பிருஹஜ் ஜாதகத்தின் இருபத்திரண்டாவது அத்தியாயத்தில் சில முக்கியமான விஷயங்கள் சொல்லப்படுகின்றன. ஜாதகம் பார்க்கவும், படிக்கவும் விரும்புவோருக்காக அவ்விஷயங்களை இங்கு தருகின்றோம்.
லக்கினம், நான்கு, ஏழு, பத்து என்ற நான்கு கேந்திரங்களிலும் கிரகங்கள் இருந்து, அந்தக் கிரகங்கள், தமது சொந்த வீட்டிலோ மூலத்திரிகோண வீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ இருக்குமானால் அப்படியிருக்கும் எல்லாக் கிரகங்களும் ஒன்றுக்கொன்று காரகர் எனப்படுவர். இதில் பத்தாமிடத்தில் இருக்கும் கிரகம் விசேஷ காரகத்துவம் பெறுகிறது.
ஒன்றுக்கொன்று காரகர்களெனச் சொல்லப்படும் கிரகங்களில், ஒரு கிரகம் தரவேண்டிய பலனை இன்னொரு கிரகம் தரும் என்பது நம்பிக்கை. பத்தாமிடத்தில் இருக்கும் காரகக் கிரகம் விசேஷமான பலனைத் தரும்.
இதற்கு வராகமிகிரர் ஒரு உதாரண ஜாதகம் தருகின்றார்.

இங்கே கடக லக்னத்தில் உச்சமான வியாழனும், சொந்த வீட்டில் சந்திரனும் உள்ளன. நான்காமிடத்தில் சனி, ஏழாமிடத்தில் செவ்வாய், மற்றும் பத்தாமிடத்தில் சூர்யன் தத்தமது உச்சவீட்டில் இருக்கின்றன. இங்கே 4 கேந்திரங்களிலும் கிரகங்கள் இருப்பதால் எல்லாக் கிரகங்களும் ஒன்றுக்கொன்று காரகர் ஆகி விசேஷமான பலன்களைத் தருவார்கள். இதில் பத்தாமிடச் சூரியனின் மூலம் வரும் பலன்கள் மிகச் சிறப்பாக இருக்கும்.
ஏழாமிடத்தில் கிரகம் ஏதும் இல்லாமல், லக்னம், நான்கு, பத்து ஆகிய மூன்று இடங்களில் மட்டும் உச்ச, சொந்த வீடு, மூலத்திரிகோணக் கிரகங்கள் இருந்தால் பத்தாமிடத்திலும், நான்காமிடத்திலும் உள்ள கிரகங்கள் காரகக் கிரகங்களாகுமே தவிர லக்னத்தில் உள்ள கிரகம் காரகக் கிரகமாக ஆகாது.

இங்கே லக்னத்தில் சனி சொந்த வீட்டிலும், செவ்வாய் நான்காமிடத்தில் சொந்த வீட்டிலும், பத்தாமிடத்தில் சுக்கிரன் சொந்த வீட்டிலும் உள்ளன. செவ்வாயும், சுக்கிரனும் லக்னத்திலுள்ள சனிக்குக் காரகக் கிரகங்கள் ஆகின்றனரே தவிர சனி செவ்வாய்க்கும், சுக்கிரனுக்கும் காரகக் கிரகமாக ஆவதில்லை. செவ்வாயும் சுக்கிரனும் ஒருவரது தசாபுத்தியில் மற்ற கிரகத்தின் தசாபுத்தி பலனையும் சேர்த்துத் தருவர். சனி தசையின் அல்லது புக்தியில் சனிக்குரிய பலன்கள் மட்டுமே கிடைக்கப் பெறும்.
உச்ச, சொந்த அல்லது மூலத்திரிகோண வீட்டில் இருக்கும் கிரகங்கள், லக்னத்துக்குக் கேந்திரங்களில் இல்லாமல் வேறு இடங்களில் இருந்தாலும் காரகத்துவம் கிடைக்கின்றது. ஆனால் அதன் அளவு குறைந்து போகின்றது.

இங்கே மூன்று கிரகங்களும் கேந்திரங்களில் இல்லை. இம்மாதிரியான நேரங்களில் ஒரு கிரகத்துக்குப் பத்தாமிடத்தில் தனது சொந்த, உச்ச, மூலத்திரிகோண வீட்டில் இருக்கும் நட்புக் கிரகம் மட்டும் காரகத்தன்மை பெறுகின்றது. அதன்படி இங்கே சுக்கிரன் சனிக்கு நட்புக் கிரகமாக இருந்து, சனிக்குப் பத்தாமிடத்தில் இருப்பதன் மூலம் அதி நட்புக் கிரகமாகவும் ஆவதால் சுக்கிரன் மட்டும் விசேஷமான பலனைத் தரும். சனி செவ்வாய்க்குப் பத்தாமிடத்தில் இருந்தாலும் அதி நட்புக் கிரகமாக இல்லாததால் சனி காரகத்தன்மை பெறுவதில்லை.
ஜாதகம் பார்க்கும்போது இந்த மாதிரியான அம்சங்களும் கவனிக்கப்பட வேண்டும் கேந்திரங்களில் கிரகங்கள் இருக்கப் பிறந்தவர்களது ஜாதகங்களுக்குப் பலன் சொல்லும்போது இந்தக் காரகத்துவ அம்சங்களையும் கூர்ந்து கவனித்துச் சொல்ல வேண்டும்.
லக்னம் வர்க்கோத்தமமாக இருக்கும்போதும், சூர்யனுக்கு இரண்டாமிடத்தில் சுபக்கிரகங்கள் இருக்கும்போதும், 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் காரகக் கிரகங்கள் இருக்கும்போதும் பிறந்தவர்கள் சுபமான பலன்களையே பெறுவர்.
வியாழன், சந்திரனிருக்கும் இராசிநாதன், லக்னாதிபதி ஆகிய மூன்று கிரகங்களுள் ஒரு கிரகம் கேந்திர ஸ்தானங்களில் ஒன்றில் இருந்தால் நடுவயதில் சுகம் அனுபவிக்கும் மனிதராக இருப்பார்.
ஒரு கிரகத்தின் தசை ஆரம்பிக்கும்போது அக்கிரகம் பிருஷ்டோதய ராசியில் இருந்தால் தசையின் கடைசிப் பகுதியிலும், உபயோதய ராசியிலிருந்தால் தசையின் மத்தியப் பகுதியிலும், சீர்ஷோதய ராசியில் இருந்தால் தசையின் ஆரம்ப காலத்திலும் தனது தசா பலனைக் கொடுக்கும்.
அஷ்டவர்க்கப் பலன் சொல்லும் போது கீழ்க்கண்ட விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சூர்யன், செவ்வாய் இவர்கள் ராசியின் முதல் திரேக்காணத்தில் சஞ்சரிக்கும்போதும், குரு, சுக்கிரன் இவர்கள் ராசியின் இரண்டாவது திரேக்காணத்தில் சஞ்சரிக்கும்போதும், சனி, சந்திரன் இவர்கள் மூன்றாவது திரேக்காணத்தைக் கடந்து போகும் போதும் பலன்களைச் செய்கின்றார்கள். புதன் எக்காலத்திலும் பலனைக் கொடுக்கும்.
This Week’s Quote:
The difference between stupidity and genius is that genius has its limits.
- Albert Einstein.
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
