பெண்களைச் சிறுமைப்படுத்தும் எத்தனையோ விசயங்கள் நமது சமூகத்தில் பரவிக்கிடக்கின்றன. அவற்றில் முக்கியமான இடத்தைப் பெறுவது, பஞ்சாங்கங்களில் அவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கும் நட்சத்திர தோசங்கள். மூலம் முதற் பாதத்தில் பிறந்த பெண்ணைத் தகப்பனிருக்கின்ற பிள்ளையும், ஆயில்யம் முதற்பாதத்தில் பிறந்த பெண்ணைத் தாயிருக்கின்ற பிள்ளையும், கேட்டை முதற்பாதத்தில் பிறந்த பெண்ணைத் தமையன் இருக்கின்ற பிள்ளையும், விசாகம் நான்காவது பாதத்தில் பிறந்த பெண்ணைத் தம்பியிருக்கின்ற பிள்ளையும், விவாகம் செய்யக்கூடாது என்று பஞ்சாங்கங்களில் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றார்கள். மேலே சொன்ன நட்சத்திரத்தில் பிறந்த பெண்களின் திருமணங்கள் இதனால் காலதாமதமாக நடக்கின்றன. மூல நட்சத்திரப் பெண்களின் பெற்றோர் தந்தை இறந்துபோன மணமகனை மட்டும் தேடும் வேடிக்கையும் இங்கே நடக்கின்றது. ஆனால் ஆண்களுக்கு இம்மாதிரியான தோசங்கள் பஞ்சாங்கங்களில் சொல்லப்படவில்லை. யாரை மணமகனாக ஏற்றால் மணவாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற விசயத்தைப் பெண்களுக்குச் சொல்ல இங்கு யாருமில்லை.
பிருஹஜ் ஜாதகம், பலதீபிகை என்ற இரண்டு முக்கியமான சோதிட நூல்களில் உள்ள சில முக்கியமான வி ஷயங்களைப் பெண்களின் கவனத்துக்கு நாம் கொண்டு வருகின்றோம். இந்த விவரங்களை நுட்பமாகப் பரிசீலனை செய்து ஒரு நல்ல மணவாழ்க்கையை (அல்லது நல்ல ஜாதகத்தை) அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே எமது எண்ணம்.
ஒரு ஆண்மகன் ஜாதகத்தில் ஏழாமிடத்ததிபதி, ஐந்தாமிடத்தில் இருந்தாலும் அல்லது ஐந்தாமிடத்து அதிபதி, ஏழில் இருந்தாலும் மனைவி அல்லது குழந்தைகளின் மரணம் நேருகின்றது. ரிசப லக்னத்தில் பிறந்த ஜாதகனுக்கு ஏழில் சுக்கிரன் இருந்தாலும், விருச்சிக லக்னத்தில் பிறந்த ஜாதகனுக்கு ஏழில் புதனிருந்தாலும், கடக லக்னத்தில் பிறந்த ஜாதகனுக்கு ஏழில் குரு இருந்தாலும் , கன்யா லக்னத்தில் பிறந்த ஜாதகனுக்கு ஏழில் சனி அல்லது செவ்வாய் இருந்தாலும் பெண்ணின் மரணம் அல்லது பிரிவு நிகழ்கின்றது.
லக்னத்துக்கு நான்காமிடம், ஏழாமிடம், பதினோராமிடம் ஆகிய இடங்களில் ஏதாவது ஒன்றில், இரண்டு கிரகங்கள் இருப்பின் ஜாதகன் இரண்டாவது மணம் செய்கின்றான். (எமது அனுபவத்தில் இரண்டு, ஐந்து, எட்டு மற்றும் பதினொன்று ஆகிய இடங்களில் ஏதாவது ஒன்றில் இரண்டு கிரகங்கள் இருப்பின், முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாவது திருமணம் நடப்பதைக் கவனித்துள்ளோம்)
பன்னிரண்டாமிடத்தில் சுக்கிரன் இருக்கப் பிறந்த ஜாதகர்களுக்கு, இரண்டாமிடம் வலுவாக இல்லையென்றால் இரண்டாவது மணம் நடக்கின்றது. பன்னிரண்டாமிடச் சுக்கிரன் மிதுனத்தில் இருக்கும்போது (அதாவது லக்னம் கடகமாக இருந்து சுக்கிரன் மிதுனத்தில் இருக்கும்போது) பிறந்தவர்களுக்குப் பல பெண்களோடு தொடர்பு உண்டாகின்றது. சுக்கிரனுக்கு நான்கு அல்லது எட்டாமிடத்தில் பாவக் கிரகங்கள் இருந்தாலும் அல்லது சுக்கிரன் இரண்டு பாவக்கிரகங்களுக்கு மத்தியில் இருந்தாலும் மனைவி வெகு சீக்கிரத்தில் மரணமடைகின்றாள். (மரணம் என்பதைச் சாவு என்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. நோய்கள் அல்லது கருத்து வேறுபாடுகளால் பிரிந்து வாழ்தலும் சில சமயம் நடக்கின்றது)
ஏழாமிடத்துச் செவ்வாயை விட, ஏழாமிடத்துச் சனி குடும்ப வாழ்க்கையில் சிக்கல்களைத் தருகின்றது. பொதுவாகக் கிரகம் தனித்து இருக்கும்போது, கெடுதலை விரைவில் தருகின்றது. வேறுகிரகங்களின் பார்வை சேர்க்கை இருக்கும்போது தீமையான பலன்கள் குறைகின்றன. (இது எமது அனுபவக் கணிப்பு)
ஒவ்வொரு பாவத்தின் பாகை, கலைகளுக்கு மிகச் சமீபமாக கிரகங்கள் இருப்பின் அவை நிச்சயம் அவற்றுக்குரிய பலன்களைத் தருகின்றன. பாவத்துக்கு வெகுதூரம் விலகியிருந்தால் அவற்றுக்குரிய பலன்களைச் செய்வதில்லை. மேலே சொல்லப்பட்ட குறிப்புக்களைக் கவனத்தில் கொண்டு நல்ல ஜாதகத்தைத் தேர்ந்தெடுப்பது இக்காலப் பெண்களுக்குச் சாத்தியமான ஒன்றுதான்.
This Week’s Quote:
No object is mysterious. The mystery is your eye.
- Elizabeth Bowen
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
