இந்த இணையதளக் கட்டுரைத் தொடரின் முதல் கட்டுரையில் ‘கிரகங்கள் நல்லமுறையில் இடம் பெறும் நாட்களில் சிசேரியன் செய்து குழந்தைகளை எடுக்கும் பழக்கம்’ ஒரு கேலிக் கூத்து என்று எழுதியிருந்தேன். ஆனால் அப்படி ஒரு அறுவைச் சிகிச்சை எப்போது செய்ய வேண்டும் என்ற கட்டுரை எழுதி அக்கேலிக் கூத்துக்கு உடன்படுவது தவறுதானே? என்று யாரும் கேட்டால் தவறுதான் என்று சொல்வேன். ஆனால் அக்கேலிக் கூத்துக்களில் ஒரு பிஞ்சுக் குழந்தையின் ஜீவன் ஊசலாட்டத்தில் இருக்குமானால் அதைத் தடுப்பது சோதிடங்கற்ற ஒருவனின் கடமை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

முன்பெல்லாம் மிக்க அவசியமான வேளையில் பிரசவஸ்திரீயின் உயிரைக் காக்க வேண்டிய நெருக்கடியான நிலைமையிலேயே செய்யப்பட்ட சிசேரியன் அறுவைச் சிகிச்சை இப்போது அவசியமில்லாத நிலையிலும் கூடச் செய்யப்படுவதாகத்தான் பெரும்பாலோர் கருதுகின்றார்கள். உங்களுக்கு இஷ்டப்பட்ட நாளில் இஷ்டமான நேரத்தில் சிசேரியன் செய்துவிடலாம் என்று ஒரு சாய்ஸ் பிரசவஸ்திரீகளுக்கு மருத்துவமனையால் வழங்கப்படுகிறது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் சோதிடர்களிடம் போய் நல்ல நட்சத்திரம் எதுவென்று கேட்டு வந்து அந்த நாளில் சிசேரியன் வைத்துக்கொள்ளலாம் என்று ஒப்புதல் அளித்து விடுகின்றார்கள். இந்த நல்ல நட்சத்திரம், நல்ல நாள் என்பதைச் சோதிடர்கள் எவ்வாறு முடிவு செய்கின்றார்களோ தெரியாது. இருபத்தேழு நட்சத்திரங்களும் நல்லவையே. அதுபோல இருபத்தேழு நட்சத்திரங்களும் கெட்டவையே. நட்சத்திரங்களை நல்லவைகளாகவும், கெட்டவைகளாகவும் மாற்றுகின்ற லக்னமே அனைத்தையும்விட முக்கியமானதாகும். ஆனால் லக்னத்தைக் கவனிக்காமல் ராகு காலம், எமகண்டம், அசுபஹோரைகள் இவற்றை மட்டுமே தவிர்த்துச் சொல்லப்படும் நாட்கள் நல்ல நாளாக இல்லாமல் மோசமான நாளாகவும் போய்விட வாய்ப்பு உண்டு. மூன்று கிரகங்கள் உச்சமாக இருந்த ஒரு நாளில் தலைநகர் டெல்லியில் ஒரு சோதிடர் கணித்துக் கொடுத்த நேரத்தில் அறுவைச் சிகிச்சையின் மூலம் பிறந்த குழந்தை மறுநாளில் இறந்து போனதாகப் பெங்களுரிலிருந்து வெளிவந்த ASTROLOGICAL MAGAZINE-ல் ஒரு கட்டுரையைப் படித்த ஞாபகம் வருகிறது. எந்த வேளையில் சிசேரியன் செய்து குழந்தையை வெளியில் எடுத்தால் அது உலகை ஆளும் என்ற நினைப்பைத் தவிர்த்து எப்போது அறுவைச் சிகிச்சை செய்யக் கூடாது என்று கவனித்து அந்த உயிரைக் காப்பது மட்டுமே பெற்றோரின் கடமையாகும்.

