ஒரு மனிதன் பிறக்கும் போது கிரகங்கள் எந்த எந்த இராசியில் உள்ளன என்பதைச் சொல்வதே ஜாதகக் கட்டம். அந்தக் கிரக நிலை அப்போதைய நிமிடத்தின் பதிவு. ஆனால் கிரகங்கள் அப்படியே இருப்பதில்லை. சந்திரன் ஒரு நாளில் 13 பாகைகளையும், சூரியன் ஒரு நாளில் ஒரு பாகையையும் கடந்து போகின்றார்கள். ஆக நாளுக்கு நாள் கிரகங்கள் பாகை விட்டுப் பாகை மாறிக்கொண்டிருப்பதன் மூலமும் ஜாதகனின் அன்றாட வாழ்க்கையில் மாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. இந்த மாற்றங்களைச் சொல்ல முயல்வதே அஷ்டவர்க்கம் என்னும் ஒரு கணித முறையாகும். கோசாரம் என்னும் சாதாரண முறை எப்படியெல்லாம் பொய்த்துப் போகின்றது என்பதை இந்தக் கட்டுரைத் தொடரின் நான்காவது கட்டுரையில் பார்த்தோம். அஷ்டவர்க்கமே சரியான முறை என்று வராகமிகிரர் தனது பிருஹஜ் ஜாதகத்தில் கூறியிருப்பதால் நாமும் அதையே எடுத்துக்கொள்வோம்.

லக்னமும், சூர்யன் முதல் சனி முடியவுள்ள கிரகங்கள் ஏழும் சேர்ந்து அஷ்டவர்க்கம் என்னும் கணித முறையைத் தருகின்றன. ஒவ்வொரு கிரகமும் அக்கிரகம் இருக்கும் இராசியிலிருந்து இந்த இந்த இடங்களில் வந்தால் நல்ல பலன்களைக் கொடுக்கும் என்றும், இந்த இந்த இடங்களில் வந்தால் கெட்ட பலன்களைக் கொடுக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. அதுபோல தன்னைத் தவிர்த்து மற்ற ஆறு கிரகங்கள் இருக்கும் இடங்களிலிருந்து குறிப்பிட்ட சில இடங்களில் வந்தால் நல்ல பலனையும், வேறு சில இடங்களுக்கு வந்தால் கெட்ட பலனையும் கொடுக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. லக்னத்திலிருந்தும் சில இடங்கள் நல்லவையாகவும், சில இடங்கள் கெட்டவையாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. இதைப்பற்றி விரிவாகச் சொல்லவே இக்கட்டுரை வாசகர்களுக்குத் தரப்படுகின்றது. சூர்யனது ராசி மாறுதல் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் தேதியில் நிகழ்வதால் சூர்யனது அஷ்டவர்க்கத்தைச் சொன்னால் வாசகர்களுக்கு எளிதாகப் புரியும் என்பதால் சூர்யனது அஷ்டவர்க்கம் இப்போது சொல்லப்படுகின்றது.


சூர்யன் ஒருவரது ஜாதகத்தில் எந்த இராசியில் இருக்கின்றதோ அந்த ராசியிலிருந்து 1, 2, 4, 7, 8, 9, 10, 11-வது இராசிகளிலும்
சந்திரனிருக்கும் இராசியிலிருந்து 3, 6, 10, 11-வது இராசிகளிலும்
செவ்வாயிருக்கும் இராசியிலிருந்து 1, 2, 4, 7, 8, 9, 10, 11-வது இராசிகளிலும்
புதனிருக்கும் இராசியிலிருந்து 3, 5, 6, 9, 10, 11, 12-வது இராசிகளிலும்
குரு இருக்கும் இராசியிலிருந்து  5, 6, 9, 11-வது இராசிகளிலும்
சுக்கிரனிருக்கும் இராசியிலிருந்து  6, 7, 12-வது இராசிகளிலும்
சனியிருக்கும் இராசியிலிருந்து 1, 2, 4, 7, 8, 9, 10, 11-வது இராசிகளிலும்
லக்னத்திலிருந்து  3, 4, 6, 10, 11, 12-வது இராசிகளிலும்

செல்லும் போது சுபபலன்களைத் தரும் என்றும் மற்ற இடங்களில் செல்லும் போது சுபபலன்களைத் தராது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
ஒரு உதாரணம் மூலம் இதை விளக்குவோம்.


 

sample horoscope

 

இந்த ஜாதகத்தில் சூரியன் மேஷ இராசியில் இருக்கின்றது. எனவே சூர்யன் தான் இருக்கும் இராசியான மேஷத்திலிருந்து 1, 2, 4, 7, 8, 9, 10, 11-வது இராசிகளான மேஷம், ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய இராசிகளில் செல்லும் போது சுபபலன்களைக் கொடுக்கின்றது. சுபபலனைக் கொடுக்கும் இடங்களைக் குறிக்க (+) அடையாளத்தையும், மற்றவற்றை குறிக்க (0) அடையாளத்தையும் பயன்படுத்தினால் கீழ்க்கண்டவாறு கிடைக்கும்.

