திருமணம் பற்றிய பிரச்னங்களே அதிகம் இருப்பதால், விவாகப் பிரச்னம் குறித்து இந்த வாரம் எழுதுகின்றோம். முதலில் பிரச்ன நேரத்திய கிரக நிலைகள், லக்னம் முதலியவற்றை ஸ்புடரீதியாகக் கணித்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாவத்துக்கும் சுப மற்றும் அசுப கிரகங்களால் ஏற்படும் பார்வைகளின் பலம், கிரகங்களின் சத்ருமித்ருத்வம், உச்ச, நீச நிலைகள் இவற்றைக் கவனித்துக் கொண்டு அதன் பின்னரே பிரச்னம் குறித்து ஆராய வேண்டும்.
பிரச்ன கர்த்தா (கேள்வி கேட்பவர்) தனது வலது கை, இருதயம், சிரசு இவைகளைத் தொட்டபடி இருந்தால் விவாகம் உடனே நடைபெறும் என்றும், கால், முழங்கால் இவைகளைத் தொட்டபடி இருந்தால் தாமதமாகி விவாகம் நடக்கும் என்றும், இடது கை, ஆசனப் பக்கங்கள் இவைகளைத் தொட்டபடி இருந்தால் விவாகம் நடக்காது என்றும் சொல்ல வேண்டும்.
பிரச்ன லக்னாதிபதியும், ஏழாம் பாவாதிபதியும் சேர்ந்து இருந்தாலோ, அல்லது ஒருவர் மற்றொருவரின் வீட்டில் இருந்து பரிவர்த்தனை ஆகியிருந்தாலோ, விவாகம் விரைவில் நடைபெறும். பிரச்ன லக்னத்துக்கு 2, 4, 6, 8, 10, 12 இந்த பாவங்களில் தேய்பிறைச் சந்திரன் இருந்து, பாபர்களால் பார்க்கப்பட்டால் திருமணம் நடக்காது. யாமசுக்கிரன் பிரச்ன லக்னத்திற்கு 6, 8, 12 பாவங்களிலிருந்தாலும் திருமணம் உடனே நடக்காது. (யாமசுக்கிரன் என்பது குளிகனைப் போல் ஒரு கற்பனைக் கிரகம் ஞாயிற்றுக்கிழமைகளில் சூர்யோதயத்திலிருந்து 22 நாழிகையிலும், திங்களன்று 18 நாழிகையிலும், செவ்வாய்க்கிழமை 14 நாழிகையிலும், புதன் கிழமையில் 10 நாழிகையிலும், வியாழனில் 6 நாழிகையிலும், வெள்ளியன்று 2 நாழிகையிலும், சனிக்கிழமை 26 நாழிகையிலும் உதயமாகும். அந்த நேரத்திய உதய லக்ன ஸ்புடமே யாமசுக்கிரஸ்புடமாகும்).
பிரச்ன நேரத்தில் யாராவது ஒருவர் புதிய ஆடை அணிந்து கொண்டு வந்தாலும், பாத்திரங்கள், கண்ணாடி தும்பைப்பூ இவற்றைக் கண்டாலும் பிரச்ன கர்த்தா அல்லது வேறு ஒருவர் தமது கையினால் கண்களைத் துடைத்துக் கொள்வதைப் பார்த்தாலும், யாராவது ஒருவர் பாடிக்கொண்டு போவதைக் கேட்டாலும், சந்தனம், பன்னீர், கற்பூரம், குங்குமப்பூ, கஸ்தூரி போன்ற வாசனைத் திரவியங்களைக் காண நேர்ந்தாலும் விவாகம் உடனே நடக்குமென்று சொல்ல வேண்டும்.
