பிருஹஜ் ஜாதகத்தின் எட்டாவது அத்தியாயமான தசா அந்தர்த்தசா அத்தியாயத்தின் ஒன்பதாவது சுலோகம் நைசர்க்கிக தசா பற்றிச் சொல்லுகிறது. ஒரு மனிதனின் முதல் ஓராண்டைச் சந்திரனும், அதற்குப் பிந்திய ஈராண்டுகளைச் செவ்வாயும், அதற்குப் பிந்திய ஒன்பதாண்டுகளைப் புதனும் தத்தமது தசா காலங்களாக ஆக்கிக் கொள்கின்றன. பதின்மூன்று வயது முதல் முப்பத்திரண்டு வயது முடிய சுக்கிரனும், முப்பத்து மூன்று வயது முதல் ஐம்பது வயது முடிய வியாழனும், ஐம்பத்தொன்று முதல் எழுபது வயது முடிய சூரியனும், பின்னர் மரணம் முடியவுள்ள காலத்தைச் சனியும் தத்தமது தசா காலங்களாக ஆக்கிக் கொள்கின்றன. எனவே ஒரு மனிதனின் வாழ்வில் முக்கியமான கால கட்டத்தைக் குரு ஆள்கின்றது என்று சொன்னால் மிகையில்லை.
ஆகையால் குரு இருக்கும் ராசி, பாவம், நவாம்சத்தில் குரு இருக்கும் ராசி, குருவோடு சேர்ந்த அல்லது குருவைப் பார்க்கும் கிரகங்களின் தன்மை இவற்றைக் கொண்டு ஒரு மனிதனின் 33 வயது முதல் 50 வயது முடிய உள்ள 18 ஆண்டுகளில் ஏற்படக்கூடிய நல்லவை மற்றும் கெட்டவைகளைக் கூற வேண்டும் என்று வராகமிகிரர் உபதேசித்திருப்பதாக நாம் நினைக்கின்றோம்.
நாம் இந்த வலைத் தளத்தில் கட்டுரைகள் எழுதுவதன் நோக்கமே யாவரும் தங்களது ஜாதகத்தைத் தாங்களே பார்க்குமளவுக்குப் பயிற்சி அளிப்பதுதான். முப்பது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் அன்பர்கள் எல்லோரும், ஐம்பது வயதைத் தாண்டி வாழும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், மற்றும் சொந்தங்களிடம் வியாழன் அவர்களது ஜாதகத்தில் எந்த ராசியில் இருக்கின்றது என்ற தகவலைக் கேட்டுப் பெற்று, நாம் கீழே தரப் போகும் குறிப்புகளோடு சரிபார்த்துப் பின்னர் கொள்ள வேண்டியதைக் கொண்டு, தள்ள வேண்டியதைத் தள்ளி விடலாம்.
- மேஷம், தனுசு ஆகிய ராசிகளில் வியாழன் இருக்கப் பிறந்தவர்கள் தங்களது சொந்த முயற்சியால் செல்வந்தர்களாகின்றனர். பெரும்பாலும் இவர்கள் தந்தையை மிஞ்சுகின்றார்கள்.
- சிம்ம வியாழன் ஏற்ற இறக்கங்களைக் கொண்டு வருகின்றது.
- விருச்சிக வியாழனைப் போல கடக, மீன ராசிகளில் உள்ள வியாழன் பலன்கள் தருவதில்லை. (கடகம் வியாழனின் உச்சவீடாக இருந்த போதிலும்.)
- கடக, விருச்சிக, மீன ராசிகளில் வியாழன் இருக்கப் பிறந்தவர்களைப் புற்றுநோய் தாக்கும் அபாயமுண்டு.
- செவ்வாயின் பார்வையை விடச் சனியின் பார்வை, வியாழனின் நற்பலன்களைக் கெடுக்கின்றது.
- வியாழனுக்கு எட்டில் செவ்வாய் இருந்தால் இதய நோய் வரும் வாய்ப்புண்டு.
- லக்னத்துக்கு எட்டாமிடம் எந்த ராசியோ அந்த ராசியில், நவாம்சத்தில் வியாழன் இருக்குமானால், கஷ்டங்கள் திடீரென வருகின்றன.
- முப்பத்து மூன்று வயது பிறக்கும் நாளில் வியாழன் வக்ரமாக இருந்தால் வியாழ தசை பெரிய நன்மைகளைச் செய்வதில்லை.
இவை பொதுவான சில குறிப்புகள். வாசகர்களுக்குச் சோதிடத்தில் ஆர்வம் உண்டாக்கவே இவை தரப்பட்டுள்ளன. லக்னம், சூரியன், சந்திரன் இவையும் வியாழதசை செய்யப் போகும் பலன்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. சோதிட ஆர்வலர்கள் வியாழனின் தசா காலத்தைப் பற்றிய தேடல்களில் ஈடுபட்டால் அது நமக்குப் பெரு மகிழ்ச்சியை அளிக்கும்.
This Week’s Quote:
Equality may perhaps be a right, but no power on earth can ever turn it into a fact.
- Honore de Balzac
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
