பேர் சொல்ல ஒரு பிள்ளை வேண்டும்’. ‘ஆசைக்கொரு பெண், ஆஸ்திக்கொரு ஆண்’ என்பவையெல்லாம் கண்டிப்பாகக் குழந்தை வேண்டும் என்பதை வலியுறுத்த வந்த பழமொழிகள். வள்ளுவர் ‘மக்கட்பேறு’ என்று ஒரு அதிகாரத்தையே தனது நூலில் வைத்துள்ளார். ஆனால் நவீன காலத்தில் குழந்தைப் பேறு பெறற்கரிய ஒன்றாக ஆகிவிட்டது. குழந்தைகளை உருவாக்குவதற்கென்றே தனி மருத்துவமனைகள் தொடங்கப் பெறுகின்றன. சோதிட நூல்களில் குழந்தைப் பேறு பற்றிய விரிவான தகவல்கள் நிறைய உள்ளன. சிலவற்றை நமது வாசகர்களுக்காக இங்கே தருகின்றோம்.

கடலங்குடி நடேச சாஸ்திரிகள் மொழி பெயர்த்துள்ள பிருஹஜ் ஜாதகத்தின் 23-வது அனிஷ்டாத்தியாயத்தில் சில விரிவான தகவல்கள் தரப்பட்டுள்ளன. ஒரு மனிதனுக்குப் பன்னிரண்டு விதமாகப் புத்திரன் பிறக்கலாம் என்று குறிப்பிடப்படுகிறது. ஆண் குழந்தை மட்டுமின்றிப் பெண் குழந்தையையும் நாம் ‘புத்திரன்’ என்று அழைக்கலாம்.

ஒளரஸன்:

தர்மசாஸ்திரப்படி முறையாகத் திருமணம் செய்து கொண்ட ஒரு ஆணுக்கும், அவனது மனைவிக்கும் பிறந்த குழந்தை ஒளரஸபுத்திரன் என்றழைக்கப்படுகிறது.

ஷேத்ரஜன்:

ஆண்தன்மையற்ற, அல்லது நோயினால் பீடிக்கப்பட்ட, அல்லது இறந்துபோன ஒருவனின் மனைவி இறந்து போனவரின் உடன்பிறப்புக்களில் ஒருவரைச் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொண்டால் அக்குழந்தை ஷேத்ரஜன் என்றழைக்கப்படுகிறது.

தத்தன்:

குழந்தையில்லாத ஒருவருக்கு அதே குலத்தைச் சேர்ந்த இன்னொருவர் தானாகவே விரும்பி மிக்கப் பிரியமுடன் தனது குழந்தையைத் தானம் செய்தால் அக்குழந்தை தத்தன் என்று அழைக்கப்படுகிறது.

கிரீதன்:

குழந்தையில்லாத ஒருவர், தனது குலத்திலோ, அல்லது வேறு குலத்திலோ பிறந்த ஒரு குழந்தையை, அக்குழந்தையின் பெற்றோர்களுக்குச் செல்வமும், பொருளும் கொடுத்து வாங்கினால் அக்குழந்தை கிரீதன் என்று அழைக்கப்படுகிறது. ஸ்வீகார புத்திரன் என்றும் அழைக்கலாம்.

கிருத்திரிமன்:

குழந்தையில்லாத ஒருவர் தனது குலத்தைச் சேர்ந்த ஒருவனைத் தனது குழந்தையாகப் பாவித்தால் அக்குழந்தை கிருத்திரிமன் என்றழைக்கப்படுகிறது. இது கடலங்குடி நடேச சாஸ்திரிகளின் கருத்து. பெற்றோர் சம்மதமின்றி ஸ்வீகாரம் சென்றவன் கிருத்திரிமன் என்பது சாராவளி நூலுக்கு உரையெழுதிய சு.ஏ.குமாரஸ்வாமி ஆச்சாரி என்பவரின் கருத்து. தனது அந்திம காலத்தில் தான் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கு உரியவராக யாரையேனும் நியமித்து ஒருவர் உயில் எழுதினால் அவ்வாரிசைக் கிருத்திரிமன் என்று அழைக்கலாம் என்பது என் கருத்து. 

அதமப்பிரபவன்:

இரு வேறு குலங்களில் பிறந்த தாய் தந்தையருக்குப் பிறந்த குழந்தை அதமப்பிரபவன் என்று அழைக்கப்படுகிறது. இக்காலத்தில் கலப்பு மணம் புரிந்தவர்களுக்குப் பிறந்த பிள்ளை எனப் பொருள் கொள்ளலாம்.

கூடோத்பன்னன்:

எந்த ஆணுடைய வீரியத்துக்கு உண்டானவன் என்று அறியப்படாத குழந்தையைக் கூடோத்பன்னன் என்று பெயரிட்டு அழைக்கின்றனர். இக்காலத்தில் சோதனைக் குழாயில் உருவாகும் குழந்தையை இதற்குச் சமமாகக் கொள்ளலாம்.

அபவித்தன்:

தாய், தந்தை இருவராலும் துரத்தப்பட்டு, மற்ற ஒருவரால் குழந்தையாக அங்கீகரிக்கப்பட்ட குழந்தை அபவித்தன் எனப் பெயர் பெறுகிறது. தற்காலத்தில் குழந்தைக் காப்பகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களில் வளர்க்கப்படும் குழந்தைகளை இப்படி அழைக்கலாம்.

பௌனர்ப்பவன்:

கணவனால் கைவிடப்பட்ட, அல்லது கணவனை இழந்த ஒரு பெண், இன்னொரு ஆணைச் சார்ந்து வாழ நேரிடும் போது பிறக்கின்ற குழந்தை பௌனர்ப்பவன்.

கானீனன்:

திருமணத்துக்கு முன்பே இரகசிய உறவால் ஒரு பெண் தாயானால் அவளுக்குப் பிறக்கும் குழந்தை கானீனன் என்று அழைக்கப்படுகிறது.

சகோடன்:

திருமணத்துக்கு முன்பு இரகசிய உறவால் தாய்மையடையும் பெண் (இதை மறைத்தோ, அல்லது மறைக்காமலோ) திருமணம்  செய்து கொண்டு, அதற்குப் பின்னர் குழந்தையைப் பெற்றெடுத்தால் அக்குழந்தை சகோடன் என்று அழைக்கப்படுகிறது.

கானீனன் மற்றும் சகோடனுக்கிடையே உள்ள ஒரே வித்தியாசம் கானீனன் பிறக்கும் போது அவனது தாய் யாரையும் திருமணம் செய்திருக்கவில்லை. சகோடன் பிறக்கும் போது அவனது தாய் திருமணம் செய்திருக்கின்றார். அவ்வளவே.

தாசிப்ரபவன்:

இப்பெயருக்கு விளக்கம் தேவையில்லை. “தாசியிடம் பிறந்தவன்’ என்று கடலங்குடி எழுதியுள்ளார்.

 

இப்பன்னிரண்டு வகைப்பட்ட குழந்தைகளில் எந்த மாதிரி ஜாதக அமைப்புள்ளவர்களுக்கு, எந்த வகைக் குழந்தைப்பிராப்தம் உண்டாகின்றது என்பதைச் சாராவளி விளக்கமாகச் சொல்கின்றது. அதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

 

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 84 guests and no members online