சென்ற கட்டுரையில் ஒரு ஆணின் ஜாதகத்தில் என்னென்ன விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று எழுதியிருந்தேன். இந்தக் கட்டுரையில் என்னென்ன விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது பற்றிப் பரிசீலனை செய்யலாம்.

பிருஹஜ் ஜாதகம் எழுதிய வராகமிகிரரை ஒட்டியே மந்த்ரேஸ்வரரும் தனது ‘பலதீபிகை’ என்ற நூலில் ஒரு ஆணின் ஜாதகத்தில் எந்த மாதிரியான கிரக அமைப்புகள் இருந்தால் மனைவி வெகுவிரைவில் மரணமடைவாள் என்பது பற்றி எழுதியிருக்கிறார். லக்னத்திலிருந்தோ, சந்திரனிருக்குமிடத்திலிருந்தோ ஐந்தாவது மற்றும் ஏழாவது வீட்டில் பாபக்கிரகங்கள் இருந்தாலோ அல்லது அந்த ஐந்து மற்றும் ஏழாவது இடத்து அதிபதிகள் பாபக்கிரகங்களுடன் சம்பந்தம் பெற்றாலோ மனைவியின் மரணம் நிச்சயம் என்று கூறும் இந்த மூலநூல்கள் சுக்கிரனும் பாபக்கிரக சம்பந்தங்கள் பெற்றாலோ அல்லது பாபக்கிரகங்களின் மத்தியில் இருந்தாலோ மனைவி கணவனுக்கு முன் இறந்து விடுவாள் என்றும் கூறுகின்றன.

ஏழுக்குடையவன் ஐந்தாமிடத்தில் இருந்தாலோ அல்லது ஐந்துக்குடையவன் ஏழாமிடத்தில் இருந்தாலோ புத்திர தோஷமாவது, களத்திர தோஷமாவது நேரிடும் என்பது பலதீபிகை நூலுடையார் கருத்து. பெரும்பாலும் இது சரியாகவே இருக்கிறது. முதல் மனைவி இறந்ததால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டவர்களில் பெரும்பாலோரின் ஜாதகத்தில் ஏழுக்குடையவன் ஐந்தாமிடத்தில் இருப்பதைக் காண முடிகிறது. இதைப் போலவே அஷ்டமாதிபதி என்ற எட்டுக்குடைய கிரகம் ஒரு ஜாதகத்தில் ஏழில் இருந்தாலோ அல்லது ஏழுக்குடையவன் எட்டாமிடத்தில் இருந்தாலோ களத்திரதோஷம் சம்பவிக்கின்றது.

 

sample horoscope

sample horosope

 

இந்த ஜாதகருக்கு 1977ல் திருமணம். முதலில் 15 வருஷம் 3 மாதம் 26 நாட்கள் ராகு தசை. அப்புறம் 31 வயது 3 மாதம் 26 நாட்கள் முடிய குரு தசை. சனி தசையில் மனைவி துர்மரணம். இரண்டாவது திருமணம் நடந்து சில வருடங்கள் கழித்து அந்தப் பெண்ணும் விபத்தில் மரணமடைந்தார். மூன்றாவது திருமணமும் நடந்தது. சில மாதங்களில் அந்தப் பெண்ணும் பிரிந்து போய்விட்டது. ஏழாமிடத்து அதிபதி சுக்கிரன் ஐந்தாமிடத்தில். கூடவே அட்டமாதிபதியும் சேர்க்கை. சுக்கிரனுக்கு ஏழாமிடத்தில் சனி. சுக்கிரன், சனி ஆகிய இரண்டு கிரகங்களுமே வக்கிரமாக உள்ளன. லக்னாதிபதி செவ்வாயும், இரண்டாமிடத்ததிபதி குருவும் சேர்க்கை. ஐந்துக்குடையவன் ஏழிலும், ஏழாமிடத்ததிபதி ஐந்திலும் பரிவர்த்தனையாக இருந்ததால் குழந்தைகள் இருக்கின்றார்கள். ஆனாலும் களத்திர தோஷம் நேர்ந்திருக்கின்றது. தாஜிக நீலகண்டி நூலின்படி விவாஹ ஸஹம் என்று வடமொழியிலும் Lot of Marriage என்று கிரேக்க வானியலாளர்களாலும் அழைக்கப்படும் புள்ளி எட்டாமிடமான மிதுனத்தில் 27 பாகையில் உள்ளது. விவாஹ ஸஹம் எட்டாமிடத்தில் இருப்பது மணவாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது இந்த ஜாதகத்தைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு உண்மையாகிவிட்டது. சனி ஏழாம் பாவத்துக்கு யோககாரனாகவும் ஏழாமிடத்துக்கு சுப ஸ்தானமான ஐந்தில் இருப்பவனாகவும் இருக்கின்றான். ஆயினும் சனி தசையில் மூன்று மனைவிகளின் பிரிவும் நேர்ந்துள்ளதை ஆய்வாளர்கள் கவனிக்கவும்.

