தமிழர்கள் மிகவும் நல்லவர்கள். மிக மிக நல்லவர்கள். யாருடைய மனமும் புண்படக் கூடாது என்பதற்காகப் புதுப் புதுச் சொற்களை உருவாக்குபவர்கள். மாற்றுத்திறனாளி, திருநங்கை என்ற சொற்களைப் புதிதாகப் படைத்தவர்கள். ஒருமுறை உயர்காவல் அதிகாரி ஒருவர் ‘திருடன்’ என்ற சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றார். எனவே தற்கொலை செய்து கொண்ட ஒருவரின் ஜாதகத்தை ஆராயப் போகும் வேளையில் தற்கொலை என்ற சொல் நமக்குக் குரூரமாகத் தெரிந்தது. எனவே நாம் விருப்ப மரணம் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றோம்.
ஒருவர் அவராகவே விரும்பித் தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டுமென்றால் அதற்கான கிரக நிலைகள் என்ன மாதிரி அமைய வேண்டும் என்ற குறிப்பு வராக ஹோரையில் இல்லை. வேறு நூல்களில் இருந்த மாதிரியும் தெரியவில்லை. ஆனால் இரண்டுக்குடையவன் சனி அல்லது செவ்வாய் சேர்க்கையோடு துர்ஸ்தானத்தில் ( 6, 8, 12) இருந்தால் விஷத்தால் மரணம் என்று சில நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அவராகவே விரும்பி விஷத்தை எடுத்துக் கொண்டாரா அல்லது வேறு யாரும் விஷத்தைச் செலுத்தினார்களா என்று கண்டுபிடிக்க வழியில்லை.
லக்கினாதிபதி, எட்டாமிடத்து அதிபதியோடு சம்பந்தப்பட்டாலோ, நம்முடைய உணர்ச்சிகளின் காரகக் கிரகமாக அமைந்துள்ள சந்திரன் எட்டாமிடத்தோடும், எட்டாமிடத்து அதிபதியோடும் சம்பந்தப்பட்டாலோ, புத்திஸ்தானமாகிய ஐந்தாமிடத்தோடு எட்டாமிடத்து அதிபதி சம்பந்தப்பட்டாலோ, விருப்ப மரணத்தைச் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. இவை அனைத்துக்கும் எந்தச் சோதிட நூலிலும் ஆதாரங்கள் இல்லை. இவை நிறைய ஜாதகங்களைப் பார்த்தபின் நாமாகவே எடுத்த சில முடிவுகள். இவைகளை முற்றாக நிராகரிக்க ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. தற்போது ஒரு ஜாதகத்தைப் பார்ப்போம்.



இவரை நான் 2004ல் சந்தித்தேன். 2007ல் இவரைப் பற்றி விசாரித்த போது விஷமருந்தி விருப்ப மரணத்தை ஏற்றுக்கொண்டார் என்று சொல்லப்பட்டது. எனவே 40 வயதுக்குமேல் 42க்குள் இவரது மரணம் நிகழ்ந்தது என்று கூறலாம்.
லக்னத்திலும் ஏழிலும் மூன்று பாபிகள். சுக்கிரன் சுபர். புதன் பாபரோடு சேர்ந்திருப்பதால் பாபியே. வியாழனின் பரிபூரண பார்வை லக்னத்துக்கும் செவ்வாய்க்கும்.
இரண்டாமிடத்ததிபதி புதன் ஆறுக்கும், ஏழுக்கும் அதிபதியான சனியோடும், லக்கினாதிபதி சூர்யனோடும் சேர்க்கை. ஏழாமிடத்தைத் துர்ஸ்தானம் என்று சொல்ல இயலாது. ஆனால் இரண்டுக்குடைய புதனுக்கு அதிகமான பாப சம்பந்தம் இருப்பது நிச்சயம். செவ்வாயின் பார்வையும் சேர்ந்து இரண்டுக்குடைய புதனை மிகவும் பலவீனமாக்குகின்றன. நிஜத்தில் இவர் கடன் தொல்லையால்தான் விருப்ப மரணத்தைத் தழுவினார்.
