தனிமனிதனுக்கோ அல்லது ஒட்டு மொத்தச் சமுதாயத்துக்கோ பயன்படாத அறிவியலால் பயனேதுமில்லை. சோதிடத்தை அறிவியல் என்று ஏற்றுக்கொண்டால் அதனாலும் தனிமனிதனுக்கோ அல்லது சமுதாயத்துக்கோ பயனேதும் இருக்க வேண்டும். ஆனால் இச்சாத்திரத்தைப் பற்றிப் பேசும் எல்லோரும் பரிகாரங்களையும், தோஷங்களையும், பூர்வஜென்மப் புண்ணியத்தையும் பற்றிப் பேசுகின்றார்களே தவிர அறிவியல் நோக்கில் அதன் பயன்பாடு பற்றிப் பேசுவதில்லை. இந்தக் கட்டுரையின் மூலம் 2004ல் ஏற்பட்ட சுனாமியையும், அதனால் ஏற்பட்ட பேரழிவையும் பற்றி விளக்க உள்ளோம். நடந்த ஒன்றுக்கான காரணத்தைச் சோதிடர்களால் கூற இயலும் என்றும், நடக்கப் போவதைப் பற்றி அவர்கள் ஏதும் சொல்வதில்லை என்றும் ஒரு பழி அவர்கள் மேல் உள்ளது. இக்கட்டுரையைப் போன்று ஒரு பத்துக் கட்டுரைகளை ஒரு சோதிடரால் எழுத முடியும் என்றால் பதினோராவது கட்டுரையாக இனி நடக்கப் போகும் இயற்கைப் பேரழிவைப் பற்றியும் எழுத முடியும். 

சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாள் அந்த வருஷத்துக்கான ஆரம்ப நாள் என்று சொல்லப்படுவதால் 2004ம் ஆண்டு சித்திரை மாதப் பிறப்பை நாம் கணக்கில் எடுத்துக்கொள்வோம். 13.04.2004 செவ்வாய்க் கிழமை மாலை மணி 6.08க்கு சூரியன் மேஷ ராசியில் பிரவேசிப்பதால் அப்போதைய கிரக நிலைகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

sample horoscope

sample horosope

புத்தாண்டு பிறக்கும் போது கன்யா லக்னம் உதயமாகின்றது. தேச மக்களின் சுகத்தையும், சந்தோஷத்தையும், வீட்டையும் குறிக்கும் நான்காமிடம் தனுசில் 26 பாகை 15 கலையில் உள்ளது. நான்காம் பாவத்துக்கு, நான்காம் பாவாதிபதி குருவின் பார்வை மட்டுமின்றிச் சனியின் ஏழாம்பார்வையும், செவ்வாயின் எட்டாம் பார்வையும் கிடைக்கின்றன. சனி, செவ்வாய் பார்வை நான்காம் பாவத்துக்கு மட்டுமின்றி, நான்காம் பாவாதிபதி குருவின் மேலும் விழுவதால் நான்காம் பாவம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

யுரேனஸ் என்று மேலைநாட்டவர்களால் அழைக்கப்படும் கிரகம் நிலஅதிர்ச்சிகளோடும், இயற்கைப் பேரழிவுகளோடும் சம்பந்தமுள்ளது என்று கூறப்படுகிறது. மேலேயுள்ள ஜாதகத்தில் யுரேனஸ் நான்காம் பாவாதிபதி குருவோடு நேர் எதிர்ப் பார்வையில் உள்ளது மட்டுமின்றி துக்கத்துக்குக் காரகர் எனப்படும் சனியோடு திரிகோணத்தில் உள்ளது.

மேலும் மேஷத்தில் சூரியன் பிரவேசிக்கும் போது மேஷம், கடகம், துலாம், மகரம் ராசிகளில் சந்திரன் இருந்தால் எரிமலை வெடித்தல், நிலஅதிர்ச்சி, புயல், மழை போன்ற இயற்கைப் பேரிடர்கள் வர அதிக வாய்ப்பு உண்டு. இங்கே 2004 புத்தாண்டு தினத்தில் சந்திரன் மகர ராசியில் இருக்கின்றது.

