இராசி பலன்கள்:-


பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தவறாது இடம் பெறும் ஒரு தலைப்பு ‘இன்றைய இராசிபலன்’ என்பதாகும். நேற்றைக்கு இருந்த இடத்தை விட்டுச் சந்திரன் சுமாராகப் பதின்மூன்று பாகைகள் மட்டுமே நகர்ந்திருக்கின்றது, மற்ற கிரகங்களின் அசைவில் பெரிய மாற்றமில்லை என்பதை அணுவளவும் அறியாத பாமர ஜனங்கள் இராசிபலனை நம்புகிறார்கள் என்றால் சோதிடர்கள் அந்த நம்பிக்கையை வளர்ப்பது போல அது நடக்கும், இது நடக்கும், நல்ல சேதி வரும், உத்யோக உயர்வு வரும், வழக்கு பைசலாகும் என்றெல்லாம் பேசியும், எழுதியும் வருவது மிக வேடிக்கையாக இருக்கிறது.

 

வராகமிகிரரின் பிரஹஜ் ஜாதகத்தில் அஷ்டவர்க்கம் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றதே தவிர கோசார பலனுக்கென்று ஒரு அத்தியாயமும் கிடையாது. ஆனால் அவர் அவரது பிருஹத் சம்ஹிதை என்ற தொகுப்பு நூலில் கோசார பலன் பற்றி எழுதியிருக்கின்றார். இதைப் பற்றிக் குறிப்பிடும் பிரபல சோதிடர் கடலங்குடி நடேச சாஸ்திரிகள்  அஷ்டவர்க்கப் பலனுக்குச் சமமாகக் கோசார பலனை வராகமிகிரர் ஒப்பவில்லை என்றும், யவனேசுவரர், பாதராயணர் போன்ற மேதைகளும் அஷ்டவர்க்கத்தை அங்கீகரிப்பது போலக் கோசார பலனை ஒப்பவில்லை என்றும் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார். இராசி பலன் சரியாக வருகிறதா அல்லது அஷ்டவர்க்க முறைப்படி பலன் சரியாக வருகின்றதா என்பதை உதாரணங்கள் மூலம் சோதித்துப் பார்க்கலாம்.


முதலில் ராசிபலன்கள் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம். ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் எந்த ராசியில் இருக்கின்றதோ அந்த ராசியே அவரது ஜன்மராசி எனப்படும். சூர்யன் முதல் சனி வரையில் உள்ள ஏழு கிரகங்களும் இந்த ஜன்மராசியிலிருந்து  இந்தஇந்த இடங்களில் வந்தால் நல்லபலன்களையும், இந்தஇந்த இடங்களில் வந்தால் கெட்ட பலன்களையும் செய்யும் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. எந்த இடங்களில் நல்ல பலன்களையும், எந்த இடங்களில் கெட்ட பலன்களையும் செய்யும் என்பதைக் கீழ்க்கண்டவாறு அட்டவணைப்படுத்தலாம்.

 

table

 

இராசிச் சக்கரத்தில் இடம் பெற்றுள்ள கட்டங்கள் 12  ஆகும். ஏழு கிரகங்களும் 12 இராசிகளில் சஞ்சரிப்பதால் 7 x 12 = 84 இடங்களாகும். இதில் 36 இடங்களே நல்ல பலனைத் தருவதாலும் மீதி 48 இடங்கள் கெட்ட பலனைத் தருவதாலும் 3/7 பங்கே சுபத்தையும், 4/7 பங்கு அசுபத்தையும் தருகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எப்பொழுதுமே இன்பம் குறைவாகவும், துன்பம் அதிகமாகவும் இருக்கும் என்பதை சந்தேகமறத் தெரிந்துகொள்ளுங்கள். ஒரு புத்திசாலி வாசகர் இன்னொன்றையும் தெரிந்து கொள்ளலாம். ஏழரைச் சனி போய்விட்டது. இனி எல்லாம் சுகமே என்பது பொய் என்பதுதான் அது. ஏனெனில் ராசிக்கு 3, 6, 11 ஆகிய மூன்று இடங்களில் சனி சஞ்சரிக்கும் ஏழரை வருடங்கள் மட்டுமே சனி சுகத்தைத் தரும். மீதி இருபத்திரண்டரை வருடங்கள் அது கெட்ட பலனைத் தரும் என்பதுதான் உண்மை. ஏழரைச் சனிக்கு அப்புறம் உங்களுக்கு யோகம்தான் என்று சோதிடர் யாராவது கூறினால் அவர் சோதிட சாஸ்திரத்தின் அரிச்சுவடியைக் கூடப் படிக்கவில்லை என்பதுதான் உண்மை.