சந்திரன், ராசி, அம்சம், துவாதசாம்சம் என்ற எல்லாக் கட்டங்களிலும் சனியின் வீடான மகரத்தில் உள்ளது. துவாதசாம்சத்தில் சந்திரனுக்கு ஏழிலும் எட்டிலும் பாபர்கள். அம்சச் சக்கரத்தில் சந்திரனுக்கு இருபுறமும் பாபர்கள்.
எட்டாம் பாவம் மீனத்தில் 19 பாகை 49 கலையில் அமைந்துள்ளது. பாவ நவாம்சம் தனுசிலும், பாவத்வாதசாம்சம் துலாத்திலும் உள்ளது. எட்டாம் பாவத்வாதசாம்ச ராசியான துலாத்தின் அதிபதி சுக்கிரன், துவாதசாம்ச லக்னமான மீனத்தில் இருப்பது, எட்டுக்குடையவன் லக்னத்தில் இருப்பதற்குச் சமம்தான். ஐந்தாம் பாவம் தனுசில் 19 பாகை, 25 கலையில் உள்ளது. இதன் துவாதசாம்சம் கடகத்தில் அமையும். கடகத்தில் செவ்வாயும், சனியும் உள்ளன. கடகத்துக்கு அதிபதி சந்திரனுக்கு பாபர்களின் பார்வை.
எனவே சந்திரன், ஐந்தாம்பாவம், எட்டாம்பாவம், லக்னம் இவை ஒன்றுக்கொன்று நெருங்கிய சம்பந்தம் பெறுவதால் இவர் விருப்ப மரணத்தைத் தழுவினார் என்று சொல்லலாம். வேறு மாதிரியான பார்வைகளோடும் இந்த ஜாதகத்தை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்களுக்கு உரிமையுண்டு.
‘ஒரு புதிர் ஜாதகம்’ கட்டுரையைப் படித்த திரு.V.T. ராஜேந்திரா என்ற வாசகர் எனது கட்டுரை ‘மற்றைய பதிவாளர்களின் கட்டுரைகளை விட சற்றே வித்தியாசப்பட்டு இருப்பதாக’ ஒரு கருத்தைப் பதிவு செய்திருந்தார். ‘சற்றே’ என்ற சொல் பொருத்தமில்லை என்பது எமது எண்ணம். ஏனென்றால் நாம் நம்முடைய கட்டுரைகளில்
- கிரகங்களுக்குப் பகவான், ஈஸ்வரன் என்ற அடைமொழிகளைக் கொடுத்து எழுதுவதில்லை.
- பரிகாரங்கள் சொல்வதில்லை.
- பத்துப் பொருத்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
- கிரகங்கள் இருக்கும் நட்சத்திரங்கள் பற்றிப் பேசுவதில்லை.
- முழுக்க முழுக்க வராகமிகிரரின் பிருஹத் ஜாதகத்தைத் தவிர வேறு மூலநூல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
- பாதக ஸ்தானம், பாதகாதிபதி, பூர்வபுண்யஸ்தானம், பித்ருதோஷங்கள், சர்ப்பதோஷங்கள், சாபங்கள், குலதெய்வம் இவைபற்றிப் பேசுவதில்லை.
இத்தனை வேறுபாடுகள் இருந்தும் திரு.V.T.ராஜேந்திராவுக்கு நம்முடைய கட்டுரைகள் மற்றவர்களின் கட்டுரைகளைவிட ‘சற்றே’ வித்தியாசமாகத் தெரிகிறது. அவர் அனைத்து ஜீவன்களையும் ஒரே பரப்பிரம்மமாகக் காணும் பக்குவம் பெற்றவரோ என்னவோ? இதை எழுத வைத்தமைக்கு அவருக்கு நன்றி.
This Week’s Quote:
Poetry is simply the most beautiful, impressive, and widely effective mode of saying things.
- Matthew Arnold
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
