இந்தக் கட்டுரைத் தொடர்களின் மூன்றாவது கட்டுரையாக வெளிவந்த ‘பெண்களின் ஜாதகங்கள்’ என்ற கட்டுரை அதிகமானவர்களால் விரும்பிப் படிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரையில் முழு விவரங்களும் தரப்படவில்லை என்ற மனக்குறை நமக்கு இருந்தது. எனவேதான் இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது.

ஸ்திரீ ஜாதகாத்யாயம்’ என்ற தலைப்பில் வராகமிகிரர் எழுதியிருக்கும் இருபத்து நான்காவது அத்தியாயத்தில் 16 சுலோகங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் ஆறு சுலோகங்களில் பெண்களின் ஒழுக்கத்தையும், கற்பையும் பற்றி விளக்கும் கிரகநிலைகள் குறிக்கப்பட்டுள்ளன. இந்தியச் சமூகத்தில் பெண்களின் கற்பு பற்றிய கருத்துக்கள் மிக ஆழமாகப் பதிந்துள்ளன. கால வெள்ளத்தில் கரைந்து போக வேண்டிய சில கருத்துக்களை நாம் தாங்கிப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. கற்பு பற்றிய விஷயங்களில் நாம் பக்கத்து ஊர் பாரதியின் கட்சி. எனவே அந்தப் பகுதியை விட்டு விட்டு நவீன காலத்துக்கு வேண்டிய கருத்துக்களைச் சொல்லும் பகுதியை மட்டும் விளக்குவோம்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்துக்கு எட்டாமிடத்தால் கணவனின் மரணத்தையும், லக்னத்தாலும், சந்திரனாலும் அந்தப் பெண்ணின் அழகையும், லக்னத்துக்கு ஏழாமிடத்தால் அந்தப் பெண்ணின் கணவனது தோற்றம், அன்பு ஆகியவற்றையும் சொல்ல வேண்டும். மற்றபடி ராஜயோகங்கள், நாபஸ யோகங்கள், நோய்கள் பற்றிய குறிப்புக்கள், ஆயுள் போன்ற அனைத்தும் ஆண், பெண் இருபாலருக்கும் ஒன்றுதான்.

லக்னமும் இரட்டைப்பட்ட ராசியில் இருந்து, சந்திரனும் அதேபோன்று இரட்டைப்பட்ட ராசியில் இருக்குமானால் அந்தப் பெண் பெண்மையின் அழகுகளோடு விளங்குவாள். ஒற்றைப்பட்ட ராசி ஜன்மலக்னமாக இருந்து, சந்திரனும் ஒற்றைப்பட்ட ராசியில் இருந்தால் ஆணின் தோற்றத்தோடு இருப்பாள். ஆணின் தோற்றம் என்பதை நுட்பமாகப் புரிந்து கொள்ள வெண்டும். அறிமுகமில்லாத நபரிடம் பேசும் துணிச்சல், விளையாட்டுக்களில் ஆர்வம், தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டாமல் இருத்தல், கல்லூரிகளில் தலைமைப் பொறுப்பு ஏற்றல், ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கும் பண்பு இவை எல்லாமும் ஒரு பெண்ணிடம் இருக்குமானால் அந்தப் பெண்ணின் ஜன்மலக்னம் ஒற்றைப்பட்ட ராசியாகவும், சந்திரனும் அந்த மாதிரி ஒற்றைப்பட்ட ராசியில் இடம் பெறுவதாகவும் இருக்கலாம். (மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இவை ஆறும் ஒற்றைப்பட்ட ராசிகள். ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இவை ஆறும் இரட்டைப்பட்ட ராசிகள்) விதிவிலக்காக மகரம் என்ற ராசியை எடுத்துக்கொள்ளலாம். இது இரட்டைப்பட்ட ராசியாக இருந்தாலும் மகர லக்னத்தில் பிறந்த பெண்கள் மற்றவர்களை விடத் துணிச்சல் மிக்கவர்களாகவும், தலைமைப்பண்பை விரும்பி ஏற்பவர்களாகவும் இருக்கின்றார்கள்.

