ஜோதிடரை அணுகும் சாமான்யர்கள் கேட்கின்ற கேள்விகள் பெரும்பாலும் கீழ்க்கண்டவாறு இருக்கும்.

    எனது மகன் / மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும் ?
    எனது மகன் / மகளுக்கு வேலைவாய்ப்பு எப்படி ?
    எனது தொழில் எப்போது சிறப்பாக நடக்கும் ?

மற்றபடி சொந்த வீடு எப்போது கட்டுவோம்? பிள்ளைகள் எங்களை வைத்துக் காப்பாற்றுவார்களா? என்பவையெல்லாம் ‘கொசுறு’க் கேள்விகளாக இருக்கும். ஜோதிடம் ஒரு  மனிதனின் சகல வாழ்க்கை நிலைகளையும் தெரிவிக்கும் என்ற எண்ணம் எப்படி வந்தது அல்லது யாரால் உருவாக்கப்பட்டது என்று தெரியவில்லை. என்று தலைவலி வரும் என்று காய்ச்சல் வரும் என ஒரு ஜோதிடரால் முன்கூட்டியே சொல்லமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் ஜனங்கள் இதையெல்லாம் கேட்பார்கள் என்று தெரிந்துதான் ஜோதிடர்கள் அடிப்படை ஜோதிட நூல்களில் இல்லாத விஷயங்களையெல்லாம் சொந்தக் கற்பனைகளால் சொல்லி வருகின்றார்கள்.

 

கிரக தசைகள்:

ஒரு மனிதனின் வாழ்க்கையில் கிரகங்கள் நல்லவற்றையும் தீயவற்றையும கொடுக்கின்றன என்பதுதான் ஜோதிஷம். எனவே எந்தக் கிரகங்கள் எப்போது என்ன பலனைக் கொடுக்கப் போகின்றன என்பதை அறியவே  கிரக தசைகள் ஏற்படுத்தப்பட்டன.  இந்தக் கிரக தசைகள்தான் இப்போது ஜோதிடர்களையும் ஜோதிஷம் பார்க்கப் போகின்றவர்களையும் மிகவும் குழப்பத்திலாழ்த்துகின்றன. விம்சோத்தரி (120 வருடங்கள்) அஷ்டோத்தரி (108 வருடங்கள்) காலச்சக்கரதசை பஞ்சோத்தரி ( 105 வருடங்கள்) என்றெல்லாம் பலவிதமான தசைகள் சொல்லப்பட்டாலும் எல்லோரும் விம்சோத்தரி தசையையே பின்பற்றி வருகின்றார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் கலியுகத்தில் விம்சோத்தரி தசைதான் பலனளிக்கும் என்று யாரோ சொல்லி வைத்ததுதான். மானசாகரி என்ற நூலில் ‘நட்சத்ராயு : கலௌயுகே’ (கலியுகத்தில் நட்சத்திரதசை முறைப்படியான ஆயுளே கிடைக்கும்) என்று சொல்லியிருப்பதால் அதைச் ‘சிக்’கெனப்  பிடித்துக் கொண்டார்கள் நம் ஜோதிடர்கள்.

ஆனால் உண்மையான காரணம் இந்தத் தசையைக் கணக்கிடும் முறை எளிது என்பதுதான். சந்திரன், அஸ்வினி, மகம், மூலம் இந்த நட்சத்திரங்களில் ஒன்றில் இருந்தால் கேது தசை பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களில்  ஒன்றில் இருந்தால் சுக்கிரதசை என்று இவ்வாறு கணக்கிடுவது எளிது. கேது 7 சுக்கிரன் 20 சூரியன் 6 சந்திரன் 10 செவ்வாய் 7 ராகு 18 குரு 16 சனி 19 புதன் 17 என்று மொத்தம் 120 ஆண்டுகள். சகல கிரகங்களிலும் பலவானான சூரியனுக்கு 6 ஆண்டுகளும் பலஹீனமான சனிக்கு 19 ஆண்டுகளும் ஏன் கொடுத்தார்கள் என்று யாரும் கேட்பதில்லை. மேலும் கிரகங்களின் தசை வருஷங்களைச் சந்திரன் தீர்மானிக்கின்றது என்பது அபத்தமாகப்படுகிறது. ஒரு கிரகத்தின் தசாபலன் எவ்வாறு அது இருக்கும் இடத்தை வைத்து முடிவு செய்யப்படுகின்றதோ  அப்படித்தான் அந்தக் கிரகத்தின் தசா வருஷங்களும் முடிவு செய்யப்பட வேண்டும். அதைச் சந்திரன் தீர்மானிக்கின்றது என்பத ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்தின் ஆரம்பத்தில் இருந்தால் சூரியனின் தசை வருஷங்கள் 6 என்றும் முடிவில் இருந்தால் சூர்ய தசை இருப்பு சில நாட்களே என்றும் தீர்மானிப்பது எவ்வகையில் நியாயம் ? ஆனால் இதை ஜோதிஷ உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கான காரணம் கீழ்க்கண்டபடி இருக்கலாம்.

