ஒரு தேசத்துக்கான ஜாதகம் பார்க்கும் போது சூரிய சந்திர கிரகணங்களைப் பற்றிய ஆய்வு தேவையென்பது பிரபல சோதிடர்களின் கருத்தாகும். சூரிய அல்லது சந்திர கிரகணத்தின் பலன் ஆறு மாதங்களுக்குள் நடக்கும் என்பது பொதுவான உண்மை. ஆனால் தனி நபர்களின் ஜாதகத்தை ஆய்வு செய்யும் போது கிரகணங்களைப் பற்றி யாரும் கவலை கொள்வதில்லை. ஆனால் கிரகணங்கள் தனிப்பட்ட நபர்களின் வாழ்விலும் முக்கியமான சம்பவங்கள் மாற்றங்கள் ஏற்படக் காரணமாக அமைகின்றன என்பது மேலை நாட்டுச் சோதிடர்களின் கூற்று. இதை ஒப்புக்கொள்வதில் நமக்குக் கௌரவக் குறைச்சல் ஒன்றும் இல்லை. தேசத்தைப் போலவே தனி நபர்களின் வாழ்க்கையிலும் கிரகணங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதைக் கீழ்க்கண்ட உதாரணங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
முதல் உதாரணமாக நமது தேசத்தைப் பற்றிய ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்வோம். 15.08.1947ல் சுதந்திரமடைந்த நமது இந்திய நாட்டுக்கு 1975 ஜூன் மாதம் ஒரு சோதனை வந்தது. அப்போதைய பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அவர்களால் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. 15.08.47ல் சுதந்திர இந்தியா பிறந்த ஜாதகமும் நெருக்கடி நிலை அமலுக்கு வருவதற்கு முந்தி வந்த 1975 மே 25ம் தேதிய சந்திர கிரகணமும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.


இந்திய தேசத்தின் ஜாதகத்தில் சந்திரன் கடக ராசியில் 4 பாகை 01 கலையில் உள்ளது. மே 25 1975ல் வந்த சந்திரகிரகணம் ஆரம்பிக்கும் போது கடக ராசியில் 5 பாகை 22 கலை உதயமாகிறது. அதாவது கிரகண லக்னம் இந்திய தேசத்தின் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் பாகை கலைகளைத் தொட்டுத் தழுவுகிறது. இதைப் போலவே கிரகண காலச் சூரியன் ரிசப ராசியில் 9 பாகை 49 கலையில் இருக்கிறது. இது இந்திய தேசத்தின் ஜன்ம லக்னமான ரிசபராசி பாகை 8 கலை 1ஐத் தொட்டு நிற்கிறது. எனவே கிரகண கால லக்னம் ஜன்ம ராசியையும் கிரகண காலச் சூரியன் ஜன்ம லக்னத்தையும் தொட்டு நிற்பதால் இந்தக் கிரகணம் இந்திய தேசத்தைக் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கும் என்பது விதி. அதுவே தான் நடந்தது.


மேலே 23.10.76 தேதிய சூரிய கிரகணத்தின் போது உள்ள கிரக நிலையும் திருமதி. இந்திரா காந்தியின் ஜாதகமும் கொடுக்கப்பட்டுள்ளன. திருமதி.காந்தியின் லக்ன ஸ்புடம் கடகத்தில் 27 பாகை 23 கலையாக உள்ளது. கிரகணம் ஆரம்பிக்கும் நேரம் துலாத்தில் 27 பாகை 18 கலை உதயமாகிறது. அதே போல கிரகண காலச் சந்திரன் துலாத்தில் 4 பாகை 46 கலையில் உள்ளது. இது ஜன்ம காலச் சந்திரனுக்கு (மகர ராசியில் 5 பாகை 37 கலையில் உள்ளது) கேந்திரத்தில் அமைகிறது. ஜன்ம காலப் பத்தாமிடத்ததிபதி செவ்வாய் கிரகண சூர்யனோடு சேர்ந்து அஸ்தமனமாகி உள்ளது. இந்தக் கிரகணத்துக்குப் பின் நடந்த பாராளுமன்றத் தேர்தலி;ல் திருமதி.காந்தி மட்டுமல்ல. அவரது கட்சியும் தோற்கடிக்கப்பட்டது ஒரு சரித்திரமாக இன்னும் நிற்கின்றது.

