவ்வளவு கஷ்டப்பட்டான் என்பதை யாவருக்கும் உணர்த்தவே அந்தச் சொல் வந்தது. சோதிடரும் அவ்வாறு ‘பகீரதப் பிரயத்தனம்’ செய்துதான் விடைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சாராவளி என்ற சோதிடநூல் கூறுகின்றது. ஆனால் நமக்கு வரும் மின்னஞ்சல்கள் மூலம் நமக்குத் தெரிய வரும் உண்மை என்னவென்றால், சோதிட சாத்திரத்தின் நூற்றில் ஒரு பங்கு கூடச் சராசரி மனிதர்களுக்குப் புரியவில்லை என்பதுதான். சிலநேரங்களில் நாம் கட்டுரைகள் எழுதுவது பாலைவனத்தில் பசுமையைக் கொண்டு வரும் முயற்சியாகி விடுமோ என்று கூடத் தோன்றுகின்றது.
ஒரு குழந்தை பிறக்கும்போது உதயமாகும் லக்னம் அந்தக் குழந்தை பிறக்கும் ஊரின் ரேகாம்சம், அட்சாம்சத்தைப் பொறுத்து மாறும் என்ற அடிப்படை விதி கூடத் தெரியாமல் ஜாதகத்தின் போட்டோ நகலை நமக்கு அனுப்பி விடை கேட்கின்றார்கள். எந்த ஊரில் பிறந்தது என்று நாம் கேள்வி அனுப்பிய பின்னரே பிறந்த ஊரைக் குறிப்பிட்டு அனுப்புகின்றார்கள். சிலர் இரவா பகலா என்று கூடச் சொல்வதில்லை. கல்லூரிப் பேராசிரியர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. சோதிடர் என்றால் மந்திரவாதி என்ற நினைப்பும், தெய்வங்கள் அவர் வழியாக நமக்குச் செய்திகள் கூறுகின்றன என்ற எண்ணமும் கொண்டவர்கள் தாம் இங்கு அதிகம் இருக்கின்றார்கள் போலும். அல்லது அப்படி ஒரு எண்ணத்தை அவர்களுக்குள் வளர்த்து விட்டிருக்கின்றார்கள் நம்மூர்ச் சோதிடர்கள்.
இக்கட்டுரை வெளியாகும் 20.05.2018 நண்பகல் 12.00 மணிக்கு ஒரு குழந்தை பிறந்தால் கீழ்க்கண்ட நகரங்களில் கீழ்க்கண்டவாறு உதய லக்னம் அமையும்.

ஜாதகம் கணிக்கும்போது ஜாதகர் பிறந்த இடம் நிச்சயம் தேவைப்படுகின்றது என்பதைச் சராசரி வாசகர்களுக்கு உணர்த்தவே இதை நாம் இங்குக் குறிப்பிட்டோம்.
ஒரு வாசகர் கிரகங்களின் பரமோச்சபாகைகளைப் பற்றிக் கேட்டிருக்கின்றார். எல்லாச் சோதிட நூற்களிலும் உச்ச பாகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது அவரது கவனத்துக்கு வரவில்லை போலும்.

நேர் ஏழாவது ராசியில் குறிப்பிட்ட பாகை பரமநீச பாகை என்றும் சோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு வாசகர் ஆதான லக்னம் (அதாவது கரு உருவாகும் நேர லக்னம்) பற்றி ஒரு பத்திரிக்கையில் சோதிடர் ஒருவர் எழுதியிருக்கும் கட்டுரையை அனுப்பி எனது கருத்தைக் கேட்டிருக்கின்றார். வராஹஹோரை முதல் எல்லாச் சோதிடநூல்களிலும் ஜன்ம லக்னத்துக்குத்தான் பலன் சொல்லப்பட்டிருக்கின்றதே தவிர ஆதான லக்னத்துக்குப் பலன்கள் சொல்லப்படவில்லை. கரு உருவாகி தாயின் கர்ப்பத்திலிருந்து வெளிவரும் நிமிடம் வரைக்குமே ஆதான லக்னத்துக்குப் பலன் சொல்லப்பட்டுள்ளது. பிறகு நாம் ஜன்ம லக்னத்தைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். பிரபலமான சோதிடர்கள் தங்களது கணிப்பு பலநேரங்களில் பொய்யாகிப் போவதைக் கண்டு தங்களைத் தற்காத்துக் கொள்ளக் கண்டுபிடித்ததே இந்த ஆதான லக்னம். ஜன்ம லக்னத்தை வைத்து இவ்வளவுதான் பலன் சொல்ல முடியும், இதற்கு மேலும் துல்லியமாகத் தெரிய வேண்டுமென்றால் ஆதான லக்னம்தான் அவசியம் என்று சோதிடர்கள் கூறுவது அவர்களது தன்னம்பிக்கைக் குறைவைத்தான் காட்டுகின்றது.