கீழ்க்கண்ட ஜாதகங்களைப் பாருங்கள்

 sample horoscope

 

sample horosope

ஆண்குழந்தையும் பெண் குழந்தையும் வேறு வேறு ராசிகளில் பிறந்துள்ளன. லக்னம் ஒரே லக்னம் தான். ஆனால் ஆண் குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் குழந்தையின் தாயார் இறந்து போனார். பெண் குழந்தைக்கு அப்படி ஏதும் நேரவில்லை. எனவே  இந்த ஜாதகங்களைப் பார்க்கும் யாரும் ராசிகளின் வித்தியாசத்தினால் தான் இந்தப் பலன்கள் ஏற்பட்டன என்ற முடிவுக்கு வரக்கூடும். சந்திரன் வேகமாக செல்லக்கூடிய காரணத்தால் சந்திரன்தான் இப்படி வித்தியாசமான பலன்களைக் கொடுக்கின்றான் என்ற முடிவுக்கு எல்லோரும் வந்திருக்கலாம். எனவே தான் சந்திரன் நின்ற நட்சத்திரத்தை வைத்துத் தசைகள் ஏற்படுத்திப் பலன்கள் சொல்லும் முறை வந்திருக்கலாம். (இந்தப் பெண் குழந்தையின் ஜாதக பலன் பற்றிக் கடைசியில் ஒரு குறிப்பு வருகிறது.)

சூர்ய தசா பலன்கள்:

வராகமிகிரரின் பிருஹஜ் ஜாதகத்தில் சூர்யனுடைய சுபமான தசையில் ஒருவன் வாசனைத் திரவியங்கள், யானைத்தந்தம், புலித்தோல், தங்கம், அரசன், யுத்தம், கொடிய செய்கை, யாத்திரை இவற்றால் பொருளையும் புகழையும் சம்பாதிக்கிறான் என்றும் அசுபமான தசையில் ஒருவனுக்கு அவனது மனைவி, பிள்ளைகள், சேமித்து வைத்துள்ள பணம், எதிரிகள், ஆயுதம், நெருப்பு, அரசன் இவைகளால் அதிகமான ஆபத்துக்களும், தனது வேலைக்காரர்களுடன் சண்டையும், இருதயம், வயிறு இவற்றில் வியாதிகளும் உண்டாகும் என்றும் சொல்லியிருக்கின்றது.

காலத்துக்குத் தகுந்தாற்போல் சொல்வதென்றால் சூர்யதசையில் தந்தம் தோல் இவற்றால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை விற்றல் தங்க நகைகள் செய்து விற்றல் அரசு ஊழியராகப் பணிபுரிதல் யாத்திரைகள் ஏற்பாடு செய்தல் மூலம் பணம் சம்பாதிக்க இயலும் என்று சொல்லலாம். கொடிய செய்கை மூலம் பணம் சம்பாதிக்க இயலும் என்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. சட்டத்துக்குப் புறம்பான வழிகளில்  பொருளீட்டுதல் என்று எடுத்துக்கொள்ளலாமோ என்னவோ?

        அக்கினியால் பீடை அம்மை விருத்தி பொன் சேதம்
        மிக்க பயஞ்சத்துருவால் மேவு பகை ஒக்கவே
        கண்ணோய் சிரரோகங் காதற் பிதா மிருத்தி
        யெண்ணு மிரவிதசைக்கே

என்று தமிழ்ச் சாதகாலங்காரம் பாடுகிறது. அதாவது நெருப்பால் பீடை, அம்மைநோய் வார்த்தல், பொன் சேதம், சத்ருக்களால் பயம், பகை, கண்களில் நோய் தலையில் நோய், பிதாவின் மரணம் உண்டாம் என்கின்றது. சுருக்கமாகச் சொல்வதென்றால் பலம் மிகுந்த சூரியனின் சுபமான தசையில் பல்வேறு வழிகளில் பொருள் வரவுண்டாகும். அசுபமான தசையில் பண இழப்பு, மனைவி மக்களுடன் சண்டை, மேலதிகாரிகளின் கோபத்துக்குள்ளாதல், இருதயம், கண் சம்பந்தமான நோய்கள் போன்றவை சம்பவிக்கும்.

