சோதிட சம்பந்தமான பத்திரிக்கைகளில் வரும் கேள்வி பதில்களில் முக்கியமான இடத்தைப் பெறுவன தோஷங்கள். அதிலும் நாகதோஷம் என்றும் சர்ப்ப தோஷம் என்றழைக்கப்படும் தோஷம் எல்லோரையும் பயமுறுத்துகிறது. யாராவது புத்திரபாக்கியம் பற்றிக் கேள்வி எழுப்பினால் சோதிடர்கள் உடனே கூறுவது இந்த நாகதோஷம் தான். ஐந்தில் ராகு இருக்கிறது, ஐந்தில் கேது இருக்கிறது பிராயச் சித்தம் செய்யுங்கள் என்று அவர்கள் சொல்லாத நாளில்லை. இந்த சர்ப்ப தோஷம் என்பது எவ்வளவு அபத்தம் என்பதை ஒரு உதாரண ஜாதகத்தால் விளக்குவோம்.


விம்சோத்தரி தசைப்படி சுக்கிர தசையிருப்பு வருஷம் 15, மாதம் 6, நாள் 9 இந்த ஜாதகருக்கு 1974ன் பிற்பகுதியில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தபின் தொடர்ச்சியாக ஐந்து ஆண் குழந்தைகள் பிறந்தன. காலதாமதமோ கருச்சிதைவோ இன்றிப் பிறந்தன, அந்த ஐந்து குழந்தைகளும்.
இவருக்குத் துலா லக்னம். புத்திரஸ்தானமான ஐந்தாமிடத்தில் செவ்வாய், ராகு, வியாழன், சுக்கிரன் என நான்கு கிரகங்கள் உள்ளன. செவ்வாயும், ராகுவும் இயற்கைப் பாவிகள். வியாழன் மூன்றுக்கும், ஆறுக்கும் உடைய பாவி. அவனே புத்திரகாரகன். ‘காரகோ பாவ நாஸ்தி’ என்பது அனைத்துச் சோதிடர்களும் சொல்லி வரும் மந்திரம். ஐந்துக்குடைய சனியோ பன்னிரண்டாமிடத்தில் வக்ரமாகவும், மறைந்தும் உள்ளது. 12.08.1972க்கு மேல் 12.08.1982 வரை சந்திர தசை நடந்தது. இந்தச் சந்திர தசையிலேயே அத்தனை குழந்தைகளும் பிறந்தன. சந்திரன் புத்திரபாவமான ஐந்தாமிடத்துக்கு ஆறுக்குடையவனாக இருந்து ஐந்துக்கு அட்டமாதிபதியான புதனோடு சேர்க்கை. 12.08.1982க்குப் பிறகு 12.08.1989 வரை செவ்வாய் தசையும், அதன் பின்னர் 12.08.2007 வரை ராகு தசையும் நடந்து முடிந்துள்ளன. இன்று வரை எல்லோரும் நலமாக உள்ளனர்.
இத்தனை தோஷங்கள் இருந்தும் இவருக்கு எப்படி ஐந்து ஆண் குழந்தைகள் பிறந்தன? தோஷங்களைப் பற்றி அச்சத்தோடு கேள்விகளைக் கேட்கும் அப்பாவி ஜனங்களும் அவர்களை இன்னும் அதிகமாகப் பயமுறுத்திப் பரிகாரங்களைச் சொல்லியும், பரிகாரங்களைச் செய்தும் சோதிட சாத்திரத்தைக் குப்பைகளாக்கி வரும் சோதிடர்களும், இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லட்டும்.
செவ்வாய், புத்திரகாரகன் வியாழன், எல்லோரும் கண்டு அஞ்சும் பாம்பு, மறைந்து போன புத்திர ஸ்தானாதிபதி சனி இவர்கள் யாருமே இந்த ஜாதகரின் புத்திரபாக்கியத்தை அழிக்கவில்லை.
அப்படியானால் எல்லோரும் உரக்கக் கூவி வரும் சர்ப்ப தோஷம் என்ன ஆயிற்று?
This Week’s Quote:
When men and women agree, it is only in their conclusions, their reasons are always different.
- George Santayana.
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
