சோதிடத்தைப் போலவே மருத்துவமும் அறியப்படாத நிறைய ரகசியங்களை உள்ளடக்கிய விஞ்ஞானம். மிகப்பழைய காலத்திலிருந்தே நோய்களுக்கான காரணத்தையும், காரியத்தையும் தெரிந்துகொள்ளச் சோதிடர்கள் முயன்று வந்திருக்கின்றார்கள். ஆனால் இந்தியச் சோதிட வல்லுனர்கள் இத்துறையில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. மேலைநாடுகளில் MEDICAL ASTROLOGY என்றழைக்கப்படும் மருத்துவம் சம்பந்தப்பட்ட சோதிடம் வளர்ந்துள்ள அளவுக்கு இங்கே வளரவில்லை. இங்கே நோய்களின் பெயர்ப்பட்டியலைவிட நோய்களைத் தீர்க்கும் பரிகாரத் தலங்களின் பெயர்ப்பட்டியல் மிகப் பெரியதாகிவிட்டது கூட இதற்கான அடிப்படைக் காரணமாக இருக்கலாம்.

கால புருஷனின் தலையாக மேஷராசியும், முகம் கழுத்து இவையாக ரிஷபமும், தோள் கை இவையாக மிதுனமும், மார்பாகக் கடகமும், இருதயமாகச் சிம்மமும், வயிறாகக் கன்னியும், தொப்புள், இடை, சிறுநீரகங்களாகத் துலாமும், ஜனனேந்திரியம், ஆசனவாய் இவையாக விருச்சிகமும், இரண்டு தொடைகளாகத் தனுசும், முழங்கால்களாக மகரமும், கணுக்கால்களாகக் கும்பமும், பாதங்களாக மீன ராசியும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன.

வராகமிகிரர் தனது பிருஹஜ் ஜாதகத்தின் கிரகயோனிபேதாத்யாயத்தில் சூர்யனை எலும்புக்கும், சந்திரனை இரத்தத்திற்கும், செவ்வாயை எலும்புக்குள் இருக்கும் மஜ்ஜைக்கும், புதனைத் தோலுக்கும், குருவை உடம்புக்கு ஸ்தூலத்தன்மையைக் கொடுக்கும் கொழுப்புக்கும், சுக்கிரனை வீர்யத்திற்கும், சனியை நரம்புக்கும் அதிபர்களாகச் சொல்கின்றார். மேற்கூறிய கிரகங்களின் பலத்தைப் பொறுத்து இந்தத் தாதுக்கள் பலமானதாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று நாமாகப் புரிந்துகொள்ள வேண்டியது தான். ஏன் இவை சொல்லப்பட்டன என்ற விவரமில்லை.

ஜன்மகால லக்ஷணாத்யாயத்தில் லக்னத்தின் முதல் திரேக்காணத்தில் ஜாதகன் பிறந்தான் என்றால் தலை முதல் கழுத்துவரைக்கும் உள்ள பகுதிக்குள் மச்சம், மரு முதலானவை இருக்கும் என்றும், இரண்டாவது திரேக்காணத்தில் பிறந்தான் என்றால் கழுத்து முதல் உந்தி வரைக்கும் உள்ள பகுதிக்குள் மச்சம், மரு முதலானவை இருக்கும் என்றும், மூன்றாவது திரேக்காணத்தில் பிறந்தான் என்றால் இடுப்பிலிருந்து பாதம் வரைக்குமுள்ள பகுதிக்குள் மச்சம், மரு முதலானவை இருக்கும் என்றும் குறிப்பிடுகின்றார். பாபக்கிரகங்களின் சம்பந்தம் பெற்றால் காயம், வடு இவை பிறந்த பின்னால் வரக்கூடும் என்றும் குறிப்பிடுகின்றார். இதைக் கொஞ்சம் விரிவாக அலசிப் பார்க்கலாம்.

