பிருஹஜ் ஜாதகத்தின் 13-வது அத்தியாயம் சந்திரனுக்கும், மற்ற கிரகங்களுக்கும் இடையே உள்ள சம்பந்தங்களால் வரும் அதிர்ஷ்ட மற்றும் துரதிருஷ்ட யோகங்களைச் சொல்லுகிறது. சந்திரனால் வரக்கூடிய சுப, அசுப பலன்கள் ஒரே நாளில் பிறந்த எல்லாருக்கும் பொதுவானதேயாகும். ஆனாலும் லக்னம் வேறு வேறாக இருக்கப் பிறந்தவர்களுக்கு இந்த யோகங்களில் மாற்றம் வரக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. எனவே இந்த யோகங்களைப் பற்றிச் சொல்லும் போது அந்த மாற்றங்களையும் பற்றிக் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம்.
யோகம் 1:
சூர்யனுக்குக் கேந்திரங்களில் (அதாவது சூர்யன் இருக்கும் ராசிக்கு 1, 4, 7, 10-வது ராசிகளில்) சந்திரன் இருக்கும் போது பிறந்தவர்களுக்கு நல்ல சுபாவம், தனம், சாஸ்திர சம்பந்தமான அறிவு, புத்திக்கூர்மை, தேவையான காலத்தில் தோன்ற வேண்டிய மதியூகம் ஆகியவை மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும்.
சூர்யனுக்குப் பணபரங்களில் (அதாவது சூர்யன் இருக்கும் ராசிக்கு 2, 5, 8, 11-வது ராசிகளில்) சந்திரன் இருக்கும் போது பிறந்தவர்களுக்கு மேற்சொன்ன யாவும் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
சூர்யனுக்கு ஆபோக்லீம இடங்களில் (அதாவது சூர்யன் இருக்கும் ராசிக்கு 3, 6, 9, 12-வது ராசிகளில்) சந்திரன் இருக்கும் போது பிறந்தவர்களுக்கு மேற்சொன்ன யாவும் மிக்க விருத்தியடைந்து நிரம்பவும் இருக்கும்.
இப்போது இந்த மூன்று கருத்துக்களைக் கொஞ்சம் ஆழமாகப் பார்க்கலாம். அமாவாசை, பௌர்ணமி, வளர்பிறை அஷ்டமி, நவமி, தேய்பிறை அஷ்டமி, நவமி நாட்களில் சூர்யனுக்கு 1ல், 7ல், 4ல், 10ல் சந்திரன் இருக்கும். பொதுவாக இவை நல்ல நாட்கள் இல்லை என்பதற்கு அடிப்படையே இந்தச் சுலோகமாக இருக்கக் கூடும். ஆன்மீக நாட்டமும் தேடலும் கொண்ட ஞானிகளில் பெரும்பாலோர் பௌர்ணமியில்தான் பிறந்திருக்கிறார்கள். ஆனால் அப்படியிருப்பவர்களின் ஜாதகங்களில் சந்திரனுக்கு வேறு கிரகங்களின் பார்வை மற்றும் சேர்க்கை இருக்கின்றன. சூர்யனுக்கு 1, 4, 7, 10ல் சந்திரனிருந்து வேறு கிரகங்களின் பார்வையும், சேர்க்கையும் இல்லாத போது இந்தச் சுலோகத்தில் சொல்லப்பட்ட பலன்கள் மிகவும் பொருத்தமாகவே இருக்கும். லக்னத்துக்குச் சந்திரன் கேந்திரங்களில் இருந்தால் அந்த லக்னத்துக்காரர்களுக்கு இவை நிரம்பவும் பொருந்தும். லக்னத்துக்கு 2, 5, 8, 11ல் சந்திரன் இருக்கும் போது இந்தப் பலன்களில் குறைவு ஏற்படும். லக்னத்துக்கு 3, 6 இ9, 12ல் சந்திரன் இருக்கும் போது மேற்சொன்ன பலன்கள் அறவே சித்திக்காது.
இதைப் போலவே சூர்யனுக்கு 2, 5, 8, 11-வது இடங்களில் சொல்லப்பட்ட பலன்களையும், சூர்யனுக்கு 3, 6, 9, 12-வது இடங்களில் சொல்லப்பட்ட பலன்களையும் பொருத்திப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
யோகம் 2:
சந்திரனிருக்கும் ராசிக்கு 6, 7, 8-வது ராசிகளில் புதன், குரு, சுக்கிரன் என்ற மூன்று கிரகங்களும் தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ இருக்குமானால் இந்த யோகம் ‘அதியோகம்’ என்று பெயர் பெறுகிறது. இந்த யோகத்தில் பிறந்தவர்கள் பெருஞ்செல்வந்தர்களாகவும், பெரிய பதவிகளில் இருப்பவர்களாகவும், பேரும், புகழும் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். சிலர் குரு சந்திரனுக்கு ஏழில்தான் இருக்க வேண்டுமென்றும், புதசுக்கிரர்கள் ஆறு எட்டு இடங்களில் இருக்க வேண்டுமென்றும் சொல்கின்றார்கள். எது எப்படியானாலும் வேறு பாபக் கிரகங்களின் (சூர்யன், செவ்வாய் மற்றும் சனி) சேர்க்கை இல்லாத போது இந்த யோகம் பலமான யோகமாக மாறி ஜாதகருக்குப் பெருமையையும். புகழையும், செல்வத்தையும் கொண்டு வந்து சேர்க்கின்றது.