கிரகண லக்னம் திருமதி.காந்தியின் ஜன்ம லக்னத்துக்கு ஐந்தாமிடத்திலும் கிரகண சூரிய சந்திரர்கள் ஜன்ம லக்னத்துக்குப் பதினோராமிடத்திலும் உள்ளனர். அதாவது திருமதி.காந்தியின் எட்டாமிடமான கும்பத்துக்குக் கேந்திரத்தில் உள்ள விருச்சிகம், ரிசபம் இராசிகளில் கிரகண லக்னமும், கிரகணச் சூரியனும் உள்ளன. திருமதி.காந்தியின் மரணம் 31.10.1984ல் நிகழ்ந்தது.
அடுத்து ஒரு உதாரண ஜாதகம் தரப்படுகிறது.


இது ஒரு பெண்ணின் ஜாதகம். 06.06.1930ல் பிறந்த இவர் 06.11.1958ல் திடீரென மரணமடைந்தார். 12.10.1958ல் வந்த சூரிய கிரகணம் மிதுன லக்னத்தில் ஆரம்பித்துள்ளது. கிரகண சூரிய சந்திரர்கள் கன்னியில் உள்ளார்கள். இவரது ஜாதகத்தில் எட்டாமிடமான கன்னிக்குக் கேந்திரத்தில் கிரகண சூரிய சந்திரர்களும் கிரகண லக்னமும் அமைந்துள்ளன. இந்த நான்கு உதாரணங்களையும் நன்கு கவனித்தால் சில ஒற்றுமைகள் தென்படுகின்றன.
- ஜன்ம லக்ன ஸ்புடத்துக்குச் சரியான கேந்திரங்களில் கிரகண லக்னஸ்புடம் வந்தால் பெரிய மாற்றங்கள் வரும்.
- ஜன்ம லக்னத்துக்குக் கேந்திரத்தில் கிரகண சூரியனோ கிரகண சந்திரனோ வந்தால் பெரிய மாற்றம் வரும் வாய்ப்பு உண்டு.
- ஜன்ம லக்னத்துக்கு எட்டாமிடத்துக்குக் கேந்திர ஸ்தானங்களான 11, 2, 5 ஆகிய இடங்களில் கிரகண சூரிய சந்திரர்களோ கிரகண லக்னமோ வந்தால் கஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
- ஜன்ம காலச் சூரிய ராசியதிபதி இருக்கும் ஸ்புடத்துக்குச் சரியான கேந்திரங்களில் கிரகண லக்ன ஸ்புடம் வந்தாலும் பெரிய மாற்றங்கள் வரலாம்.
இனி 09.03.16ல் வந்த சூரிய கிரகணத்தைப் பற்றிப் பார்ப்போம்:

- சூரிய சந்திரர்கள் கும்பத்தில் 24 பாகையிலும் 23 பாகையிலும் இருப்பதால் கும்பலக்னத்தில் 23 மற்றும் 24 பாகைகளில் பிறந்தவர்கள் மாற்றத்துக்குத் தயாராக இருக்க வேண்டும்.
- கிரகண லக்னம் மகரத்தில் 27 பாகை 13 கலை ஆக இருப்பதால் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய லக்னங்களில் கிரகண லக்ன ஸ்புடத்துக்குச் சரியான பாகைகளில் பிறந்தவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
- ஒருவரது ஜாதகத்தில் சூரியன் எந்த ராசியில் இருக்கின்றதோ அந்த ராசிநாதன் கிரகண லக்னமான மகரம் 27 பாகை 13 கலைக்குக் கேந்திரங்களான கடகம், துலாம், மேஷம் ஆகிய ராசிகளில் 27 பாகைக்குச் சமீபத்தில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
- தசாபுத்திகள் மோசமானவையாக இருந்தால் கிரகணத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். தசாபுத்திகள் நல்லவையாக இருந்தால் கிரகணத்தின் தாக்கம் குறைவாக இருக்கும்.
சோதிடத்தில் ஆர்வமுள்ளவர்கள் கிரகணத்தின் பலனையும் சோதித்துப் பார்க்கக் கடமைப்பட்டவர்கள் ஆவர்.
அடுத்த கட்டுரை 'தசாபுத்தி பலன்கள்' 27.03.2016-ல் வெளிவரும்.
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
