சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த எல்லோருக்கும் ஜாதகம் இருக்காது. கிராமங்களில் முற்பட்ட வகுப்பு மக்களிடையேதான் ஜாதகம் எழுதும் வழக்கம் இருந்தது. மற்ற வகுப்பு மக்களிடையே ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே ஜாதகம் எழுதுவார்கள். பெண் குழந்தைகளுக்கு ஜாதகம் எழுதமாட்டார்கள். பூப்பு எய்திய பின்னர் ‘பூத்த குறிப்பு’ என்று எதையாவது எழுதி வைப்பார்கள். நேரம் சரியாக இருக்காது. ஆனால் 1980க்குப் பின்னர் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கணிணிகள் ஜாதகம் எழுதத் தொடங்கிய பின்னர் இப்போது எல்லா வகுப்பு மக்களிடையேயும் ஜாதகம் பிரபலமாகிவிட்டது. இப்போது ஜாதகம் இல்லாதவர் யாருமே இருக்கமாட்டார்கள். ஆனாலும் தென்மாவட்டங்களில் CSI கிறித்தவ மக்களிடையே ஜாதகம் எழுதிவைக்கும் பழக்கம் பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கட்டுரை ஜாதகம் இல்லாதவர்களுக்கும், பிறந்த நேரம் சரியாகத் தெரியாதவர்களுக்குமான கட்டுரை. ஜாதகம் இருப்பவர்கள் இதில் கூறப்படும் விசயங்களைக் கூடுதல் தகவல்களாக வைத்துக் கொள்ளலாம்.

பகற்பொழுதை மூன்றாகப் பிரித்து, முதல் பகுதிக்குப் புதனையும், இரண்டாவது பகுதிக்குச் சூரியனையும், மூன்றாவது பகுதிக்குச் சனியையும், பலம் பொருந்திய கிரகமாகச் சோதிட நூல்கள் குறிக்கின்றன. இரவுப் பொழுதை மூன்றாகப் பிரித்து முதல் பகுதிக்குச் சந்திரனையும், இரண்டாவது பகுதிக்குச் சுக்கிரனையும், மூன்றாவது பகுதிக்குச் செவ்வாயையும் பலம் பொருந்திய கிரகமாக எடுத்துக்கொள்ளவும், நூல்கள் அறிவுறுத்துகின்றன. 

உதாரணத்துக்கு இக்கட்டுரை வெளியாகும் 26.11.2017ஐ எடுத்துக்கொள்வோம். சூர்ய உதயம் சென்னையில் காலை 6 மணி 24 நிமிடம். சூர்யாஸ்தனம் மாலை மணி 5 நிமிடம் 51. பகற்பொழுதின் மொத்த நேரம் 11 மணி 27 நிமிடங்கள். இந்த 11 மணி 27 நிமிடங்களை மூன்று பங்கு வைத்தால் ஒரு பங்குக்கு 229 நிமிடங்கள் கிடைக்கின்றன. அதாவது 3 மணி 49 நிமிடங்கள். எனவே அன்று காலை 6 மணி 24 நிமிடம் முதல் 10 மணி 13 நிமிடம் வரை புதனும், பகல் 2 மணி நிமிடம் 02 வரை சூரியனும், அதன் பிறகு சூர்யாஸ்தமனம் வரை சனியும் பலம் மிக்க கிரகங்களாக உள்ளன. இதேபோல் இரவுப் பொழுதையும் 3 பங்கு வைத்து முதல் பங்குக்குச் சந்திரனையும், இரண்டாவது பங்குக்குச் சுக்கிரனையும், மூன்றாவது பங்குக்குச் செவ்வாயையும் பலம் மிக்கக் கிரகங்களாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்குத் தெரிய வேண்டியது ஒரு நாளின் சூர்யாஸ்தமன, உதய நேரங்கள் மட்டுமே. ராகு காலம், எமகண்டம், குளிகன், ஹோரை போன்று இப்பிரிவு, கிழமைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல. எந்நாளுமே இதே மாதிரிதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதை எப்படி நமது அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படுத்துவது? அனைவருமே அவரவர் பிறந்தநாளை அறிந்திருப்பர். உத்தேசமாக எந்த நேரத்தில் பிறந்திருப்பார் என்பதும் தெரியும். எனவே பிறந்த நாளின் சூர்யோதய, அஸ்தமன நேரங்களைப் பஞ்சாங்கம் மூலம் தெரிந்து கொண்டு, எந்தக் கிரகம் பலம் பொருந்திய வேளையில் ஒருவர் பிறந்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