லக்னத்துக்கு ஏழாமிடத்தில் ஒரு கிரகமும் இல்லாமல் சூன்யமாக இருந்தாலும், ஏழாமிடம் பலமில்லாமல் இருந்தாலும், சுபர்களான புதன், குரு, சுக்கிரன் இவர்களால் பார்க்கப்படாமல் இருந்தாலும் கணவன் மிகவும் கெட்டவனாக இருப்பான். மேலே கூறப்பட்ட மூன்று அம்சங்களும் கண்டிப்பாக இருந்தால் மட்டுமே இது பொருந்தும். ஏழாமிடத்தில் ஒரு கிரகமும் இருக்கக் கூடாது. ஏழாமிடம் பலமற்றதாக இருக்க வேண்டும். புதகுரு, சுக்கிரன் போன்ற சுபர்களால் பார்க்கப்படாமல் இருக்க வேண்டும். இப்படியிருந்தால் குணங்கெட்டவன் கணவனாக வரும் வாய்ப்பு உண்டு. சில சோதிடர்கள் ஏழில் ஒரு கிரகமும் இல்லையென்றால் ‘சுத்த ஜாதகம்’ என்று கூறுவதுண்டு. ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை.

ஏழாமிடத்தில் புதன், சனி சேர்ந்திருந்தால் கணவனாக வருபவர் ஆண்மையற்றவராக இருக்க வாய்ப்பு உண்டு. ஏழில் சூர்யன் இருந்தால் கணவனால் ஒதுக்கி வைக்கப்படலாம். ஏழில் செவ்வாய் இருந்தால் இளம் வயதில் கணவனை இழக்க நேரும். ஏழில் சனியிருந்து பாபர்களால் பார்க்கப்பட்டால் திருமணம் ஆகாமலேயே வாழ நேரிடலாம். இதிலிருந்து ஏழாமிடத்தில் சனி தனித்திருந்து பாபர்களால் பார்க்கப்படாமல் இருந்தால் தோஷம் ஏதும் இல்லை எனத் தெரிகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட பாபக் கிரகங்கள் ஏழில் இருந்தாலும் கணவனை இழக்கும் வாய்ப்பு உண்டு. சுபரும் பாபரும் சேர்ந்திருந்தால் மறுமணம் செய்யும் வாய்ப்பு நேரும். பலமற்ற ஒரு பாபக்கிரகம் ஏழில் இருந்தால் விவாகரத்து ஏற்படும் வாய்ப்பு உண்டு.

கிரகங்கள் ஏழாம் பாவஸ்புடத்துக்கு வெகு சமீபத்தில் இருந்;தால் மட்டுமே மேற்சொன்ன பலன்கள் சம்பவிக்கும். பாவஸ்புடத்தை விட்டுத் தள்ளி இருந்தால் இப்பலன்கள் குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை.

ஏழாமிடத்தில் கிரகங்கள் இல்லாமல் சூன்யமாய் இருக்கும் போது ஏழாமிடத்து ராசி, ஏழாமிடத்து நவாம்ச ராசி ஆகியவற்றைப் பார்த்துக் கணவனின் குணங்களை அறிந்து கொள்ள வெண்டும். ஏழாம் ராசி சிம்மமாகவோ அல்லது நவாம்ச ராசி சிம்மமாகவோ இருந்தால் கணவன் மிருதுவான குணமுள்ளவனாகவும், அநேக வேலைகளைச் செய்பவனாகவும் இருப்பான். ஏழாமிடமோ, நவாம்சமோ கடகத்தில் இருந்தால் மனைவி மீது அதிகக் காதலுள்ளவனாகவும், நல்லகுணமுள்ளவனாகவும் இருப்பான். ஏழாமிடமோ, நவாம்சமோ மேஷ, விருச்சிக ராசிகளில் இருந்தால் பெண்களை அதிகம் விரும்புபவனாகவும், முன்கோபியாகவும் இருப்பான். ஏழாமிடம் அல்லது ஏழாவது நவாம்சம் ரிசபம், துலாம் ராசிகளில் இருந்தால் கணவன் அழகனாகவும், மிகவும் அன்பானவனாகவும் இருப்பான். ஏழாமிடம் அல்லது அம்சம் மிதுனம், கன்னி இவைகளில் இருந்தால் கணவன் அதிகம் படித்தவனாகவும், புத்திசாலியாகவும் இருப்பான். ஏழாமிடம் அல்லது அம்சம் தனுசு, மீனம் ராசிகளில் இருந்தால் கணவன் மிகவும் நல்லவனாகவும், இந்திரியங்களை  ஜெயிப்பவனாகவும் இருப்பான். ஏழாமிடம் அல்லது அம்சம் மகரம், கும்பம் ராசிகளில் இருந்தால் கணவன் வயது முதிர்ந்தவனாகவும், முட்டாளாகவும் இருப்பான்.