கிரகங்களின் நிலைமையை நம்மால் மாற்ற இயலாது. அவை நல்ல இடங்களுக்கு வரவேண்டும் என்று வாரக் கணக்கில் காத்திருக்கவும் முடியாது. நமக்கு வழங்கப்பட்ட இரண்டு நாட்களில் நம்மால் ராசியைக் கூட நிச்சயிக்க முடியாது. ரிசபத்துக்குச் சந்திரன் வரட்டும் என்று மீன ராசியில் சந்திரனிருக்கும் நாளிலிருந்து நான்கு நாட்கள் காத்திருக்க முடியாது. லக்னத்தை மட்டுமே நாம் நிச்சயிக்க இயலும். அந்த லக்னத்தை எப்படி நிச்சயிக்க வேண்டும் எந்த லக்னத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதை வராகமிகிரரின் பிருஹஜ் ஜாதகம் என்ற நூலின் துணைகொண்டு விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஒரு வயதிற்குள் ஒரு குழந்தை மரிப்பது ஸத்யோரிஷ்டம் என்றும், பன்னிரண்டு வயதிற்குள் மரிப்பது பாலாரிஷ்டம் என்றும், இருபது வயதுக்குள் மரிப்பது யோகாரிஷ்டம் என்றும் பெயர் பெறுகின்றன. இம்மூன்று வகை அரிஷ்டங்களும் தசைகளை எதிர்பாராமல் நேரக் கூடியவை. எனவே ஜனித்த குழந்தையின் ஆயுளைப் பற்றி அறிய வேண்டுமானால் முதலில் இந்த மூன்று வகை அரிஷ்டயோகங்களையும் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதல் யோகம்:

லக்னம் நான்கு, ஏழு, பத்து ஆகிய நான்கு கேந்திரங்களிலும் சந்திரன், சூரியன், செவ்வாய், சனி ஆகிய நான்கு கிரகங்களும் தனித்தனியே இருக்கப் பிறந்த குழந்தை வெகுசீக்கிரமே இறந்துவிடுகிறது.

இந்த யோகத்தில் எந்தக்கிரகம் லக்னத்தில், எந்தக் கிரகம் நான்கில், எந்தக் கிரகம் ஏழில், எந்தக் கிரகம் பத்தில் என்பது விளக்கப்படவில்லை எப்படியும் இருக்கலாம். ஆனால் சந்திரன், சூர்யனுக்குப் பத்தாமிடத்தில் இருக்க வேண்டும். ஏனெனில் அப்போதுதான் சந்திரன் தேய்பிறைச் சந்திரனாக இருக்க முடியும். வளர்பிறைச் சந்திரன் சுபனாகக் கருதப்படுவதால் தேய்பிறைச் சந்திரனாக இருக்க வேண்டியது கட்டாயம். நான்கு கிரகங்களுமே அந்தந்த பாவங்களின் மத்யஸ்புடத்துக்குச் சமீபத்தில் இருக்க வேண்டும். பொதுவாக இது அடிக்கடி நேரக் கூடிய யோகம் இல்லை.

உதாரணம்:

 

sample horoscope

sample horosope

 

மேலேயுள்ளது போல் எத்தனையோ வகைகளில் இந்த யோகம் சம்பவிக்கக் கூடும். ஆனால் அரிஷ்டத்தைச் சீக்கிரம் கொண்டு வரக்கூடிய கிரகங்களின் வீர்யம் முதலாவது கட்டத்தைவிட, இரண்டாவது கட்டத்தில் கொஞ்சம் குறைவு.ஏன் என்பதைச் சோதிடம் கற்பதில் ஆர்வமாக இருப்பவர்கள் அவர்களாகவே யூகித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இரண்டாவது யோகம்:

லக்னத்துக்கு இருபுறமும் பாபக் கிரகங்கள் இருந்தாலோ அல்லது ஏழாமிடத்துக்கு இருபுறமும் பாபக் கிரகங்கள் இருந்தாலோ அவ்வாறு இருக்கப் பிறந்த குழந்தை சீக்கிரமாகவே இறந்துவிடுகிறது. லக்னத்துக்கு இருபுறமும் என்பதை இரண்டாம் ராசி, பன்னிரண்டாம் ராசி எனப் புரிந்துகொள்ளக் கூடாது. லக்ன பாகையிலிருந்து முன்னே 15 பாகை தூரத்தில் ஒரு பாபக்கிரகமும் பின்னே 15 பாகை தூரத்தில் இன்னொரு பாபக் கிரகமும் இருந்தால் கூட லக்னம் இரண்டு பாபக்கிரகங்களுக்கும் மத்தியில் இருப்பதாகத்தான் அர்த்தம். இப்படியே ஏழாம்பாவத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மூன்றாவது யோகம்:

