வாசகர்களுக்கு நமது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் ஒரு புதிய விஷயத்தையும் பகிர்ந்து கொள்கின்றோம். கி.பி.9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகச் சோதிடர் அபு மாஷார் (ABUMASHAR) அரபி மொழியில் எழுதியுள்ள சோதிட நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பைப் படிக்க நேர்ந்தது. அந்நூலில் நமது கவனத்தை ஈர்த்த ஒரு விஷயத்தை இங்கே தருகின்றோம்.

நமது நாட்டில் பரவலாகப் பழக்கத்தில் இருந்து வரும் கிரகங்களின் தசை புக்தி முறையைப் போலவே அவரும் சூரியன் முதல் கேது முடிய உள்ள 9 கிரகங்களுக்கும் தசை புக்தி கணக்கைச் சொல்கின்றார். ஆனால் தசை வருஷங்களிலும் அவற்றின் வரிசை முறையிலும் சில மாற்றங்கள் உள்ளன. மேலும் நமது நாட்டிலுள்ள தசை புக்தி அறிய சந்திரன் இருக்கும் நட்சத்திரம் என்ன என்று தெரிய வேண்டிய அவசியம் உள்ளது. பாரசீக முறைப்படியான தசை புக்தி அறியச் சந்திரனின் பாத சாரம் தெரிய வேண்டியதில்லை.

கிரகங்களின் தசை வருஷங்களும் வரிசை முறையும்
சூரியன்  10 வருடங்கள்
சுக்கிரன் 8 வருடங்கள்
புதன்  13 வருடங்கள்
சந்திரன்  9 வருடங்கள்
சனி 11 வருடங்கள்
குரு  12 வருடங்கள்
செவ்வாய்     7 வருடங்கள்
ராகு  3 வருடங்கள்
கேது 2 வருடங்கள்
  -----------------
மொத்தம்  75 வருடங்கள்
  -----------------

ஜாதகர் பகலில் பிறந்தவராக இருந்தால் மேலே கண்ட முறைப்படி தசைகள் நடக்கும். ஜாதகர் இரவில் பிறந்தவராக இருந்தால் சந்திரனில் தொடங்கி சந்திரன் சனி குரு செவ்வாய் சூரியன் சுக்கிரன் புதன் என்ற வரிசையில் வந்து கடைசியில் தான் ராகு கேதுகளுக்கான தசைகள் நடக்கும்.

பகலில் பிறப்பு    இரவில் பிறப்பு
சூரியன்  சந்திரன்
சுக்கிரன்  சனி
புதன்  குரு
சந்திரன்  செவ்வாய்
சனி  சூரியன்
குரு  சுக்கிரன்
செவ்வாய் புதன்
ராகு  ராகு
கேது கேது

சூரியனின் தசை வருஷங்களான 10ஐ 7ஆல் வகுத்தால் கிடைக்கும் 1 வருஷம் 5 மாதம் 4 நாட்கள் 6 மணி 51 நிமிடங்களை ஏழு கிரகங்களின் புக்தி காலமாகக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். சந்திரதசையின் 9 வருஷங்களை ஏழால் வகுத்தால் கிடைக்கும் 1 வருஷம் 3 மாதம் 12 நாட்கள் 20 மணி 39 நிமிடங்களை சந்திர தசை நடக்கும் போது ஏழு கிரகங்களின் புக்திகாலமாகக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். சூரியன் முதல் சனி வரையுள்ள கிரகங்களின் தசையில் ராகு கேதுக்களுக்குப் புக்தி கிடையாது. அதேபோல் 70 வயதுக்கு மேல் நடக்கும் ராகு கேதுக்களின் தசையில் வேறு கிரகங்களின் புக்தி கிடையாது.

75 வயதுக்கு மேல் வாழும் ஒருவருக்கு அவர் பகலில் பிறந்தவராக இருந்தால் மறுபடியும் சூரியனில் ஆரம்பித்துத் தசைகளைக் கணக்கிட வேண்டும். இரவில் பிறந்தவராக இருந்தால் மறுபடியும் சந்திரதசை ஆரம்பிக்கும். வாசகர்கள் தங்களது ஜாதகத்தில் இந்தத் தசை முறையைப் பரீட்சை செய்து பார்க்கலாம்.

 

 ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 93 guests and no members online