இனிமேல்தான் முக்கியமான கேள்வி வருகின்றது. சூர்யதசை சுபபலனைச் செய்யுமா அசுபபலனைச் செய்யுமா என்று எப்படி தெரிந்து கொள்வது? பொதுவாக சூர்யன் லக்னத்துக்கு ஆறு, எட்டு, பன்னிரண்டு முதலிய பாவங்களில் இருந்தால் கெட்ட பலன்களும் ஐந்து, ஒன்பது, நான்கு, ஏழு, பத்து, பதினொன்றாம் இடங்களில் இருந்தால் நல்ல பலன்களும் நடக்கும் என்ற கருத்து இருக்கிறது. நல்ல பாவங்களில் இருந்தால் மட்டும் போதாது உச்சமூலத்திரிகோண சொந்த வீட்டில் இருந்தால்தான் நல்ல பலன்களைச் செய்யும் என்று சொல்வாரும் உண்டு. விருச்சிக லக்னத்துக்கு ஆறாமிடத்தில் சூர்யன் உச்சமாக இருந்தாலோ மகர லக்னத்துக்கு எட்டாமிடத்தில் சொந்த வீட்டில் இருந்தாலோ நல்ல பலன்களைச் சொல்லவா அல்லது கெட்ட பலன்களைச் சொல்லவா? என்னைக் கேட்டால் ஒரு கிரகம் சுபமான பலன்களையும் கெட்ட பலன்களையும் சேர்த்தே தருகின்றது என்பேன். லக்னத்துக்கு நல்ல இடங்களில் இருந்து சொந்த வீட்டிலோ உச்ச வீட்டிலோ இருக்குமானால் சுபபலன்கள் அதிகமாகவும் லக்னத்துக்கு மறைவு ஸ்தானங்களில் இருந்து பகை வீட்டிலோ நீச வீட்டிலோ இருக்குமானால் கெட்ட பலன்கள் அதிகமாகவும் இருக்கும். மாறியிருந்தால் இரண்டுமே சமமாக இருக்கும்.

 

மேலும் தசா பலன்கள் ஒவ்வொருவரின் வயதுக்கும் தொழிலுக்கும் சம்பந்தப்பட்டே இருக்கும். வயதான பிறகு சூர்ய தசை வந்தால் சூர்யனுக்குச் சொல்லப்பட்ட உடலுறுப்புக்களில் பாதிப்பு வரலாம். மத்திம வயதில் சூர்யதசை வந்தால் குடும்பத்தில் சச்சரவு வரலாம். அரசு ஊழியராக இருப்பின் மேலதிகாரிகளின் விருப்பு வெறுப்புக்கு ஆளாகலாம். தொழிலதிபராக இருப்பின் திருட்டு அல்லது வருமான வரியால் இழப்பு முதலியன ஏற்படலாம். மேலேயுள்ளவர்களுக்கு நல்ல பலனாக இருப்பின் ராஜசன்மானங்கள் (தற்காலத்தில் விருதுகள்) தொழிலில் பிள்ளைகளின் பங்களிப்பு அதிகமாதல் பணி உயர்வு முதலியவை நேரலாம். வேறு கிரகங்கள் சூர்யனோடு சேர்ந்து இருப்பின் இந்தப் பலன்களில் கொஞ்சம் மாறுதல்கள் வரலாம். ஆனால் சேர்க்கை என்பது ஒரே ராசியில் இருப்பது அல்ல. சூர்யனோடு ஒரு கிரகம் சேர்ந்து இருக்கின்றது என்பதன் அர்த்தம் சூர்யனுக்கும் அந்தக் கிரகத்துக்கும் இடையில் 3 பாகை அளவே வித்தியாசம்  இருப்பதுதான். சூர்யன் ஒரு ராசியில் 15 பாகையில் இருந்தால்  12 அல்லது 18 பாகையில் இருக்கும் கிரகம் மட்டுமே  சூர்யனுடன் சேர்ந்திருப்பதாகக் கருதப்படும்.