ஒரு ஜாதகன் ஏதாவது ஒரு லக்னத்தில் முதல் 10 பாகைகளுக்குள் பிறந்தான் என்று வைத்துக்கொண்டால்  லக்னத்தைத் தலையாகவும், 2-வது ராசியை வலக்கண்ணாகவும், 3-வது ராசியை வலது காதாகவும், 4-வது ராசியை வலப்பக்க நாசித்துவாரமாகவும், 5-வது ராசியை வலது கன்னமாகவும், 6-வது ராசியை வலது தாடையாகவும், 7-வது ராசியை வாயாகவும் கருத வேண்டும். பன்னிரண்டாம் ராசியை இடது கண்ணாகவும், பதினோராவது ராசியை இடது காதாகவும், பத்தாவது ராசியை இடப்பக்க நாசித்துவாரமாகவும், ஒன்பதாவது ராசியை இடது கன்னமாகவும், எட்டாவது ராசியை இடது தாடையாகவும் கருத வேண்டும்.

11 முதல் 20 பாகைகளுக்குள் பிறந்தான் என்றால் லக்னத்தைக் கழுத்தாகவும், 2-வது ராசியை வலது தோளாகவும், 3-வது ராசியை வலக்கையாகவும், 4-வது ராசியை வலப்பக்கமாகவும், (கக்கத்துக்கும் இடுப்புக்குமிடையே உள்ள பகுதி) 5-வது ராசியை வலப்பக்க மார்பாகவும், 6-வது ராசியை வலப்பக்க வயிறாகவும், ஏழாவது ராசியை நாபியாகவும் கருத வேண்டும்.  முன்போலவே 12ம் ராசி இடது தோளாகவும், 11ம் ராசி இடது கையாகவும், 10ம் ராசி இடப்பக்கமாகவும், 9வது ராசி இடது மார்பாகவும், 8-வது ராசி இடப்பக்க வயிறாகவும் கருதப்பட வேண்டும்.

இதைப் போலவே மூன்றாவது திரேக்காணத்தில் பிறந்தவர்களுக்கு இடுப்புக்குக்; கீழேயுள்ள வலப்பக்க அங்கங்களை லக்ன முதல் 7 ராசி வரையும், இடப்பக்க அங்கங்களை பன்னிரண்டு முதல் 6 ராசி வரையும் அடையாளங் கண்டு கொள்ள வேண்டும். மேற்சொன்ன ராசிகளில் பாபக்கிரகங்கள் இருந்து சொந்த நவாம்சத்தில் இல்லாமல் வேறு அம்சங்களில் இருந்தால் ஜாதகன் பிறந்த பிறகு ஏற்படும் காயங்களால் மேற்சொன்ன உடலின் பாகங்களில் வடுக்கள் ஏற்படும் என்று வராகமிகிரர் குறிப்பிடுகின்றார். Times of Astrology என்ற மாத இதழின் ஆசிரியராக இருந்த Late R.சந்தானம் இந்தப் பிரிவினைகளை வைத்து அந்தந்த பாகங்களில் நோய் வரக் கூடும் என்ற முடிவுக்கு வரலாம் என்று குறிப்பிட்டிருந்தார். இரண்டாவது த்ரேக்காணத்தில் பிறந்தவர்களுக்கு ஒன்பதாமிடம்  இடது மார்பாக வருவதால் ஒன்பதாமிடத்தை வைத்து இருதய நோய் வரலாம் என்ற முடிவுக்கு வந்தோமானால், முதல் மற்றும் மூன்றாவது திரேக்காணத்தில் பிறந்தவர்களுக்கு இருதய நோயே வராது என்ற முடிவுக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே இந்த அங்கப் பிரிவினைகளை வராகமிகிரர் எதற்குச் சொன்னார் என்று தீவிரமாகப் பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

மேலைநாட்டுச் சோதிடர்கள் மேஷம் முதல் மீனம் வரையுள்ள ராசிகளை உடலின் பல்வேறு பாகங்களைக் குறிப்பனவாகப் பிரித்துள்ளனர். அதே போல சூர்யன் முதல் சனி வரையுள்ள கிரகங்களும் உடலின் பல்வேறு பாகங்களைக் குறிப்பனவாகப் பகுக்கப்பட்டுள்ளன. ஆறாமிடம், அங்கேயுள்ள கிரகங்கள் முதலியவற்றால் நோய்கள் சொல்லப்பட வேண்டும் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும் ஆறாமிடத்துக்கு எந்தக் கிரகத்தின் சம்பந்தமும் பார்வையும் இல்லாமல் இருந்தால் எவ்வாறு முடிவுக்கு வரவேண்டும் என்ற விதிகள் இல்லை.

