பயணங்கள் தற்போது மிகவும் ஆபத்தானவையாக ஆகிவிட்டன. நாற்கரச் சாலைகளில் நாள்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பை அதிகப்படுத்தி வருகின்றன. பத்திரமான பயணத்தை உறுதி செய்யச் சோதிட சாஸ்திரம் ஏதாவது வழி சொல்லியிருக்கின்றதா என்று பார்த்தால் அங்கங்கே சில குறிப்புகள் தென்படுகின்றன. அவற்றை வாசகர்களின் பார்வைக்குத் தருகின்றேன்.

  • பகல் பிரயாணத்தைப் பகலில் பலமுள்ள ராசிகள் உதயமாகும் போதும், இரவுப் பயணத்தை இரவில் பலமுள்ள ராசிகள் உதயமாகும் போதும் துவங்குவது நல்லது. (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம், மீனம் இவை பகலில் பலமுள்ளவை. மீதம் உள்ள ஆறு இராசிகள் இரவில் பலமுள்ளவை)
  • சீர்ஷோதய ராசிகள் உதயமாகும் போது துவங்கும் பயணம் சுகமாகவும், பிருஷ்டோதய ராசிகள் உதயமாகும் போது துவங்கும் பயணம் கஷ்டமாகவும் இருக்கும். (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம், மிதுனம் இவை இவை சீர்ஷோதய ராசிகள். மீனம் உபயோதயம் மற்ற ஐந்தும் பிருஷ்டோதயம்)
  • லக்னத்தால் பிரயாண சுகமும், ஏழாமிடத்தால் சேரும் இடமும், பத்தாமிடத்தால் பிரயாண நோக்கமும், நான்காமிடத்தால் பிரயாணத்தால் அடைந்த பயனும் சொல்லப்பட வேண்டும். எனவே லக்னம், நான்கு, ஏழு, பத்தாமிடங்களில் சுபர்கள் மட்டும் இருக்கும் போது பிரயாணத்தைத் தொடங்குவது நன்று
  • லக்னம், நான்கு, ஏழு, பத்தாமிடங்களில் வக்கிரமான கிரகம் இருத்தல் கூடாது
  • புண்ணியஸ்தலங்களுக்கு யாத்திரை செல்வோர் ஒன்பதாமிடத்துக்குச் சுபர் பார்வை இருக்கும் போது புறப்படுதல் நன்று
  • பத்தாமிடத்தில் பாபக் கிரகம் இருக்கும் போது தொடங்கும் பயணம் அரசு அல்லது பயணக்குழுவில் உள்ள முதியோர்களால் தடைப்பட வாய்ப்புண்டு
  • லக்னாதிபதியும் ஒன்பதாமிடத்ததிபதியும் சேர்ந்து ஏழு அல்லது எட்டாமிடங்களில் இருந்தால் பயணம் தடைப்படலாம்
  • பிரயாணம் துவங்கும் லக்னாதிபதியோ, சந்திரனோ, நான்கு, ஆறு, எட்டாமிடங்களில் பலங்குன்றியிருக்கும் போதும், எட்டாமிடத்ததிபதியோடு சம்பந்தம் பெற்றிருக்கும் போதும் துவங்கும் பயணம் கஷ்டத்தைக் கொண்டு வரும்
  • பிருஷ்டோதய ராசி லக்னமாக வந்து பாபக் கிரகத்தால் பார்க்கப்படும் போது புதன் ஆறாமிடத்தில் இருந்தால் பயணம் கஷ்டத்தைக் கொண்டு வரும்
  • வணிக சம்பந்தமான பயணங்களின் போது இரண்டாமிடத்ததிபதி வக்ரமாக இருந்தால் பயண நோக்கம் நிறைவேறாது
  • இரண்டாமிடத்ததிபதி நான்கு, ஏழாமிடங்களில் இருந்தாலும் வணிகம் சம்பந்தமான பயணங்களின் நோக்கம் நிறைவேறாது
  • லக்னம் நான்கு, ஏழு, பத்து, எட்டாமிடங்களில் யாருடைய ஜாதகத்தில் செவ்வாய் இருக்கின்றதோ அவர் நெடுந்தூரப் பயணங்களின் போது கார் டிரைவராக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
    மேஷம், சிம்மம், தனுசு, மிதுனம் ஆகிய இராசிகளில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர்களும் கார் டிரைவராக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். செவ்வாய் இந்த ராசிகளில் லக்னம் நான்கு, ஏழு, எட்டு, பத்து ஆகிய இடங்களில் இருந்தால் அந்த ஜாதகர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
  • சுபக்கிரகங்களின் பார்வையின்றி எட்டாமிடம் அல்லது ஒன்பதாமிடத்தில் சனி இருக்கும் போது துவங்கும் பயணம், பயணம் செய்பவருக்குப் பாதி வழியில் நோய் வருவதன் காரணமாகத் தடைப்படலாம்

இங்கே லக்னம் என்றும் நான்கு, ஏழு, எட்டு, பத்து, ஒன்பது, ஆறு என்றும் குறிப்பிட்டிருப்பவை எல்லாம் பயணம் துவங்கும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டவை. அந்த நேரத்தில் உள்ள கிரக நிலைகளைக் குறிப்பவை. இவற்றுக்கும் பயணம் செய்பவரின் ஜாதகத்துக்கும் சம்பந்தம் கிடையாது. செவ்வாயைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் இரண்டு குறிப்புக்கள் மட்டும் பயணம் செய்பவரின் பிறந்த ஜாதகத்தோடு தொடர்புடையவை.


 

அடுத்த கட்டுரை 'கிரகங்களும் நோய்களும்' 21.02.2016ல் வெளியாகும்.

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 101 guests and no members online