மேஷம் முதல் மீன ராசி முடியவுள்ள பன்னிரண்டு ராசிகளில் சந்திரன் இருக்கும் போதும், அவ்வாறு சந்திரன் இருக்கும் போது மற்ற கிரகங்களால் தனித்தனியே பார்க்கப்பட்ட போதும் ஏற்படும் பலன்களை முன்னர் பார்த்தோம். சந்திரனைத் தவிர்த்து மற்ற கிரகங்கள் மேஷம் முதல் மீனம் வரையுள்ள ராசிகளில் இருக்கும் போது ஏற்படும் பலன்களை இங்கு காண்போம்.

சூர்யன்:

மேஷ ராசியில் பரமோச்ச பாகமான 10 பாகையை விட்டு வேறு பாகைகளில் இருக்கும் போது பிறந்தவன் எல்லோராலும் அறியப்பட்டவனாகவும், எக்காரியத்தையும் சாமர்த்தியமாகச் செய்பவனாகவும், அடிக்கடி பிரயாணங்களை மேற்கொள்பவனாகவும், ஆயுதம் தரித்தவனாகவும் இருப்பான். பரமோச்ச பாகமான 10 பாகையில் சூர்யன் இருக்கப் பிறந்தவன் அதிகம் தனமுள்ளவனாகவும், ஆயுதத்தைத் தானெடுக்காமல் ஆயுதம் தரித்த சேவகர்களை உடையவனாகவும் இருப்பான்.
   
ரிசப ராசியில் சூர்யன் இருக்கப் பிறந்தவன் நறுமணப் பொருட்கள் விற்கும் வியாபாரியாகவும், பெண்களோடு விரோதம் கொள்பவனாகவும், வாய்ப்பாட்டு, வாத்தியம் இசைத்தல் இவற்றில் கெட்டிக்காரனாகவும் இருப்பான்.
   
மிதுன ராசியில் சூரியனிருக்கப் பிறந்தவன் இலக்கண, இலக்கியங்களைக் கற்பவனாகவும், சோதிடசாஸ்திரம் அறிந்தவனாகவும் இருப்பான்.

கடகராசியில் சூரியன் இருக்கப் பிறந்தவன் கோபங்கொள்பவனாகவும், ஏழையாகவும், பிறருக்காகக் காரியங்களைச் செய்பவனாகவும் இருப்பான். கஷ்டமான வேலைகளைச் செய்பவனாகவும், மனதில் துக்கம் கொண்டவனாகவும் இருப்பான்.

சிம்மராசியில் சூரியனிருக்கப் பிறந்தவன் காடு, மலை, பசுக்கள் இவற்றில் பற்றுள்ளவனாகவும், வீரனாகவும், அதே சமயத்தில் மூடனாகவும் இருப்பான்.

கன்னிராசியில் சூரியனிருக்கப் பிறந்தவன் எழுத்தாளனாகவும், ஒவியனாகவும், காவியம் படைப்பவனாகவும், கணித மேதையாகவும், பெண்களைப் போன்று மென்மையான உடலுள்ளவனாகவும் இருப்பான்.

துலா ராசியில் சூரியனிருக்கும் போது பிறந்தவன் போதையையுண்டு பண்ணும் பொருட்களை விற்பவனாகவும், தங்க வேலை செய்பவனாகவும், தனது ஜாதிக்கு ஒவ்வாத தொழிலைச் செய்பவனாகவும் இருப்பான்.

விருச்சிக ராசியில் சூரியனிருக்கப் பிறந்தவன் கொடூரமானவனாகவும், முன்யோசனையில்லாது காரியங்களைச் செய்பவனாகவும், நச்சுப் பொருட்களை விற்பவனாகவும், ஆயுதங்களைத் தயாரித்து விற்பவனாகவும் இருப்பான்.

தனுசு ராசியில் சூரியனிருக்கப் பிறந்தவன் சாதுக்களால் வணங்கப்படுபவனாகவும், பெரும் செல்வந்தனாகவும், கொடூரமான நடத்தையுள்ளவனாகவும், மருத்துவத் தொழில் செய்பவனாகவும், நிறைய கைவேலைகளைச் செய்பவனாகவும் (ARTISAN) இருப்பான்.

மகர ராசியில் சூரியன் இருக்கப் பிறந்தவன் சாஸ்திர விரோதமான காரியங்களைச் செய்பவனாகவும், மூடனாகவும், முறை தவறி வியாபாரம் செய்பவனாகவும், குறைந்த செல்வம் உள்ளவனாகவும், சிறு உதவி கூடச் செய்யாத கஞ்சனாகவும், பிறருடைய செல்வம் வீடு இவற்றை அனுபவிக்கும் ஆசையுடையவனாகவும் இருப்பான்.

கும்ப ராசியில் சூரியன் இருக்கப் பிறந்தவன் கீழ்மையான தொழில்களைச் செய்பவனாகவும், புத்திரன், அதிர்ஷ்டம் இவை அற்றவனாகவும், ஏழையாகவும் இருப்பான்.

