சோதிட ஆர்வலர்களுக்குப் பயனுள்ள விசயங்களைச் சொல்லவே நாம் இந்த வலைத்தளத்தை ஆரம்பித்தோம். ஆனாலும் நமக்கு வரும் கேள்விகளைப் பார்த்தால், நமது மக்களுக்குச் சில விசயங்கள் புரியவே புரியாது என்பது தெரிகின்றது. பிறந்த நேரத்தைக் கொடுக்கும் சிலர் இரவா, பகலா என்பதைக் குறிப்பிடுவதில்லை. பெரும்பாலோர் பிறந்த இடத்தைச் சொல்வதில்லை. சிலர் ராசி நட்சத்திரத்தைச் சொல்லிப் பலன் கேட்கிறார்கள். இம்மாதிரி நபர்கள் அணுக வேண்டிய சோதிடர்கள் அவர்களுக்குப் பக்கத்திலேயே இருப்பார்கள். சோதிடத்தைக் கற்றுக் கொள்வதற்கும் கற்றதைப் பிறர்க்குப் பகிர்ந்து கொள்ளவுமே இந்த வலைத்தளம் செயல்படுகின்றது.
எமது கட்டுரைகளில் அதிகமான வாசகர்களால் படிக்கப்படுவது ராஜயோகம் யாருக்கு? என்ற கட்டுரைதான். அதற்கு அடுத்த இடத்தைப் பெறுவது பெண்களின் ஜாதகங்கள் என்ற கட்டுரை. எனவே வாசகர்களுக்காக நாம் இந்த வாரம் ராஜயோகத்துடன் வாழ்ந்து மறைந்த ஒரு பெண்மணியின் ஜாதகத்தை தருகின்றோம். நாம் சொல்லப் போகும் விசயங்கள் மூலம், நாம் சொல்லாத விசயங்களையும் அறிந்து கொள்ள வேண்டியது வாசகர்கள் கடமை.
நமது முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் ஜாதகத்தை Times of Astrology ஆசிரியர் லேட் திரு.சந்தானம் 1991ல் தனது பத்திரிக்கையில் பிரசுரம் செய்திருந்தார். அவர் கொடுத்திருந்த நேரத்தை வைத்துக் கணிக்கப்பட்ட ஜாதகத்தை நாம் தருகின்றோம்.




இவரது ஜாதகத்தில் நாம் ராஜயோகத்தைத் தேட வேண்டிய அவசியமில்லை. ஒரு கேந்திரத்தில் குரு தனது மூலத்திரிகோண வீட்டிலும், இன்னொரு கேந்திரத்தில் சுக்கிரன் தனது உச்ச வீட்டிலும் இருக்கின்றன. பூரண சந்திரனைப் புதன் , குரு, சூர்யன் ஆகிய கிரகங்கள் பார்க்கின்றன. வலுவான செவ்வாயின் சேர்க்கையும் சந்திரனுக்குக் கிடைக்கின்றது. பூரண சந்திரனுக்கு நான்கு கிரகங்களின் சம்பந்தம் ஏற்படுவது ராஜயோகமாகச் சொல்லப்படுகின்றது. மேலும் ராஜ்யாதிகாரத்தைக் கொடுக்கும் ராஜ்ய ஸஹம் என்ற புள்ளி தனுசில் 0 பாகை 26 கலையில் உள்ளது. ஏழுக்கும், பத்துக்கும் அதிபதியான குரு இப்புள்ளிக்கு வெகு சமீபத்தில் உள்ளது.
13 வயது முதல் 32 வயது வரை நடந்த சுக்கிர நைசர்ச்சிக தசையில்தான் இவர் திரையுலகில் வெற்றிகளைக் குவித்தார். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருப்பது மட்டுமே இவரது கலையுலக வாழ்க்கைக்குக் காரணமில்லை. சந்திரனின் நவாம்ச அதிபதியாகவும் சுக்கிரன் இருப்பதும் , சந்திரனின் துவாதசாம்ச அதிபதியாகவும் சுக்கிரனே வருவதும்தான் இவரது கலையார்வத்துக்குக் காரணங்கள். நாம் அடிக்கடி குறிப்பிடுவதுபோல் கடக, விருச்சிக, மீன ராசிகளில் உள்ள கிரகங்கள் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் திறமையை அளிக்கின்றன. இங்கே சுக்கிரன் மீனத்திலும், சுக்கிரனின் நாவம்சபதி சனி கடகத்திலும் இருப்பது கூட இவரது திரையுலக வாழ்க்கைக்குக் காரணங்களாகின்றன. மூன்றாம் பாவாதிபதி சூரியனும், மூன்றாம் பாவநவாம்சபதி சந்திரனும், ஒருவர் பார்வையில் ஒருவர் இருப்பது இவரது வெகுஜனத் தொடர்பு வெற்றிகரமாக இருக்கும் என்பதைக் காட்டுகின்றது.
33 வயது முதல் 50 வயது முடிய நடந்த வியாழ நைசர்க்சிக தசை இவரது வாழ்க்கையை வேறு ஒரு சூழ்நிலைக்குக் கொண்டு செல்கின்றது. வியாழன் அரசியலில் ஆர்வத்தைத் தூண்டும் மேச ,சிம்ம, தனுசு ராசிகளில் ஒன்றான தனுசில் இருக்கின்றது. நவாம்சத்தில் மேசராசியில் அந்த ராசியதிபதி செவ்வாயுடன் சேர்ந்து இருக்கின்றது. மேலும் 33 வயது ஆரம்பிக்கின்ற 24.02.1980ல் குரு சிம்மத்தில் 11 பாகை 43 கலையிலும் செவ்வாய் சிம்மத்தில் 12 பாகை 27 கலையிலுமாகச் சேர்ந்து அதே சிம்ம ராசியே குரு தசாப் பிரவேச லக்னமாகவும் இருப்பதால் அரசியலில் முக்கியமான இடத்தைப் பெறுவதற்குக் குரு தசை காரணமாகின்றது.
1991ம் ஆண்டு நடந்த தேர்தலில் இவர் பெற்ற வெற்றிக்கு அவரது 44வது வருசப் பிரவேச நாள் எப்படிக் காரணமாகின்றது என்பத பற்றி இன்னொரு கட்டுரையில் சொல்வோம். மாதுர்காரகன் சந்திரன் முழுநிலவாகப் பிரகாசித்துச் சிம்மத்தில் இருந்து, ராசிநாதன் சூரியன் மற்றும் குருவின் சிறப்புப் பார்வைகளைப் பெற்றிருந்தும் இவரது தாயார் இவரது குழந்தைப் பருவத்திலேயே தனது கணவரை இழந்து இடம் பெயர்ந்து வாழ வேண்டிய சூழ்நிலைக்கு வந்ததைச் சோதிட ஆர்வலர்கள் கவனிக்க வேண்டுகின்றோம். குருவின் பார்வை கோடி நன்மையைத் தரும் என்ற வெற்றுக் கூச்சல்களை வாசகர்கள் தவிர்க்க வேண்டும் என்பதே எமது அவா. மாதுர்காரகனைக் குரு பார்த்தும் மாதுர் சுகமில்லாத நான்காவது ஜாதகமாக இதைத் தருகின்றோம்.
This Week’s Quote:
Genuine poetry can communicate before it is understood.
- T. S. Eliot
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
