ஒரு சம்பவம் எப்போது நடக்கும் என்பதைக் கிரகங்களின் கோசாரம் மூலம் தீர்மானிக்க வேண்டும் என்பது சோதிடத்தின் அடிப்படை விதி. ஆனால் அதைத் தீர்மானிக்க அஷ்டவர்க்கம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, சந்திரன் இருக்கும் ராசியல்ல. இதை நாம் முன்னர் எழுதிய ராசி பலன்கள் என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம். சூரியனின் சஞ்சாரத்தை வைத்து ஒரு சம்பவம் நடக்கும் மாதத்தை அறியலாம் என்பதும் சோதிடத்தின் அடிப்படை விதிதான். அஷ்டவர்க்க முறைப்படி அதை எப்படி அறிய முடியும் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
ஒருவரின் திருமணம் எப்போது நடக்கும் என்பதை அறிந்து கொள்ள ஏழாம் பாவ ஸ்புடத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் சூரியனிடமிருந்து ஏழாம் பாவம் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை, ஸ்புடங்கள் மூலம் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். சூரியன் முதல் சனி வரையுள்ள ஏழு கிரகங்களின் அஷ்டவர்க்கத்திலும் எந்த எந்தக் கிரகங்கள் தங்களது அஷ்டவர்க்கத்தில் அந்தத் தூரத்தில், சூரியனிடமிருந்து பலனளிக்கும் என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும். அந்தக் கிரகங்களிடமிருந்து சூர்யாஷ்டவர்க்கத்தில் பலனளிக்கும் இடங்களில் சூரியன் வரும்போது திருமணம் நடக்கும் என்று கூறலாம். கொஞ்சம் குழப்புவது போலத் தோன்றும் உதாரணம் தந்தால் இலகுவாகப் புரியும்.

இந்த ஜாதகத்தில் 7-ம் பாவம் கன்னி ராசியில் 15 பாகை 10 கலையில் உள்ளது. சூரியனிடமிருந்து 7-ம் பாவம் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை அறிய, ஏழாம் பாவஸ்புடத்தில் சூரியஸ்புடத்தைக் கழிக்க வேண்டும். 5 15 10 – 6 11 32 = 11 3 38. எனவே சூரியனிடமிருந்து 7ம் பாவம் 12ம் இடத்தில் உள்ளது. இப்போது தங்களது அஷ்டவர்க்கத்தில் எந்த, எந்தக் கிரகங்கள் சூரியனுக்குப் பன்னிரண்டில் பலனளிக்கும் என்று பார்த்தால் புதனும், சுக்கிரனுமே சூரியனுக்குப் பன்னிரண்டில் பலனளிக்கின்றார்கள். எனவே புதனையும், சுக்கிரனையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒரு கிரகத்திடமிருந்து சூரியன் தனது அஷ்டவர்க்கத்தில் சில இடங்களில் பலனளிக்கும். கோசார ரீதியாக அந்த இடங்களில் சூரியன் வரும்போது திருமணம் நடக்கும். இங்கே நாம் சுக்கிரனை எடுத்துக்கொண்டோம். சுக்கிரனுக்கு 6, 7, 12ல் சூரியன் பலனளிக்கின்றான். மேச ராசியின் 27 பாகை 14 கலை முதல் ரிசப ராசியின் 27 பாகை 14 கலை முடிய சுக்கிரனுக்கு ஆறாமிடம் என்றும் ரிசப ராசியின் 27 பாகை 14 கலை முதல் மிதுனத்தில் 27 பாகை 14 கலை முடிய ஏழாமிடம் என்றும் துலாத்தின் 27 பாகை 14 கலை முதல் விருச்சிகத்தில் 27 பாகை 14 கலை முடிய பன்னிரண்டாமிடம் என்றும் கணக்கிட்டுக் கொண்டு இந்த மூன்று இடங்களில் சூரியன் சஞ்சரிக்கும்போது திருமணம் நடக்கும் என்று முடிவு செய்ய வேண்டும். இந்த ஜாதகருக்கு சூரியன் விருச்சிகத்தில் 10 பாகையில் இருக்கும்போது திருமணம் நடந்தது.
புதன், சுக்கிரன் இவ்விரண்டு கிரகங்களில் ஏன் சுக்கிரனைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டால் விடை சொல்ல ஒரு புத்தகமே எழுத வேண்டும். சம்பவங்கள் நடந்த பின்பே நாம் இந்த ஆராய்ச்சிப் பணியை மேற்கொண்டதால் சுக்கிரனுக்கு 12ல் சூரியன் வரும் போது திருமணம் நடந்தது என்று அறிந்த பின்னரே நாம் புதனைத் தவிர்த்தோம். ஆனால் திருமணம் இன்னும் நடக்காத ஒருவருக்குப் பலன் சொல்லும்போது நாம் சரியான கிரகத்தைத் தேர்ந்தெடுக்கவில்லையென்றால் பலன் பொய்த்துப் போகும். கிரகங்களின் உச்ச, சொந்த, பகை வீட்டை வைத்துக் கிரகங்களைத் தீர்மானிக்கக் கூடாது. அஷ்டவர்க்க முறைப்படி எந்தக் கிரகம் லக்னத்துக்கு நல்ல இடங்களில் உள்ளதோ அந்தக் கிரகத்தை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.
மேற்சொன்ன உதாரணத்தில் ஏழாம்பாவ பலன் எந்த ருதுவில் நடக்கும் என்று யூகித்து அந்த ருதுவுக்கு உள்ள மாதத்தைத் தேர்ந்தெடுத்துச் சொல்லலாம். இதேபோலச் சந்திராஷ்ட வர்க்கம் மூலம் சந்திரன் எந்த ராசியில் சஞ்சாரம் செய்யும்போது ஒரு சம்பவம் நடக்கும் என்று கணக்கிட முடியும். இந்தக் கட்டுரையை வாசகர்கள் எந்த அளவுக்குப் புரிந்து கொள்கின்றார்கள் என்பதைப் பொறுத்து இதன் தொடர்ச்சி எழுதப்படும்.
This Week’s Quote:
All the powers in the universe are already ours. It is we who have put our hands before our eyes and cry that it is dark.
- Swami Vivekananda
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
