விரயஸ்தானம் என்று அழைக்கப்படும் பன்னிரண்டாமிடம் சோதிட நம்பிக்கையுள்ளவர்களை அச்சுறுத்துகின்ற இடம் என்றே சொல்ல வேண்டும். நாம் பன்னிரண்டு இடங்களையும் சமமாகவே பார்க்க வேண்டும் என்று கருதுகின்றோம். பன்னிரண்டு பாவங்களும் நன்மையையும், தீமையையும் சேர்ந்தே தருகின்றன. எனவே ஒரு சமநோக்குடனேயே சோதிட ஆர்வலர்கள் எந்தப் பாவத்தையும், எந்தக் கிரகத்தையும் பரிசீலிக்க வேண்டும் என்பதே எமது அவா. இந்த வாரம் நாம் கண்ட சில உண்மைகளை இங்கே தருகின்றோம்.

  • பன்னிரண்டுக்குடையவன் ஐந்து அல்லது ஒன்பதாம் இடங்களில் இருப்பவர்களுக்குக் கற்பனையுணர்ச்சி அதிகம். கவிஞர்கள், எழுத்தாளர்களில் பெரும்பாலோருக்குப் பன்னிரண்டுக்குடைய கிரகம் ஐந்திலோ, ஒன்பதிலோ இருக்கின்றது. 
  • பன்னிரண்டுக்குடையவன் ஒன்பதில் இருக்கப் பிறந்தவர்கள், தந்தைக்குப் பிரியமானவர்களாக இருக்கின்றார்கள்.
  • பன்னிரண்டுக்குடையவன் இரண்டிலோ அல்லது இரண்டுக்குடையவன் பன்னிரண்டிலோ இருப்பவர்கள், பிறந்த இடத்தை விட்டு நீங்கி வேறிடம் சென்று வாழ்கின்றார்கள். 
  • லக்கினாதிபதியும், பன்னிரண்டாமிடத்ததிபதியும் சேர்ந்து இருந்தாலோ அல்லது ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருந்தாலோ அந்த ஜாதகர்கள் தங்களது கருத்துக்களில் மிகப் பிடிவாதமாக இருக்கின்றார்கள். 
  • பன்னிரண்டுக்குடையவன் நான்காமிடத்தில் இருக்கும்போது பிறந்தவர்கள், தாய்க்குப் பிரியமானவர்களாக இருக்கின்றார்கள். அல்லது அதிகமான செல்லத்தோடு வளர்க்கப்பட்டு, அந்திம காலத்தில் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள்.
  • பன்னிரண்டுக்குடையவன் பத்தில் இருக்கும்போது பிறந்தவர்கள் அரசியல் வாதியாகவும் அமைச்சர்களாகவும் ஆகின்றார்கள். 
  • பத்துக்குடையவன் பன்னிரண்டில் இருந்தாலோ, பன்னிரண்டுக்குடையவன் பத்தில் இருந்தாலோ, கடின உழைப்பால் முன்னேறிச் செல்கின்றார்கள்.
  • உடல் ஊனமுற்றவர்களாகப் பிறப்பவர்களில் பெரும்பாலோருக்குப் பன்னிரண்டுக்குடைய கிரகம் நான்காமிடத்திலோ, அல்லது ஏழாமிடத்திலோ இருக்கின்றது.
  • பெண்களின் ஜாதகத்தில் பன்னிரண்டுக்குடையவன் நான்கில் இருப்பது நல்ல பலனைச் செய்வதில்லை.
  • பன்னிரண்டுக்குடையவன் ஐந்தில் அல்லது ஒன்பதில் இருக்கும்போது சிலருக்குச் சிறை வாழ்க்கை கிடைக்கின்றது.
  • ஒன்பதாமிடத்ததிபதியும் பன்னிரண்டாமிடத்ததிபதியும் சேர்ந்து இருந்தாலோ, அல்லது ஒருவர் பார்வையில் ஒருவர் இருந்தாலோ, சிலர் தந்தையைச் சிறுவயதிலேயே இழக்கின்றார்கள். அல்லது அவர்களின் தந்தை நீண்ட ஆயுளையுடையவராக இருக்கின்றார்.
  • பன்னிரண்டாமிடத்தில் உள்ள கிரகத்தின் பாதிப்பு ஒருவரின் ஆயுள் முழுமைக்கும் இருக்கிறது. அதாவது ஒரு மனிதனின் சிந்தனை, செயல், இலட்சிய வேட்கை, அவன் வாழ்க்கையில் பெறக்கூடிய அனுபவங்கள், அவனது தத்துவப்பார்வை, இவை யாவுமே பன்னிரண்டாமிடத்தில் உள்ள கிரகத்தால்தான் தீர்மானிக்கப்படுகின்றது.

எம்மைப் பொறுத்தவரை பன்னிரண்டாமிடம் என்பது ‘மறைவு’ ஸ்தானமில்லை. மறைந்து கிடக்கும் பிரபஞ்சம் பற்றிய உண்மைகளை நமக்கு உணர்த்துகின்ற ரகசிய ஸ்தானம்தான்.

 

This Week’s Quote:

The greatest happiness is to know the source of unhappiness.

-  Fyodor Dostoevsky

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 250 guests and no members online