மீன ராசியில் சூரியனிருக்கப் பிறந்தவன் ஜலத்திலிருந்து கிடைக்கும் பொருட்களை விற்பதால் பெருஞ்செல்வம் சேர்ப்பான்.

செவ்வாய்:

செவ்வாய் தனது சொந்த வீடான மேஷம் அல்லது விருச்சிகத்தில் இருக்கப் பிறந்தவர்கள் சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களாகவும், செல்வப் பெருக்கு உடையவர்களாகவும், அதிகமாகப் பயணம் செய்பவர்களாகவும், மொத்தமாகப் பொருட்களை விற்கும் பெரு வணிகர்களாகவும், காயம்பட்ட உடலையுடையவர்களாகவும், திருடர்களாகவும், சுகங்களைத் தேடுபவர்களாகவும் இருப்பார்கள்.

செவ்வாய் புதனின் வீடுகளான மிதுனம் அல்லது கன்னியில் இருக்கப் பிறந்தவர்கள் பொறுமையில்லாதவர்களாகவும், உண்மையான சிநேகிதர்கள் இல்லாதவர்களாகவும், செய்நன்றி மறவாதவர்களாகவும், ஆண் குழந்தையைப் பெறுபவர்களாகவும், சங்கீதத்திலும், சண்டையிடுவதிலும் கெட்டிக்காரர்களாகவும், பயமற்றவர்களாகவும், கஞ்சர்களாகவும், யாசகம் செய்பவர்களாகவும் இருப்பாhர்கள்.

செவ்வாய் குருவின் வீடுகளான தனுசு அல்லது மீனத்தில் இருக்கும் போது பிறந்தவர்கள் அதிகமான எதிரிகளை உடையவர்களாகவும், ராஜாவுக்கு ஆலோசனை சொல்பவர்களாகவும், (அமைச்சர் அல்லது அரசின் செயலாளர்) செல்வாக்கு, புகழ் இவைகளை அடைந்தவர்களாகவும், பயமற்றவர்களாகவும், குறைவான எண்ணிக்கையில் குழந்தைப் பேறு உடையவர்களாகவும் இருப்பார்கள்.

செவ்வாய் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் இருக்கப் பிறந்தவர்கள் பெண்களின் சொல் கேட்பவர்களாகவும், நண்பர்களை விரோதித்துக் கொள்பவர்களாகவும், அன்னியப் பெண்கள் மீது ஆசையுள்ளவர்களாகவும், மிகத் திறமையாகப் பிறரை ஏமாற்றுபவர்களாகவும், நன்றாகத் தம்மை அலங்காரம் செய்துகொள்பவர்களாகவும், பயந்த சுபாவம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.

செவ்வாய் சனியின் வீடான மகரத்தில் இருக்கும் போது பிறந்தவர்கள் பெருஞ்செல்வந்தர்களாகவும், அதிக எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெறுபவர்களாகவும், ராஜயோகம் உள்ளவர்களாகவும், அரசனுக்குச் சமமானவர்களாகவும் இருப்பார்கள்.

கும்பத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர்கள் எப்பொழுதும் கஷ்டங்களை அனுபவிப்பவர்களாகவும், ஏழைகளாகவும், பல இடங்களுக்குச் சென்று பிழைப்பு நடத்துபவர்களாகவும், பொய் பேசுவதில் விருப்பமுள்ளவர்களாகவும், கொடூரமானவர்களாகவும் இருப்பார்கள்.

செவ்வாய் சூரியனின் வீடான சிம்மராசியில் இருக்கும் போது பிறந்தவர்கள் செல்வம் குறைந்தவர்களாகவும், எந்தக் கஷ்டங்களையும் சகித்துக்கொள்பவர்களாகவும், காட்டின் நடுவே சஞ்சரிக்கின்றவர்களாகவும், தன்னிலும் கீழான மனைவி, மக்களையுடையவர்களாகவும் இருப்பார்கள். (கீழான என்பதைப் படிப்பு, அந்தஸ்து, செல்வம் இவற்றில் ஏதாவது ஒன்றில் குறைந்த என்பதாக அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.)

செவ்வாய் சந்திரனின் வீடான கடகத்தில் இருக்கும் போது பிறந்தவர்கள் செல்வந்தர்களாகவும், தண்ணீர், வாகனங்கள் இவைகள் மூலம் பணஞ் சேர்ப்பவர்களாகவும், மிக்க நுட்பமான புத்தியுள்ளவர்களாகவும், அங்கக் குறைவு உள்ளவர்களாகவும், கொடூரமானவர்களாகவும் இருப்பார்கள்.

புதன்:

புதன் செவ்வாயின் வீடான மேஷம் அல்லது விருச்சிகத்தில் இருக்கும் போது பிறந்தவர்கள் சூதாடுதல், கடன் வாங்குதல், மதுபானம் அருந்துதல் இவைகளில் அதிக ஆசையுள்ளவர்களாகவும், கடவுள் இல்லையென்று கூறும் நாஸ்திகர்களாகவும், திருடர்களாகவும், செல்வம் குறைந்தவர்களாகவும், கெட்ட பெண்களையுடையவர்களாகவும், ஏமாற்றுபவர்களாகவும், பொய் பேசுவதில் மிகுந்த விருப்பம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.

