சென்ற கட்டுரையில் குரு ராசிக்கு இரண்டாமிடத்திலிருக்கும் பொழுது ஏற்பட்ட கெடுதலான சம்பவங்களைப் பார்த்தோம். இக்கட்டுரையில் 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் குரு இருக்கும் போது ஏற்பட்ட தீய சம்பவங்களைப் பார்ப்போம்.










மேலேயுள்ள உதாரணங்கள் ஜன்மராசிக்கு 2, 5, 7, 9, 11-வது இடங்கள் சுபபலனை மட்டுமே செய்யும் என்ற பொய்யான நம்பிக்கையைச் சராசரி மனிதர்களுக்குள் ஆழமாக விதைக்கின்ற சோதிடர்களின் கூற்று பொய் என்பதை விளக்கவே தரப்பட்டன. மற்றபடி 2, 5, 7, 9, 11-வது இடங்களில் குரு வந்தால் மரணம் போன்ற கொடிய சம்பவங்களே நடக்கும் என்பதைச் சொல்வதற்காக இந்தக் கட்டுரை எழுதப்படவில்லை. எந்த ராசியில், எத்தனையாவது இடத்தில் குரு வந்தாலும் நல்ல பலன்களும், தீய பலன்களும் சேர்ந்தே நடக்கும். ஒரு சம்பவத்திற்குக் குரு மட்டுமே காரணமல்ல. லக்னாதிபதி, பாவாதிபதி, தசாநாதன் ஆகியோரின் கோசார சஞ்சாரமும் கவனிக்கப்பட வேண்டும். மேலும் ஒரு ராசியில் குரு வரும்போது நல்ல பலன் நடந்தால் அடுத்த முறை அந்த ராசியில் குரு வரும்போதும் அந்தப் பலன் நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. திருமதி.இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரியின் மறைவுக்குப் பின்னர் முதன்முதலாகப் பிரதமராகப் பதவியேற்ற போது குரு அவரது ஜன்மராசிக்கு ஐந்தாமிடமான ரிஷபத்தில் இருந்தது. 1977 மார்ச்சில் நடந்த பொதுத் தேர்தலில் திருமதி.காந்தியும் அவரது கட்சியும் தோற்கடிக்கப்பட்ட போதும் குரு ரிஷப ராசியில்தான் இருந்தது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி 1967ல் தி.மு.க. அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபோது குரு அவரது ஜன்மராசிக்கு மூன்றாம் ராசியான கடகத்தில் இருந்தது. 1991 ஜனவரியில் திரு.சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது தி.மு.க. அரசு கலைக்கப்பட்ட போதும் குரு அதே கடக ராசியில்தான் இருந்தது.
எனவே ராசியை வைத்து மட்டுமே குருப்பெயர்ச்சிப் பலன்களை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். ஒரு ராசியை விட்டு இன்னொரு ராசிக்குக் குரு மாறினால் ஏதாவது நடக்கும் என்பதற்குச் சோதிட சாஸ்திரத்தில் விதிகள் இல்லை. ஜன்ம காலத்தில் குரு எந்த ராசியில், எந்த பாகையில் இருக்கின்றது, லக்கினத்தை முதலாகக் கொண்ட பன்னிரண்டு பாவங்களும் ஒரு ராசியின் எத்தனையாவது பாகையில் ஆரம்பித்து, எத்தனையாவது பாகையில் முடிகின்றன, குரு லக்னத்துக்கு எத்தனையாவது பாவத்தில் வருகின்றது, அப்பாவாதிபதியின் ஜன்மகால தற்காலச் சஞ்சாரம், இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்த்த பின்னரே ஒரு முடிவுக்கு வரமுடியும்.
