ஒரு வாசகர் தனது ஜாதகத்துக்கு வருஷப்ரவேச ஜாதகம் கணித்துப் பலன் தெரிந்து கொள்வதாகவும், இது புதிய விஷயங்களைத் தருவதாகவும் தெரிவித்துக் கொண்டு, அவரது ஜாதகத்தையும், வருசப்ரவேச ஜாதகத்தையும் தந்துள்ளார். அவரவர் ஜாதகத்தை, அவரவர் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதே, எமது இவ்வலைத்தளத்தின் முதன்மை நோக்கம். சரியான நேரம் , நாள் இவற்றைத் தெரியாமல் வருசப்ரவேச ஜாதகம் கணிக்க முடியாதென்பதால் ஒரு பழைய சோதிட நூலில் கூறப்பட்டுள்ள ஒரு எளிய முறையை இங்கு அறிமுகப்படுத்துகின்றோம்.

உங்கள் பிறந்த நாளைக் கவனியுங்கள். அது ஆங்கில மாதத்தின் படியான நாளாகவும் இருக்கலாம். அல்லது தமிழ் மாதத் தேதியாகவும் இருக்கலாம். அன்று என்ன நட்சத்திரம் என்பதைக் கவனியுங்கள். உங்களது ஜன்ம நட்சத்திரத்திலிருந்து பிறந்த நாள் ஜன்மநட்சத்திரம் வரை எண்ணுங்கள். வரும் எண் 9-க்கு மேலானால் ஒன்பதைக் கழித்தும் , 18-க்கு மேலானால் பதினெட்டைக் கழித்தும் வருகின்ற மீத எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த எண் 1 என்றால் சூரியன், 2 என்றால் செவ்வாய், 3 என்றால் வியாழன், 4 என்றால் கேது, 5 என்றால் புதன், 6 என்றால் சுக்கிரன், 7 என்றால் சனி, 8 என்றால் சந்திரன், 9 என்றால் ராகு என்று குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு இக்கட்டுரை வெளியாகும் (30.12.2018) நாள் உங்கள் பிறந்த நாள் என்று வைத்துக் கொண்டால், இன்று அதிகாலை அஸ்த நட்சத்திரத்தில் சந்திரன் உள்ளது. உங்கள் ஜன்ம நட்சத்திரம் மகம் என்று வைத்துக் கொண்டால் அஸ்தம் வரை எண்ணும்போது 4 கிடைக்கும். எனவே நான்குக்குக் கேது என்று சொல்லியிருப்பதால் இந்த வருடத்தில் உங்களுக்கு முதலில் கேது தசை. அடுத்து புத தசை. அடுத்துச் சுக்கிர தசை என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு வருடத்தின் 360 நாட்களைக் கீழ்க்கண்டவாறு பிரித்துக் கொடுத்துள்ளார்கள்.

சூரியன் 18 நாள்
செவ்வாய் 21 நாள்
வியாழன் 48 நாள்
கேது 21 நாள்
புதன் 51 நாள்
சுக்கிரன் 60 நாள்
சனி 57 நாள்
சந்திரன் 30 நாள்
ராகு 54 நாள்

நன்கு கவனித்தால் விம்சோத்தரி தசையில் ஒவ்வொரு கிரகத்துக்கும் எத்தனை வருடங்களோ, அத்தனை வருடங்களை மூன்றால் பெருக்கி வரும் எண்ணைத் தசா நாட்களாகக் கொடுத்துள்ளார்கள். எந்தக் கிரகத்துக்குப் பிந்தி எந்தக் கிரகத்தின் தசை என்பதில் மட்டும் கொஞ்சம் மாற்றம் உள்ளது.

எனவே ஒரு குறிப்பிட்ட வருடத்தில், எப்பொழுது எந்தக் கிரகத்தின் தசா நடக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு, பிறந்தநாளின் கிரக நிலைகளைப் பஞ்சாங்கம் மூலம் தெரிந்துகொண்டு, அந்தக் கிரகத்தின் தசை நடக்கும் நாட்களின் பலனை ஓரளவுக்கு யூகித்துக் கொள்ளலாம்.

வருஷம் பிறக்கும் நாளில் ஜன்ம லக்னத்துக்கு எந்தெந்த பாவங்களில் தசாநாதர்கள் இருக்கின்றார்கள் என்று கவனித்துப் பலன்களைத் தெரிந்து கொள்ளும் இந்த முறைக்கு அதிகமான கணித ஞானம் தேவையில்லை. ஜன்ம நட்சத்திரமும், வயது பிறக்கும் நாளின் நட்சத்திரமும், கிரக நிலைகளும் தெரிந்தால் போதும். நாம் இந்த முறையை இதுவரை சோதித்துப் பார்த்ததில்லை. என்றாலும் இதுவும் சோதிட நூல்களில் கூறப்பட்டுள்ள ஒரு எளிய முறை என்பதால் இதை வாசகர்களின் பார்வைக்குத் தருகின்றோம். விருப்பமுள்ளவர்கள் சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம்.

 

This Week’s Quote:

War does not determine who is right - only who is left.

-  Bertrand Russell

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 109 guests and no members online