ஒரு ஜாதகத்தில் லக்னத்துக்குப் பத்தாமிடத்தால் ஜாதகர் செய்யும் தொழில் அல்லது பார்க்கும் உத்தியோகத்தைச் சொல்ல வேண்டும் என்று பிருஹஜ் ஜாதகத்தின் பத்தாவது அத்தியாயமான கர்ம ஜீவாத்யாயம் உபதேசிக்கின்றது. வேடிக்கையான விஷயம் என்னவென்றால் முக்கியமான இந்த விஷயத்துக்கான அத்தியாயத்தில் வெறும் 4 சுலோகங்களே இடம் பெற்றுள்ளன. சன்யாச யோகத்தைச் சொல்லும் அத்தியாயத்திலும் 4 சுலோகங்களே இடம் பெற்றுள்ளன. பலநூறு விதமான சன்னியாசிகளையும் பலநூறு விதமான தொழில்களையும் காணும் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் வெறும் 4 பாடல்களின் மூலம் தொழிலையும் உத்யோகத்தையும் எவ்வாறு சொல்வது? ஆனாலும் சொல்ல முயற்சிப்போம்.

ஜன்மலக்னம் அல்லது ஜன்மராசிக்குப் பத்தாமிடத்தில் சூர்யன் இருந்தால் தந்தை மூலமும், சந்திரன் இருந்தால் தாய் மூலமும், செவ்வாய் இருந்தால் சத்துரு மூலமும், புதன் இருந்தால் நண்பர்கள் மூலமும், வியாழன் இருந்தால் சகோதரர்கள் மூலமும், சுக்கிரனிருந்தால் மனைவி மூலமும், சனியிருந்தால் வேலைக்காரர்கள் மூலமும் பணம் சேர்கிறது. இது முதல் சுலோகத்தின் ஒரு பகுதி.


அப்படி லக்னத்துக்கோ ராசிக்கோ பத்தாமிடத்தில் ஒரு கிரகமும் இல்லையென்றால் அப்பத்தாமிடத்து அதிபதி நவாம்சத்தில் எந்த ராசியில் இருப்பாரோ அந்த ராசிக்கு அதிபதிக்கு உரிய தொழில் மூலம் (நவாம்சராசிநாதனின் தொழில் அடுத்த சுலோகத்தில் சொல்லப்படுகிறது) பணம் சேரும். இது முதல் சுலோகத்தின் இரண்டாவது பகுதி.


தந்தை மூலம் செல்வம் சேரும் என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது? தந்தை சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் கிடைக்கப் பெறலாம். தந்தையின் தொழிலையே தனயனும் செய்யலாம். (டாக்டர் பிள்ளை டாக்டராவது போல், வக்கீலின் பிள்ளை வக்கீலாவது போல், நடிகரின் பிள்ளை நடிகராவது போல், அரசியல்வாதியின் பிள்ளை அரசியல்வாதியாவது போல்) தந்தையின் முயற்சியால் கடன் கிடைத்து அதன் மூலம் தொழில் செய்யலாம். பணியில் இருக்கும் போது தந்தை இறந்து வாரிசு அடிப்படையில் அந்த வேலை மகனுக்குக் கிடைக்கலாம். இவ்வாறு எத்தனையோவிதமாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். சந்திரன் பத்தாமிடத்தில் இருந்தால் தாய்வழிச் சொத்துக்கள் கிடைக்கலாம். சத்துருக்கள் மூலம் பணம் கிடைக்கலாம் என்பதை எவ்வாறு எடுத்துக் கொள்வது? நீண்டநாட்களாக இழுத்தடிக்கப்படும் வழக்குகள் முடிவாகி அதன் மூலம் பொருள் வரவு  கிடைக்கலாம். பத்தாமிடத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர்களில் பெரும்பாலோருக்கு விபத்துக்கள் நடக்க வாய்ப்பு உள்ளதால் இழப்பீட்டுத் தொகையும் சத்ருக்கள் மூலம் கிடைப்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். புதன் பத்தாமிடத்தில் இருக்கும் போது நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து செய்யும் தொழில்களில் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு அதிகம். சனி பத்தாமிடத்தில் இருக்கும் போது நிறைய வேலையாட்களை வைத்துச் செய்யும் தொழில்கள் மூலம் செல்வஞ் சேரலாம். அன்றாடம் வேலைக்குச் செல்லும் கூலித்தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தும் தொழில் செய்து பணம் சேர்க்கலாம்.  இப்படிப் பல வகையான தொழில்களை யூகித்துச் சொல்ல வேண்டும் என்பதே இச்சுலோகத்தின் பொருள். மனைவி மூலம் பண வரவு என்பதை வேலைக்குச் செல்லும் மனைவி என்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும். சீதனம் என்று அழைக்கப்படும் திருமண அன்பளிப்புக்கள் மூலமும் நிறைய செல்வஞ் சேர வாய்ப்புக்கள் உண்டு.


