பிருஹஜ் ஜாதகத்தின் இரண்டாவது அத்தியாயத்தின் பதினான்காவது சுலோகத்தில், வராகமிகிரர் கிரகங்களுக்கான காலத்தைச் சொல்கின்றார். பிரச்ன நேரத்தின்போது கேட்கப்படும் கேள்விக்குப் பதிலளிக்கும்போது, கிரகங்களுக்குரிய காலம் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. ஒரு சம்பவம் எப்போது நடக்கும் என்பதைப் பிரச்ன கால லக்னம், அதில் உதயமாகும் அம்சம், பிரச்ன கால லக்னாதிபதி இவற்றைக் கொண்டும், அந்தக் கிரகத்துக்குச் சொல்லப்பட்ட காலத்தையும் வைத்துச் சொல்ல வேண்டும்.

சூரியன் அயனத்தையும் (அதாவது ஆறு மாத காலம்), செவ்வாய் ஒரு நாளையும், புதன் இரண்டு மாதங்களையும், குரு ஒரு மாதத்தையும், சுக்கிரன் ஒரு பட்சத்தையும் (அதாவது பதினைந்து நாட்கள்), சனி ஒரு வருடத்தையும் குறிக்கின்றன.

ஒரு கேள்வி கேட்கப்படும் போது எந்தக் கிரகத்தின் நவாம்சம் உதயமாகின்றதோ, அக்காலம், அக்கிரகம் இருக்கும் நவாம்சத்திற்கும், பிரச்ன லக்ன நவாம்சத்திற்கும் இடைப்பட்ட எண் எவ்வளவோ அந்த எண்ணால் பிரச்ன லக்னத்தின் அம்சாதிபதிக்குச் சொல்லப்பட்ட காலத்தைப் பெருக்கக் கிடைப்பதே சம்பவம் நடக்கக் கூடிய காலம்.

உதாரணமாகத் திருமணம் பற்றிய பிரச்னத்தில் மேஷ லக்னம் உதயமாகிறது என்றும், அம்சா லக்னம் ரிசபம் என்றும் வைத்துக்கொள்வோம். பிரச்ன நேரத்தில் அம்சாதிபதி சுக்கிரன் கடகத்தின் முதல் அம்சத்தில் இருந்தால், லக்ன நவாம்சத்துக்கும் கடகத்தின் முதல் அம்சத்துக்கும் இடையே உள்ள எண் 27. இந்த 27-ஐக் கொண்டு சுக்கிரனுக்குச் சொல்லப்பட்ட காலமான 15 நாளைப் பெருக்கினால் கிடைப்பது 405 நாட்கள். எனவே 13 மாதம் கழித்துத் திருமணம் நடக்கும் என்று கூறலாம். (மேசத்தின் இரண்டாவது அம்சத்திலிருந்து எண்ணும்போது கடகத்தின் முதல் அம்சம் 27வது அம்சமாக வரும்).

லக்னாதிபதி, அம்சாதிபதி இவர்களுக்குள் யார் பலமானவர் என்று பார்த்து இரண்டில் ஒன்றைத் தீர்மானிப்பது நல்ல பலனை அளிக்கலாம். அம்சாதிபதி சனியாக வந்து, சனியின் தற்போதைய அம்ச நிலைக்கும், பிரச்ன லக்னத்தின் அம்ச நிலைக்கும் இடையே உள்ள எண் 20 என்று வைத்துக்கொண்டால், 20 வருடம் கழித்துத் திருமணம் நடக்கும் என்று சொல்ல வேண்டியிருக்கும். இந்த மாதிரி நேரங்களில் தனது புத்தியையும், யுக்தியையும் உபயோகிக்க வேண்டியது சோதிடரின் கடமையாகும்.

 

This Week’s Quote:

Life is a long preparation for something that never happens.

-  William Butler Yeats

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.  


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 78 guests and no members online