 

sample horoscope

 

சூர்யன் சந்திரனிருக்கும் இராசியிலிருந்து 3, 6, 10, 11-வது இராசிகளில் சுபன் என்று சொல்லப்பட்டிருப்பதால் சந்திரனிருக்கும் கும்ப ராசியிலிருந்து 3, 6, 10, 11-வது இராசிகளான மேஷம், கடகம், விருச்சிகம், தனுசு ஆகிய இராசிகளில் (+) அடையாளத்தையும், மற்றவற்றில் (0) அடையாளத்தையும் குறித்தால் கீழ்க்கண்டவாறு இருக்கும்.

 

sample horoscope

 

செவ்வாய் இருக்கும் இராசியான ரிஷபத்திலிருந்து 1, 2, 4, 7, 8, 9, 10, 11-வது இடங்களைக் குறித்தால் ரிஷபம் மிதுனம் சிம்மம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ஆகிய இராசிகள் (+) அடையாளத்தையும், மற்ற இராசிகள் (0) அடையாளத்தையும் பெறும்.

 

sample horoscope

 

இப்படியே புதன், குரு, சுக்கிரன், சனி, லக்னம் ஆகியவற்றிலிருந்து சுபபலன்களைத் தரும் இராசிகளை (+) அடையாளத்தாலும், மற்றவற்றை (0) அடையாளத்தாலும் குறிப்போமானால் அவை கீழ்க்கண்டவாறு அமையும்.

 

sample horoscope

sample horosope

 

sample horoscope

sample horosope

 

sample horoscope

 

இப்பொழுது எட்டு சக்கரங்கள் கிடைத்துள்ளன. இவைகளில் உள்ள (+) அடையாளத்தையும் (0) அடையாளத்தையும் சேர்த்து அந்தந்த ராசிகளில் குறித்தோமானால் கீழ்க்கண்ட சக்கரம் கிடைக்கும்.

 

sample horoscope

 

அதாவது மேஷ ராசியில் 3 (+) அடையாளமும், 5 (0) அடையாளமும் இருக்கும். இதன் அர்த்தம் மேஷ ராசியில் சூர்யன் செல்லும் போது சுபமான பலன்கள் 3 பங்கு என்றால், அசுபமான பலன்கள் 5 பங்கு என்பதுதான். இவ்வாறு ஒவ்வொரு ராசியிலும் சூர்யன் செல்லும் போது சுபபலன்கள் அதிகமா, அசுப பலன்கள் அதிகமா என்று பார்த்துக்கொள்ள வேண்டியது. ஒவ்வொரு ராசியிலும் உள்ள மொத்த (+) மற்றும் (0) அடையாளங்கள் எட்டு ஆக வரும். பன்னிரண்டு ராசிகளிலும் சேர்த்து சூர்யன் அஷ்டவர்க்கத்தில் 48 (+) வரும். 48(0) வரும். இந்த உதாரண ஜாதகத்தில் மிதுன ராசியில் 6(0) அடையாளம் இருப்பதால் அந்த ராசியில் சூர்யன் செல்லும் மாதமான ஆனி மாதம் சூர்யன் சுப பலன்களைச் செய்யமாட்டான் என்று புரிந்துகொள்ள வேண்டும். மாறாக தனுசு இராசியில் 6(+)  அடையாளங்கள் இருப்பதால் மார்கழி மாதம் சூர்யன் அதிகமான சுபபலன்களைச் செய்வான் என்றும் புரிந்துகொள்ள வேண்டும். இது சூர்யன் அஷ்டவர்க்கப் பலனாகும்.

ஒவ்வொருவரும் தங்களது ஜாதகத்துக்கு சூர்யன் அஷ்டவர்க்கச் சக்கரம் தயாரித்து Calendar  போலப் பார்க்கும்படியான இடத்தில் நிரந்தரமாக வைத்து எந்த எந்த மாதங்களில் சூர்யன் நல்ல பலனையும் எந்த எந்த மாதங்களில் கெட்ட பலன்களையும் தருகின்றான் என்பதைச் சோதித்துப் பார்க்கலாம். இதற்குச் சோதிடரிடம் போக வேண்டிய அவசியமில்லை. ஜாதகத்தைப் போலவே அஷ்டவர்க்கச் சக்கரமும் மாறாதது. சூர்யனைப் போலவே ஏனைய ஆறு கிரகங்களுக்கும் அஷ்டவர்க்கச் சக்கரம் தயாரித்து வைத்துக்கொண்டால் குருப்பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சிக்காகச் சோதிடரைத் தேட வேண்டியதில்லை.