தொலைக்காட்சிகளில் தோன்றி ராசிபலன் சொல்பவர்கள் அன்றைய நாளில் சந்திரன் எந்த ராசியில் இருக்கின்றான் என்பதைச் சொல்லிவிட்டு பின் பலன்களைச் சொல்கின்றார்கள். அவ்வாறு சொல்லும் போது ஜன்மராசிக்கு 2, 4, 5, 8, 9, 12 ஆகிய இடங்களில் சந்திரன் இருந்தாலும் 8ம் இடத்தை மட்டும் விட்டுவிட்டு 2, 4, 5, 9, 12 ஆகிய இடங்களுக்கும் சுபமான பலனையே சொல்கின்றார்கள். எட்டாமிடத்தில் சந்திரன் இருப்பதால் சந்திராஷ்டமம் என்று சொல்லி மிகவும் பயமுறுத்துகிறார்கள். சிலர் ஜன்மராசிக்குச் சொல்ல வேண்டிய பலனை விட்டுவிட்டுச் சந்திரன் கோசாரத்தில் எந்த ராசியில் இருக்கின்றானோ அந்த ராசிக்கான பலனைச் சொல்கின்றார்கள். அன்றைய சந்திரன் ஜன்மராசிக்கு 1, 3, 6, 7, 10, 11ல் இருந்தால் நல்ல பலனும் 2, 4, 5, 8, 9, 12ல் இருந்தால் கெட்ட பலனும் சொல்ல வேண்டும்.

ஜன்மராசியிலேயே சந்திரன் இருந்தால் நல்ல உணவு, உடை, படுக்கை இவற்றை வழங்குகிறான். இரண்டில் பணவிரயம், முயற்சிகளில் தடை இவற்றைத் தருகின்றான். மூன்றில் சுகம், பணம், காரிய வெற்றி ஆகியவற்றையும் நான்கில் மனக்குழப்பத்தையும் ஜந்தாமிடத்தில் அவமானம், சுகக்கேடு, முயற்சிகளில் தடை இவற்றையும் தருகின்றான். ஆறாமிடத்தில் பணம், சுகம், சத்துருநாசம் இவற்றையும் ஏழாமிடத்தில் வாகன சுகம், நல்ல உணவு, செல்வம் இவற்றையும் எட்டாமிடத்தில் இன்னவென்றறியாத  பயத்தையும், ஒன்பதாமிடத்தில் சிறை, துக்கம், வயிற்றுநோய் இவற்றையும் பத்தாமிடத்தில் எல்லா முயற்சிகளிலும் வெற்றியையும், பதினோராமிடத்தில் நல்ல நண்பர்கள், பணம் இவற்றையும் பன்னிரண்டாமிடத்தில் நாற்கால் பிராணிகள் மூலம் கஷ்டத்தையும் (பெங்களுர் வி.ராமன் இதை விபத்துக்கள் காயங்கள் என்று காலத்துக்கேற்ப மொழி பெயர்த்துள்ளார்) தருகின்றான். இப்பலன்களைக் காலதேசவர்த்தமானத்தை ஒட்டிச் சொல்ல வேண்டுமே தவிர மனம் போன போக்கில் சொல்வது அழகல்ல. என்னைக் கேட்டால் இப்பலன்களில் நூற்றுக்கு நூறு பொருந்துவது எட்டாமிடப் பலன்தான். வராகமிகிரர் இன்னவென்றறியாத பயத்தை உண்டு பண்ணும் என்று சொல்லியிருப்பது சோதிடர்கள் சந்திராஷ்டமம் என்று சொல்லிக் கிளப்பும் பீதியைத்தான்.

கீழே பன்னிரண்டு ஜாதகக் கட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஜாதகர் பிறந்த நாளும், திருமண நாளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஜாதகர் பிறந்த போது சந்திரன் இருக்கும் இராசி ஜன்மராசி எனக் குறிக்கப்பட்டுள்ளது. மற்றபடி ஜாதகக் கட்டத்தில் திருமண நாளன்று சூர்யன், சந்திரன், செவ்வாய், வியாழன், சனி முதலிய கிரகங்கள் எந்த ராசியில் உள்ளன என்பதைக் காட்டியிருக்கின்றேன். நன்றாகக் கவனிக்கவும். கிரகங்கள் திருமணநாளில் உள்ளபடி

 

sample horoscope

sample horosope

 

sample horoscope

sample horosope

 

sample horoscope

sample horosope

 

sample horoscope

sample horosope

 

sample horoscope

sample horosope

 

sample horoscope

sample horosope

 

மேலேயுள்ள ஜாதகங்கள் மூலம் தெரிய வருவது என்னவென்றால் கோசாரப்படி சந்திரன் பன்னிரண்டு இடங்களில் எந்த இடத்துக்கு வந்தாலும் திருமணம் முடியும் என்பதுதான். இதைப் போன்றே எல்லா சுப, அசுப காரியங்களும் எப்போதும் நடக்கும் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்வதற்காகவே இந்த உதாரணங்கள் தரப்பட்டன. சந்திராஷ்டமத்தில் திருமணம் முடித்தவர் ஒரு  சுவாரஸ்யமான நண்பர். அவர் ‘நியூமராலஜிபடி எனது திருமண நாள் இறங்கு வரிசையில் உள்ளதே’ (10-9-8-7) என்று வேடிக்கையாகச் சொல்வார். வியாழன் கோசார ரீதியாக ஒன்று, மூன்று, ஆறு, பன்னிரண்டு என்று அசுப பலனைத் தரும் இடங்களில் வந்தபோதும் திருமணம் நடந்திருக்கின்றது. அதைப் போலச் சனி எட்டு, நான்கு, பன்னிரண்டு, இரண்டு ஜன்மம் ஆகிய இடங்களில் வந்த போதும் திருமணம் நடந்திருக்கின்றது. எனவே ஏழரைச் சனி கழியட்டும், ஜன்ம குரு போகட்டும் என்று சொல்லி எந்த சோதிடராவது உங்கள் பிள்ளைகளின் திருமணத்துக்குத் தடை போட்டால் அதைக் காதில் வாங்கிக் கொள்ள வேண்டாம். கோசாரம் மிக மோசமாக இருந்தும் திருமண வாழ்க்கையில் உடனடியாகப் பாதிப்பு இல்லை என்பதற்காகவே முதல் மற்றும் ஏழாவது கட்டங்களில் கணவர் பற்றிய குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.