யோகம் 3:
சூர்யனைத் தவிர்த்து மீதமுள்ள செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது பலவோ அல்லது யாவுமோ சந்திரனிருக்கும் ராசிக்கு இரண்டாவது ராசியில் இருந்தால் இது சுனபா யோகம் என்று அழைக்கப்படுகிறது. சந்திரனிருக்கும் ராசிக்குப் பன்னிரண்டாவது ராசியில் ஏதேனும் ஒன்றோ பலவோ அல்லது யாவுமோ இருந்தால் அது அனபா யோகம் என்று அழைக்கப்படுகிறது. இரண்டாவது ராசியிலும், பன்னிரண்டாவது ராசியிலும் கலந்து இருந்தால் அது துருதரா யோகம் என்று அழைக்கப்படுகிறது. சந்திரனுக்கு இரண்டிலும், பன்னிரண்டிலும் எந்தக் கிரகமும் இல்லையென்றால் அது கேமத்ரும யோகம் என்றழைக்கப்படுகிறது.
சுனபா யோகத்தில் பிறந்தவன் தனது முயற்சியால் பெரும் பணக்காரனாக ஆவான். பெரிய பதவிகளை அலங்கரிப்பான். பெரும்புகழைச் சேர்ப்பான். அனபா யோகத்தில் பிறந்தவன் நோய்களற்ற உடலை உடையவனாகவும், அலங்காரப் பிரியனாகவும், சுகவாசியாகவும் இருப்பான். துருதரா என்ற யோகத்தில் பிறந்தவன் செல்வந்தனாகவும், அதிகமான வாகனங்களை உடையவனாகவும், கொடையாளியாகவும் இருப்பான். கேமத்ரும யோகத்தில் பிறந்தவன் பணக்காரனாகப் பிறந்து ஏழையாக மாறுபவனாக இருப்பான். உடலளவிலும், மனத்தளவிலும் கஷ்டங்களை அனுபவிப்பான். மனைவி, குடும்பம், குழந்தைகள் இல்லாதவனாக இருப்பான். சந்திரனுக்கு இரண்டு பன்னிரண்டாம் ராசிகளில் கிரகமில்லையென்றாலும் சந்திரனுக்குக் கேந்திரங்களில் கிரகங்கள் இருந்தால் இந்தக் கேமத்ரும யோகம் செல்லாதது ஆகிவிடுகின்றது. அதாவது கேமத்ரும யோகத்தின் கெட்ட பலன்கள் நடக்காமல் போய் ஜாதகர் சுபபலனையே அனுபவிப்பார்.
சன்னியாச யோகம் என்ற தலைப்புக் கொடுத்து நாம் எழுதியிருந்த கட்டுரையில் இரண்டு உதாரண ஜாதகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் 1.10.1931 தேதியிட்ட ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டு பன்னிரண்டில் கிரகங்கள் இல்லை. எனவே அந்த ஜாதகர் கேமத்ரும யோகம் உள்ளவர் ஆகிறார். சந்திரனுக்கு 1, 4, 7, 10-லும் கிரகங்கள் இல்லை. எனவே யோக பங்கமும் இல்லை. அவர் கேமத்ரும யோகத்தின் பலன்களைப் பூரணமாக அனுபவித்தவர் என்றே சொல்ல வேண்டும். 27.6.1968 என்ற தேதியிட்ட ஜாதகருக்கும் கேமத்ரும யோகம் உள்ளது. ஆனால் இந்த ஜாதகத்தில் சந்திரனுக்குக் கேந்திரத்தில் சுபக்கிரகங்களும், பாபக்கிரகங்களும் இருப்பதால் யோக பங்கமும் கிடைத்துள்ளது. ஆனால் அக்கிரகங்கள் பலமில்லாது போனதால் இந்த ஜாதகரும் நல்ல உணவு, உடையின்றி, குடும்பமும் இல்லாது தனித்தே வாழ்கின்றார்.
யோகம் 4:
புதன், குரு, சுக்கிரன் என்ற மூன்று கிரகங்களும் லக்னத்துக்கோ அல்லது சந்திரனுக்கோ 3, 6, 10, 11 என்ற இடங்களில் இருந்தால் பெரும் செல்வந்தனாக வாழ்கின்ற யோகம் கிடைக்கின்றது.
சந்திரனின் பட்ச பலத்தைப் பொறுத்தும் சுனபா, அனபா, துருதரா என்ற யோகங்களைச் செய்யும் கிரகங்களின் பலத்தைப் பொறுத்தும் இந்த யோக பலன்களில் கூடுதல், குறைவு ஏற்படும். இந்தப் பலன்கள் யாவும் யோகத்தைச் செய்யும் கிரகங்களின் தசை நடக்கும் காலங்களில் கைகூடும். கிரகங்களின் தசை (ஆயுளைக் கணக்கிடும் முறை - ஆயுர்த்தாயம் பாகம் 2) என்ற கடடுரையில் சொல்லியுள்ளபடி அறிந்து கொள்ளப்பட வேண்டும்.
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