வராகமிகிரர் சூர்யதசைக்குச் சொன்ன பலனைப் பார்த்தோம். ஆனால் அவர் சந்திரன் கார்த்திகை உத்திரம் உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவருக்கு ஆரம்ப தசை சூர்யதசை என்றோ சூர்ய தசை வருஷம் ஆறு என்றோ கூறவில்லை. ஒவ்வொரு கிரகமும் (சூர்யன் முதல் சனி வரை) உச்சத்திலிருந்தால் சில வருஷங்களும்  நீச்சத்திலிருந்தால் அதில் பாதியும் கொடுக்கும் என்பதே அவரது கொள்கை. இவ்வாறு ஏழு கிரகங்களும் கொடுக்கும் மொத்த வருஷங்களே ஒருவனின் ஆயுள் என்றும் ஒவ்வொரு கிரகமும் கொடுக்கும் ஆயுளே அதன் தசா வருஷங்கள் என்றும் அவர் கூறுகிறார். இதன்படி சூர்யன் கொடுக்கும் அதிக வருஷங்கள் பத்தொன்பது (19 வருடங்கள்) ஆகும். நீசத்திலிருந்தால் ஒன்பது வருடங்கள் ஆறு மாதங்களாகும். கிரகங்கள் சூர்யனுடன் சேர்ந்து அஸ்தமனம் ஆனாலோ சத்ரு விட்டில் இருந்தாலோ அந்தக் கிரகத்தின் ஆயுளில் சில ஆண்டுகள் குறையம். இவ்வாறு ஒவ்வொரு கிரகத்துக்கும் கணக்கிட்டு மொத்த தசா வருஷங்களைக் கண்டறிய வேண்டும். அதன் பிறகு லக்னம் சூர்யன் சந்திரன் இவற்றுள் எது பலமாக இருக்கின்றதோ அதன் தசை முதலும், அப்புறம் அதன் கேந்திரத்தில் உள்ள கிரகங்களின் தசையும் அதன்பின் பணபரம் என்று சொல்லப்படும் 2, 5, 8, 11ம் இடங்களில் உள்ள தசையும் அதன்பின் 3, 6, 9, 12 என்ற ஆபோக்லீமஸ்தானங்களில் உள்ள தசையும் நடைபெற வேண்டும். இந்தக் கணக்குகள் கொஞ்சம் கடினமானவை. இதற்கு முதலில் கிரகஸ்புடங்கள் செய்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும். சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் கிரகஸ்புடங்கள் செய்து சரிபார்க்கும் ஜோதிடர் மாவட்டத்துக்கு ஒருவர் இருந்தால் அரிது. இப்போது கம்ப்யூட்டர் மூலம் கிரகஸ்புடங்கள் உடனே கிடைத்துவிடுகின்றன. ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் என் தந்தையார் கிரகஸ்புடங்கள் பாவஸ்படங்கள் கணிக்க இரண்டு மூன்று நாட்கள் எடுத்துக்கொள்வார். இந்தக் கஷ்டங்களினாலேயே ஜோதிடர்கள் இம்முறையை ஒதுக்கிவிட்டனர்.

கவனத்துககுரிய விஷயம் என்னவென்றால் வராகமிகிரரின் சித்தாந்தப்படி ஒரு கிரகத்தின் தசையில் எல்லாக் கிரகங்களின் அபகாரங்களும் வருவதில்லை. தசாநாதனோடு இன்னும் ஒரு கிரகம் சேர்ந்திருந்தால் அந்தச் சேர்ந்திருக்கும் கிரகம் அப்புறம் தசாநாதனுக்கு ஐந்தில் ஒன்பதில் கிரகங்கள் இருந்தால் அவைகளில் பலமான கிரகம் தசாநாதனுக்கு நான்கு எட்டில் கிரகங்கள் இருந்தால் அவற்றுள் பலமான கிரகம் தசாநாதனுக்கு ஏழில் கிரகங்களிலிருந்தால் அவற்றுள் பலமான கிரகம் இந்தக்கிரகங்களுக்கு மட்டுமே தசாபுத்திகள் உண்டு. ராகு கேதுக்களை வராகமிகிரர் தசாபுத்திகளுக்கு எடுத்துக்கொள்ளவில்லை.