பத்தாமிடத்தில் ஒரு கிரகமும் இல்லையென்றால் அப்பத்தாமிடத்ததிபதி நவாம்ச சக்கரத்தில் யாருடைய வீட்டில் இருக்கின்றாரோ அந்த கிரகத்துக்குச் சொல்லப்பட்ட பொருட்கள் மூலம் செல்வஞ் சேரும் என்பது சுலோகத்தின் அடுத்த பகுதி. பத்தாமிடத்ததிபதி சூரியனின் நவாம்சத்தில் இருந்தால் புல், வைக்கோல், மரம், தங்கம், தோல், மருந்து இவைகளை விற்பனை செய்வதன் மூலமும் மருத்துவத் தொழில் மூலமும் செல்வஞ் சேரும் என்று கூறப்பட்டுள்ளது. புல், வைக்கோல் என்பதை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் காலத்துக்கேற்ப பயன்படுத்தித் தூர எறியப்பட்ட கழிவுப் பொருட்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம். சூர்யன் இருக்கும் ராசி அதன் பலம் முதலியவற்றை ஆராய்ந்து பெரிய அளவில் அல்லது சிறிய அளவில் முதலீடு செய்யப்பட்டுத் தொழில் நடக்கும் என்பதைச் சொல்ல வேண்டும். சூர்யன் சொந்த அல்லது உச்சவீட்டில் இருக்குமானால், மருத்துவர் என்று சொல்லலாம். சூர்யனின் நவாம்சபதியை வைத்து இன்னும் நுட்பமான அளவுக்கு ஆராய்ச்சி செய்து பலன் சொல்ல முடியும்.


பத்தாமிடத்ததிபதி சந்திரனின் நவாம்சத்தில் இருந்தால் விவசாயம் கடலிலிருந்து கிடைக்கப் பெறும் சங்கு, முத்து, பவளம், மீன், கருவாடு போன்றவற்றை விற்பனை செய்வதன் மூலமும் பெண்களை அணுகிச் சேவகம் செய்வதன் மூலமும் திரவியஞ் சேர்க்கலாம்.


பத்தாமிடத்ததிபதி செவ்வாயின் அம்சத்திலிருந்தால் தாதுக்களை விற்பனை செய்தல் (மண், பொன், கிரானைட், வெள்ளி, தாமிரம் முதலியன) நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில்கள் (சமையல் செய்வதிலிருந்து விமானம் ஒட்டுவது வரை) ஆயுதங்கள் பயன்படுத்துதல் (திருட்டு?) சாகசச் செயல்கள் (விளையாட்டு, குத்துச்சண்டை, கார் பந்தயங்கள்) இவற்றின் மூலம் தனப்ராப்தி கிடைக்கின்றது. ஆயுதங்களைப் பயன்படுத்த அதிகாரமுள்ளவர்கள் என்று எடுத்துக்கொண்டால் காவல்துறை, இராணுவம் போன்றவற்றில் பணியாற்றுவதன் மூலம் பணவரவு என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.


பத்தாமிடத்ததிபதி புதனின் அம்சத்திலிருந்தால் எழுத்து, கணக்கு, கவிதைகள், காவியங்கள் இயற்றுதல், ஒவியம் தீட்டுதல், நுட்பமான யந்திரங்கள் செய்தல், சிற்பம், கட்டிட வேலை இவற்றின் மூலம் செல்வஞ் சேரும். எழுத்து என்பதை அச்சுக் கூடம் நிறுவிப் புத்தகங்களைப் பதிப்பித்தல் என்று புரிந்து கொள்ள வேண்டும். கணக்கு என்பதை கணிதப் பேராசிரியர், பட்டயக் கணக்காளர் (Chartered Accountant, Cost accountant, etc)) என்று விரித்துப் பொருள் கொள்ளலாம். இவ்வாறே அனைத்துத் தொழில்களையும் யூகித்துக்கொள்ள வேண்டும். 


