‘சர்ப்பதோஷம்’ என்ற கட்டுரையைப் படித்த வாசகர் ஒருவர், கட்டுரை நல்ல தகவலைத் தந்தது என்றும், கட்டுரையில் குறிப்பிட்டிருந்த நபரின் மனைவியின் ஜாதகம் ஒரு வேளை நல்ல ஜாதகமாக இருக்கலாம் என்றும், தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார். அவரது கருத்தில் இந்திய தேசத்தின் மண்வாசைன வீசுவதாகவே நாம் எண்ணுகின்றோம். மண்வாசனை என்று நாம் கூறுவது இந்திய தேசத்துக்கே சொந்தமான குழப்பச் சிந்தனைகளைத்தான்.
‘ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.’
என்று எழுதுகின்ற வள்ளுவரே
‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.’
என்றும் எழுதுகின்றார். கர்மவினைப்படிதான் எல்லாமும் நடக்கும் என்று கூறித்திரிபவர்களே கோயில்கள் நோக்கிப் பயணம் செய்து தங்கள் பாவச் சுமைகளைக் குறைக்க ஆசைப்படுகின்றார்கள். அதுபோலத்தான் அந்த வாசகரும் தன் கருத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
சோதிட சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி ஒரு ஜாதகருக்குப் பலன்கள் நடக்கவில்லையென்றால் சோதிட சாத்திரத்தை விலக்கிப் போகும் துணிவு வரவேண்டும். மாறாக ஜாதகம் கணித்த நேரம் தவறாக இருக்கலாம், அவரது மனைவி அல்லது கணவனின் ஜாதகத்தில் தோஷங்களைப் போக்கும் யோகங்கள் இருந்திருக்கக் கூடும், என்றெல்லாம் எண்ணுவதும், பேசுவதும் தவறுதான். நம்பவும் இயலாமல், நம்பிக்கையற்றுப் போகவும் இயலாமல் இருதலைக்கொள்ளி எறும்புகளாய்த் தவிப்பதுவே இந்தியர்களின் மனச்சாட்சி.
இந்த வாரம் ஒரு பெண்ணின் ஜாதகத்தைத் தருகின்றோம். அவர் 26 வயதில் திருமணம் செய்து ஓராண்டு முடிவதற்குள்ளாகவே விபத்து ஒன்றில் கணவரைப் பறிகொடுத்துவிட்டார். இரண்டாவது திருமணம் செய்யும் முன்பு எமது நண்பர் ஒருவர் மூலம் அப்பெண்ணின் தாயார் நம்மிடம் ஆலோசனை கேட்க வந்தார். 32 வயதுக்கு முன்பு வேறு மணம் செய்ய வேண்டாம் என்றும், அதற்குப் பின்னர் செய்யலாம் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. வழக்கமாகத் தான் சந்திக்கும் சோதிடர்களோடு எம்மை ஒப்பிட்டுப் பார்த்த அவர் ‘இவருக்குச் சோதிடம் பார்க்கும் திறமை இல்லை’ என்று எமது நண்பரிடம் சொல்லிவிட்டுப் போய்விட்டார். இது நடந்தது 2010ல். இரண்டாண்டுகள் கழித்து ஒரு நாள் நண்பரிடம் இப்பெண்ணைப் பற்றி விசாரித்தபோது 30 வயதில் இரண்டாவது திருமணம் நடந்ததாகவும் எட்டுமாதத்தில் அவரது கணவர் புற்றுநோயால் காலமாகிவிட்டார் என்றும் சொன்னார். அதன் பிறகு இன்று வரை வேறு தகவல்கள் இல்லை.


புததசையில் இருப்பு வருஷம் 2, மாதம் 5, நாள் 17. 15.02.1992 முதல் 15.02.2012 வரை சுக்கிரதசை (விம்சோத்தரி தசை முறைப்படி)
லக்னத்துக்கு ஏழாமிடமும், எட்டாமிடமும் சுத்தம். சந்திரா லக்னத்துக்கு எட்டில் ராகு. பன்னிரண்டில் செவ்வாய். ஆனால் ராகுவுக்கு வியாழனின் பார்வை, செவ்வாய்க்கு வியாழனின் சேர்க்கை. சாதாரணப் பார்வையில் மாங்கலிய ஸ்தானத்துக்கு எந்தப் பங்கமும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பிறகு எப்படி 5 வருடங்களுக்குள் இரண்டு தடவை மணம் நடந்து இரண்டு கணவர்களுமே ஓராண்டு முடிவதற்குள் இயற்கை எய்தினர்?
நாம் இந்த ஜாதகத்தைப் பார்த்த போது முழுக்கமுழுக்க மேலைநாட்டுக் கணக்குகளைப் பின்பற்றியே பலன் சொன்னோம். முன்நகர்ந்த செவ்வாய், முன்நகர்ந்த சந்திரனோடு 22.09.82ல் சேர்க்கை. முன்நகர்ந்த சந்திரன், ஜன்ம கால யுரேனஸோடு 22.9.82ல் சேர்க்கை. (Progressed moon conjuct progressed mars on 22.9.82. Progressed moon conjuct natal Uranus on 22.9.82). 22.9.82 என்பது 28.8.82ல் இருந்து 26வது நாள். ஒரு நாளை ஒரு வருடமாகக் கணக்கிடுவதால் 26வது நாள் என்பது 26வது வயதைக் குறிக்கின்றது. அப்போதைய கிரக நிலைகள் மிக மோசமாக இருந்ததால் இழப்பு ஏற்பட்டது. பின்னர் 30 வயதில் பத்தாம் பாவம் சந்திரனுக்கு நேரெதிரில் வருவதால் 30 வயது கழிக்க வேண்டும் என்றும் நைசர்க்கிக தசைப்படி 32 வயதுவரை சுக்கிரதசை என்பதால் 32 வயது கழிக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.
ஆனால் விதிப்படிதானே மதியும் போகும்?
இதெல்லாம் இருக்கட்டும். நம்முடைய சோதிட சித்தாந்தப்படி இந்த இழப்புக்கள் ஏன் ஏற்பட்டன என்று சொல்லுங்கள் என்று வாசகர்கள் கேட்கக் கூடும். யாராவது சில குறிப்புக்களைக் கண்டு பிடிக்கின்றார்களா எனப் பார்ப்போம். இல்லையெனில் நாமே அவற்றைக் கண்டு சொல்வோம்.
This Week’s Quote:
While an author is yet living we estimate his powers by his worst performance, and when he is dead, we rate them by his best.
- Dr. Samuel Johnson in his ‘Preface to Shakespeare.’
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