வராகமிகிரர் ப்ருஹஜ் ஜாதகத்தில் குறிப்பிடும் சில நோய்கள்:

  • மேஷம், ரிஷபம், தனுசு இவைகளில் ஒன்று லக்னமாக வந்து பாபக் கிரகங்களால் பார்க்கப்பட்டால் பற்களில் நோயுள்ளவன்.
  • மேஷம், சிம்மம், தனுசு, ரிஷபம், மகரம், விருச்சிகம், கும்பம் இவைகளில் ஒன்று லக்னமாக வந்து பாபக்கிரகங்களால் பார்க்கப்பட்டால் கண்களில் நோயுள்ளவன்.
  • சனி லக்னத்துக்கு ஐந்து ஒன்பதாமிடங்களில் இருந்து பாபக்கிரகங்களால் பார்க்கப்பட்டால் பலவிதமான நோய்கள் தாக்கும்.
  • செவ்வாய் லக்னத்துக்கு ஐந்து ஒன்பதாமிடங்களில் இருந்து பாபக் கிரகங்களால் பார்க்கப்பட்டால் ஏதாவது ஒரு அங்கத்தில் குறைவு ஏற்படும்.
  • ஏழாமிடத்தில் சனி இருக்கும் போது, லக்னத்தில் குரு இருந்தால் வாத நோய் வரும்.
  • ஏழாமிடத்தில் செவ்வாய் இருக்கும் போது, லக்னத்தில் குரு இருந்தால் மன நோயால் பிடிக்கப்படலாம்.
  • சனி ஜன்மலக்னத்தில் இருக்கும் போது, செவ்வாய் ஐந்து, ஏழு அல்லது ஒன்பதாமிடத்தில் இருந்தாலும் மனநோய் வரக்கூடும்.
  • தேய்பிறைச் சந்திரன் சனியோடு சேர்ந்து பன்னிரண்டாமிடத்தில் இருந்தாலும் மனநோய் வரும்.
  • மேஷம், கடகம், சிம்மம், மகரம், மீனம் ஆகிய ராசிகளில் ஏதாவது ஒன்றில் அம்ச சக்கரத்தில் சந்திரனிருக்கும் போது சனி, செவ்வாய் இவர்களுடன் சேர்ந்தாலோ பார்க்கப்பட்டாலோ குஷ்டம் (Leprosy) என்ற நோய் வரும்.
  • விருச்சிகம், கடகம், ரிஷபம், மகரம் ஆகிய ராசிகளில் ஒன்று ஐந்தாமிடம் அல்லது ஒன்பதாமிடமாக வந்து பாபர்களால் பார்க்கப்படுமானாலும் குஷ்டம் என்ற நோய் வரும். சுபர்களின் திருஷ்டி இருக்குமானால் தோல் வியாதிகள் வரலாம்.
  • சூர்யன் மகரராசியில் இருக்கும் போது (தை மாதம்) சந்திரன், சனி, செவ்வாய் இவர்களுக்கு மத்தியில் இருந்தால் மூச்சுத் திணறல், சயம் (T.B.) வயிறு வீங்குதல், அஜீர்ணம் என்ற ரோகங்கள் வருகின்றன.
  • சூர்யன் வீட்டில் சந்திரனும், சந்திரன் வீட்டில் சூரியனும் மாறி இருக்கும் போது பிறந்தவர்களுக்கு இரத்தச் சோகை நோய் வரலாம்.

