சித்திரை நட்சத்திரம் முடியவுள்ள 14 நட்சத்திரங்களில் பிறந்தவர்களின் குணங்களைச் சென்ற கட்டுரையில் பார்த்தோம். சுவாதி முதல் ரேவதி முடியவுள்ள 13 நட்சத்திரங்களில் பிறந்தவர்களின் குணங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.


சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணிவுள்ளவர்கள். வியாபாரிகள். இனிமையாகப் பேசுபவர்கள். அறநெறிப்படி வாழ்பவர்கள்.

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொறாமைக் குணம் கொண்டவர்கள். ஈகைக் குணம் அற்றவர்கள். அழகானவர்கள். புத்திசாலித்தனமாகப் பேசுபவர்கள். போர்க்குணம் கொண்டவர்கள்.

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வந்தர்களாகவும், பிறந்த இடம் விட்டு வேறு இடங்களில் வசிப்பவர்களாகவும், பசி பொறுக்காதவர்களாகவும், அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களாகவும் இருப்பார்கள்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிக நண்பர்கள் இல்லாதவர்கள். கிடைத்தது போதும் என்ற எண்ணம் கொண்டவர்கள். தர்மம் செய்பவர்கள். அதிகமாகக் கோபம் கொள்பவர்கள்.

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கர்வமுள்ளவர்கள். பெரும்பணக்காரர்கள். சுகவாசிகள். பிறருக்குக் கெடுதல் நினைக்காதவர்கள். அலைபாயும் மனம் இல்லாது ஸ்திரமான புத்தியுடையவர்கள்.

பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அன்பாகவும், ஆனந்தமாகவும் குடும்பத்தை நடத்துகின்ற மனைவியை உடையவர்கள். கர்வம் கொண்டவர்கள். ஆயுள் வரைக்கும் சில சிநேகிதர்களைக் கொண்டவர்கள்.

உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மரியாதைக்குரியவர்கள். தர்மம் அறிந்தவர்கள். அதிகமான சிநேகிதர்களை உடையவர்கள். செய்நன்றி மறவாதவர்கள். எல்லோரது அன்பையும் சம்பாதிப்பவர்கள்.

திருவோணத்தில் பிறந்தவர்கள் செல்வந்தர்கள். மெத்தப் படித்தவர்கள். நல்லகுணங்களுடைய மனைவி கிடைக்கப் பெற்றவர்கள். நல்ல பேரும் புகழும் கொண்டவர்கள்.

அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வந்தர்கள். பிறர்க்கு உதவி செய்யாதவர்கள். இசையில் நாட்டமுடையவர்கள். தைரியம் அதிகம் கொண்டவர்கள்.

சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெளிவாகப் பேசுபவர்கள். எதிரிகளை எவ்வகையிலேனும் அழிப்பவர்கள். எதற்கும் கட்டுப்படாதவர்கள். பெண்கள் மூலம் துக்கப்படுபவர்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த விஷயத்துக்கும் அஞ்சுகின்றவர்கள். பெண்களுக்கு அடங்கியவர்கள். (பெண்கள் மூலம் பணத்தை இழக்கின்றவர்கள் என்றும் ஒரு அர்த்தம் கொள்கின்றார்கள்) நன்றாகப் பேசிப் பொருள் தேடுபவர்கள். (Sales Representatives என்று எடுத்துக்கொள்ளலாம்) கஞ்சர்கள்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேடைகளில் சாதுரியமாகப் பேசுபவர்கள். சுகவாசிகள். மக்கள், பேரப்பிள்ளைகள் என்று பெரிய குடும்பத்தையுடையவர்கள். எதிரிகளை வெற்றி கொள்பவர்கள். தர்ம சிந்தனைமிக்கவர்கள்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வந்தர்கள். பிறரது சொத்துக்கள் மீது விருப்பம் அற்றவர்கள். நல்ல உடற்கட்டு உடையவர்கள். திறமைசாலிகள். பிறரது அன்பைச் சம்பாதிப்பவர்கள்.