தேய்பிறைச் சந்திரன் ஏதேனும் ஒரு பாபக்கிரகத்துடன் சேர்ந்து 5, 7, 9, 12,1,8 இந்த இடங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து புதன், குரு, சுக்கிரன் ஆகிய சுபக்கிரகங்களால் பார்க்கப்படாமல் இருந்தால் இதுவும் விரைவில் மரணத்தைத் தரக்கூடிய யோகமாக ஆகின்றது. இந்த யோகம் அடிக்கடி சம்பவிக்கக் கூடியது. சந்திரன் 27 நாட்களில் ஒரு தடவை சூர்யன், செவ்வாய், சனி ஆகிய பாபக்கிரகங்களோடு சேரத்தான் செய்யும். மேலும் லக்னத்தைச் சேர்த்து ஆறு இடங்களைக் குறிப்பிட்டுள்ளபடியால் சந்திரன் பாபக்கிரகத்துடன் சேர்ந்திருக்கும் ஒரு நாளில் பிறப்போரில் பாதிப் பேருக்கு இந்த யோகம் ஏற்படக் கூடிய வாய்ப்பு உண்டு. ஆனால் சந்திரன் பாபக்கிரகத்துக்கு வெகு சமீபத்தில் இருக்க வேண்டும். பாவஸ்புடத்துக்குச் சரியான பாகையில் இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த யோகம் சம்பவிக்கும். அமாவாசையன்று பிறப்போரின் ஜாதகத்தில் இந்த யோகம் சம்பவிக்க நிறைய வாய்ப்புக்கள் உண்டு. ஆனால் அமாவாசைச் சந்திரன் புத சுக்கிரனுக்கும் சமீபத்தில் இருக்கக் கூடிய வாய்ப்புக்களும் இருப்பதால் பெரும்பாலும் இந்த யோகம் பலமிழந்தும் போகலாம். ஆனால் சூர்யனைத் தவிர்த்துச் சனி, செவ்வாய் ஆகிய கிரகங்களோடு சந்திரனின் சேர்க்கை நேரும்போது இது பலமான யோகமாக ஆகும் வாய்ப்பு உண்டு. ஆனால் பாவமத்யத்தில் இருக்கும்போது மட்டுமே இந்த யோகம் மரணத்தைக் கொண்டு வரும்.

 

sample horoscope

sample horosope

 

மேலேயுள்ளது எனது தந்தையார் ஜாதகம். ஜன்ம லக்னத்துக்கு எட்டாமிடத்தில் தேய்பிறைச் சந்திரன் சனியோடு சேர்க்கை. புதகுரு சுக்கிரர்களால் பார்க்கப்படவில்லை. புதகுரு சுக்கிரர்களோடு சேர்க்கையுமில்லை. பின்னர் ஏன் பாலாரிஷ்டம் நேரவில்லை? எட்டாம் பாவத்தின் மத்தி கும்பராசியில் 6 பாகை 59 கலை 40 விகலையில் உள்ளது. பாவத்தின் கடைசி கும்ப ராசியில் 22 பாகை 10 கலை 30 விகலையில் உள்ளது. பாவத்தின் ஆரம்பம் அல்லது இறுதிக்கும் கிரகத்துக்கும் உள்ள பாகை கலைகளை இருபதால் பெருக்கிப் பாவமத்திக்கும் இறுதிக்கும் உள்ள பாகை கலைகளால் வகுக்க வந்ததே பாவ பலமாகும். இந்த பாவ பலம் அதிகமாக இருந்தால்தான் கிரகங்களுக்குச் சொல்லிய பலன் நடைபெறும். இல்லையெனில் நடவாது. பாவ சந்திக்கும் சனிக்கும் உள்ள தூரமான 3 பாகை 15 கலை 30 விகலையை இருபதால் பெருக்கி பாவமத்திக்கும் இறுதிக்கும் உள்ள தூரமான 15 பாகை 10 கலை 50 விகலையால் வகுக்க வந்த பாவ பலம் 4 கலை 17 விகலையாகும். இது இருபதுக்குக் கணக்கிட்டது. இதை Percentage ஆக்கினால் கிடைப்பது 21 கலை 25 விகலை. இது 21.41 சதவீதத்துக்குச் சமமானதாகும். அறுபது சதவீதத்துக்கும் மேலான பாவ பலமே கிரகங்களுக்கு வீர்யத்தைக் கொடுக்கும். எனவே இந்த ஜாதகத்துக்குப் பாலாரிஷ்ட தோஷமில்லை என்ற முடிவுக்கு வரவேண்டும். இதை இங்குக் குறிப்பிடக் காரணம் என்னவெனில் எல்லா நேரங்களிலும் இந்த பாவபலத்தைக் கணக்கிட்டுத்தான் பலன் சொல்ல வேண்டும். ஏழில் செவ்வாய் இருக்கின்றது, ஐந்தில் சனி இருக்கின்றது என்றெல்லாம் சொல்லி இல்லாத தோஷத்தை ஜாதகத்துக்குக் கொண்டு வந்து பரிகாரம் செய்யச் சொல்லும் சோதிடர்கள் இந்தக் கணக்குகளைப் படித்திருந்தார்களேயானால் சோதிட சாஸ்திரம் நம்பிக்கைக்குரிய ஒன்றாக மாறியிருக்கும் (Bhava pala என்பதை Papa pala என்று புரிந்துகொள்ள வேண்டாம்.)

