பாரதி, கணிதமேதை ராமானுஜன், ஆங்கிலக் கவிஞர்கள் மில்டன், ஷெல்லி ஆகியோரின் ஜாதகங்களைத் தந்த நாம் இந்த வாரம் ஸ்வாமி விவேகானந்தரின் ஜாதகத்தைத் தருகின்றோம். எத்தனையோ போலி சந்நியாசிகள் உலவி வந்த, உலவி வரும், இந்தியாவில் நிஜமான சந்நியாசியாக, இந்தியாவை மட்டுமின்றி, உலகையும் சுற்றி வந்தவர் அவர். சோதிட ஆர்வலர்கள் நுட்பமாகக் கவனிக்க வேண்டிய ஜாதகம் அவருடையது.




லக்னம் வர்க்கோத்தமமாகி, வர்க்கோத்தம சூரியனும் லக்னத்திலேயே இருப்பது அவரது தோற்றத்துக்குச் சாட்சியாக இருக்கின்றது. சூரியன் அட்டமாதிபதியாக வந்து, லக்னத்தில் பலமாக இருப்பது அவரது கம்பீரமான உடலமைப்புக்குக் காரணமாகின்றது. தனுசு லக்னத்தின் கடைசிப் பகுதியில் பிறப்பவர்கள் உயரமாகவும், பெரும்புகழ் பெற்றுச் சீக்கிரமே மறைந்து விடுபவர்களாகவும் இருக்கின்றார்கள்.
சந்திரன் சனியோடு சேர்ந்து, சனியின் திரேக்காணத்தில் இருந்து துவாதசாம்சச் சக்கரத்தில் மேசத்தில் இருப்பது, பலமான சன்னியாச யோகத்தை அளிக்கின்றது. நான்காம் பாவத்தில் பலமான செவ்வாயும், பத்தாம் பாவத்தில் குருவும் இருந்து அந்த யோகத்துக்கு வலு சேர்க்கின்றன. சனி, சந்திரன் ஒன்பதாம் பாவத்தில் இருப்பதும், ஒன்பது பத்துக்குடைய புதனும்,சுக்கிரனும் சேர்ந்து லக்ன பாவத்திலேயே இருப்பதும், சன்னியாசிகளுக்குள் ஒரு ராஜாவாகும் யோகத்தை அளிக்கின்றன.
2ம் பாவம் கும்ப ராசியில் இருக்கின்றது. அதிபதி சனி 9ம் பாவத்தில் சந்திரனோடு சேர்க்கை. 2ம் பாவ அம்சத்தில் (விருச்சிகத்தில்) குரு சேர்க்கை. ஞானத்தைத் தேடித் தொட்ட அவரது எழுத்துக்கள் பெரிய தொகுதியாக இருப்பதற்குக் காரணம் மறைந்து கிடக்கும் பிரபஞ்ச ரகசியங்களை வெளிக்கொணரும் விருச்சிக அம்சத்தில் லக்னாதிபதி வியாழன் இருப்பதுதான். வியாழன் 3ம் பாவாதிபதியாகி வந்து பத்தில் இருப்பது, அவரது எழுத்து மற்றும் பேச்சுத் திறமைக்குக் காரணமாகின்றது.
ஒன்பதாம் பாவாதிபதி புதன், ஒன்பதாம் பாவத்தின் அம்சத்தில் இருப்பது வேதமார்க்கத்தில் அவருக்குள்ள ஆழ்ந்த நம்பிக்கையைக் காட்டுகின்றது. அவர் உபதேசத்துக்கு உண்மையாக வாழ்ந்தவர். சந்திரன், சனி இவர்கள் ஒன்பதாமிடத்திலும், மற்ற கிரகங்கள் யாவும் 1, 4, 10 ஆகிய கேந்திரங்களிலும் இருப்பது ஞானிகளுக்குள் தலைமையிடத்தைப் பெறக் காரணமாகின்றன.
வெளிநாட்டுப் பயணங்களைக் குறிக்கும் புள்ளி (செவ்வாய் - சனி + லக்னம்) 0 6 19 – 5 13 34 = 6 22 45 + 8 28 39 = 3 21 24. இந்தப் புள்ளி கடகராசியில் விழுவதாலும், நவாம்சத்தில் மகரத்தில் அமைவதாலும் அதிபதிகள் சந்திரன், சனி சேர்ந்து ஒன்பதில் இருப்பதாலும், அவர் ஞான விளக்கேந்தி உலகைச் சுற்றி வந்ததில் ஆச்சரியமில்லை.
This Week’s Quote:
We make a living by what we get, but we make a life by what we give.
- Winston Churchill
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
