ஜனவரி 2020 கடைசி வாரத்தில் நிறைய நண்பர்களிடமிருந்து எமக்குக் கேள்விகள் வந்தன. ஐயா சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரியிலா அல்லது டிசம்பரிலா? என்று. 24.01.2020-ல் சில தொலைக்காட்சிகளில் சனிப்பெயர்ச்சிப் பலன்கள் என்று சோதிடர்கள் சிலர் கூடிப் பேசிக் கொண்டிருக்கும்போதே இன்னொரு சேனலில் டிசம்பரில்தான் சனிப்பெயர்ச்சி திருநள்ளாறு தேவஸ்தானமே சொல்லிவிட்டது என்று சோதிடர் ஒருவர் முழங்கிக் கொண்டிருந்தார். பாவம் பொதுமக்கள். அவர்கள் என்ன செய்வார்கள்? சிலர் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கோவில் கோவிலாக அலைந்து கொண்டிருக்க இன்னொரு பெருங்கூட்டம் டிசம்பருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.

‘த்ருக்’ கணிதம் சரியானதா அல்லது வாக்கியக் கணிதம் சரியானதா என்ற பட்டிமன்றம் பல்லாண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. வாக்கியப் பஞ்சாங்கப்படி கோயில் உத்சவங்கள் நடத்திக்கொள்ளலாம் என்றும் தனிப்பட்ட நபரின் ஜாதகப்பலன்களுக்குத்  த்ருக் பஞ்சாங்கம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் காஞ்சிப் பெரியவர் சொல்லிவிட்டார் என்ற வதந்தி ஒன்றையும் யாரோ கிளப்பி விட்டிருக்கின்றார்கள். காஞ்சிபுரம் சங்கர மடத்தில் த்ருக் பஞ்சாங்கம்தான் நடைமுறையில் இருப்பதாக நாம் நம்புகின்றோம். ஏனெனில் ‘ஆசார்யாள் மடத்துப் பஞ்சாங்கம்’ என்ற த்ருக் கணிதப் பஞ்சாங்கம் கணிப்பவர் நமது நண்பரே.

த்ருக்’ என்ற சொல்லுக்குப் பார்வை என்றுதான் அர்த்தம். ஏட்டுக்களை மட்டுமே நம்பாமல் வானத்தைப் பார்த்துக் கோள்களின் இயக்கத்தைக் கண்டறிவதுதான் ‘த்ருக்’ கணித முறை. கோயில் கும்பாபிசேகம் நடைபெறும் பொழுது வானில் கருடன் வட்டமிடுகிறதா என்பதைப் பார்க்க மட்டுமே கழுத்தை வானத்தை நோக்கித் திருப்பும் மக்கள் நிறைந்த நாடு இது. அபூர்வமாகக் கிரகணம் நேரும் நாளிலும் கூட்டமாக நின்று கழுத்தைத் திருப்பவும் நமது மக்களுக்குத் தெரியும். மற்றபடி சூர்யாஸ்தமனத்தின் அழகையோ சந்திரோதயத்தின் அழகையோ பார்க்கக்கூட நாம் வானத்தை நோக்குவதில்லை. அதையெல்லாம் வாட்ஸ்அப்பில் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைப்பவர்கள்தாம் நாம். அப்படியில்லாமல் இக்கட்டுரையின் தொடர்ச்சியாக நாம் எழுதவிருக்கும் கட்டுரைகளைப் படித்துக் கழுத்தை நிமிர்த்தி வானத்தைப் பார்த்தால் த்ருக் கணிதம் சரியா வாக்கியக் கணிதம் சரியா என்பதை வாசகர்கள் அறிந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டில் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகம் சரியாக எழுதப்பட வேண்டும் என்று நினைப்பவர்களும், த்ருக் முறை சரியா வாக்கிய முறை சரியா என்பதைத் தீரவிசாரித்துத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற முனைப்புடன் இருப்பவர்களும், வானசாஸ்திரத்தையும் சிறிது தெரிந்து கொள்வோமே என்று நினைப்பவர்களும் அடுத்த கட்டுரைக்காகக் காத்திருங்கள்.

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 80 guests and no members online