வராகமிகிரரின் பிருஹஜ் ஜாதகத்தின் பன்னிரண்டாவது அத்தியாயம் நாபஸ யோகங்களை விளக்கமாகச் சொல்கின்றது. மூன்று ஆஸ்ரய யோகங்கள் இரண்டு தளயோகங்கள், இருபது ஆகிருதி யோகங்கள், ஏழு சங்க்யா யோகங்கள் ஆக மொத்தம் முப்பத்திரண்டு நாபஸ யோகங்கள் சொல்லப்பட்டுள்ளன.

ஆகிருதி யோகங்கள் 20
கதா, சகடம், விஹங்கம், சிருங்காடகம், ஹலம், வஜ்ரம், யவம், கமலம், வாபீ, யூபம், இஷீ, சக்தி, தண்டம், நௌ, கூடம், சத்திரம், சாபம், அர்த்தசந்திரம், சமுத்திரம், சக்கரம் என்று ஆகிருதி யோகங்கள் மொத்தம் இருபதாகும்.

கதா
எல்லாக் கிரகங்களும் சமீபத்திலிருக்கின்ற இரண்டு கேந்திர வீடுகளில் இருந்தால் இந்த யோகம் சம்பவிக்கின்றது. அதாவது லக்னம், நான்கு என்ற இரண்டு கேந்திர வீடுகளிலோ, நான்கு, ஏழு என்ற இரண்டுகேந்திர வீடுகளிலோ, ஏழு, பத்து என்ற இரண்டு கேந்திரவீடுகளிலோ அல்லது பத்து, லக்னம் என்ற இரண்டுகேந்திர வீடுகளிலோ எல்லாக் கிரகங்களும் இருந்தால் கதாயோகம் கிடைக்கும். இந்த யோகத்தில் பிறந்தவன் யாகங்கள் செய்யும் சுபாவமுள்ளவனாகவும், பெருஞ்செல்வந்தனாகவும், எப்போதும் பணம் சேர்க்கும் முயற்சியுள்ளவனாகவும் இருப்பான். யாகம் செய்தல் என்பதை நவீன காலத்துக்குப் பொருத்தமாக ஏதேனும் ட்ரஸ்ட்  அமைப்பை நிறுவிப் பொதுத்தொண்டு செய்தல் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

சகடம்
எல்லாக் கிரகங்களும் லக்னம், ஏழாமிடம் என்ற இந்த இரண்டு கேந்திரங்களில் மட்டும் இருந்தால் சகடம் என்ற யோகம் சித்திக்கின்றது. சகடயோகத்தில் பிறந்தவன் வண்டி மூலமுண்டான தொழிலால் ஜீவனம் செய்கின்றவனாகவும் (தற்காலத்தில் லாரி, வாடகைக்கார்) வியாதியுள்ளவனாகவும், கெட்ட நடத்தையுள்ள மனைவியை உடையவனாகவும் இருப்பான்.

விஹங்கம்
எல்லாக் கிரகங்களும் நான்காமிடம், பத்தாமிடம் என்ற இந்த இரண்டு கேந்திரங்களில் இருந்தால் விஹங்கம் என்ற யோகம் ஏற்படும். விஹங்க யோகத்தில் பிறந்தவன் தூது செல்கின்றவனாகவும், பயணங்களில் வாழ்க்கையைக் கழிப்பவனாகவும், சண்டைகளை உண்டு பண்ணுகின்றவனாகவும் இருப்பான்.

சிருங்காடகம்
எல்லாக் கிரகங்களும் லக்னம், ஐந்தாமிடம், ஒன்பதாமிடம் ஆகிய மூன்று ராசிகளுக்குள் இருந்தால் இந்த யோகம் சிருங்காடகம் என்று அழைக்கப்படும். இந்த யோகத்தில் பிறந்தவன் வாழ்க்கையின் கடைசிப் பகுதியில் சுகத்தை அனுபவிக்கின்றவனாக இருப்பான்.

ஹலம்
எல்லாக்கிரகங்களும் இரண்டு, ஆறு, பத்தாமிடங்களிலோ, அல்லது மூன்று, ஏழு, பதினொன்றாமிடங்களிலோ அல்லது நான்கு, எட்டு, பன்னிரண்டாமிடங்களிலோ இருந்தால் ஹலம் என்ற யோகம் சித்திக்கின்றது. ஹல யோகத்தில் பிறந்தவன் பெரிய அளவில் பயிர்த் தொழில் செய்பவனாக இருப்பான்.