நான்காவது யோகம்:

இந்த யோகம் மிகமுக்கியமானது. சந்திரன் லக்னத்துக்கு ஆறு அல்லது எட்டாமிடத்திலிருக்கும் போது பாபர்களால் மட்டும் பார்க்கப்பட்டால் குழந்தைக்கு உடனே மரணத்தைக் கொண்டு வருகிறது. சுபர்களால் மட்டும் பார்க்கப்பட்டால் எட்டு வயதிற்குள் மரணம் சம்பவிக்கின்றது. இருவராலும் பார்க்கப்பட்டால் நான்கு வயதிற்குள் மரணம் சம்பவிக்கின்றது. எனவே சந்திரனைக் குரு பார்க்கிறார், சுக்கிரன் பார்க்கிறார் என்று ஏதாவது ஒரு லக்னத்தைத் தேர்வு செய்யப் போய் அந்த லக்னத்துக்கு ஆறாமிடம் அல்லது எட்டாமிடம் சந்திரனிருக்கும் ராசியாக வந்துவிட்டால் எல்லாமே தவறாகிப் போய்விடும்.

எனவே சிசேரியன் செய்ய நேரம் தேர்வு செய்பவர்கள் கீழ்க்கண்ட விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

  • லக்னத்திலோ ஏழாமிடத்திலோ லக்ன பாகைக்குச் சரியாக பாபர் யாரும் இருக்கக் கூடாது.
  • சந்திரனுக்குப் பாபர் சம்பந்தம் இருக்கவே கூடாது. பார்வையாலும் சரி கூடவே இருப்பதாலும் சரி சம்பந்தம் இருந்தால் நல்லதில்லை.
  • ஆறு அல்லது எட்டாமிடங்களில் கிரகங்கள் இருப்பது மாதிரியான லக்னத்தைத் தேர்வு செய்யக் கூடாது.
  • சந்திரனை யாருமே பார்க்காமல் இருப்பது வெகு உத்தமம்.
  • சந்திரனோ லக்னமோ கடைசி நவாம்சங்களில் இருக்கக் கூடாது. அதாவது எந்த ராசியிலும் லக்னம் 26 பாகை 40 கலைக்கு அதிகமாக இருக்கக் கூடாது. சந்திரனும் எந்த ராசியிலும் 26 பாகை 40 கலைக்கு மேல் இருக்கக் கூடாது.
  • லக்னத்துக்கு ஐந்தாமிடத்தில் அல்லது ஒன்பதாமிடத்தில் பாபர்கள் இருக்கக் கூடாது.
  • லக்னாதிபதி லக்னத்தைப் பார்க்கிறார் என்று மேஷ, விருச்சிக, சிம்ம, மகர, கும்ப லக்னங்களைத் தேர்வு செய்யக் கூடாது.

கூடியவரை சிசேரியனைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க இயலாதபட்சத்தில் முழுக்க முழுக்க மருத்துவர்கள் தேர்வு செய்யும் நேரத்தைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர கிரகங்கள் சாதகமாக இருக்கின்றன என்று நாமாகச் சில நிமிஷங்களைத் தேர்வு செய்தால் எல்லாமே தவறாகப் போய்விட வாய்ப்புக்கள் அதிகம்.

 

அடுத்த கட்டுரை: விவாகப் பொருத்தம் - பெண்களைப் பெற்றவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 50 guests and no members online