 

sample horoscope

sample horosope

 

இந்த ஜாதகத்திலும் ஏழுக்குடைய வியாழன் ஐந்தாமிடத்தில் வக்ரகதியில் உள்ளது. ஐந்துக்குடைய சுக்கிரன் பன்னிரண்டாமிடத்தில் சொந்த வீட்டில் இருக்கின்றது. செவ்வாயின் நான்காம் பார்வை சுக்கிரனின் மீது. இரண்டுக்குடையவன் எட்டாமிடத்தில் நிற்க எட்டுக்குடையவன் நீசமாக இருக்கின்றார். திருமணமான பத்தாவது வருடத்தில் முதல் மனைவி காலமானார். விவாஹ ஸஹம் சிம்மத்தில் 3 பாகையில் உள்ளது. செவ்வாயின் ஏழாம் பார்வை விவாஹ ஸஹத்தில் விழுகிறது. சிம்மத்துக்கு அதிபதி சூர்யனோடு சனி சேர்க்கை. ஆனாலும் சூர்யன் பதினோராமிடத்தில் உச்சம் பெற்றதால் இரண்டாவது திருமணத்தைக் கொண்டு வந்தது. இரண்டாவது மனைவி இன்னும் ஜீவித்திருக்கின்றார்.

 

sample horoscope

sample horosope

 

இந்த ஜாதகத்தில் எட்டுக்குடைய வியாழன் ஏழில் இருக்கின்றது. ஐந்தாமிடத்தில் சூர்யன், சந்திரன் மற்றும் புதன் உள்ளன. ஏழாமிடத்தை ஏழாமிடத்து அதிபதி செவ்வாயும் ஒன்பது பத்துக்குடைய சனியும் பார்க்கின்றன. பாவாதிபதியும், யோகாதிபதியும் ஏழாமிடத்தைப் பார்த்த போதும் மணம் முடிந்த ஐந்து வருடங்களில் மனைவி துர்மரணம். நான்கு கருச்சிதைவுகளுக்கு பின்னர் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 27 வருடம் 6 மாதங்களுக்குப் பின்னர் வந்த வியாழ தசையில் மணம் முடிந்து அந்த வியாழதசையிலேயே மனைவியின் மரணமும் நிகழ்ந்தது. எட்டுக்குடையவன் ஏழில் இருந்தது மட்டுமல்லாமல் விவாஹ ஸஹம் துலாத்தில் 24 பாகையில் உள்ளதும் மணவாழ்க்கைப் பாதிப்புக்கு ஒரு காரணம். விவாஹ ஸஹம் ஆறாமிடத்தில் ஆறாமிடத்து அதிபதியான சுக்கிரனுடன் சேர்ந்திருப்பது மணவாழ்க்கையைச் சிதைக்கின்றது என்பது நிரூபணமாகின்றது. இவர் மறுமணம் செய்துகொள்ளவே இல்லை.

மேலே உதாரணத்துக்காகத் தரப்பட்ட மூன்று ஜாதகங்களிலும் சுக்கிரன் உச்சவீட்டிலும் சொந்த வீட்டிலும் மூலத்திரிகோண வீட்டிலும்தான் இருக்கின்றது. ஆனாலும் மணவாழ்க்கையில் நிறையச் சிக்கல்கள். சென்ற கட்டுரையில் சுக்கிரன் நீசமாக இருந்தும் இல்வாழ்க்கையில் எந்தவிதப் பிரச்னையுமில்லாமல் வாழ்கின்ற ஜாதகங்கள் உதாரணத்துக்காகத் தரப்பட்டன. சுக்கிரன் மற்றும் ஏழாம்பாவாதிபதி நன்றாக இருக்கிறார்கள், எனவே மணவாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற முடிவுக்கோ, ஏழாம்பாவாதிபதி மற்றும் சுக்கிரன் நீசமாக இருக்கிறார்கள், எனவே சுகமான இல்லற வாழ்க்கை நிச்சயம் என்ற முடிவுக்கோ வந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தவே இந்த உதாரணங்கள் தரப்பட்டன.