மேற்கண்ட பலன்கள் சந்திரன் லக்னத்துக்கு ஆறு, எட்டு, பன்னிரண்டு ஆகிய இடங்களில் இருந்தால் பொருந்தாது என மங்களேஸ்வரீயம் கூறுகின்றது. சந்திரனிருக்கும் நட்சத்திரத்துக்கு என்ன பலன்கள் கூறப்பட்டுள்ளனவோ அதே பலன்களை லக்னம் இருக்கும் நட்சத்திரம் அல்லது லக்னாதிபதி இருக்கும் நட்சத்திரத்துக்கும் எடுத்துக்கொள்ளலாம். லக்னம், சூரியன், சந்திரன், லக்னாதிபதி ஆகியவற்றுள் பலம் பொருந்தியது எதுவோ அது இருக்கும் நட்சத்திரப் பலன்கள் நிச்சயமாகச் சித்திக்கும்.

விஞ்ஞானம் எப்பொழுதும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. இந்திய நாட்டுச் சோதிடச் சாஸ்திரம் மட்டும் தேங்கிய குட்டையைப் போன்று கிடந்து வற்றி வருகிறது. பராசரர் சொல்லிவிட்டார், வசிஷ்டர் சொல்லிவிட்டார் என்று சொன்னதையே சொல்லிக்கொண்டு புதிய சிந்தனைகளுக்கு இடங்கொடுக்காமல் பழமையில் ஊறிக்கிடக்கின்ற போலிச் சோதிடர்களால் இந்தச் சாஸ்திரம் புதைகுழிக்குப் போய்க் கொண்டிருக்கிறது.

இந்தக் கிரகத்துக்கு இந்த ஊர்த் தெய்வத்திடம் போய்ப் பரிகாரம் செய்யுங்கள் என்று பராசரரும், வசிஷ்டரும் சொல்லாத ஊர்களையெல்லாம் தேடிக் கண்டுபிடிக்கும் நவீனச் சோதிடர்கள் சோதிட சாஸ்திரத்தின் முக்கியமான பகுதியான வானசாஸ்திரத்தையோ பலன் சொல்லுவதற்கென்றே உபதேசிக்கப்பட்ட பலவகையான கணக்குகளையோ படிக்கவும் தெரிந்து கொள்ளவும் முயற்சி செய்வதில்லை.

சோதிடம் பார்க்கப் போகின்றவர்கள்? இவர்களுக்குப் பரிகாரங்களைத் தவிர வேறொன்றும் கேட்கத் தெரியாது. மின்னஞ்சல் மூலம் என்னுடன் தொடர்பு கொள்பவர்களில் நிறையப் பேருக்குப் பிறந்த இடம் சோதிட சாஸ்திரத்தில் ஒரு முக்கியமான பங்காற்றுகின்றது என்பதே தெரியவில்லை. லக்னம் சரியாகக் கணிக்கப்படப் பிறந்த இடம் நிச்சயமாக அவசியம் என்பது கூடத் தெரியாமல் பிறந்த நேரமும், தேதியும் மட்டுமே சொல்லிப் பலன் கேட்கின்றார்கள். ஒரு வாசகர் ‘சூரியன் சொந்த வீட்டில் இருந்தால் அரசு உத்தியோகம் கிடைக்கும் என்கின்றார்களே எனக்குக் கிடைக்கவில்லையே ஏன்? எனக் கேட்டிருக்கின்றார். சூர்யன் சொந்த வீட்டில் இருந்தால் அரசு வேலை கிடைக்கும் என்றால் ஆவணி மாதம் பிறந்த எல்லோருமே அரசு ஊழியர்களாக வேண்டுமே?

போகட்டும். வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு.

இந்த நட்சத்திரப் பலன்களை ஜன்ம ஜாதகத்துக்கு மட்டுமல்லாமல் பிரஸ்ன நேரத்திலும் பயன்படுத்திப் பார்த்தால் சரியாகவே இருக்கும்.


 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 192 guests and no members online