அப்படியானால் எப்படித்தான் கோசார பலனைச் சொல்லுவது? அஷ்டவர்க்கம் மூலமே கோசார பலனைத் தெரிந்துகொள்ள முடியும். கோசார பலனைப் பார்க்கும் போது வேதை ஸ்தானங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதும் சிலர் அபிப்ராயம். பெங்களுர் வி.ராமன் கீழ்க்கண்டவாறு தனது கருத்துக்களை எழுதுகின்றார்.

Gochara results should be judged by reference to vedhasthanas. The present day astrologers seldom consider these minute details with the result that most of the predictions made by them are being falsified, thus bringing the fair name of astrology into utter disgrace….Astrological predictions can be accurate when the influences of birth chart are blended with those of   gochara and ashtaka varga together with vedha or obstructing forces.


இது போலவே கிரகப் பெயர்ச்சிகளும். எட்டிலிருக்கும் குரு ஒன்பதுக்கு வந்தால் மட்டும் அதிர்ஷ்டம் பொங்கிக்கொண்டு வந்துவிடாது. அப்படியானால் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிர்ஷ்ட மழை கொட்ட வேண்டுமே! ஜன்ம காலத்தில் வியாழன் லக்னத்துக்கு எந்த இடத்தில் இருக்கின்றது. நடப்பில் வியாழன் லக்னத்துக்கு எந்த இடத்தில் வருகின்றது. ஜாதகனின் பொதுவான Status என்ன ஜன்ம காலப் பத்தாமிடத்தின் அதிபதி எப்படியிருக்கின்றார் என்பதையெல்லாம் பொறுத்துத்தான் பலன்கள் சொல்ல வேண்டுமே தவிர ராசியை வைத்து அல்ல. லக்னத்தை வைத்துச் சொல்லும் பலன்கள்தாம் பெரும்பாலும் சரியாக இருக்கும்.

எனவே குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி என்று வெளி வரும் புத்தகங்களையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்களது மனம் மிகத் தெளிவாக இருக்கும் போது ஆரம்பிக்கும் காரியங்கள் யாவுமே விரைந்து முடியும். ஒவ்வொருவர் மனத்துக்கும் இந்த அபூர்வசக்தியுள்ளது. மனமே நம்முடைய வெற்றி தோல்வியை நமக்குச் சொல்லும் சக்தி படைத்தது. அதைக் கவனிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

சோதிட சாஸ்திரம் மிக நுட்பமானது. பூஜை புனஸ்காரங்களால் அதை அறிந்துவிட முடியாது. உபாசனை வேண்டும், குருவருள் வேண்டும் என்பதெல்லாம் மிகையான வார்த்தைகள். சோதிடம் பயில்வதற்குக் கணக்கு நன்றாகச் செய்யும் திறமை வேண்டும். ஞாபக சக்தி நிறைய வேண்டும். நிறைய ஜாதகங்களைப் பார்ததுக் குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். நாம் எதிர்பார்க்காத ஒன்று ஒரு ஜாதகருக்கு நடந்தால் அது ஏனென்று விடை கிடைக்கும் வரை அந்த ஜாதகத்தை ஆராய்ந்து பயிலும் மனம் வேண்டும். இவையெல்லாம் இருந்து சோதிடம் பயின்றவர்கள் மட்டுமே சரியாக பலன் சொல்ல முடியும்.

சில குறிப்புகள்:

பெரும்பாலான சோதிடர்களுக்கு கிரகங்களுக்கிடையே உள்ள சத்ரு, மித்ரு சம நிலைகள் தெரியவில்லை. ஒரு பஞ்சாங்கத்தில் மேஷத்தைச் சூரியனின் நட்பு வீடு என்றும், விருச்சிகத்தைப் பகை வீடு என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இது தவறு. கீழ்க்கண்ட அட்டவணையை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டியது.சோதிடம் பயில ஆரம்பிக்கும் மாணவரின் தலையாய கடமையாகும்.

 

table

 

ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் இரண்டாவது, கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் புதிய கட்டுரைகள் வெளியாகும்.


 

அடுத்த கட்டுரை ‘ராஜயோகம் யாருக்கு?’


ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 224 guests and no members online