மேற்கண்ட பலன்களைச் சொல்லும் போது ராசி, நவாம்ச ராசி இவைகளை மட்டும் எடுத்துக்கொண்டு பலன் சொன்னால் சரியாக வராது. உதாரணமாக மகர லக்னத்தில் பிறந்த பெண் ஜாதகத்தில் கடகத்தில் கிரகங்கள் இல்லாத நிலையில் கடகராசி மற்றும் நவாம்ச ராசி, (நவாம்ச ஏழாம் ராசி, விருச்சிகம் என்று வைத்துக்கொள்வோம்) விருச்சிகம் இரண்டையும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். நவாம்ச சக்கரத்தில் விருச்சிகத்தில் வியாழன் இருக்குமானால் கணவன் பெண்களை அதிகம் விரும்புபவன், முன்கோபி என்ற பலன்களோடு குரு அங்கே இருப்பதால் கணவன் நல்லவன் இந்திரியங்களை ஜெயித்தவன் என்ற பலன்களையும் சேர்த்தால் இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டு இரண்டு பலன்களுமே இல்லாமல் போகும். எனவே ஜாதக பலன்களை நிச்சயிக்கும் போது பல விஷயங்களை யூகித்துத்தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் வளர்பிறைச்சந்திரன் புதன், குரு, சுக்கிரன் ஆகிய சுபக்கிரகங்களில் இரண்டோ அல்லது மூன்று கிரகங்களோ லக்னத்தில் இருக்கும் போது அப்பெண் மிகவும் சந்தோஷமாக வாழ்பவளாகவும் நுண்கலைகளில் (ஆடல், பாடல், இசை) தேர்ச்சி பெற்றவளாகவும் இருப்பாள். லக்ன ராசியின் தன்மையைக் கவனத்தில் கொண்டு அவளது புகழ், பெருமை இவற்றின் அளவைச் சொல்ல வேண்டும்.

ஏழாமிடத்தில் பாபக் கிரகம் இருக்கும் போது, ஒன்பதாமிடத்திலும் ஒரு கிரகம் இருக்குமானால் அந்தப் பெண் இல்லற வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்காமல் துறவு வாழ்க்கை வாழ முடிவெடுப்பாள். இரட்டைப்பட்ட ராசி ஜன்ம லக்னமாக வந்து செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களும் பலமாக இருக்குமானால் அந்தப்பெண் பலவகையான சாத்திரங்களைக் கற்றுப் புகழ் பெறும் பெண்ணாக ஆவாள்.

ஜன்ம காலம், விவாக காலம், ப்ரஸ்ன காலம் ஆகிய மூன்று நேரங்களிலும் இப்பலன்களைச் சொல்லலாம் என்று கடைசி சுலோகத்தில் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட பலன்களை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் ராசியின் பலம், ராசி அதிபதியின் பலம், ஏழாம் பாவத்தைப் பார்க்கும் கிரகங்கள் அவற்றின் பலம், கிரக சேர்க்கைகள் இவை எல்லாவற்றையும் நுட்பமாகக் கவனித்த பின்பே ஒரு முடிவுக்கு வந்து பலன்களைச் சொல்ல வேண்டும்.

பிருஹஜ் ஜாதகத்தில் சொல்லப்படாத, ஆனால் நமது அனுபவத்தால் நமக்குக் கிடைத்த சில விஷயங்களை இங்கு சொல்வோம்.

  • ஒரு பெண்ணின் ஜாதகத்தில் எந்தக் கிரகம் மிகவும் பலங்குறைந்து நீசமாகவோ அல்லது அஸ்தமனமாகவோ இருக்கின்றதோ அந்தக் கிரகம் கணவன் ஜாதகத்தில் லக்னாதிபதியாக வரக் கூடாது.
  • ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் எந்த ராசியில் இருக்கின்றனவோ அந்த ராசிக்கு கேந்திரங்களில் கணவனது ஜாதகத்தில் சனி, செவ்வாய் வரக் கூடாது.

இந்த அம்சங்களையெல்லாம் கவனிக்காமல் நட்சத்திரப் பொருத்தங்கள் பார்த்துச் செய்யும் திருமணங்கள் சீக்கிரமே முறிந்து போகும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. தற்போது அதிகமாகும் விவாகரத்துக்களுக்கும் இவை தாம் காரணம்.

 

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 192 guests and no members online