மரணத்தைக் கொண்டு வரும் எட்டாமிடத்ததிபதி செவ்வாய் கடக நவாம்சத்தில் இருப்பதும், யுரேனஸ் மகர நவாம்சத்தில் இருப்பதும் உயிர்ச்சேதத்தைக் குறிக்கின்றன. துவாதசாம்சச் சக்கரம் கீழே உள்ளவாறு அமைகின்றது. 

sample horoscope

நான்காம் பாவாதிபதி குரு நான்குக்கு எட்டாமிடத்ததிபதி சந்திரன், சனி ஆகிய கிரகங்கள் துவாதசாம்சச் சக்கரத்தில் லக்னத்துக்குக் கேந்திரங்களில் இருப்பதும், எட்டுக்குடைய செவ்வாயும் இயற்கைச் சீற்றங்களைக் கொண்டு வரும் யுரேனஸ் என்ற கிரகமும் 6, 11 என்ற உபசயங்களில் இருப்பதும் இயற்கைச் சீற்றத்தையும் அதனால் வரும் பேரழிவையும் உறுதிப்படுத்துகின்றன.

 

13.04.2004 மாலை மணி 6.08க்குப் பிறக்கும் புத்தாண்டில் கிரகங்களுக்கான தசா நாட்களைக் கணக்கிட்டுப் பார்க்கும்பொழுது கீழ்க்கண்டவாறு அமைகின்றன.

sample horoscope

 

ஆழிப் பேரலைகள் வந்து தமிழ்நாட்டுக்குப் பெரும் இழப்பைத் தந்த நாள் 26.12.2004. அன்று செவ்வாயின் தசா நடைபெற்றுள்ளது. செவ்வாய் எட்டாமிடத்து அதிபதியாய் வந்து நான்காமிடத்தையும், நான்காமிடத்து அதிபதியான குருவையும் பார்ப்பதால் செவ்வாயின் தசா நடைபெற்ற போது இந்த இழப்புக்கள் வந்ததில் வியப்பில்லை.

sample horoscope

செவ்வாய் தசா ஏற்கும் போது துலா லக்னம் உதயமாகின்றது. 13.04.2004 தேதிய செவ்வாய் துலா லக்னத்துக்கு எட்டாமிடத்தில் இருப்பதோடு மட்டுமின்றி, 03.12.2004 தேதிய துலா லக்னத்தில் அட்டமாதிபதி சுக்ரனோடு சேர்க்கை பெற்றுள்ளது. எனவே செவ்வாய் பெரிய அழிவுக்கும், உயிரிழப்புக்கும் காரணமானதில் ஆச்சர்யமில்லை.

புத்தாண்டு பிறக்கும் நாள் மட்டுமல்லாமல் சாயன சூர்யன் மேஷம், கடகம், துலாம் மற்றும் மகர ராசிகளில் பிரவேசிக்கும் நாட்கள், அந்த நாட்களில் சந்திரனின் நிலை யுரேனஸ், சனி போன்ற கிரகங்களின் பார்வை, சேர்க்கை இவை எல்லாமும் அந்த வருடப் பருவகால நிலைகளையும், இயற்கைச் சீற்றங்களையும் நமக்கு அடையாளம் காட்ட வல்லவை.

6, 8, 12 போன்ற இடங்களையடைந்த பாவாதிபதிகள் பாவத்துக்கு நாசத்தைச் செய்வதைப் போலவே 6, 8, 12 அதிபதிகள் பாவத்தை அடைந்தாலும், அப்பாவம் நாசமுறும். எனவே ஒவ்வொரு ஜாதகக் கட்டமும் ஒவ்வொருவிதமான பலனையளிக்கும் என்பதை உணர்ந்தே அவற்றைப் பரிசீலனை செய்ய வேண்டும்.

பிருஹத் சம்ஹிதையில் ஒவ்வொரு நட்சத்திரமும், கிரகமும் பூமியின் எந்த எந்தப் பகுதிகளைக் குறிக்கின்றன என்பது பற்றிய விரிவான செய்திகள் உள்ளன. அவற்றை நன்கு கற்றுத்தேர்ந்து முக்கியமான இயற்கைப் பேரிடர்கள் நடந்த முந்தைய நாட்களை நன்கு பரிசீலனை செய்தால் வரப்போகும் கஷ்டங்களையும் முன்னமேயே சொல்ல முடியும்.

 

This Week’s Quote:

Nietzsche was stupid and abnormal.

-  Leo Tolstoy.

 

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 78 guests and no members online