வேற்றுமைகளுக்கிடையே ஒற்றுமை என்பது இந்தியாவில் அடிக்கடி ஒலிக்கும் மந்திரம். பலமொழிகள், பல்வகைப் பண்பாடுகள் மட்டுமின்றிப் பலவகையான பஞ்சாங்கங்களும் இடம் பெறுவது இந்தியாவில்தான். எந்த இரண்டு பஞ்சாங்கங்களும் ஒன்று போல ஒரு கணக்கைச் சொல்வதில்லை. ஆனால் இந்தப் பஞ்சாங்கங்கள் மீது நம் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அளவற்றது. அந்த நம்பிக்கைக்குரியனவாக இந்தப் பஞ்சாங்கங்கள் இருக்கின்றனவா என்பது கேள்விக்குரிய ஒன்று. இந்த வாரம் நாம் சில பஞ்சாங்கங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

கலிதினம்: ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் நாள் கலியுகம் பிறந்து எத்தனை நாட்களாகின்றன என்பதைப் பஞ்சாங்கத்தில் குறிப்பிடுவதுண்டு. சென்னையில் அதிகமாகப் புழக்கத்தில் இருக்கும் பாம்புப் பஞ்சாங்கத்தில் இந்தக் கலிதினம் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. இராமநாதபுரம் சேது சமஸ்தானப் பஞ்சாங்கத்திலும் கலிதினம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. ஆற்காடு ஸ்ரீ சீதாராம ஹனுமான் சர்வமுகூர்த்தப் பஞ்சாங்கத்தில் சித்திரை முதல் நாள் 1869390-வது கலிதினம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் சர்வமுகூர்த்த பஞ்சாங்கத்தில் கலிதினம் 1869391 என்று கூறப்பட்டுள்ளது. திருநெல்வேலி வாக்கியப் பஞ்சாங்கத்தில் கலிதினம் 1869392 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எதுதான் சரி? கலிதினத்தை ஏழால் வகுத்தால் மீதம் 0 வந்தால் அன்று வெள்ளிக்கிழமை, 1 வந்தால் சனி. இப்படியே மீதம் 2 முதல் 6 வரை வந்தால் முறையே ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வியாழன் என்று முடிவுக்கு வரவேண்டும். இந்த வருடம் சித்திரை முதல் நாள் வெள்ளிக்கிழமை. 1869392-ஐ ஏழால் வகுத்தால் கிடைக்கும் மீதி 0. எனவே கலிதினம் 1869392 என்பதுதான் சரி. 

சனிப்பெயர்ச்சி: ஆற்காடு பஞ்சாங்கங்களின் கணக்குப்படி சனி இந்த ஆண்டு மார்கழி மாதம் 4ம் நாள் நாழிகை 8 வினாடி 45க்குத் தனுசு ராசிக்குச் செல்கின்றது. பாம்புப் பஞ்சாங்கப்படிக்கு அன்று நாழிகை 8 வினாடி 52க்கு சனி தனுசு ராசிக்குச் செல்கின்றது. இராமநாதபுரம் சேது சமஸ்தானப் பஞ்சாங்கப்படிக்கு மார்கழி 3ம் நாள் இரவு நாழிகை 43 வினாடி 57க்குத் தனுசு ராசிக்குச் செல்லும் சனி, திருநெல்வேலி வாக்கியப் பஞ்சாங்கப்படி மார்கழி மாதம் 1ம் நாள் பகல் மணி 2.48க்குத் தனுசு ராசிக்குச் செல்கிறது. திருநெல்வேலி வாக்கியப் பஞ்சாங்கப்படி மார்கழி 2ம் நாள் பிறக்கும் குழந்தைக்குச் சனி தனுசிலும் மற்ற வாக்கியப் பஞ்சாங்கங்களின்படி விருச்சிகத்திலும் இருக்கும். 

கிரகங்களின் அஸ்தமனம் உதயம் பற்றிய விவரங்கள்:

இராமநாதபுரம் சேது சமஸ்தானப் பஞ்சாங்கப்படி சனி கார்த்திகை 13ம் நாள் அஸ்தமனமாகி மார்கழி 17ம் நாள் உதயமாகின்றது. பாம்புப் பஞ்சாங்கப்படி சனி கார்த்திகை 11ம் நாள் அஸ்தமனமாகி மார்கழி 15ம் நாள் உதயமாகின்றது. ஆற்காடு ஸ்ரீ சீதாராமஹனுமான் பஞ்சாங்கப்படி கார்த்திகை 11ம் நாள் அஸ்தமனமாகி சனி மார்கழி 14ம் நாள் உதயமாகின்றது. திருநெல்வேலி வாக்கியப் பஞ்சாஙகமும் ஆற்காடு சீதாராமய்யர் பஞ்சாங்கமும் சனி அஸ்தமன நாள் கார்த்திகை 11 என்றும் உதயநாள் மார்கழி 15 என்றும் குறிக்கின்றன.

சுக்கிரன் அஸ்தமனத்தைப் பொறுத்தவரை பாம்புப் பஞ்சாங்கம், ஆற்காடு பஞ்சாங்கங்கள் இவைகளில் கார்த்திகை 29ம் நாள் சுக்கிரன் அஸ்தமனமாகின்றது என்றும் மாசி முதல் நாளில் உதயமாகின்றது என்றும் குறிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி வாக்கியப் பஞ்சாங்கத்தில் சுக்கிரன் கார்த்திகை 24ம் நாள் அஸ்தமனம் ஆவதாகவும் மாசி மாதம் 6ம் நாள் உதயமாவதாகவும் கூறப்பட்டுள்ளது. இராமநாதபுரம் சேது சமஸ்தானப் பஞ்சாங்கத்தில் கார்த்திகை 28ம் நாள் அஸ்தமனமாகும் சுக்கிரன் மாசி மாதம் 5ம் நாள் உதயமாவதாகக் குறிக்கப்பட்டுள்ளது.