ஒரு சோதிடரின் கணிப்பு பொய்யாகிப் போனால், அதற்குரிய முழுப்பொறுப்பையும் அவர் ஏற்றுத்தான் ஆகவேண்டும். ‘எனது கணக்கு தவறாகிப் போனது. இது வருந்தத்தக்கதுதான்’ என்று ஒப்புக்கொள்ளும் நேர்மையும் அவருக்கு இருக்க வேண்டும். 1978-ல் ஒரு குழந்தையின் ஜாதகத்தைக் கணித்தபோது எமது தந்தையிடம் அக்குழந்தைக்குப் பாலாரிஷ்டம் நேரிடும் என்று சொன்னோம். வேறு காரணங்களால் எமது தந்தையார் அதை மறுத்தார். ஆனால் அக்குழந்தை எட்டுமாதங்களுக்குப் பின்னர் தொட்டிலில் கிடந்த தேள் கொட்டி இறந்து போயிற்று. இதனால் எமது தந்தையாரைவிட எமது சோதிட அறிவு கூடிவிட்டது என்றோ, அவரது அறிவு குறைந்துவிட்டதோ என்ற அர்த்தமில்லை. சில நேரங்களில் ‘அரிஷ்டத்துக்கு அரிஷ்டம்’ அதாவது கெடுதலுக்குக் கெடுதலைச் செய்யும் கிரகங்கள் பலத்திருந்தால் அக்கெடுதல் நேராது தோச த்துக்குத் தோச த்தைக் கொண்டுவரும் கிரகங்களின் வலிமை தவறாகக் கணக்கிடப்படும்போது `இம்மாதிரிப் பிழைகள் நேரிடத்தான் செய்யும். அந்தக் குழந்தையின் மரணத்துக்குக் காரணமாக அமைந்தது சந்திரன். அக்குழந்தை பௌர்ணமி நாளில் பிறந்ததால் பலமான சந்திரன் அரிஷ்டம் செய்யாது என்றார் எம் தந்தையார். அரிஷ்டத்தைக் கொண்டு வரும் கிரகமான சந்திரன் மிகவும் வலிமையாக இருப்பதால் அது நிச்சயம் மரணத்தைக் கொண்டுவரும் என்று நாம் எமது கருத்தைச் சொன்னோம்.
பலமான கிரகங்கள் கஷ்டம் தராது என்று கூறுவதும் சோதிட சாத்திரந்தான். அக்கிரகமே மரணத்தைக் கொண்டு வருவதாக இருந்தால் அது பலமாக இருக்கும்போது நிச்சயம் மரணத்தைச் செய்யும் என்பதும் சோதிடசாத்திரந்தான். எனவே கணிப்பு பொய்த்துப் போனால் நமது தர்க்க அறிவு சரியாக வேலை செய்யவில்லை என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாமே தவிர வேறு காரணங்கள் தேடக்கூடாது.
நாம் சோதிடம் பயின்ற போதெல்லாம் அச்சுக்கு வந்ததைப் படித்தும் கேட்டுமே பாடம் படித்தோம். இப்பொழுதுள்ள வலைத்தள வசதியெல்லாம் எமக்குக் கிடைத்திருப்பின் நாம் இப்பொழுது கற்றிருப்பதைவிடப் பன்னூறு மடங்கு கற்றிருப்போம். ஆகையால் சோதிடத்தில் ஆர்வமுள்ள வாசகர்கள் நம்முடைய கட்டுரைகளைத் திரும்பத் திரும்ப படித்துத் தெளிவடைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாம் ஏற்கெனவே எழுதியிருப்பதுபோல் சோதிடம் உபாசனையாலோ, தெய்வத்தாலோ வருவதல்ல. உழைப்பாலும் பயிற்சியாலும் வருவது.
This Week’s Quote:
I am a part of all that I have met.
- Alfred Lord Tennyson
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