  sample horoscope

 மேலேயுள்ள ஜாதகத்தை எடுத்துக் கொள்வோம். இந்த ஜாதகத்தில் செவ்வாயின் தசை நடக்கும்பொழுது முதலில் செவ்வாயின் புத்தியும் பின்னர் செவ்வாய்க்கு ஐந்தில் லக்னம் இருப்பதால் லக்னத்தின் புத்தியும் செவ்வாய்க்கு நான்கில் சூர்யன் புதன் இருப்பதால் அவற்றுள்பலமான கிரகத்தின் புத்தியும் மட்டுமே நடைபெறும். சுக்கிரதசையில் சுக்கிரனுக்குத் திரிகோணங்களில் நான்கு எட்டில் ஏழில் சுக்கிரனுடன் எந்தக் கிரகங்களும் இல்லாததால் சுக்கிரதசை முழுவதுமே சுக்கிரனின் புத்தி மட்டுமே நடைபெறும். வராகமிகிரரின் பிருஹஜ் ஜாதகம் படித்த ஜோதிடர்களில் யாராவது ஒருவர் இந்தத் தசாபுத்தி முறையைப் பரிட்சித்துப் பார்த்திருந்தால் கூட ஜோதிஷ சாஸ்திரம் உன்னத நிலைக்கு வந்திருக்கும். ஆனால் நமக்குத்தான் கணக்கென்றால் பிணக்காயிற்றே! 1885ல் பிருஹஜ் ஜாதகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த N. சிதம்பரம் அய்யர் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.


“The division of life into dasas as given by the author is hardly studied by Indian Astrlogers, evidently from the difficulties attending its application. These astrologers as a class employ the exceedingly simple division of life into what is known as Udu or Nakshatra dasas.”


ஆனால் வராகமிகிரர் ஒரு இலகுவான வழியும் கொடுத்திருக்கிறார். அதாவது  ஒருவனின் வாழ்க்கையில் முதல் ஒரு வருடம் சந்திரதசையும் பின் இரண்டு வருடங்கள் செவ்வாய் தசையும் பின்னர் ஒன்பது வருடங்கள் புதன் தசையும் அடுத்து இருபது வருடங்கள் சுக்கிரதசையும் நடக்கும். 33 முதல் 50 வயது முடிய குருதசையும் 51 முதல் 70 முடிய சூர்யதசையும் எழுபதுக்கு மேல் மரணம் வரைக்கும் சனி தசையும் நடக்கும் என்று சொல்லியிருக்கிறார். இது நைசர்க்கிக தசை அதாவது இயற்கையான தசை என்று அழைக்கப்படுகிறது. கிரேக்க வானசாஸ்திரி கிளாடியஸ் தாலமியும் தனது ‘டெட்ராபிபிலாஸ்’ என்ற நூலில் ஒருவர் பிறந்து நான்காண்டுகள் முடிய சந்திர தசையும் அதன் பிறகு பத்தாண்டுகள் புதன் தசையும் பின்னர் 22 வயது முடிய சுக்கிரதசையும் அதன்பின்னர் 41 வயது முடிய சூரிய தசையும் 56 வயது முடிய செவ்வாய் தசையும் 68 முடிய குரு தசையும் பின்னர் மரணம் வரைக்கும் சனி தசையும் நடக்கும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். சந்திரனில் ஆரம்பித்துச் சனியில் முடிவது தர்க்கத்துக்குப் பொருந்துவதாகவே உள்ளது.


ஆனால் வராகமிகிரரின் வழி கிரகங்களின் காரகத்துவத்துக்குப் பொருத்தமாக உள்ளது. முதலில் மாதுருகாரகன் சந்திரன், பின்னர் சகோதர காரகன் செவ்வாய், பின்னர் பந்துக்கள் வித்யாகாரகன் புதன், பின்னர் ஸ்திரிகாரகன் சுக்கிரன், புத்ரகாரகன் குரு, தொழில்காரகன் சூர்யன், கடைசியில் ஆயுள்காரகன் சனி என்று இந்த வரிசை லாஜிக்படி இருக்கிறது.


இளைஞர்களில் ஜோதிஷ ஆர்வமுள்ளவர்கள் இதைப் பரிட்சித்துப் பார்க்க வேண்டும். புராணங்களாலும், யுகக் கணக்குகளாலும் பாரம்பரிய சிந்தனை ஒட்டத்தைத் தவிர்த்துப் புதிய சிந்தனைகளை ஏற்காதபழமை விரும்பிகளாலும் நசுக்கப்பட்டுக் கூன் விழுந்து கிடக்கும் ஜோதிஷ சாஸ்திரத்துக்குப் புத்துயிர்  பாய்ச்ச இளைஞர்களால்தான் இயலும்.