பாம்புப் பஞ்சாங்கம், ஆற்காட்டுப் பஞ்சாங்கங்கள் ஆகியவற்றில் புதன் ஆடி மாதம் 15ம் நாள் அஸ்தமனமாகி, 31ம் நாள் உதயமாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி வாக்கியப் பஞ்சாங்கத்தில் ஆடி 16ம் நாள் அஸ்தமனமாகி ஆவணி 1ம் நாள் உதயமாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமநாதபுரம் சேது சமஸ்தானம் பஞ்சாங்கத்தில் புதன் ஆடி மாதம் 19ம் நாள் அஸ்தமனம் ஆகி ஆவணி 5ம் நாள் உதயமாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜா யார்? சில அரசியல்வாதிகளுக்குத் தமிழ்நாட்டை வட தமிழகம் தென் தமிழகம் எனப் பிரித்தால் தாங்கள் முதலமைச்சராகிவிடலாம் என்ற சிந்தனைகள் உண்டு. ஆனால் அவர்களால் இயலாததை நமது பஞ்சாங்கங்கள் செய்துவிட்டன. வட தமிழகத்தில் இருந்து வெளிவரும் பாம்புப் பஞ்சாங்கம், ஆற்காட்டுப் பஞ்சாங்கங்களின் கணக்குப்படி இந்த வருடத்திற்கு ராஜா செவ்வாய். ஆனால் திருநெல்வேலி மற்றும் இராமநாதபுரம் பஞ்சாங்கங்களின்படி இந்த வருடத்துக்கு ராஜா புதன்.

அயனாம்சம்: தங்களது பஞ்சாங்கப்படி இந்த வருடம் அயனாம்சம் எத்தனை பாகை எத்தனை கலை என்ற விவரம் பாம்புப் பஞ்சாங்கத்தில் மட்டுமே உள்ளது. திருநெல்வேலி, ராமநாதபுரம், ஆற்காட்டுப் பஞ்சாங்கங்களில் இந்த விவரம் இல்லை.

சிருஷ்டியாதி சுத்ததினம் என்று ஒரு கணக்கு உண்டு. திருநெல்வேலி வாக்கியப் பஞ்சாங்கம் அத்தினத்தை 71, 440, 41, 66020 என்றும் ஆற்காடு சீதாராமய்யர் பஞ்சாங்கம் 71, 440, 41, 69391 என்றும் ஆற்காடு சீதாராம ஹனுமான் பஞ்சாங்கம் 71, 440, 42, 66375 என்றும் குறிப்பிடுகின்றன. இராமநாதபுரம் பஞ்சாங்கம் இந்த விஷயத்தில் ஆற்காடு சீதாராம ஹனுமான் பஞ்சாங்கத்தைப் போல 71, 440, 42, 66375 என்று குறிப்பிடுகின்றது. பாம்புப் பஞ்சாங்கத்தில் இந்த விவரம் இல்லை.

கடைசியாக ஒரு விஷயம் இராமநாதபுரம், ஆற்காட்டுப் பஞ்சாங்கங்களில் திதி, நட்சத்திரம் முதலியன முடியும் நேரங்கள் இராமநாதபுரம், ஆற்காடு நகரங்களின் சூர்யோதயத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதன்படி கணக்கிடப்பட்டுள்ளன. திருநெல்வேலி பஞ்சாங்கத்தில் திதி, நட்சத்திரம் முடியும் நேரம் காலை மணி 6.00லிருந்து கணக்கிடப்பட்டுக் குறிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் லக்னம் தவறாக கணக்கிடப்படும் வாய்ப்பு இதனால் ஏற்படுகிறது. உதாரணமாகத் தை மாதம் முதல் நாள் மகரம் இருப்பு நாழிகை 5 வினாடி 17 என்பது காலை மணி 8 நிமிடம் 7 வரை எனக் குறிக்கப்பட்டுள்ளது. எனவே 8.20க்குப் பிறக்கும் ஒரு குழந்தைக்குக் கும்ப லக்னம் என்று தவறாகக் குறிப்பிட நேரிடலாம். ஏனெனில் தை மாதம் முதல் நாள் சூரிய உதயம் காலை மணி 6.42 என்று உள்ளது. அதன்படி 5 நாழிகை 17 வினாடி என்பது காலை மணி 6.42க்குப் பிறகு 2 மணி நேரம் 7 நிமிடம் என்று அர்த்தமாகும். எனவே மகர லக்னம் 6.42 + 2.07 = 8 மணி 49 நிமிடம் வரை இருக்கும். ஆனால் பஞ்சாங்கத்தைப் பார்க்கும் நபர் காலை 8.07க்கு மகர லக்னம் முடிந்துவிட்டதாகக் கருத வாய்ப்பு உண்டு.

மேலே கூறப்பட்ட விஷயங்கள் மூலம் பஞ்சாங்கங்கள் ஒவ்வொன்றும் சில வித்தியாசமான கணக்குகளோடுதான் தயாரிக்கப்படுகின்றன என்பதும் அவைகளுக்குள் ஒருமித்த கருத்து இல்லை என்பதும் மிகவும் தெளிவாகின்றன.

 

This Week’s Quote:

Unless you try to do something beyond what you have already mastered, you will never grow.

-  Emerson

 

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 99 guests and no members online