பஞ்சாங்கங்களிலும், நாட்காட்டிகளிலும் தவறாது இடம் பெறுபவை முகூர்த்த நாட்கள். நாட்காட்டியைப் பார்த்துத் திருமண மண்டபத்துக்கு முன்பணம் கொடுப்பவர்களே இங்கு அதிகம். அதிலும் ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாளாக அமைந்துவிட்டால் ரொம்பவும் விசேஷம். மற்றபடி அந்த நாளில் திருமணம் செய்யக்கூடிய சகல அம்சங்களும் இருக்கின்றதா என யாரும் பார்ப்பதில்லை. வேடிக்கை என்னவென்றால் சோதிடர்களில் பெரும்பான்மையோரும் அந்த நாளின் சாதக, பாதக அம்சங்களைப் பற்றி யோசிப்பதில்லை.
திருநெல்வேலி வாக்கியப் பஞ்சாங்கத்தில் இந்த ஹேமலம்ப வருஷத்தில் 24 நாட்கள் முகூர்த்த நாட்களாகக் குறிக்கப்பட்டுள்ளன. சித்திரையில் 3, வைகாசியில் 2, ஆனியில் 3, ஆடியில் 1, ஆவணியில் 3, புரட்;டாசியில் 3, ஐப்பசியில் 2, கார்த்திகையில் 1, மார்கழியில் 1, தையில் 1, மாசியில் 2, பங்குனியில் 2 என்று மொத்தம் 24 நாட்கள் முகூர்த்த நாட்களாகக் குறிக்கப்பட்டுள்ளன. கார்த்திகை மாதம் 24ம் தேதி முதல் மாசி மாதம் 5ம் தேதி முடிய சுக்கிரன் அஸ்தமனமாக இருப்பதாக இப்பஞ்சாங்கத்தில் குறிக்கப்பட்டுள்ளது. 6ம் தேதி சுக்கிரன் உதயமாவதாகக் குறிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை, தை மாதங்களில் சுக்கிரன் அஸ்தமனமாக இருப்பதால் விவாகங்கள் நடத்தக் கூடாது என்றும் குறிப்பு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் ‘திருக்கணித’ முறைப்படி கணிக்கப்பட்ட ஆசார்யாள் மடத்துப் பஞ்சாங்கத்தில் வைகாசியில் 1, ஆனியில் 3, ஆடியில் 3, ஆவணியில் 2, புரட்டாசியில் 1, மாசியில் 1, பங்குனியில் 1 என்று மொத்தம் 12 நாட்களே முகூர்த்த நாட்கள் என்று குறிக்கப்பட்டுள்ளன. ஐப்பசியில் குரு அஸ்தமனம் அடைவதாலும், கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் சுக்கிரன் அஸ்தமனம் அடைவதாலும், சுபமுகூர்த்தங்கள் குறிக்கப்படவில்லை என்று அந்தந்த மாதங்களில் குறிப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சித்திரை மாதம் முகூர்த்தம் சிலாக்கியமாக இல்லை என்ற குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வாக்கியப் பஞ்சாங்கத்தைப் பிரசுரிப்பவரைவிடத் திருக்கணித முறைப்படியான பஞ்சாங்கத்தைப் பிரசுரிப்பவர், கூடுதலாக சில விஷயங்களைக் கவனிக்கின்றார் என்று தெரிகிறது. அவருக்குத் திருப்தி இல்லாவிட்டால் முகூர்த்த நாள் என்று எதையும் சொல்லமாட்டார் என்பது ‘முகூர்த்தம் சிலாக்கியமில்லை’ என்று குறிப்பு கொடுப்பதில் தெரிகின்றது.
ஒரு தினப்பத்திரிக்கை ‘ஹேவிளம்பி ஆண்டு ராசி பலன்கள்’ என்று ஒரு புத்தகத்தைப் பிரசுரித்துள்ளது. அதைக் கணித்திருக்கும் சோதிடர், இந்த ஆண்டில் மொத்தம் 71 நாட்களை முகூர்த்த நாட்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் கொடுத்திருக்கும் முகூர்த்த லக்னங்களில், லக்னத்தில் குளிகன் உதயமாவது, லக்னாதிபதி வக்ரமாக இருப்பது, லக்னாதிபதி அஸ்தமனமாக இருப்பது, லக்னாதிபதி எட்டில் இருப்பது போன்ற தோஷங்கள் நிறைய உள்ளன. இதையெல்லாம் யார் கவனிக்கப் போகிறார்கள் என்ற அலட்சியம் அல்லது அந்த அடிப்படை விதிகளைக் கூடத் தெரியாத ஞானக்குறைவு இதில் ஏதோ ஒன்றுதான் இப்படித் தவறான நாட்களை முகூர்த்த நாட்கள் என்று சொல்ல வைத்துள்ளது.
அடிக்கடி சோதிடம் பார்க்கப் போவதின் மூலமே சோதிடர் ஆனவர்கள், பஞ்சாங்கம் பார்க்கத் தெரிந்ததின் மூலம் சோதிடர் ஆனவர்கள், சோதிடரின் நண்பராக இருந்ததன் மூலமே சோதிடர் ஆனவர்கள் - இவர்களெல்லாம் முகூர்த்த நாட்களைத் தேர்ந்தெடுத்தால் இப்படித்தான் தவறான நாட்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
திருமணம் செய்ய இருக்கின்ற மணமகன், மணமகள் இருவரின் ஜாதகங்களையும் பார்த்த பின்பே முகூர்த்தநாள் குறிக்கப்பட வேண்டும். முகூர்த்த லக்னம் இருவரது ஜாதகத்திலும் நல்ல அம்சங்களோடு இருக்க வேண்டும். இதையெல்லாம் பார்க்காமல் விடுமுறை நாட்கள், மண்டபம் கிடைக்கும் நாட்கள், அமிர்த யோகம், சித்த யோகம் என்று குறிப்பிட்டிருக்கும் நாட்கள் இவற்றை மட்டுமே முக்கியமானவையாகக் கருதித் திருமண நாளைத் தேர்வு செய்தால், விவாகரத்துக்கு மனுப் போடும் நாள் விரைவில் வரத்தான் செய்யும்.
This Week’s Quote:
An honest man is always a child.
- Socrates
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
