பிருஹஜ் ஜாதகத்தின் பதினான்காவது அத்தியாயமான ‘த்விக்ரகயோகாத்யாயம்’ இரண்டு கிரகங்கள் சேர்ந்து இருந்தால் என்ன பலன்களைக் கொடுக்கின்றன என்பதைச் சொல்லுகிறது.
சூர்யன்:
சூர்யன் சந்திரனுடன் சேர்ந்திருந்தால் யந்திரங்களை உருவாக்கி உபயோகிக்கும் வேலைகளைச் செய்யும் மனிதர்களையும், சிற்பம், கற்களால் கட்டிடங்களை நிர்மாணிக்கும் மனிதர்களையும் உண்டு பண்ணுகின்றான்.
சூர்யன் செவ்வாயுடன் சேர்ந்திருக்கும் போது கெட்ட செய்கைகளில் பற்றுள்ள மனிதன் பிறக்கின்றான். சூர்யநாராயணராவ் இந்த இடத்தில் ‘in all these cases the position of the man has nothing to do with his character. Prince and statesman priests and poets, philosophers and literates have been known to be guilty of the most abominable vices while poor and ignorant men have been known to be strictly moral and religious’ என்று வியாக்கியானம் செய்கின்றார்.
சூர்யன் புதனுடன் சேர்ந்திருக்கப் பிறந்தவன் எந்தக் காரியத்தையும் சாமர்த்தியத்தோடு செய்பவனாகவும், மிகவும் கூர்மையான புத்தியுடையவனாகவும், புகழையும் சுகத்தையும் பெற்றவனாகவும் இருப்பான்.
சூர்யன் வியாழனோடு சேர்ந்திருக்கப் பிறந்தவன் இரக்கமற்ற மனிதனாகவும் அடுத்தவர்களுக்காகக் காரியங்கள் செய்பவனாகவும் இருப்பான்.
சூர்யன் சுக்கிரனோடு சேர்ந்திருக்கப் பிறந்தவன் குத்துச் சண்டை செய்வதன் மூலமும், ஆயுதங்களைத் திறமையாக உபயோகிப்பதன் மூலமும் பணம் சேர்க்கின்றான். (பொது மேடையில் தங்களது திறமைகளை வெளிக்காட்டிப் பொருள் சம்பாதிப்பவர்கள் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.)
சூர்யன் சனியுடன் சேர்ந்திருக்கும் போது பிறந்தவன் உலோகங்கள் பற்றிய நுண்ணறிவு மிக்கவனாகவும் உலோகங்களைச் செய்பவனாகவும் இருப்பான். (தற்காலத்தில் metallurgist எனப் பொருள் கொள்ளலாம்.)
சந்திரன்:
சந்திரன் செவ்வாயுடன் சேர்ந்திருக்கும் போது பிறந்தவன் போலிச் சாமான்களை வாங்கி விற்றல், பொருளைப் பெற்றுக் கொண்டு தனது மனைவியையோ அல்லது பிற பெண்டிர்களையோ அன்னியர்களிடம் ஒப்படைத்தல், மதுபானங்கள் விற்றல், பாத்திரங்கள் செய்து விற்றல் போன்ற தொழில்களைச் செய்கின்றான். மேலும் தனது தாயாருக்குக் கெடுதலைச் செய்பவனாகவும் இருப்பான்.
சந்திரன் புதனுடன் சேர்ந்திருக்கப் பிறந்தவன் இனிமையாகப் பேசுபவனாகவும், நல்ல கல்வியைக் கற்று சாஸ்திரங்களின் உண்மையான அர்த்தங்களை வெளிக்கொண்டு வருபவனாகவும், எல்லோருக்கும் சிநேகிதனாகவும், புகழ்பெற்றவனாகவும் இருப்பான்.
சந்திரன் குருவுடன் சேர்ந்திருந்தால் சத்துருக்களை ஜயிப்பவனும் தனது பிறப்பால் தனது சமூகத்துக்குப் பெருமையைச் சேர்ப்பவனுமாகிய மனிதன் பிறக்கின்றான். குரு சந்திர சேர்க்கை ஒரு மனிதன் செல்வந்தனாக மிகவும் துணைபுரிகிறது. அதே சமயம் ஸ்திரமான புத்தியில்லாத மனிதனையும் இச்சேர்க்கை உருவாக்குகின்றது.
சந்திரன் சுக்கிரனுடன் சேர்ந்திருக்கப் பிறந்தவன் பெண்களுக்குப் பிரியமான வாசனைத் திரவியங்கள், ஆடைகள் முதலியவற்றை விற்கும் வியாபாரியாக ஆகின்றான்.
சந்திரன் சனியுடன் சேர்ந்திருக்கும் போது பிறந்தவன் ஏற்கனவே இன்னொரு வரை மணந்து குழந்தைகள் பெற்ற பெண்ணையும், அந்தக் குழந்தைகளையும் தன்னுடன் சேர்த்து வாழ்கின்ற மனிதனாக ஆகின்றான்.