ஒரு வாசகர் “குரு எப்பொழுது யாருக்கு நல்லது செய்வார் என்று கூறினால் நன்று” எனக் குறிப்பிட்டிருந்தார். இப்படிப் பொதுவான பலன்களே சொல்லக் கூடாது என்பதுதான் என் கருத்து. ஒவ்வொரு ஜாதகத்துக்கும் வெவ்வேறு பலன்களே சித்திக்கும். எனது அஷ்டவர்க்கம் என்ற கட்டுரையில் குருவின் அஷ்டவர்க்கம் என்ற பகுதியில் குரு லக்னத்துக்கும் மற்ற கிரகங்களுக்கும் எந்த எந்த இடத்தில் நல்ல பலன்களைச் செய்யும் என்று விளக்கப்பட்டுள்ளது. கோசார பலன்களைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது ஜாதகத்துக்கு அஷ்டவர்க்கம் தயாரிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
இராசி பலன்கள் என்ற கட்டுரையில் சந்திரன் ஜன்மராசிக்கு பன்னிரண்டு இடங்களிலும் வந்த போது திருமணம் நடந்தேறியது என்பதை விளக்கப் பன்னிரண்டு உதாரண ஜாதகங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. நன்கு கவனித்தால் ஜன்மராசிக்கு 3, 11, 7, 9, 6, 1, 2 என்ற இடங்களில் குரு வரும் போது திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் அதில் உள்ளன. எனவே எந்தப் பெயர்ச்சியிலும் எல்லா ராசிக்காரர்களுக்கும் நன்மையும் நடக்கும், தீமையும் நடக்கும். நன்மை மட்டுமே நடக்கும், பரிகாரங்கள் செய்தால் தீமைகள் குறையும், என்று எண்ணுவதும் செயல்படுவதும் வீண் என்பதற்காகவே இத்தனை உதாரணங்கள் தரப்பட்டுள்ளன.
ஒரு நிகழ்ச்சி அப்போதைய தசாநாதன், புத்திநாதன், அந்த வயதிற்குரிய வர்ஷப் பிரவேச ஜாதகம், தசாநாதன் அஷ்டவர்க்க முறைப்படி சுபராக அல்லது பாபராக மாறுவது, சூர்யனின் ராசி மற்றும் நவாம்ச சஞ்சாரம் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகின்றதே தவிர குரு ராசிக்கு எத்தனையாவது இடத்தில் வருகின்றது என்பதைப் பொறுத்தது அல்ல. 1930 முதல் 1986 முடிய என் தந்தையார் சேகரித்த நூற்றுக்கணக்கான ஜாதகங்களும் 1974 முதல் இன்று வரை நான் சேகரித்திருக்கும் நூற்றுக்கணக்கான ஜாதகங்களும் அவற்றின் மூலம் கிடைத்திருக்கும் அனுபவங்களுமே இக்கட்டுரைக்கு அடிப்படையாகும்.
சோதிடம் கற்க அல்லது பார்க்க விரும்புபவர்கள் இந்தக் சோதிட சாஸ்திரம் பரமசிவனால் பார்வதிக்கு உபதேசிக்கப்பட்டது அல்லது முனிவர்கள் வழங்கியது என்ற சிந்தனையை மாற்றிக் கொண்டு இது நம்மைப் போன்ற மனிதர்களால் உண்டுபண்ணப்பட்ட ஒரு கணக்கு முறை: எனவே இதில் குறைகள் இருக்கலாம் என்ற எண்ணத்துடனேயே இதை அணுக வேண்டும். பல பரிட்சைகளை வைத்துப் பார்த்துத் தேறாத பழைய சிந்தனைகளை விட்டு விட்டுப் புதிய சிந்தனைகளை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். ‘உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்படமாட்டான்’ என்று தன் வசன கவிதையில் எழுதினான் பாரதி. சோதிட உலகத்தில் நடக்கின்ற கூத்துக்களைப் பார்த்தால் ‘உலர்ந்த தமிழன்’ என்ற வார்த்தைக்குப் பதிலாகச் ‘சிந்திக்கின்ற தமிழன்’ என்று போட்டுக்கொள்ளலாம் எனத் தோன்றுகின்றது.
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
