தொலைக்காட்சியில் தோன்றி இராசிபலன்கள் சொல்லும் சோதிடர்கள் அனைவரும் சொல்லிப் பயமுறுத்தும் சொல் சந்திராஷ்டமம். ‘இன்று சந்திராஷ்டமம் எனவே இன்று பிரார்த்தனை மட்டும் செய்து கொண்டு அமைதியாக இருங்கள். வேறு வேலை செய்ய வேண்டாம்’ என்றுதான் அனைத்துச் சோதிடர்களும் கூறுகின்றார்கள். சோதிடர்கள் அவர்கள் ராசிக்குச் சந்திராஷ்டம தினத்தில் என்னதான் செய்கின்றார்கள் பார்ப்போம் என்று யாராவது குறும்புத்தனம் மிக்க சோதிட ஆர்வலர் அவர்களைக் கவனிக்காதவரை, அவர்கள் இதைத்தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். சந்திராஷ்டமம் என்பது எவ்வளவு அபத்தம் என்பதை இன்று ஒரு ஜாதகம் மூலம் தெரிந்து கொள்வோம்.

sample horoscope

இது எமது தந்தையார் சேகரித்து வைத்திருக்கும் ஜாதகக் குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்டது. இந்த ஜாதகத்தின் கீழே “1157-ம் ஆண்டு தை மாதம் 28-ம் தேதி புதன் பூர நட்சத்திரம் காலை 5 மணிக்குக் கலியாணம் நடந்தது. 7வது நாள்” என்று அவர் அடிக்குறிப்பு ஒன்று கொடுத்துள்ளார். அதன்படி 10.02.1982 அன்று இந்தப் பெண்மணிக்குத் திருமணம் நடந்துள்ளது. ஏழாவது நாள் என்பது ஜன்ம நட்சத்திரத்துக்கு 1, 3, 5, 7-வது நாட்கள் நல்ல நாட்கள் இல்லை என்ற பொதுவான கருத்தைச் சொல்வதாக இருக்கின்றது. எம் தந்தையார் 1, 3, 5, 7 நாட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனவே அவ்வாறு குறித்து வைத்துள்ளார். 10.02.1982 அன்று கிரக நிலைகள் எப்படி இருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

sample horoscope

இந்தப் பெண்மணி மகர ராசியில் பிறந்திருப்பதால், திருமண நாளன்று அவருக்குச் சந்திராஷ்டமம். கோசாரப்படி பார்த்தால் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி ஆகிய ஆறு கிரகங்களும் அசுபமான இடங்களிலேயே இருக்கின்றன. சுக்கிரன் மட்டுமே சந்திரனுக்கு நல்ல இடத்தில் அமைந்துள்ளது. 05.01.82 முதல் ராகுதசையில் செவ்வாய் புக்தி ஆரம்பம். தசாநாதன் ராகுவுக்கும், புக்திநாதன் செவ்வாய்க்கும் திருமணத்தைக் கொண்டு வருவதற்கான ஆதிபத்தியங்கள் ஏதும் இல்லை. பொதுவாகச் சோதிடர்கள் கூறும் வியாழ நோக்கம் இல்லை. ராகு தசையின் கடைசிப் பகுதியான செவ்வாய் புக்தி நடைபெறும் போது “இன்னும் ஓராண்டில் ராகு தசை விட்டு,வியாழ தசை ஏற்க இருக்கிறது. எனவே தசை முடிந்தபிறகு மணம் செய்யலாம்” என்றுதான் சோதிடர்கள் கூறுவார்கள். இத்தனை விஷயங்களையும் தாண்டி 23 வயதில் இப்பெண்மணிக்குத் திருமணம் நடந்து முடிந்துள்ளது. 36 வருடங்கள் கழிந்துவிட்டன. வாரிசுகள் அனைவருக்கும் திருமணம் முடிந்து சுகமாக இருக்கின்றார்.

திருமண முகூர்த்த லக்னம் மகரத்தில் 1 பாகையில் உள்ளது. தற்போது அது சுக்கிரனுக்கும், புதனுக்கும் மத்தியில் இருப்பதாலும் ஜன்மகால ஏழாமிடத்ததிபதியான சுக்கிரனால், ஏழாம் பார்வையாகப் பார்க்கப்படுவதாலும் முகூர்த்த லக்னம் மிக நல்லதாக அமைந்துவிட்டதாக சொல்ல முடியும். நமது கருத்து என்னவென்றால் முகூர்த்த லக்னம் தனுசு ஆகத்தான் இருந்திருக்க வேண்டும். எமது தந்தையார் சரலக்னங்களில் முகூர்த்தம் வைப்பதில்லை. ஆனால் பல காரணங்களால் முகூர்த்த நேரம் தாண்டிய பிறகே மாங்கல்யதாரணம் நடக்கின்றது.

எது எப்படியானாலும் இந்தப் பெண்மணிக்குச் சந்திராஷ்டம தினத்தில் திருமணம் நடந்தது என்பதும், கோசார ரீதியாகச் சந்திர லக்னத்துக்கு அசுபமான இடத்திலேயே 6 கிரகங்களின் சஞ்சாரம் இருந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். எனவே திருமணம் நடக்க ‘வியாழ நோக்கம்’ அவசியம் என்றும், சந்திராஷ்டம தினத்தில் தெய்வத்தை வழிபடுவதைத் தவிர வேறொன்றும் செய்யக் கூடாது என்றும், தசா சந்திகளில் (தசையின் முடிவுப்பகுதியில்) திருமணம் நடத்தக் கூடாது என்றும் சோதிடர்கள் கூறுவதை அலட்சியப்படுத்துங்கள். சோதிட சாத்திரத்தின் ரஹஸ்யங்கள் இவைகளில் இல்லை. அவை வேறு வகையான கணக்குகளுக்குள்ளும், சூத்திரங்களுக்குள்ளும் மறைந்து கிடக்கின்றன. அவற்றைத் தெரிந்து கொண்ட சோதிடர்களை அணுகிச் சோதிடம் பாருங்கள் அல்லது சோதிடத்தை அறவே ஒதுக்கிப் போங்கள். இவைதான் நமது வாசகர்களுக்கு நாம் கூறும் அறிவுரையாகும்.

 

This Week’s Quote:

All great deeds and all great thoughts have a ridiculous beginning. Great works are often born on a street corner or in a restaurant's revolving door.

-  Albert Camus

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 78 guests and no members online