செவ்வாய்:
செவ்வாய் புதனுடன் சேர்ந்திருக்கும் போது பிறந்தவன் பழங்கள், எண்ணெய் முதலியவற்றை விற்கும் வியாபாரியாக ஆகின்றான். சில நேரங்களில் இச்சேர்க்கை மல்யுத்தம் செய்பவர்களையும் உருவாக்குகின்றது. (Boxers)
செவ்வாய் வியாழனுடன் சேர்ந்திருக்கப் பிறந்தவன் ஒரு நகரத்தை ஆள்கின்றவனாகவோ அல்லது அரசனாகவோ அல்லது உத்தமமான பிராம்மணன் ஆகவோ வாழ்கின்றான். (District administrators, state secretaries or judges எனப் பொருள் கொள்ளலாம்.)
செவ்வாய் சுக்கிரனுடன் சேர்ந்திருக்கப் பிறந்தவன் பசுக்களை வைத்துக் காப்பாற்றுபவனாகவும் (பால்பண்ணை வைத்திருப்பவர்கள்) குத்துச்சண்டை வீரனாகவும் எந்தக் காரியத்தையும் சாமர்த்தியமாகச் செய்பவனாகவும் பிற பெண்டிர் மீது ஆசை கொள்பவனாகவும் சூதாட்டத்தில் விருப்பம் உள்ளவனாகவும் இருப்பான்.
செவ்வாய் சனியுடன் சேர்ந்திருக்கப் பிறந்தவன் மிகவும் துக்கத்தை அனுபவிப்பவனாகவும், பொய் பேசுபவனாகவும், கெட்ட குணங்களை அதிகம் கொண்டிருப்பதால் மற்றவர்களால் இகழ்ந்து பேசப்படுபவனாகவும் இருப்பான்.
புதன்:
புதன் குருவுடன் சேர்ந்திருந்தால் அப்போது பிறந்தவன் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுள்ளவனாகவும் சங்கீதத்தில் ஈடுபாடு உள்ளவனாகவும் நாட்டியசாஸ்திரங்களை அறிந்தவனாகவும் இருப்பான்.
புதன் சுக்கிரனுடன் சேர்ந்திருக்கப் பிறந்தவன் இனிமையாகப் பேசுபவனாகவும் பெரிய நிலப்பண்ணைக்குச் சொந்தக்காரனாகவும் இருப்பான். மேலும் இவர்கள் ஏதாவது ஒரு தலைமைப் பொறுப்பிலும் இருப்பார்கள்.
புதன் சனியுடன் சேர்ந்திருக்கப் பிறந்தவன் அடுத்தவர்களை ஏமாற்றுவதில் மிகக் கெட்டிக்காரனாகவும் மரபுகளை மீறி நடப்பவனாகவும் இருப்பான்.
குரு:
குரு சுக்கிரனுடன் சேரும் போது நல்ல படிப்பாளியையும் செல்வம், நல்ல மனைவி, சுகம் இவற்றோடு வாழ்பவனையும் உருவாக்குகின்றான்.
குரு சனியுடன் சேரும் போது ஒப்பனைக் கலைஞர்கள், கைவேலைப்பாடு மிகுந்த பாத்திரங்களைச் செய்பவர்கள், சமையற்காரர்கள் ஆகியோரை உருவாக்குகின்றான். (make-up men, hair dresser, vessel merchants and cooks)
சுக்கிரன்:
சுக்கிரன் சனியுடன் சேரும் போது குறைந்த கண்பார்வை (ஏதாவது ஒரு விதத்தில் பார்வையில் குறைபாடு உடையவர்கள்) உடைய மனிதனையும், பெண்களைச் சார்ந்து பொருளைச் சேர்க்கும் மனிதனையும் எழுதுவது, அச்சுக் கோர்ப்பது, ஒன்றைப்பார்த்து அதே போல எழுதி நகலெடுப்பது போன்ற வேலைகளைச் செய்யும் மனிதனையும் உருவாக்குகின்றான்.
சேர்க்கை என்பதை ஒரே இராசியில் இருப்பது என்று பொருள் கொள்ளக் கூடாது. 3 பாகைகளுக்குள் இரண்டு கிரகங்கள் இருந்தால் மட்டுமே சேர்க்கை எனக் கொள்ள வேண்டும். 10 பாகைகளுக்குள் மூன்று கிரகங்கள் இருக்குமானால் அதை மூன்று கிரகங்களின் சேர்க்கை என எடுத்துக்கொண்டு பலன் சொல்ல வேண்டும். புதன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சேர்ந்து இருந்தால் புதன் குரு, புதன் சுக்கிரன், குரு சுக்கிரன் என மூன்று விதமான சேர்க்கைகளுக்கும் பலன் சொல்ல வேண்டும்.
கிரகங்கள் இருக்கும் ராசி, அந்த ராசிகளுக்குக் கிரகங்களுடன் உள்ள சம்பந்தம், அந்த ராசி லக்னத்திலிருந்து எத்தனையாவது பாவமாக வருகின்றது என்பதையெல்லாம் பொறுத்துப் பலன்களை யூகித்துச் சொல்ல வேண்டும். பிரஸ்ன காலத்திலும் கூட இந்த யோகங்களைக் கவனித்துப் பலன் சொன்னால் சரியாகவே இருக்கும்.
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