பத்தாமிடத்ததிபன் குருவின் நவாம்சத்தில் இருந்தால் பிராம்மணர்கள், பண்டிதர்கள், தெய்வங்கள், தங்கச் சுரங்கம், யானை, தொழில் ஒப்பந்தங்கள், யாகம், தானம் இவைகள் மூலம் செல்வஞ் சேர்கிறது. இதை விரித்துச் சொல்லத் தேவையில்லை. பெரும்பாலான ஜனங்கள் இப்போது இப்படித்தான் செல்வஞ் சேர்க்கின்றார்கள்.


பத்தாமிடத்ததிபன் சுக்கிரனுடைய அம்சத்திலிருந்தால் ரத்தினங்கள், வெள்ளி போன்ற உலோகங்களை விற்றல், வாங்கல் மூலமும் பசு, எருமைகளைப் போஷித்துப் பால் பண்ணைகள் வைத்தல் மூலமும் பணம் சேர்கின்றது.
பத்தாமிடத்ததிபன் சனியின் நவாம்சத்திலிருந்தால் தன்னுடைய உடலுழைப்பாலும், பிறர்க்குத் தீங்கு செய்தும், சமூகத்தால் இழிவாகக் கருதப்படும் செயல்களைச் செய்வதாலும் ஒருவன் பணம் சேர்க்கின்றான்.


லக்னத்துக்காவது, ராசிக்காவது பத்தாமிடத்ததிபர்கள், அவர்கள் இருக்கும் நவாம்ச ராசிநாதர்கள் ஆகியோர் சொந்த மித்ரு, சத்ரு வீடுகளில் இருந்தால் முறையே தன்மூலமும், மித்ருக்கள் மூலமும், சத்ருக்கள் மூலமும் தனப்ராப்தி சேரும். மேலும் மேற்கூறியபடி நவாம்சநாதன் சூர்யனாக  இருந்து சூர்யன் உச்சவீட்டிலிருந்தால் ஒருவன் தனது முயற்சியால் பெருஞ்செல்வம் சேர்ப்பான். சுபக்கிரகங்களான புதன், குரு, சுக்கிரன் இவர்கள் ஜன்மலக்னத்திலோ இரண்டாமிடத்திலோ அல்லது பதினொன்றாம் இடத்திலோ பலமாக இருந்தால் பலவழிகளிலும் தனத்தைக் கொடுப்பவர்களாக ஆகின்றனர்.


ஆகவே லக்னம் இரண்டு, பத்து மற்றும் பதினோராம் வீடுகளில் பலமான சுபக்கிரகங்கள் இருந்தால் அந்தந்தக் கிரகங்களின் தசா அந்தர்த்தசா காலத்தில் அந்தந்தக் கிரகங்களுக்குச் சொல்லப்பட்ட பொருட்கள் மூலம் செல்வம் சேரும் என்று அறிந்து கொள்ள வேண்டும்.


தொழில் உத்யோகம் பற்றி எழுதும் போது ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது. நம் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட திரவ தாது மூலப்பொருட்கள் யாவற்றையும் ஏழு கிரகங்களோடும் சம்பந்தப்படுத்தியுள்ளனர், முந்தையகாலச் சோதிட வல்லுனர்கள். உதாரணத்திற்கு ஒன்றைக் கூறலாம். தானிய வகைகளில் சூர்யனுக்குக் கோதுமை, சந்திரனுக்கு அரிசி, செவ்வாய்க்குத் துவரை, புதனுக்குப் பச்சைப் பயறு, குருவுக்குக் கடலை, சுக்கிரனுக்கு மொச்சைக் கொட்டை, சனிக்கு எள் என்று பலதீபீகையில் கூறப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் கோதுமையைப் பற்றிய வினாவிற்கு விடையளிக்கும் போது சூர்யனைக் கவனித்துச் சொல்ல வேண்டும் என்பதுதான். திருட்டுப் போன கோதுமையைக் கண்டுபிடிக்க சூர்யனின் இராசி நிலையைக் கவனிக்க வேண்டும் என்பதும் இதன் அர்த்தம். ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு சூர்யனுக்குப் பரிகாரமாகக் கோதுமை, சனிக்குப் பரிகாரம் எள் என்று கதைவிட ஆரம்பித்ததிலிருந்து சோதிட சாஸ்திரம் தனது வீழ்ச்சியைச் சந்தித்தது என்று சொல்லலாம்.