பராசரர், அகத்தியர், வசிஷ்டர் என்று பழைய முனிவர்களின் பெயரால் வழங்கும் ஜோதிஷ சாஸ்திரங்கள் எல்லாம் வேறு வேறு நபர்கள் எழுதியவைதான். வடமொழியில் மிக்கபுலமை வாய்ந்தவர்கள் ஆராய்ச்சி மனப்பான்மையோடு இந்நூற்களைப் பரிசோதித்தால் அவர்களுக்கே உண்மை விளங்கும். சாணக்கியன் எழுதியதாகவும் காளிதாசன் எழுதியதாகவும் உள்ள ஜோதிஷ நூல்கள் எல்லாமே வேறு நபர்கள் எழுதியவைதான். ஏன் திருவள்ளுவர் ஜோதிட நூல் என்று கூடத் தமிழில் ஒன்று உண்டு. ஆதிசங்கரர் லக்னமுதல் பன்னிரண்டு பாவங்கட்கும் ‘சங்கரர் பன்னீராயிரம்’ என்று நூல் எழுதியதாக ஒரு கதையுண்டு.


        ஒதிய பெரியோர் வாக்காலுரைத்திடும் நூல்கள்தன்னை
        மேதினிலே நன்றாய் விளங்கிடச் செய்யுளாகச்
        சோதிடப் புத்ரபாகந் தொகுத்தியான் விளம்புதற்கு
        ஆதியின் மூலமான ஐங்கரன் காப்பதாமே


என்று தொடங்கும் சங்கராச்சாரியம் என்னும் பன்னீராயிரத்தில் புத்திரபாவகம் என்று 1928ல் ஒரு ரூபாய்க்கு வெளியிடப்பட்ட நூல் ஒன்று என் தந்தையார் வைத்திருந்தார். சங்கராச்சாரியார் ஜோதிஷ நூல் எழுதினாரா இல்லையா என்பதை வாசகர்கள்தாம் ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டும்.


எனவே  ஜோதிஷக் கணக்குள் எளிமையாக்கப்பட்டுக் கணிணியில் வரும் இந்தக் காலத்தில் இளைஞர்கள் வானசாஸ்திரிகளாகவும் ஜோதிடர்களாகவும் சிறந்து விளங்க வாய்ப்பும் வசதியும் நிறைய உள்ளன. தேவை ஆராய்ச்சி மனப்பான்மை மட்டுமே. தங்களது நெருங்கிய உறவினர்களின் ஜாதகங்களைச் சேகரித்து அவர்களது வாழ்க்கையில் நேரும் சம்பவங்களைக் குறித்து வைத்து ஜாதகபரிசீலனை செய்தால் நிறைய விஷயங்கள் கிடைக்கும்.


1915ல் திருநெல்வேலி ஜில்லா தென்குளந்தை மாநகரமெனும் பெருங்குளத்தில் வசித்த (தற்போது தூத்துக்குடி மாவட்டம்)  வி.ஸ்ரீனிவாஸ் அய்யங்காரால் இயற்றப்பட்டு வெளியிடப்பட்ட ஜாதகப்ரகாசிகை என்னும் நூலின் முன்னுரையில் அவர் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார். “தங்களுடைய சொந்த ஜாதகத்திற்கு முதலில் பலன் பார்த்துத் தெரிந்துகொண்ட பிறகே இதரருடைய ஜாதகங்களைப் பார்த்துப் பலன் சொல்ல வேண்டும். ஏனெனில் தன்னுடைய சொந்த மனோபாவங்கள், செய்கைகள், நடக்கும் சுபாசுப பலன்கள் யாவும் தன் மனதிற்கு முதலில் திருப்தியாகத் தெரிந்துகொள்வது போல பிறருடையதை முதலில் தெரிந்துகொள்வது அசாத்தியம். ஆகையினாலேதான் அவரவர்களின் சொந்த ஜாதகபலனைமுதலில் பார்த்துத் தெரிந்த பிறகு பிறருக்குப் பார்க்க வேண்டுமென்று கண்டிப்பாகச் சொல்லப்பட்டது.”

பின்குறிப்பு:

மேலே 20.7.76 மற்றும் 21.7.76ல் பிறந்ததாகக் கொடுத்திருக்கும் ஜாதகங்களில் 21.7.76ல் பிறந்த பெண் குழந்தையின் தந்தை இக்குழந்தை பிறந்த சிலநாட்களில் காணாமல் போய்விட்டார்.

 

அடுத்து … பெண்களின் ஜாதகங்கள் …


ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 48 guests and no members online