ஒரு ராசியை நவாம்சம், த்வாதசாம்சம், திரேக்காணம் என்று பலவகையாகப் பிரித்திருப்பதைப் போலத் திரிம்சாம்சம் என்னும் ஒரு பிரிவைச் செய்திருக்கின்றார்கள். அதாவது ராசியின் 30 பாகைகளைச் சூரியன், சந்திரன் தவிர்த்த ஏனைய ஐந்து கிரகங்களுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார்கள். ஒற்றை ராசியின் முதல் 5 பாகைகளைச் செவ்வாய்க்கும், அடுத்த 5 பாகைகளைச் சனிக்கும், அடுத்த 8 பாகைகளை வியாழனுக்கும், அடுத்த 7 பாகைகளைப் புதனுக்கும், எஞ்சியுள்ள 5 பாகைகளைச் சுக்கிரனுக்குமாகப் பகிர்ந்து கொடுத்துள்ளார்கள். இரட்டை இராசியில் இது தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது முதல் 5 பாகைகளைச் சுக்கிரனுக்கும், அடுத்த 7 பாகைகளைப் புதனுக்கும், அடுத்த 8 பாகைகளை வியாழனுக்கும் , அடுத்த 5 பாகைகளைச் சனிக்கும், எஞ்சியுள்ள 5 பாகைகளைச் செவ்வாய்க்கும் பிரித்துக் கொடுத்துள்ளார்கள்.
திரிம்சாம்சப் பலன்கள் பெண்களுக்கு மட்டுமே விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. குறிப்பாகப் பெண்களின் ஒழுக்கம் குறித்தே அவை பேசுகின்றன. எனவே அப்பலன்களை முற்றாக நாம் ஒதுக்கி வைக்கின்றோம். ஆனால் திரிம்சாம்ச பலன்களை ஒரு ஆணுக்கு எப்படிச் சொல்ல வேண்டுமென்று மிக விரிவான குறிப்புக்கள் ஏதுமில்லை. ஒரு கிரகம் தனது சொந்தத் திரிம்சாம்சத்தில் இருந்தால் என்ன பலன் என்பதைக் கூறும் வராகமிகிரர், அந்தக் கிரகம் வேறு கிரகத்தின் திரிம்சாம்சத்தில் இருந்தால் என்ன பலனைச் செய்யும் என்று குறிப்பிடவில்லை. சொந்தத் திரிம்சாம்சத்தில் உள்ள கிரகங்கள் அக்கிரகங்களுக்குச் சொல்லப்பட்டுள்ள குணங்கள், காரகத்துவம் இவற்றை அதிகமாக்குகின்றன. குரு, செல்வம் , புகழ் , புத்தி, நோயற்ற வாழ்வு இவற்றைத் தரும் எனவும் புதன் , பேச்சுத் திறமை, சகல கலைகளிலும் ஆர்வம், ஞாபகசக்தி இவற்றைத் தரும் எனவும் சுக்கிரன், அழகு, ஆரோக்யம், புகழ், பெண்களின் நட்பு இவற்றைத் தரும் எனவும் சொல்லப்படுகின்றன.
மேலே குறிப்பிட்டவை தவிர வேறு எந்த வகையில் திரிம்சாம்சப் பலன்களை யூகிக்க வேண்டும், கோசார முறைப்படி கிரகங்கள் வேறு வேறு திரிம்சாம்சங்களைக் கடக்கும் போது அவை என்ன மாதிரியான பலன்களைத் தருகின்றன, என்பவையெல்லாம் அறியப்படாத ரகசியங்களாகக் கிடக்கின்றன.
இதற்குச் சமமான பிரிவுகளை மேலைநாட்டுச் சோதிட நூல்களிலும் காண முடிகின்றது. எகிப்தியர்களின் Bounds அல்லது Terms என்று குறிப்பிடப்படும் திரிம்சாம்சங்கள் ஒரு இராசியின் பாகைகளைச் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களுக்குப் பகிர்ந்தளிக்கின்றன. நமது முன்னோர்கள் ஆண் ராசிகள் அனைத்துக்கும் ஒரு வகையாகவும், பெண் ராசிகள் அனைத்துக்கும் தலைகீழாகவும் மாற்றிச் சொல்லியுள்ளனர். ஆனால் எகிப்தியர்களின் திரிம்சாம்சங்கள் ஒவ்வொரு ராசியிலும் வேறு வேறு விதமாகச் சொல்லப்படுகின்றன. தாலமி வேறுவகைத் திரிம்சாம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். நாம் இங்கே எகிப்தியர்கள் பின்பற்றிய திரிம்சாம்சத்தைத் தருகின்றோம்.

ஏறக்குறைய இதற்குச் சமமான அட்டவணை தாஜிகநீலகண்டி என்ற வருஷ ப்ரவேச பலனைச் சொல்லும் நூலிலும் உள்ளது. Table of Hadda என்று இதைத் தனது Varshaphal or The Hindu Progressed Horoscope என்ற புத்தகத்தின் 26-வது பக்கத்தில் B.V.ராமன் கொடுத்துள்ளார். இந்த அட்டவணைக்கும் Hadda Table-க்கும் இரண்டு வித்தியாசங்களே உள்ளன. இந்த அட்டவணையில் மிதுனத்தின் இரண்டாவது பாகம் குருவுக்கும் மூன்றாவது பாகம் சுக்கிரனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. Hadda Table-ல் இரண்டாவது பாகம் சுக்கிரனுக்கும் மூன்றாவது பாகம் குருவுக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்து தனுசில் நான்காவது பாகம் சனிக்கும், ஐந்தாவது பாகம் செவ்வாய்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது. Hadda Table-ல் நான்காவது பாகம் செவ்வாய்க்கும், ஐந்தாவது பாகம் சனிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இவையே அந்த வித்தியாசங்கள். பாகைகளில் வித்தியாசமில்லை.
ஒரு கிரகம் ஒரு இராசியில் தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள பாகத்தில் இருந்தால் விசேஷமான பலன் எதையாவது செய்யுமா, வேறு கிரகத்தின் பாகையில் இருந்தால் என்ன பலனைச் செய்யும், என்பவையெல்லாம் விடை தெரியாத கேள்விகளாகவே உள்ளன. கோசார முறைப்படிச் சொந்தப் பாகைகளில் சஞ்சரிக்கும் கிரகத்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதும் புதிராகவே உள்ளது.
எனவே சோதிட ஆர்வலர்கள் குரு, சனி போன்ற மெதுவாக நகரும் கிரகங்கள் தங்களது ஜாதகத்தில் எந்த எந்த ராசியின் எந்த எந்தத் திரிம்சாம்சங்களில் சஞ்சரிக்கும் போது நல்ல அல்லது கெட்ட பலன்கள் ஏற்பட்டன என்பதைச் சோதித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம். நாம் இந்தச் சோதனைகளில் இதுவரை ஈடுபட்டதில்லை என்பதால் இதுபற்றி வேறு விபரங்களைத் தர எம்மால் இயலவில்லை என்பதையும் சொல்லிக் கொள்கின்றோம்.
This Week’s Quote:
We are happy when for everything inside us there is a corresponding something outside us.
- William Butler Yeats
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