புதன் தனது சொந்த வீடான மிதுனத்தில் இருக்கப் பிறந்தவர்கள் தற்புகழ்ச்சி செய்பவர்களாகவும், இலக்கண, இலக்கியங்களை அறிந்தவர்களாகவும், வாய்ப்பாட்டு, நாட்டியம், இசைக் கருவிகளைக் கையாளுதல் இவற்றில் வல்லவர்களாகவும், ஒவியம் எழுதுபவர்களாகவும்;, அனைவரும் விரும்பும் வண்ணம் பேசுகின்றவர்களாகவும், சுகமாய் வாழ்வதில் பெருவிருப்பம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

புதன் தனது உச்ச வீடான கன்னியில் இருக்கப் பிறந்தவர்கள் கொடையாளியாகவும், கற்றறிந்த பண்டிதர்களாகவும், பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களாகவும், எக்காரியத்தையும் நன்கு செய்யும் திறமைபடைத்தவர்களாகவும், எதற்கும் பயப்படாதவர்களாகவும் இருப்பார்கள்.

புதன் தனுசு ராசியில் (குருவின் வீட்டில்) இருக்கப் பிறந்தவர்கள் அரசர்களால் போற்றப்படுபவர்களாகவும், சாஸ்திரங்கள் சட்டநுணுக்கங்கள் அறிந்தவர்களாகவும், உள்ளதை உள்ளபடி அறிந்து அதையே பேச்சாலும் வெளிப்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள்.

புதன் மீனராசியில் இருக்கப் பிறந்தவர்கள் சேவகர்களை ஜெயித்தவர்களாகவும், தாழ்ந்த சிற்பத் தொழில் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.  B. சூர்ய நாராயண்ராவ் இதை Winning Over Servants to his side and mean artist என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். பெருஞ்செல்வந்தர்களுடைய வேலைக்காரர்களிடம் சிநேகம் கொண்டு பிழைப்பு நடத்துபவர்கள் தாழ்ந்த காரியங்களைச் செய்பவர்கள் என்று பொருள் கொள்ளலாம்.

புதன் சுக்கிரனின் வீடான ரிசபம் துலாத்தில் இருக்கப் பிறந்தவர்கள் ஆசிரியர்களாகவும், அதிகமான புத்திரர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர், அதிகமான செல்வம், ஏராளமான சிநேகிதர்கள் இவைகளை உடையவர்களாகவும், கொடையாளிகளாகவும், பெரியோர்களிடத்தில் பக்தியுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

புதன் சனியின் வீடான மகரம் கும்பத்தில் இருக்கப் பிறந்தவர்கள் அடிமைத் தொழில் செய்பவர்களாகவும், செல்வம் குறைந்தவர்களாகவும், சிற்பிகளாகவும், கடனாளிகளாகவும், பிறர் சொல்வதைக் கேட்டுச் செயல்படுபவர்களாகவும், சம்பளம் கொடுக்காமலேயே வேலை வாங்குபவர்களாகவும் இருப்பார்கள்.

புதன் சிம்மராசியில் இருக்கப் பிறந்தவர்கள் பெண்களால் வெறுக்கப்படுபவர்களாகவும், செல்வம், குழந்தைப் பேறு, சுகம் இவைகள் இல்லாதவர்களாகவும், நோக்கமற்ற பயணங்கள் செய்து அங்குமிங்கும் அலைபவர்களாகவும், மூர்க்கர்களாகவும், பெண்கள் மீது அதிகப் பற்றுக்கொண்டவர்களாகவும், அவமானப்படுபவர்களாகவும் இருப்பார்கள்.

புதன் கடகராசியில் இருக்கப் பிறந்தவர்கள் ஜலம் சம்பந்தமான பொருட்களால் சம்பாதிக்கப்பட்ட செல்வத்தை உடையவர்களாகவும், நெருங்கிய சொந்தங்களுக்குச் சத்துருவாகவும் இருப்பார்கள்.

 

ஒரு ஜாதகருக்குப் பலன் சொல்லும் போது இவ்வாறு கிரகங்களால் அடையப்பட்ட ராசி மூலம் அவர்களது குணகர்மஸ்பாவங்களைச் சொல்வதைவிடப் பிரஸ்ன நேரத்தில் இவை அதிக பலனைத் தருகின்றன. இவை குறிப்புக்கள் மட்டுமே. நவாம்ச த்வாதசாம்ச ராசிகளில் கிரகங்கள் இருக்கும் இராசியைக் கவனித்து அதற்குத் தகுந்தாற் போல் இக்குறிப்புக்களை விரித்தும், சுருக்கியும் பொருள் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

 

 

இதன் தொடர்ச்சி 10.04.2016-ல் வெளிவரும்.

 

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 192 guests and no members online