பிரச்ன லக்னத்துக்கு ஏழாம் பாவாதிபனும், சுக்கிரனும், உபசய ஸ்தானங்களிலிருந்தாலும் விவாகம் உடனே நடக்குமென்று சொல்ல வேண்டும். சந்திரனாவது, சுக்கிரனாவது ஏழில் இருந்து லக்னத்தைப் பார்த்தாலும், சீக்கிரம் திருமணம் நடைபெறும். வளர்பிறைச் சந்திரன் சுபர்களால் பார்க்கப்பட்டு, 2, 3, 6, 7, 10, 11ம் பாவங்களிலிருந்தாலும், மிதுனம், கன்னி, துலாம் கும்பம் ஆகிய ராசிகளில் ஒன்று பிரச்ன லக்னமாக வந்தாலும் சீக்கிரமே திருமணம் நடக்குமென்று சொல்ல வேண்டும்.
மேலேயுள்ளவை யாவும் பல்வேறு நூல்களிலிருந்து திரட்டப்பட்ட குறிப்புக்களாகும். இனி நாம் நமது அனுபவத்தில் திருமணம் பற்றிய பிரச்னத்தை எவ்வாறு அணுகுகின்றோம் என்பதை எழுதுகின்றோம்.
- பிரச்ன நேர லக்னாதிபதி, பிரச்ன கர்த்தாவின் ஜன்ம ஜாதகத்தில் ஏழாமிடத்திலோ, அல்லது அதன் கேந்திரங்களிலோ இருந்தால் சீக்கிரம் திருமணம் நடைபெறும்.
- ஜாதகரின் ஜன்ம லக்னாதிபதி, பிரச்ன லக்னத்துக்கு ஏழிலோ, அல்லது மற்ற கேந்திரங்களிலோ இருந்தாலும் சீக்கிரம் திருமணம் நடைபெறும்.
- பிரச்ன லக்னத்தின் ஏழாம் பாவாதிபதிக்கும், ஜன்ம லக்னத்துக்கும் சம்பந்தம் இருந்தாலோ, அல்லது பிரச்ன லக்னத்துக்கும், ஜன்ம லக்னத்தின் ஏழாம் பாவாதிபதிக்கும் சம்பந்தம் இருந்தாலோ சீக்கிரம் திருமணம் நடைபெறும். (சம்பந்தம் என்பது சேர்க்கையாலோ, பரஸ்பரப் பார்வையாலோ ஏற்படுவது).
- பிரச்னம் செய்பவரின் ஜாதகத்தில் சந்திரன் எந்த ராசியில் இருக்கின்றாரோ, அதற்கு 1, 3, 6, 7, 10, 11 ராசிகளில் பிரச்ன காலச் சந்திரன் இருந்தாலும், சீக்கிரம் திருமணம் நடக்குமென்று சொல்ல வேண்டும்.
- ஜன்ம லக்னத்திற்கு ஏழாம் பாவாதிபதி, பிரச்ன சமயத்தில் ஜாதகத்தில் தானிருக்கும் இடத்திலிருந்து அஷ்டவர்க்க முறைப்படி சுபராசியில் இருந்தால், சீக்கிரம் திருமணம் நடக்குமென்று நிச்சயிக்கலாம்.
பொதுவாகப் பலன்களைச் செய்யக் கூடிய பாவாதிபதிகள் கேந்திரங்களில் இருந்தால் சீக்கிரமும், பணபரஸ்தானங்களில் இருந்தால் கொஞ்சம் தாமதமாகவும், ஆபோக்லீமஸ்தானங்களில் இருந்தால் மிகவும் தாமதித்தும் காரியங்கள் சித்தியாகும்.
பிரச்ன லக்னத்தில் உதயமாகும் சூர்ய அல்லது சந்திர ஹோரையை வைத்தும், லக்ன திரேஷ்காணங்களை வைத்தும், அயனம், ருது இவற்றைக் கண்டு பிடிக்கலாம். பிரச்ன காலச் சந்திரத்வாதசாம்ச ராசியின் திரிகோண ராசிகளில், விவாக காலச் சந்திரன் இருக்கும் என்று ஒரு குறிப்பு கூறுகின்றது. இவ்வாறு பல விசயங்களைக் கவனித்துச் சாதக, பாதக நிலைகளை ஆராய்ந்து பிரச்னத்துக்குச் சோதிடர் விடை கூறுவாரானால், அது சரியாகவே இருக்கும்.
This Week’s Quote:
The best part of beauty is that which no picture can express.
- Francis Bacon
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