சூர்யனால் அறியப்பட வேண்டிய விஷயங்களை சாராவளி கீழ்க்கண்டவாறு சொல்கின்றது:


பாம்பு, கம்பளம், மலை, தங்கம், ஆயுதங்கள், விஷம், நெருப்பு, மருந்து வகைகள், அரசன், வேறுபட்ட கலாச்சாரத்தைக் கடைப்பிடிப்பவர்கள் (Foreigners) எலும்பு, காடு, எரிபொருட்கள் முதலியன.


சந்திரன் மூலம் அறியப்பட வேண்டிய விஷயங்கள்:

பூக்கள், உணவுப்பொருட்கள், இரத்தினக் கற்கள், வெள்ளி, சங்கு, உப்பு, ஆடை வகைகள், ஆபரணங்கள், நெய், எண்ணெய், தூக்கம் முதலியன.


இப்படி ஒவ்வொரு கிரகங்களாலும் அறியப்பட வேண்டிய பொருட்களின் பட்டியல் மிகப் பெரியது. தொழில் ஸ்தானம் என்று சொல்லப்படும் பத்தாமிடத்தில் சூர்யனோ சந்திரனோ இருந்தால் மேற்கூறிய பொருட்களின் விற்பனை மூலம் பணவரவு இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ள வேண்டும்.

மேலைநாட்டு சோதிட வல்லுனர்களில் ஒருவரான செபாரியல் (Sepharial) தனது The Manual of Astrology என்ற புத்தகத்தில் Planetary Occupations என்ற தலைப்பில் ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய தொழில்கள் பற்றிக் குறிப்பிடுகின்றார். அவைகளையும் படித்துத் தெரிந்து கொள்வதன் மூலமும் நாம் நம்முடைய தொழில் வேலை பற்றிச் சரியான முடிவுக்கு வரமுடியும். 

Sun:

Surya :    Persons in authority, courtiers, noblemen, kings, princes, emperors, and those who hold titled offices under the crown, jewellers, goldsmiths.

Moon:


Chandra : Sailors, travellers, fishermen, those who manage public conveyance, dealers in fluids, public  salesman, nurses, mid-wives, water carriers, female officials.

Mars:


Chevvoi: Soldiers, surgeons, chemists, gunners, workers in iron and steel, dentists, butchers, smiths, barbers, cooks and workers who use sharp instruments.

Mercury:


Budha: Literary men, writers, accountants, schoolmasters, preceptors, interpreters, secretaries, registrars, orators, messengers, printers, book sellers, clerks, postmen, carriers.

Jupiter:

Guru: Senators, judges, councillors, divines, clergymen, physicians, lawyers, bankers, collegians, clothiers especially woollen merchants and provision dealers.

Venus:

Sukra:    Musicians, painters, singers, poets, actors, artists of all kinds, makers of toilet accessories, who deal in scents, flowers, and articles of ornament, silk mercers, embroiderers, makers of women apparel, clothiers, fancy dealers, sweet makers, confectioners, butlers.

Saturn:

Sani : Land and property dealers,  miners, coal merchants plumbers, jailers, grave diggers, watchmen, those that work at night or underground

ஆழ்ந்து படித்தால் மேலே குறிப்பிட்டவை அப்படியே நம்முடைய நாட்டுச் சோதிட நூல்களிலிருந்து மாறுபடவில்லை என்பது தெரிய வரும். நமது நாட்டில் சூர்யனுக்குச் சொல்லப்படும் கம்பளித் துணி வியாபாரம் மேல்நாட்டில் குருவுக்குச் சொல்லப்படுகின்றது. அதே போன்று மளிகை வியாபாரமும் குருவுக்குச் சொல்லப்படுகின்றது. மேலைநாட்டினர் சில விஷயங்களுக்கு குருவையும் சூர்யனையும் ஒன்றாகப் பாவிக்கின்றனர். இது ஆய்வுக்குரியது.
எனவே பத்தாமிடம், பத்தாமிடத்து அதிபதி, பத்தாமிடத்தில் இருக்கும் கிரகம்,  பத்தில் கிரகம் ஏதும் இல்லையென்றால் பத்தாமிடத்ததிபதி இருக்கும் நவாம்சராசியதிபன், இவர்களைக் கவனித்து மேலே சொல்லப்பட்ட குறிப்புக்களையும் சேர்த்துப் படித்தால் நம்முடைய வேலைவாய்ப்புக்கள் தொழில் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு நம்மால் வரமுடியும்.


அடுத்த கட்டுரை ராகு கேது பெயர்ச்சி பலன்கள்.


ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 105 guests and no members online