வஜ்ரம், யவம்
லக்னம், ஏழு என்ற இந்த இரண்டு இடங்களில் எல்லாக் கிரகங்களும் இருந்தால் அது சகடயோகம் என்று முன்னர் சொல்லப்பட்டது. நான்கு பத்தில் எல்லாக்கிரகங்களும் இருந்தால் விஹங்கம் என்ற யோகம் சொல்லப்பட்டது. அதைக் கொஞ்சம் மாற்றி லக்னத்திலும், ஏழிலும் சுபர்கள் இருந்து நான்கு பத்தில் பாவர் இருந்தால் அது வஜ்ரயோகம் என்றும், லக்னத்திலும் ஏழிலும் பாபர் இருந்து நான்கு பத்தில் சுபரும் இருந்தால் அது யவயோகம் என்றும் அழைக்கப்படுகின்றன.

வராகமிகிரர் இந்த யோகங்கள் கணிதப்படி சம்பவிக்காது என்ற போதிலும் முன்னோர்கள் சொன்னபடியால் நானும் இதைச்சொல்கின்றேன் என்று கூறுகின்றார்.

சூர்யனுக்கு நான்கு பத்தாமிடத்தில் புத சுக்கிரர்கள் இருந்தால் ஒழிய இந்த யோகங்கள் சம்பவிக்காது. அவ்வாறு புத சுக்கிரர்கள் சூர்யனுக்கு நான்கு பத்தில் கணிதப்படி வர இயலாது. எனவே இந்த யோகங்கள் சம்பவிக்காது என வராகமிகிரர் கூறுகின்றார்.

கமலம்
லக்னம், நான்கு, ஏழு, பத்தாமிடங்களில் எல்லாக் கிரகங்களும் இருப்பது கமலம் என்னும் யோகமாகும். இந்த யோகத்தில் பிறந்தவன் எல்லா இடங்களிலும் பரவி நிற்கும் புகழோடும் அதிகமான சுகம், அதிகமான வித்தை, பணிவு முதலிய நற்குணங்கள் நிரம்பியவனாகவும் இருப்பான்.

வாபீ
கேந்திரங்களில் எல்லாக் கிரகங்களும் நிற்பது கமல யோகம் என்றழைக்கப்பட்டது போலவே, எல்லாக் கிரகங்களும் பணபர இடங்களான இரண்டு, ஐந்து, எட்டு, பதினொன்றாமிடங்களில் இருந்தாலோ அல்லது மூன்று, ஆறு, ஒன்பது, பன்னிரண்டு என்ற ஆபோக்லீம இடங்களில் இருந்தாலோ வாபீ என்ற யோகம் சித்திக்கின்றது. இந்த யோகத்தில் பிறந்தவன் கொஞ்சமாக இருந்தாலும் நீண்ட காலம் ஸ்திரமான (கூடுதல் குறைவு இல்லாத) செல்வத்தை வைத்திருப்பவனாகவும், பிறர்க்குக் கொடுக்கும் குணம் இல்லாதவனாகவும் இருப்பான்.

யூபம்
எல்லாக் கிரகங்களும் லக்னம், இரண்டு, மூன்று, நான்காமிடங்களில் இருந்தால் அது யூபம் என்னும் யோகமாகும். இந்த யோகத்தில் பிறந்தவன் ஈகைக் குணமுள்ளவனாகவும், யாகங்கள் செய்து தேவர்களை ஆராதிப்பவனாகவும் இருப்பான்.

இஷீ
எல்லாக் கிரகங்களும் நான்கு, ஐந்து, ஆறு, ஏழாமிடங்ளில் இருந்தால் அது இஷீ என்னும் யோகமாகும். இந்த யோகத்தில் பிறந்தவன் பிறரைத் துன்புறுத்துவனாகவும், சிறையில் உத்யோகம் புரிபவனாகவும், ஆயுதங்களைச் செய்பவனாகவும் இருப்பான்.

சக்தி
எல்லாக் கிரகங்களும் ஏழு, எட்டு, ஒன்பது, பத்தாமிடங்களில் இருந்தால் அது சக்தியோகமாகும். இந்த யோகத்தில் பிறந்தவன் சோம்பேறியாகவும், சுகம், செல்வம் இவைகள் இல்லாதவனாகவும், தனது குலத்திற்கு ஒவ்வாத காரியங்களைச் செய்பவனாகவும் இருப்பான்.