ஒரு ஆண்மகனின் ஜாதகத்தைப் பரிசீலனை செய்யும் போது கீழ்க்கண்ட விஷயங்களை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

  • எட்டுக்குடையவன் ஏழாமிடத்தில் இருக்கக் கூடாது.
  • ஏழுக்குடையவன் எட்டாமிடத்தில் இருக்கக் கூடாது.
  • ஏழாமிடத்ததிபதி ஐந்தாமிடத்திலோ அல்லது ஐந்தாமிடத்ததிபதி ஏழாமிடத்திலோ இருக்கக் கூடாது.
  • சுக்கிரனுக்குப் பாவகிரகங்களின் சம்பந்தம் இருக்கக் கூடாது.
  • சுக்கிரனுக்கு நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய இடங்களில் பாவக்கிரகங்கள் இருத்தல் கூடாது.
  • ஏழாமிடத்ததிபதி கடைசி நவாம்சத்தில் இருக்கக் கூடாது. அதாவது எந்த ராசியில் இருந்தாலும் 26 பாகை 40 கலைக்கு மேல் இருக்கக் கூடாது.
  • லக்னம் முதல் திரேக்காணத்தில் இருந்தால் எட்டுக்குடையவனும், இரண்டாவது திரேக்காணத்தில் இருந்தால் பன்னிரண்டுக்குடையவனும், மூன்றாவது திரேக்காணத்தில் இருந்தால் நான்காமிடத்து அதிபதியும் இருபத்திரண்டாவது திரேக்காண அதிபர்களாக வருவார்கள். இந்த இருபத்திரண்டாவது திரேக்காணாதிபதி ஏழாமிடத்தில் அல்லது ஐந்தாமிடத்தில் இருந்தால் மனைவி அல்லது மக்களுக்குத் தோஷத்தைக் கொண்டு வரும்.

ஏழாம் பாவம் அல்லது ஐந்தாம் பாவத்தின் ஸ்புடத்துக்குச் சமீபத்தில் மேற்கூறியவாறு கிரகங்கள் அமைந்தால் மட்டுமே இந்தக் கெடுதல்கள் நேர வாய்ப்பு உண்டு. இல்லையெனில் தோஷங்கள் இல்லையென்ற முடிவுக்கே வரவேண்டும். எனவே கிரகஸ்புடங்கள் மட்டுமல்லாமல் பாவஸ்புடங்களும் கணக்கிடத் தெரிந்த சோதிடர்களின் ஆலோசனைப்படியே முடிவுகள் எடுக்க வேண்டும். இவைகளையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் நட்சத்திரப் பொருத்தம் பார்த்தோம், செவ்வாய் தோஷத்துக்குப் பரிகாரம் செய்தோம், பத்துக்குப் பத்துப் பொருத்தமும் சரியாக உள்ளது என்றெல்லாம் திருமணம் செய்து வைத்தால் விவாகரத்து, திடீர் மரணம் போன்றவைகளைத்தான் சந்திக்க நேரிடும்.

 

இந்த வலைத்தளத்தில் இதுவரை பதினொன்று கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. மிக எளிய நடையிலும், மூலநூல்களின் கருத்துக்களையும் தாங்கி வரும் இந்தக் கட்டுரைகள் வாசகர்களின் சிந்தனையில் அதிகமான கேள்விகளையும், சந்தேகங்களையும் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் எதிர்பார்த்தவாறு கேள்விகள் வரவில்லை. சிலர் தங்களது பெண்களின் ஜாதங்களைத் தந்து திருமணம் எப்போது நடைபெறும் என்று கேள்வி கேட்டுப் பதில் பெற்றிருக்கின்றார்கள். படிக்கின்ற எல்லோருக்கும் கேள்விகள் இருக்கும். தாராளமாகக் கேள்விகளைக் கேட்கலாம். பதில் உடனுக்குடன் கிடைப்பது கேள்விகள் எடுத்துக்கொள்ளும் நேரத்தைப் பொறுத்தது. சில கேள்விகளுக்கு விடையளிக்க அதிக ஆராய்ச்சி தேவைப்படாது. சில கேள்விகள் அதிக நேரம் வேலை வாங்கும். ஆனால் பதில் கிடைப்பது உறுதி. மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு ஜாதகங்களுக்கான பதில்களைப் பெறலாம்.

 

அடுத்த கட்டுரை ஜன்ம ராசியால் வரும் பலன்கள் 10.01.2016ல் வெளிவரும்.

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 70 guests and no members online