புதன் பலம் பொருந்திய முதற் பகுதியில் பிறந்துள்ளவர்களுக்குக் கன்யா, மிதுன, லக்ன நேரங்களில் செய்யும் காரியங்கள் நல்ல பலனைக் கொடுக்கும். சூர்யன் பலம் பொருந்திய நேரத்தில் பிறந்தவருக்குச் சிம்ம லக்னம் நல்ல நேரமாக அமையும். மாலையில் பிறந்தவருக்குச் சனி பலம் மிக்கக் கிரகமாக வருவதால், மகர, கும்ப லக்னங்கள் அவருக்கு நல்ல நேரமாக அமையும். எனவே முக்கியமான வணிக ஒப்பந்தங்கள், பங்கு முதலீடுகள், நேர்காணல்கள், புதுத் தொழில்கள் துவங்குதல், பயணங்கள் இவற்றைப் பலம் பொருந்திய கிரகங்களின் லக்னம் உதயமாகும்போதோ, அல்லது அக்கிரகங்கள் கேந்திரங்களில் இருக்கும்போது உதயமாகும் லக்னங்களிலோ செய்தால் நோக்கங்கள் நிறைவேறும்.

புதன், சனி இவர்கள் வக்கிரமாக இருக்கும் போது காலை அல்லது மாலையில் பிறந்தவர்கள் மேற்கண்ட முயற்சிகளைத் தவிர்க்கலாம். ஜாதகங்கள் இல்லாதவர்கள் இப்படித்தான் தேர்ந்தெடுக்க முடியும். ஜாதகம் இருப்பவர்கள் தங்கள் ஜாதகத்தில் உள்ள விசயங்களையும், மேற்கண்ட குறிப்புக்களோடு இணைத்துப் பார்த்துச் சாதகமான நேரங்களைத் தேர்ந்தெடுத்துக் காரியங்கள் சாதித்துக் கொள்ளலாம்.

பிறந்த நேரம் உத்தேசமாகத் தெரியாதவர்கள், இன்னொரு வழியையும் பின்பற்றிப் பார்க்கலாம். பிறந்த தேதியில் என்ன திதி உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். பின்னர் கீழ்க்கண்ட பட்டியல்படி முக்கியமான கிரகத்தைக் கண்டு கொள்ளலாம்.

 பிரதமை, சஷ்டி, ஏகாதசி  - செவ்வாய் 
 திவிதியை, சப்தமி, துவாதசி  - புதன் 
 திரிதியை, அட்டமி, திரயோதசி  - வியாழன் 
 சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி   - சுக்கிரன் 
 பஞ்சமி, தசமி, அமாவாசை, பௌர்ணமி   - சனி

உதாரணமாக 26.11.2017 காலை மணி 9.51க்கு மேல் அட்டமி திதி ஆரம்பிக்கின்றது. மறுநாள் காலை மணி 11 நிமிடம் 03 வரை நீடிக்கின்றது. எனவே இடைப்பட்ட நேரத்தில் பிறந்தவர் வியாழனை முக்கிய கிரகமாக எடுத்துக்கொள்ளலாம்.

பகற்பொழுதை மூன்றாகப் பிரித்துக் கிடைத்த கிரகமும், திதிப்படி கிடைத்த கிரகமும் வெவ்வேறாக இருந்தால், இரண்டு கிரகங்களையும் முக்கியமான கிரகங்களாக எடுத்துக் கொள்ளலாம். இரண்டிலும் ஒரே கிரகமாக வந்தால், அந்தக் கிரகம் நிச்சயமாக அவருடைய அன்றாட வாழ்க்கையில் பெரும் பங்காற்றும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

எந்தக் குறிப்புமே சோதித்துப் பார்க்கப்பட வேண்டும். சோதிட ஆர்வலர்கள் இக்குறிப்புக்களை வைத்துச் சோதனை முயற்சிகளில் ஈடுபட்டுப் பார்க்கலாம். முக்கியமான கிரகங்கள் வாழ்க்கையின் எல்லாத் தருணங்களிலும் பெரும்பங்காற்றுகின்றன. சந்தோசத்தையும், துக்கத்தையும் சேர்த்தே கொண்டு வருகின்றன. முக்கிய கிரகங்கள் இருக்கும் ராசிக்குக் கேந்திரங்களில் சந்திரன் வரும் நாட்கள், முக்கிய கிரகம் இருக்கும் அம்சத்துக்குக் கேந்திரங்களில் சந்திரன் வரும் நாட்கள் இவை கவனிக்கப்பட வேண்டும். ஒரு பிரபல அரசியல்வாதி துலாத்தில் சந்திரன் இருக்கும் நாளில் இரண்டு முறை பதவியை இழந்திருக்கின்றார். ஒரு தடவை பதவி ஏற்றிருக்கின்றார். எனவே நற்பலனும், துர்ப்பலனும் சேர்ந்தே நடக்கும். இக்குறிப்புக்களைச் சோதித்துப் பார்க்கும் ஆர்வலர், பெரிதும் முயன்றால் எதிர்காலம் குறித்துச் சரியான பலன்களைச் சொல்ல இயலும்.

 

This Week’s Quote:

Any man can make a mistake; only a fool keeps making the same one.

-  Marcus Tullius Cicero

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 224 guests and no members online