தண்டம்
எல்லாக் கிரகங்களும் பத்து, பதினொன்று, பன்னிரண்டு, லக்னம் இந்த இடங்களில் இருந்தால் அது தண்டயோகமாகும். இந்த யோகத்தில் பிறந்தவன் குழந்தைகள், நண்பர்கள் இவர்களில்லாமல் தனித்து வாழ்பவனாகவும், தன் குலத்திற்கு ஒவ்வாத காரியங்களைச் செய்பவனாகவும் இருப்பான்.

நௌ
லக்னத்திலிருந்து ஏழாமிடம் வரைக்கும் உள்ள ராசிகளில் ஏழிலும் வரிசையாகக் கிரகங்கள் இருந்தால் அது நௌ என்னும் யோகம், இந்த யோகத்தில் பிறந்தவன் நல்ல புகழுடன் கூடியவனாகவும், மாறி மாறி வருகின்ற சுக துக்கங்களை உடையவனாகவும், கஞ்சனாகவும் இருப்பான்.

கூடம்
நான்காமிடத்திலிருந்து பத்தாமிடம் வரைக்கும் உள்ள ஏழுராசிகளில் வரிசையாகக் கிரகங்கள் இருக்குமானால் அது கூடம் என்னும் யோகமாகும். இந்த யோகத்தில் பிறந்தவன் பொய் பேசுபவனாகவும், சிறை அதிகாரியாகவும் இருப்பான்.

சத்ரம்
ஏழாமிடத்திலிருந்து லக்னம் முடிய உள்ள ராசிகளில் எல்லாக்கிரகங்களும் அமையுமானால் அது சத்ரம் என்றழைக்கப்படும் யோகமாகிறது. இந்த யோகத்தில் பிறந்தவன் தனது சுற்றத்தார்க்கு உதவிகள் செய்பவனாகவும், வாழ்க்கையின் இறுதியில் சுகமான வாழ்க்கை வாழ்பவனாகவும் இருப்பான்.

சாபம்
பத்தாமிடத்திலிருந்து நான்காமிடம் வரை ஏழு கிரகங்களும் வரிசையாக அமையுமானால் அது சாபம் என்னும் யோகமாகும். இதில் பிறந்தவன் சண்டை போடுவதில் பிரியமுள்ளவனாகவும், இளமையிலும், முதுமையிலும் சுகத்தை அனுபவிப்பவனாகவும் இருப்பான்.

அர்த்தசந்திரம்
1,4,7,10 என்ற இடங்களில் ஆரம்பித்து ஏழாவது ராசி முடிய உள்ள இடங்களில் ஏழு கிரகங்களும் இருந்தால் மேலே சொல்லப்பட்ட நான்கு யோகங்கள் கிடைக்கின்றன. அப்படியில்லாமல் வேறு இடங்களில் (2,3,5,6,8,9,11,12ல்) ஆரம்பித்து ஏழாவது ராசியான (8,9,11,12,2,3,5,6ல்) முடியும் எட்டுயோகங்களும் அர்த்தசந்திரம் என்னும் யோகங்களாகும். அர்த்தசந்திரம் என்னும் யோகத்தில் பிறந்தவன் எல்லோருக்கும் பிரியமானவனாகவும், அழகனாகவும், எல்லோரும் கௌரவிக்கும் மனிதனாகவும் இருப்பான்.

சமுத்திரம்
எல்லாக் கிரகங்களும் லக்னத்துக்கு 2,4,6,8,10,12 என்ற இடங்களில் இருந்தால் அது சமுத்திர யோகம் என்றழைக்கப்படுகிறது. சமுத்திர யோகத்தில் பிறந்தவன் அரசர்க்கு ஒப்பானவனாகவும், சுகங்களை அனுபவிப்பவனாகவும் இருப்பான்.

சக்கரம்
எல்லாக்கிரகங்களும் லக்னம் 3,5,7,9,11 என்ற இடங்களில் இருந்தால் சக்கரம் என்னும் யோகம் சித்திக்கின்றது. சக்கர யோகத்தில் பிறந்தவன் அரசர்களால் கௌரவிக்கப்படுவனாகவும் இருப்பான்.

மேற்சொல்லப்பட்ட இருபது ஆகிருதி யோகங்களைத் தவிர இன்னும் ஏழு யோகங்கள் உள்ளன. அவை சாங்கிய யோகங்கள் எனப்படும். அந்த யோகங்களையும், அவற்றின் பலன்களையும், இந்த யோகங்களுக்கான உதாரண ஜாதகங்களையும் அடுத்த கட்டுரையில் விவரிப்போம்.

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 107 guests and no members online