தற்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு வரும் நீரிழிவு (DIABETES), இரத்தக்கொதிப்பு (HYPERTENSION), நுரையீரல் வியாதிகள், கல்லீரலைத் தாக்கும் நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள், புற்றுநோய், மூளைச்சிதைவு போன்றவற்றுக்கான குறிப்புகள் நம்முடைய சோதிட நூல்களில் இல்லை.

பிற்கால நூலான பலதீபிகையில் கிரகங்களுக்கான நோய்களைக் கீழ்க்கண்டவாறு காண முடிகிறது.

சூர்யன் பித்தம், உஷ்ணம், சுரம், தேக எரிச்சல், சயம், இருதய ரோகம், கண்ணோய், தோல் எலும்புகளில் வரும் நோய்கள், அக்னி, ஆயுதம், விஷம் முதலியவற்றால் ஆபத்து
சந்திரன் தூக்கமின்மை, சளி, குளிர்காய்ச்சல், இரத்தத்தில் ஏற்படும் வியாதிகள், மனநோய்
செவ்வாய் தாகம், ரத்தரோகம், கோபம், பித்தம், குஷ்டம், தலைவலி
புதன் காரணம் தெரியாத பயம், கண்வலி, கழுத்து, மூக்கில் வரும் நோய்கள், தோல் நோய்கள்
குரு மயக்கம், கபம், காது நோய்
சுக்கிரன் வாதம், சிறுநீரக நோய்கள், பால்வினை நோய்கள்
சனி வாதம், கால், வயிறு இவைகளில் நோய், மாரடைப்பு, மயக்கம்

 

இந்தக் குறிப்புக்களை வைத்துக்கொண்டு ஒரு ஜாதகருக்கு வரக்கூடிய நோய்களைத் தீர்மானிப்பது மிகக் கடினமான விஷயம். அனாடமி என்றழைக்கப்படும் உடற்கூறு தெரிந்த, நோய்களையும், அவற்றுக்கான காரணங்களையும் நன்கறிந்த, மருத்துவர்களே பல்வேறு பரிசோதனைகளுக்குப் பின்பே ஒரு நோயை உறுதி செய்கின்ற இக்காலத்தில் ஜாதகத்தைப் பார்த்து நோயைத் தீர்மானிக்க எந்தச் சோதிடராலும் இயலாது.

ஆனால் முற்காலத்தில் சோதிடர்களே மருத்துவர்களாகவும், மருத்துவர்களே சோதிடர்களாகவும் இருந்திருக்கின்றார்கள். விக்டோரியா பேரரசியார் அரண்மனையில் சோதிடமும் தெரிந்த மருத்துவர்களே Royal Surgeon என்றழைக்கப்பட்டிருக்கின்றார்கள். நெல்லை மாவட்டத்தில் பண்டுவர்கள் என்றொரு வகுப்பினர் உண்டு. பண்டுவம் பார்த்தல் என்றால் வைத்தியம் செய்தல் என்று அர்த்தம். பண்டுவர்களில் பெரும்பாலோர் சோதிடராகவும் இருப்பர். சோதிடமறிந்த என் தந்தையாரும் ஒரு மருத்துவரே. பழங்காலத்திலிருந்தே மருத்துவமும், சோதிடமும் சேர்ந்தே படிக்கப்பட்டு வந்திருக்கின்றன என்பது மறுக்க முடியாத ஒன்று.

ஆனால் காலப் போக்கில் இரண்டையும் சேர்த்துப் படிப்பது என்பது குறைந்து போயிற்று. ஆனால் உடற்கூறு தெரிந்த ஒரு நல்ல மருத்துவரும் நுட்பமாகச் சோதிடம் பயின்ற சோதிடர் ஒருவரும் சேர்ந்து முயன்றால் ஒரு ஜாதகனுக்கு எப்பொழுது எந்த உறுப்பில் என்ன நோய் தாக்கக் கூடும் என்பதை முன்னமேயே சொல்லமுடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

அடுத்த கட்டுரை 28.02.2016ல் வெளியாகும்.

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 224 guests and no members online