குரு அஷ்டவர்க்கச் சக்கரத்தில் (+) அடையாளம் அதிகம் வரும் ராசிகளில் குரு கடந்து போகும் போது நல்ல பலன்களும்,  (+) அடையாளம் குறைந்த ராசிகளைக் குரு கடந்து போகும் போது கெட்ட பலன்களும் நடக்கும் எனத் தெரிந்துகொள்ளலாம். சோதிடத்தில் பயிற்சி பெற விரும்புவோர் சூர்யன் மற்றும் சந்திரன் அஷ்டவர்க்கச் சக்கரத்தை தயாரித்து வைத்துக்கொண்டு சூர்யனுக்கு ஒரு வருடமும் சந்திரனுக்கு ஒரு மாதமும் (சந்திரன் ஒரு மாதத்தில் பன்னிரண்டு ராசிகளைக் கடந்து விடுவதால்) காத்திருந்து சரிபார்த்தால் நிறைய விஷயங்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டவர்க்கம்:

சந்திரன் சூர்யனுக்கு 3, 6, 7, 8, 10, 11-வது இராசிகளிலும்
    சந்திரனுக்கு 1, 3, 6, 7, 10, 11-வது இராசிகளிலும்
    செவ்வாய்க்கு 2, 3, 5, 6, 9, 10, 11-வது இராசிகளிலும்
    புதனுக்கு 1, 3, 4, 5, 7, 8, 10, 11-வது இராசிகளிலும்
    குருவுக்கு 1, 4, 7, 8, 10, 11, 12-வது இராசிகளிலும்
    சுக்கிரனுக்கு 3, 4, 5, 7, 9, 10, 11-வது இராசிகளிலும்
    சனிக்கு 3, 5, 6, 11-வது இராசிகளிலும்
    லக்னத்துக்கு 3, 6, 10, 11-வது இராசிகளிலும்

சுபனாகவும் மற்ற இராசிகளில் அசுபனாகவும் கருதப்படுகின்றான். மொத்தம் 49 (+) அடையாளங்கள்.

செவ்வாய் அஷ்டவர்க்கம்: (39)

செவ்வாய் சூர்யனுக்கு 3, 5, 6,  10, 11-வது இராசிகளிலும்
    சந்திரனுக்கு 3, 6, 11-வது இராசிகளிலும்
    தனக்கு 1, 2, 4, 7, 8, 10, 11-வது இராசிகளிலும்
    புதனுக்கு  3, 5, 6, 11-வது இராசிகளிலும்
    குருவுக்கு 6, 10, 11, 12-வது இராசிகளிலும்
    சுக்கிரனுக்கு 6, 8, 11, 12-வது இராசிகளிலும்
    சனிக்கு 1,  4, 7, 8, 9, 10, 11-வது இராசிகளிலும்
    லக்னத்துக்கு 1, 3, 6, 10, 11-வது இராசிகளிலும்

சுபன். மற்ற இராசிகளில் அசுபன்.

புதன் அஷ்டவர்க்கம் (54):

புதன் சூர்யனுக்கு 5, 6,  9, 11, 12-வது இராசிகளிலும்
    சந்திரனுக்கு 2, 4, 6, 8, 10, 11-வது இராசிகளிலும்
    செவ்வாய்க்கு 1, 2, 4, 7, 8, 9, 10, 11-வது இராசிகளிலும்
    தனக்கு  1, 3, 5, 6, 9, 10, 11, 12-வது இராசிகளிலும்
    குருவுக்கு 6, 8, 11, 12-வது இராசிகளிலும்
    சுக்கிரனுக்கு 1, 2, 3, 4, 5, 8, 9, 11-வது இராசிகளிலும்
    சனிக்கு 1, 2, 4, 7, 8, 9, 10, 11-வது இராசிகளிலும்
    லக்னத்துக்கு 1, 2, 4, 6, 8, 10, 11-வது இராசிகளிலும் சுபன். மற்ற இராசிகளில் அசுபன்.


குரு அஷ்டவர்க்கம் (56):

குரு சூர்யனுக்கு 1, 2, 3, 4, 7, 8, 9, 10, 11-வது இராசிகளிலும்
    சந்திரனுக்கு 2, 5, 7, 9, 11-வது இராசிகளிலும்
    செவ்வாய்க்கு 1, 2, 4, 7, 8, 10, 11-வது இராசிகளிலும்
    புதனுக்கு  1, 2, 4, 5, 6, 9, 10, 11-வது இராசிகளிலும்
    தனக்கு  1, 2, 3, 4, 7, 8, 10, 11-வது இராசிகளிலும்   
    சுக்கிரனுக்கு 2, 5, 6, 9, 10, 11-வது இராசிகளிலும்
    சனிக்கு 3, 5, 6, 12-வது இராசிகளிலும்
    லக்னத்துக்கு 1, 2, 4, 5, 6, 7, 9, 10, 11-வது இராசிகளிலும் சுபன். மற்ற இராசிகளில் அசுபன்.

