நாம் 02.04.17ல் வெளியிட்டிருந்த சோதிடப் புதிர் - பரிவர்த்தனை யோகம் என்ற கட்டுரையில் ஒரு ஜாதகத்தைக் கொடுத்து ஜாதகர் என்ன தொழில் மேற்கொண்டிருப்பார் என்று கேட்டிருந்தோம். இரண்டு பேர் மட்டுமே தங்களது கருத்தைச் சொல்லியிருந்தார்கள். போட்டித் தேர்வு என்றாலே நம் மக்களுக்குப் பயம். எனவே கட்டுரையைப் படித்துவிட்டு அபிப்ராயம் சொல்லாமல் பெரும்பாலோர் ஒதுங்கிக் கொண்டதில் வியப்பில்லை.
முதலில் பதில் எழுதியவர் திரு.கணேஷ்ராம். இவர் அந்த ஜாதகர் இசை பயின்று இசை பயிற்றுவித்தவர் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு இவர் கூறியிருந்த காரணங்கள் இரண்டு. வாக்குஸ்தானத்தில் புதன் சுக்கிரனோடு பரிவர்த்தனை, நவாம்சத்தில் இரண்டில் சுக்கிரன், ஆகியவைதாம் அந்த இரண்டு காரணங்கள். செவ்வாய், சூரியன் நவாம்சத்தில் நீசவீட்டை அடைந்ததால் காவல்துறை,கல்வித்துறையில் பணியாற்ற வாய்ப்பில்லை என்பதும் அவர் கருத்து.
இரண்டாவது பதில் எழுதியவர் திரு.அபிஷேக். புதன் ஆறாமிடத்து அதிபதியாக வந்து இரண்டில் இருந்து பாபர் பார்வை பெறுவதாலும்,சுக்கிரன் புதன் ஒருவருக்கொருவர் இரண்டு, பன்னிரண்டில் இருப்பதாலும், கல்வித்துறை மற்றும் இசைத்துறையில் இந்த ஜாதகர் பிரகாசிக்க வாய்ப்புக்கள் இல்லை. சூரியன், செவ்வாய், குரு இவர்கள் பலத்திருப்பதால் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றும் வாய்ப்புக்கள் உண்டு என்பது இவரது கருத்து.
இந்த இரண்டு பேருக்கும் நாம் நன்றி கூறிக் கொள்கின்றோம். தங்களது அபிப்ராயங்களைப் பொதுவான வலைத்தளத்தில் எழுதித் தங்களது சோதிட ஆர்வத்தை வெளியிட்டமைக்காக இவர்கள் இருவருக்கும், நாமும் ஒரு சோதிட ஆர்வலர் என்ற முறையில், நம்முடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சோதிடர்கள் மத்தியில் அசைக்க முடியாத சில மரபுவழிப் பார்வைகள் உண்டு. பரிவர்த்தனை யோகம், வியாழனின் பார்வை, உச்ச கிரகங்களின் பலம் இவையெல்லாம் அந்தப்பார்வைகளில் அடக்கம். அதேபோல் இரண்டு கிரகங்கள் ஒருவருக்கொருவர் இரண்டு, பன்னிரண்டில் இருத்தல், ஒருவருக்கொருவர் ஆறுஎட்டில் இருத்தல், இவைகள் மிகவும் பாதிப்புக்களை உண்டாக்கும் என்ற கருத்துக்களும் மரபுவழிக் கருத்துக்கள்தாம். ஆனால் அவையெல்லாம் முக்கியமில்லை என்பதைச் சொல்லவே இந்த ஜாதகத்தை நாம் பரிசீலனைக்கு எடுத்தோம்.
இந்த ஜாதகத்தில் சூரியன், செவ்வாய், வியாழன் இவை தத்தமது உச்ச வீட்டில் இருப்பதோடு 1, 10, 4 ஆகிய கேந்திரங்களிலும் இருப்பதால் ராஜயோகம் கிடைக்கின்றது. உச்ச வியாழன் சந்திரனையும், லக்னாதிபதியையும், பத்தாமிடத்தையும் பார்ப்பதோடு மட்டுமின்றிப் பத்துக்குடைய சனியையும் பார்க்கின்றது. ஆயுஷ்காரகன் சனி எட்டில். அந்த ராசிநாதன் உச்சம். ஆயுஷ்காரகனுக்கு வியாழனின் பார்வையோடு இயற்கை மித்ருவான புதனின் பார்வையும் கிடைக்கின்றது. ஆயுஷ்காரகனுக்கு 7, 8ல் புதன் சுக்கிரன். 3, 6ல் செவ்வாய், சூரியன் .இப்படி நல்ல அம்சங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
7.5.1956 காலை 6.00 மணிக்குப் பிறந்த இந்தப் பெண் குழந்தை 14 வயதில் இறந்து போனது. கொடுமை என்னவென்றால் இந்தப் பெண், பிறந்த குழந்தை போலவே 14 ஆண்டுகளும் இருந்தது. பேசாமல், கை கால்களைத் திடமாக அசைக்காமல்,தலைசுமத்தல் என்பார்களே அதுவும் இயலாமல், கைகால்கள் துவண்டு, தலையையும் சாய்த்துக்கொண்டு, ஒரு பொம்மை போல இருந்து மடிந்தது. பிறந்த சிசு போலச் சிரிக்கவும், அழவும் மட்டுமே அது அறிந்திருந்தது.
நாம் படித்தவரையில் இந்த மாதிரியான ஒரு ஜடம் போன்று வாழ்ந்து மடிவதற்கானச்சோதிடக் குறிப்புக்கள் நம் கண்களில் படவில்லை. நாம் எப்போதுமே வியாழனுக்குச் சிறப்பான பெருமையைக் கொடுப்பதில்லை. தீய பலன்களைக் கொண்டு வருவதிலும் வியாழனின் பார்வைக்குப் பெரும்பங்கு இருக்கிறது என்று அனுபவத்தின் மூலம் நாம் பாடம் பயின்றிருக்கின்றோம். ‘தனித்த வியாழனின் பார்வை, தனித்த சந்திரன் மீது பட்டால் அந்த ஜாதகத்தைத் தூரப் போடு’ என்பது என் தந்தையாரின் கட்டளை. அதற்குக் காரணம் அவரிடமிருந்த சாதகக் குறிப்புக்களில் இம்மாதிரிப் பார்வை மிக மோசமான பலன்களைக் கொடுத்ததுதான். நாம் இங்கே பரிசீலனைக்குக் கொடுத்த ஜாதகம் எமது சகோதரியின் மகள் ஜாதகம்தான்.
This Week’s Quote:
The world is full of magical things patiently waiting for our wits to grow sharper.
- Lord Russell
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
