சென்ற வாரம், பிறந்து சில மணி நேரங்களிலேயே இறந்து போன ஒரு சிசுவின் ஜாதகத்தைத் தந்தோம். இந்த வாரம் அந்த சிசுவின் ஜாதகத்தைப் போலவே இருக்கும், இன்னொரு ஜாதகத்தைத் தருகின்றோம். ஆனால் இவர் எண்பத்தாறு வருடங்கள் வாழ்ந்து மறைந்தார்.




இந்த ஜாதகரும் சந்தியாகாலத்தில் சந்திர ஹோரையில் பிறந்துள்ளார். ஆனால் நவாம்ச லக்னத்துக்குப் பன்னிரண்டில் பாபக்கிரகம் ஏதுமில்லை. கேந்திர ஸ்தானங்களான நான்கிலும், லக்னத்திலும் சனி, செவ்வாய் உள்ளன. ஆனால் செவ்வாய் சுபக்கிரகமான புதனுடன் சேர்க்கை. சனி இயற்கைச் சுபரான குருவின் வீட்டில் இருந்து குருவின் பரிபூரண திருஷ்டியைப் பெறுகின்றது. ஆயுளைக் குறிக்கின்ற புண்ய ஸஹம் விருச்சிகத்தில் 23 பாகை 02 கலையில் உள்ளது. அந்த ராசியதிபதி செவ்வாய் லக்னத்தில் லக்னாதிபதியுடன் சேர்வது நீண்ட ஆயுளை உறுதிப்படுத்துகின்றது. எமது அனுபவத்தில் லக்னாதிபதியும், எட்டுக்குடையவனும் இரண்டு பாகைகளுக்குள் சேர்ந்திருக்கும்போது அந்த ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவராக இருக்கின்றார். அல்லது அற்பாயுள் உடையவராக இருக்கின்றார். இந்த இரகசியத்தை அறியும் முயற்சியில் நாம் தீவிரமாக இருக்கின்றோம்.
ஆனால் இந்த ஜாதகம் இங்கே இடம் பெற்றதற்கான காரணம் வேறு. ஐந்தாமிடமான மகரத்துக்குக் குரு மற்றும் சுக்கிரனின் பரிபூரணமான பார்வையுள்ளது. ஐந்துக்குடைய சனி நான்கில் சுபர் வீட்டில் இருக்கின்றது. குடும்பாதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருக்கின்றது. ஆனால் இவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. இவரது துணைவியார் கருத்தரிக்கவே இல்லை.
ஒரு சராசரிச் சோதிடரின் பார்வையில் இந்த ஜாதகருக்குக் தாரதோசம் ஏற்படுவதற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன. லக்னத்துக்கு இரண்டாமிடத்தில் கேது. சந்திரனுக்கு இரண்டாமிடத்தில் சனி. சுக்கிரனின் ராசிநாதன் சந்திரன் மூன்றாமிடத்தில் நீசமடைந்துள்ளது. பாதகாதிபதி குருவின் பார்வை, லக்னத்துக்கும், சந்திரனுக்கும், ஐந்தாமிடத்துக்கும் உள்ளது. சுக்கிரனுக்கு ஏழாமதிபதி சுக்கிரனுக்கு ஆறாமிடத்தில். இந்தக் காரணங்களால் தாரதோச ம் ஏற்படக்கூடும்.
இவர் மறைந்து இரண்டாண்டுகள் ஆகின்றன. ஆனால் மனைவி இன்னும் உயிரோடு இருக்கின்றார். 55 வருடங்களுக்கு மேலான இல்லற வாழ்க்கை இருவருக்கும் கிடைத்திருக்கின்றது. குழந்தைப் பாக்கியம் இல்லையென்பதைத் தவிர வேறு குறைகள் இல்லாத வாழ்க்கைதான் இருவருக்குமே கிடைத்திருக்கின்றது. எமது அனுபவத்தில் பன்னிரண்டாமிடத்ததிபதி பன்னிரண்டில் இருப்பது, பன்னிரண்டாமித்தில் சூரியன் அல்லது சனி இருப்பது, குழந்தைப்பேறைத் தடுக்கின்றது. சோதிட ஆர்வலர்கள் இந்தக் குறிப்புக்களைச் சோதித்துப் பார்க்கலாம்.
நட்சத்திர தசைகளைப் பற்றிய ஆய்வு மேற்கொள்பவர்களுக்காகத் தசா விபரங்கள்:

சந்திர லக்னத்துக்குப் பாதக ஸ்தானத்தில் அமர்ந்த ஏழு பன்னிரண்டுக்குடைய சுக்கிரனின் தசை, லக்னதுக்குப் பன்னிரண்டுக்குடைய சூரிய தசை, சந்திர லக்னத்துக்கு ஒன்று ஆறுக்குடையவனாகவும், லக்னத்துக்கு எட்டுக்குடையவனாகவும் உள்ள செவ்வாய் தசை, மூன்றில் நீசமடைந்த சந்திரனின் தசை இவை எதுவுமே களத்திர தோசத்தைக் கொண்டு வரவில்லை.
நிறைய ஜாதகங்களைப் பார்த்த பின்னர் தான் ஒரு ஜாதகத்தை எவ்வளவு நுட்பமாகவும், கவனத்தோடும் பார்க்க வேண்டியதிருக்கின்றது என்பது தெரிய வருகிறது. சோதிட ஆர்வலர்களின் பசிக்குத் தீனி போடுவது போல அமைந்திருக்கும் ஜாதகம் இது.
This Week’s Quote:
Give every man thy ear, but few thy voice.
- Shakespeare
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