சுக்கிரன் அஷ்டவர்க்கம் (52):

சுக்கிரன் சூர்யனுக்கு  8,  11, 12-வது இராசிகளிலும்
    சந்திரனுக்கு 1, 2, 3, 4, 5, 8, 9, 11, 12-வது இராசிகளிலும்
    செவ்வாய்க்கு 3, 5, 6, 9, 11, 12-வது இராசிகளிலும்
    புதனுக்கு  3, 5, 6, 9, 11-வது இராசிகளிலும்
    குருவுக்கு 5, 8, 9, 10, 11-வது இராசிகளிலும்
    தனக்கு  1, 2, 3, 4, 5, 8, 9, 10, 11-வது இராசிகளிலும்   
    சனிக்கு 3, 4, 5, 8, 9, 10, 11-வது இராசிகளிலும்
    லக்னத்துக்கு 1, 2, 3, 4, 5, 8, 9, 11-வது இராசிகளிலும் சுபன். மற்ற இராசிகளில் அசுபன்.

சனி அஷ்டவர்க்கம் (39):

சனி சூர்யனுக்கு  1, 2, 4, 7, 8, 10, 11-வது இராசிகளிலும்
    சந்திரனுக்கு 3, 6, 11-வது இராசிகளிலும்
    செவ்வாய்க்கு 3, 5, 6, 10, 11, 12-வது இராசிகளிலும்
    புதனுக்கு  6, 8, 9, 10, 11, 12-வது இராசிகளிலும்
    குருவுக்கு 5, 6, 11, 12-வது இராசிகளிலும்
    சுக்கிரனுக்கு  6, 11, 12-வது இராசிகளிலும்
    தனக்கு  3, 5, 6, 11-வது இராசிகளிலும்   
    லக்னத்துக்கு 1, 3, 4, 6, 10, 11-வது இராசிகளிலும் சுபன். மற்ற இராசிகளில் அசுபன்.

மேலே கண்டபடி சூர்யன் முதல் சனி முடியவுள்ள கிரகங்களுக்கு அஷ்டவர்க்கச் சக்கரம் தயாரித்து வைத்துக்கொண்டால் சூர்யன் முதல் சனி வரையுள்ள கிரகங்கள் தங்களது அஷ்டவர்க்கச் சக்கரத்தில் (+)  அதிகமான இராசிகளைக் கடக்கும் போது நல்ல பலனும், (0) அதிகமான இராசிகளைக் கடக்கும் போது கெட்ட பலனும் தருவார்கள் என்று நாமே தெரிந்துகொள்ளலாம்.

அஷ்டவர்க்கம் பற்றிச் சோதிடர்களால் எழுதப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள புத்தகங்களைப் படித்தால் அதில் உள்ள ஏகாதிபத்திய சோதனை, திரிகோண சோதனை போன்றவை வாசகர்களை மிகவும் குழப்பும். ஆனால் வராகமிகிரர் சித்தாந்தப்படி அவையெல்லாம் தேவையில்லை. மேலே குறிப்பிட்டவாறு  (+) அடையாளம், (0) அடையாளம் இவைகளைத் தெரிந்து கொண்டால் போதுமானது.

எனவே இதைப் படிக்கும் வாசகர்கள் தங்கள் ஜாதகத்துக்குச் சந்திராஷ்டவர்க்கம் தயாரித்து எந்த ராசிகளில் சந்திரன் சஞ்சரிக்கும் போது நற்பலனையும், எந்த ராசிகளில் சந்திரன் சஞ்சரிக்கும் போது கெட்ட பலனையும் தருகின்றான் என்பதை ஒரு மாதத்தில் சோதனை செய்து பார்க்க வேண்டும். அதிகம் (+) அடையாளமுள்ள ராசிகளில் மனக்குழப்பத்தையும், கவலையையும் தந்து, அதிகம் (0) அடையாளமுள்ள ராசிகளில் சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் தருமானால் அதன் காரணம் என்ன என்று என்னைக் கேட்கலாம். சோதித்து பார்த்தால் பொய்த்துப்  போகும் எந்தக் கணக்கையும்  நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அஷ்டவர்க்கம் மிகவும் விரிவான ஆராய்ச்சிக்குரிய ஒன்று.

 

அடுத்த கட்டுரை ‘ராசி – பார்வை பலன்’ 13.03.2016ல் வெளிவரும்.

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 78 guests and no members online